சால்வியா
cālviyā
இது லேமியேசி எனும் இரு வித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறு செடியாகும்.
இது லேமியேசி எனும் இரு வித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறு செடியாகும். இது சுமார் 700 சிற்றினங்களைக் கொண்ட பேரினம். சால்வியா (salvia) செடிகள் சேஜ் எனப்படுகின்றன. இவை 6—15 அங்குலம் உயரம் வளரும் தன்மையுடையவை. சில, புதர்ச் செடிகள் போன்று வளரும் இயல்புடையவை. சால்வியா செடியின் இலைகளும், தண்டும் நறுமணம் கொண்டவை. பொதுவாக லேமியேசி குடும்பத்தில் இனிய மணம் கொண்ட எண்ணெய் வகைகள் மிகுதியாக உண்டு.
சால்வியாவின் தண்டு, குறுக்குத் தோற்றத்தில் சதுர வடிவம் கொண்டது. இதன் பூக்கள் இரு உதடுகளைக் கொண்டவை. பூக்கள் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ஊதா, கருஞ்சிவப்புப் போன்ற நிறங்களில் மலர்கின்றன. பூவில் இரண்டு மகரந்தத் தாள்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும், ஒரு மகரந்தப் பகுதி (anther lobe) வளமுடையதாக இருக்க, மற்றொரு மகரந்தப் பகுதி மட்டும் மலடாகிறது. இவ்விரு மகரந்தப் பகுதிகளும், அவற்றின் இணைப்புத் திசு (connective tissue) வளைந்து நீட்சி பெறுவதால், தனிப்படுத்தப்படுகின்றன. இணைப்புத் திசு மகரந்தக் கம்பியின் மேல் எளிதாக அசையும் தன்மை கொண்டுள்ளது. இந்த அமைப்பின் மேல்புறம் இருப்பது வளமான மகரந்தப் பகுதி, கீழே இருப்பது மலட்டுப் பகுதியாகும். மகரந்தச் சேர்க்கையின் போது, இந்த அமைப்பு நெம்பு கோல் போல வேலை செய்யப் பெரிதும் பயன்படுகிறது. வண்டு பூவின் உள்ளே நுழையும் போது, மகரந்தத தாள்களின் இரண்டு மலட்டுப் பகுதிகளையும் முட்டியவாறு, பூவினுள் செல்லும். அப்போது இணைப்புத் திசு கீழ் நோக்கி வளைய, வளமான மகரந்தப் பகுதி வண்டின் முதுகில் மகரந்தத்தைத் தெளிக்கிறது. வேறு பூவிற்குள் இவ்வண்டு நுழையும் போது, அப்பூவின் சூல்முடி வளைந்து, வண்டின் முதுகில் உள்ள மகரந்த் தூளை ஏற்கிறது. இந்த அயல் மகரந்தச் சேர்க்கை, சால்வியாவில் ஒரு தனித் தன்மையுடைய மகரந்தச் சேர்க்கை முறையாகும்.
புல்லிவட்டம். இது இரு உதடுகளைக் கொண்டதாகும். மேலுதடு 3 புல்லி இதழ்களாலும், கீழுதடு 2 புல்லி இதழ்களாலும் ஆனவை.
அல்லி வட்டம். இது இணைந்து இரு உதடுகளைக் கொண்டிருக்கும். மேலுதடு 2 அல்லி இதழ்களாலும், கீழுதடு 3 அல்லி இதழ்களாலும் ஆனவை. மேலுதடு நாகப்பாம்பின் படம் போன்று அமைந்துள்ளது. கீழுதடு பெரியது; மூன்றாகப் பிரிந்திருக்கும்.
சால்வியா செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. சால்வியா ஸ்பிலென்டன்ஸ் (salvia splendens) என்பதன் பூக்கள் நல்ல சிவப்பு நிறமுடையவை. இது பிரேசிலைச் சேர்ந்தது. எனினும், உலகின் பல பகுதிகளிலும் தோட்டச் செடியாக வளர்க்கப்படுகிறது. தோட்டத்து அழகு தாவரமாக சால்லியா ஃபாரினேசியா (salvia farinacea) எனும் செடியைக் குறிப்பிடலாம். இதன் பூக்கள் ஊதா நிறம் கொண்டவை.
பயன்கள். புதர்ச் செடி அளவிற்கு வளரும் சால்வியா அஃபிசினாலிஸ் (salvia officinalis) உணவின் முக்கிய மணப் பொருளாகப் பயன்படுகிறது. இது பரவலாக வளர்க்கப்படும் செடியாகும். தூவிகள் கொண்ட பசுமையான இலைகள் மிகுந்த மணமுடையவை. பழங்காலத்திலிருந்து, இவை <!---- இவை என்ற சொல்லே பன்மைதான். இவைகள் என்பது தவறு. ---->மருத்துவத்தில் பயன்பட்டு வருகின்றன. இதனின்று பெறப்படும் எண்ணெயை மணப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். பழங்குடிமக்கள் சால்வியா செடியால் மரணமடையாதிருக்க முடியும் என நம்பினர். இச்செடிக்குப் பற்களைப் பாதுகாக்கும் பண்பு இருப்பதாகக் கூறுவர். இத்தாவரத்தை இருமல், காயங்கள் போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம். மேலும் குருதியைத் தூய்மைப்படுத்தவும் இது பயன்படுகிறது.
சால்வியா புமிலா, சால்வியா ஸ்பைனோசா, சால்வியா ஏஜிப்டியாகா, சால்வியா ஹிமட்டோடிஸ், சால்வியா மூர்கிராஃப்டியானா என்பவை மருத்துவத்திற்குப் பயன்படும் சால்லியாச் சிற்றினங்கள் ஆகும். சால்வியா ஏஜிப்டியானாவின் விதைகள் பேதி போன்ற நோயைக் குணப்படுத்த வல்லவை. மெக்சிகோவிலும், அமெரிக்காலின் சில இடங்களிலும் நீர் வேட்கையைத் தணிக்கும் நீர் இதன் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவ்விதைகள் சத்தான உணவாகவும் உள்ளன. குருதிச் சோகைக்கு மருந்தாகச் சால்வியா ஹிமடோடிஸ் பயன்படுகிறது. இருமலைப் போக்கும் மருந்தாகச் சால்லியா மூர்கிராப்டியானா பயன்படுகிறது. —எல். வசந்த்சிங் நூலோதி. A.F. Hill, Economic Botany, Tata McGraw-Hill Publishing Company, London, 1952.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 140)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wnnacc2z/
தமிழ்“சால்வியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wnnacc2z/APA
Oliyon Research. (2026). சால்வியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wnnacc2z/MLA
"சால்வியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wnnacc2z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment