தயாரிப்பாளரின் நோக்கத்திற்குத் தகுந்தவாறு நூல்களை ஒன்றோடொன்று பின்னுதல் ஒரு கைத்தொழிலாகவும், பொழுதுபோக்குச் செயலாகவும் தொடங்கி இன்று பெருமுதலீடு கொண்ட தொழிலாக வளர்ந்துள்ளது. அழகுறு துணி வகைகளைப் பின்னல் வகை (braid), நூல் சரிகைப் பட்டை (lace), சித்திரப் பின்னல் (embroidery) என மூன்று பிரிவாக்கலாம். மகளிர் தலைமுடி பின்னுதலைப் போல் இழைப் புரிகளை நேராகவும், குறுக்காகவும் மாற்றி மாற்றி அமைத்துப் பின்னுதல் தொன்றுதொட்டு முடைதல் என வழங்கப்பட்டு வந்துள்ளது. குறுகிய மெல்லிய பின்னல் அமைப்புகள் (flat braid), வடிவக் குழாய் அல்லது கயிறு அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ரிப்பன், தலைச்சோடு, குல்லாய் எனப் பல உடைகளைத் தயாரிக்கலாம். வலையமைவு கொண்ட பின்னலமைப்புகள் பாபினெட், மலைன்ஸ், டூலே போன்ற வணிகப் பெயர்களில் வழங்கப்படும். இவை மணப்பெண்ணின் மெல்லிய முகத்திரையாகத் தேவைப்படும் விழாக்காலத்தில் உடைகளாகப் பயனாகின்றன. பின்னுதல், நீள்வளையம் உருவாக்குதல் (looping), முடிச்சிடுதல் (knotting), முடைதல், முறுக்கேற்றுதல், தைத்தல் ஆகிய பல தையல் செயல் முறைகளின் கலப்பால் உருவாக்கப்படுவது நூல் சரிகை வேலைப்பாடு (pillow lace) ஆகும். தலையணைச் சரிகை, பிஞ்ச், சாண்டிலி, குளூனி, டச்சஸ், ஹோனிடன், லில்லி, மால்டீஸ், மெக்லின், எளிது, வாலன்சீன்ஸ் ஆகியன சில சரிகை வகைகள் (இங்கு சரிகை எனப்படுவது வெள்ளி போன்ற உலோக இழைகளாலானது அன்று; இவ்விழைகளால் செய்யப்படும் அலங்கார அமைப்புகளை இயற்கை நூல்களால் அமைத்தல் ஆகும்). குரோசா என்பது கொக்கி ஊசியால் (hook) நீள்வளையங்களை உருவாக்கிப் பெறப்படும் சரிகை வேலையாகும். வலையமைவுப் பின்னணியில், சங்கிலித் தையல் வாயிலாக உருவாக்கப்படும் இழைத் தையல் சரிகை (darned lace), ஊசி முனை, டாட்டிங், மக்ராமே ஆகியன கைவேலை வகைச் சரிகைகளுள் குறிப்பிடத்தக்கவை. 1758—1837 கால இடைவெளியில் ஜெடேடையா ஸ்டெரெட், ராபர்ட் பிரௌன், ஜான் ஹீத்கோட், ஜான் லீவர்ஸ் என்னும் துகிலியல் வல்லுநர் பலர் சரிகை வேலைப்பாடு அமைப்பதற்குக் கருவிகளை உருவாக்கி, உரிமைப் பட்டயங்களையும் பெற்றனர். நீளவாக்கில் ஒரே கோலம் மீண்டும், மீண்டும் இடம் பெறும் பரந்த சரிகை (all over lace) மகளிர் சட்டைகளின் ஓரங்களை வனப்பூட்டுவதற்குப் பயனாகிறது. குஞ்சங்களும், கொசுவங்களும் வைத்துத் தைப்பதற்கு ஏற்ற சரிகையான குஞ்சச் சரிகை (flouncing), துணிகளுக்கு இடைச் செருகலாகவோ, துணி மீது துணி வைத்துத் தைக்கும் (applique) அமைப்பிலோ பயனாகும் காலூன்ஃபீடிங் வளைவு விளிம்புகளைக் கொண்ட அடிப்பகுதியும், சாதாரணமான மேல் பகுதியும் கொண்ட ஓரம், பதக்க வேலைப்பாடு (medallion) முதலியன சித்திர துணிகளுள் சிலவாகும். கைவேலையால் தயாரிக்கப்படும் நூல் சரிகை அமைப்புகளுக்கு எந்திர வழி முறைத் தயாரிப்புகளை விட மதிப்பு மிகுதி. ஏனெனில், நுண்மையும், வனப்பும் கை வேலைச் சரிகைகளில் கூடுதலாகும். சரிகைப் பட்டைகளை உலர் சலவை செய்தல் நலம். ஈரச் சலவை