சேலம் நகரில் 16–1–1906–இல் பிறந்தார். இவர் தந்தையார் வேங்கடப்ப செட்டியார்; தாயார் பார்வதி அம்மாள். இவர் மனைவி பெயர் சீதாலட்சுமி. இவர் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பெசண்ட்டு அம்மையாரின் தன்னாட்சி இயக்கத்தில் (Home Rule) சேர்ந்து, காங்கிரசுத் தொண்டரானார். இவர் அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து, ஒத்துழையாமை இயக்கத்தில் பெரும் பங்கேற்றார்; சி. இராசகோபாலாச்சாரியார், விசயராகவாசாரியார் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டார்; சேலம் நகராட்சி மன்றத்திலும், சென்னை சட்ட சபையிலும் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியே எசு.வி. இராமசாமி அவர்களின் நாட்டுப்பற்று மிக்க சமூகத் தொண்டிற்கும் ஆட்சிப் பொறுப்பேற்பதற்குரிய சூழ்நிலை உருவாவதற்கும் உதவியாக அமைந்தது. இராமசாமி, எசு.வி. சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர், சிறந்த அறிவாளியாகவும், வடமொழியில் புலமை பெற்றவராகவும், விளையாட்டில் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இலண்டனில் சிறந்து விளங்கிய ‘இன்னர் டெம்பிள்’ என்ற நிறுவனத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டு ‘பார்–அட்–லா’ (Bar–At–Law) பட்டத்துடன் தாய் நாடு திரும்பினார். சேலத்தில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டவர் தில்லி உச்சநீதிமன்றத்திலும் ஒரு மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். காந்தியக் கொள்கைகளில் ஈடுபட்டு நாட்டின் நலனுக்காக உழைக்க முற்பட்டார். இராமசாமி காங்கிரசு கட்சியின் செயலராகவும், நாடாளுமன்றத்தின் செயலாளராகவும் பணிபுரிந்து சவகர்லால் நேரு போன்ற பெருந்தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மக்களவைக்கு உறுப்பினராக 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் குழுக்களிலும் பணிபுரியும் வாய்ப்பேற்பட்டது. ‘இந்திய அரசியலமைப்பு அவை’ (Constitutional Assembly of India) என்ற நூலை எழுதி நேருவின் பாராட்டுதலைப் பெற்றார். இவர் 1958–ஆம் ஆண்டு முதல் 1964–ஆம் ஆண்டுவரை மத்திய அரசின் இருப்புப்பாதைத் துறையின் துணை அமைச்சராக இருந்தபோது, நாட்டுக்குச் செய்த தொண்டுகள் குறிப்பிடத்தக்கன. இவர் 1964–ஆம் ஆண்டு முதல் 1966 வரை மத்திய அரசின் வர்த்தகத் துறையின் துணை அமைச்சராகப் பணியாற்றினார். இந்தக் குறுகிய காலத்தில் இந்திய நாட்டு வாணிகத் துறையின் மேம்பாட்டிற்காக அரிய பெரிய செயல்களைச் செய்துள்ளார். கல்விப் பணிகளின் வளர்ச்சியில் இவர் ஆற்றிய தொண்டு சீரியதாகும். இவர் தம் செல்வமனைத்தையும் கல்விப் பணிக்காக ‘இராம சீதா அறக்கட்டளை’ என்ற பெயரில் நல்கியுள்ளார். சிறப்பாக, சேலம் மாநகரின் வளர்ச்சியில் இராமசாமியின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். சேலம் நகரில் மகளிர் கல்விக்கு வித்திட்டவர் இவரே ஆவர். இவ்வாறு அரசியல் வாழ்வில் ஈடுபட்டு, சமுதாயத் தொண்டாற்றிய இவர் 25–7–1966–இல் காலமானார். ய.சா.