செய்வதாக இருப்பின், அவற்றைக் கசக்குதலோ, தேய்த்தலோ தவிர்க்கப்படவேண்டும். சலவை எந்திரத்தில் சலவை செய்யும் போது, அவற்றை ஒரு வலைப் பையிலிட்டு, அப்பையைச் சலவை எந்திர நீரில் மூழ்கச் செய்து, சுழற்றுதல் பரிந்துரைக்கப்படுகிறது. படிமானப்படுத்துவதற்காகப் பெட்டி போடும் போது, சரிகைப் பட்டையின் மீது மற்றொரு மெல்லிய துணியைப் பரப்பி, அதன் மீது பெட்டி போட வேண்டும். சித்திரப் பின்னல். துணியின்மீது ஒரு கோலம் அல்லது வடிவத்தை நூலையும், ஊசியையும் கொண்டு தைத்தல் சித்திரப் பின்னல் (embroidery) எனப்படும். கை, எந்திரம் இரண்டில் எம்முறையிலும் இதை உருவாக்கலாம்; துணியின் மீது சிறப்பு நூலால் அமைக்கப்பட்டோ, சிறுசிறு துளைகளாகத் துணியைத் தக்க பகுதிகளில் வெட்டி எடுத்து, துளையின் ஓரங்களைத் தைத்துத் துளை வடிவை உறுதி செய்தோ சித்திரப் பின்னலைத் தோற்றுவிக்கலாம். சித்திரத் தையல் வடிவமைப்புகள் பூ வேலை (floral design). இது ஒரு செடியில் காணப்படும் இலை, காம்பு, மலர், காய், கனி, கொடி யாவும் கொண்ட ஓர் இயற்கை அமைப்பை வெளிப்படுத்தும் கோலம். இது பெரும்பாலும் நிழல் வேலைச் சித்திரத்திற்கும், பகட்டு—மங்கல் படிப்படி இறக்க வகைக்கும், இயற்கைக் கலப்புச் சித்திரத் தையலுக்கும், வெள்ளைச் சித்திரத் தையலுக்கும் ஏற்றது. கலப்புக் கோலம் (combining design). வெவ்வேறு செடிகளின் இலை, காய், பூ ஆகியவற்றை ஒரு வடிவமாக அமைத்து, இயற்கைக்குச் சற்றே புறம்பான தோற்றத்தை வரையலாம். இயல்பற்ற பல காட்சிகளையும் வரையலாம். அசிசி, ரிச்லோ, வெனிசியன் ஆகிய சித்திரப் பின்னல்களில் இக்கோலம் பயனாகிறது. மரபு வகைக் கோலம் (conventional design). இரு உருவங்கள் ஒன்றையொன்று தொடுவது போன்றும், சித்திரத்தை ஒட்டு மொத்தமாக நோக்குகையில் ஒரு சீர்மை (symmetry) இருப்பது போன்றும் காணப்படும். ரிச்லோ, வெனிசியன் ஆகிய வகைகளில் இக்கோலம் வரையப்படுகிறது. வடிவியல் கோலம் (geometric design). நேர் கோடுகள், சதுரம், முக்கோணம் போன்ற வடிவியல் அடிப்படைகளில் வரையப்படும் இது, அசிசி சித்திரப் பின்னலில் பயனாகிறது. படக் கோலம் (picture design). புகைப்படம், சிற்பம், சூரிய உதயம், படகு, கப்பல் போன்றவற்றை வரைந்து தைக்கப்படும் இப்பின்னலமைப்பு கண்ணாடியும், சட்டமும் போட்டு வரவேற்பு அறையில் தொங்க விடும் படங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும். நாட்டுப் பற்று வகை. நாட்டுக்கொடி, சின்னம், கோயில்கள், கலை மிளிர் கட்டடங்கள் போன்ற உருவங்கள் இதில் அடங்கும். இந்தியக் கோலம் (Indian rangoli). திரைச் சீலை, சன்னல் திரை, துண்டுகளின் கரை, மேசை விரிப்பு ஆகியவற்றின் தயாரிப்பில் மகளிர் வீட்டு வாசலில் வரையும் வகை, வகையான மாக் கோலங்களின் எதிர் பலிப்பாக உருவாக்கப்படுவன. சித்திரப் பின்னல் வகைகள் வெள்ளைச் சித்திரத் தையல். ஜெர்மனியின் சாக்சனி என்ற நகரில் முதன்முதலாகக் கண்டு பிடிக்கப்பட்ட இப்பின்னல் முறையில், வெள்ளைத் துணியின் மீது வெள்ளை நூலைக் கொண்டு வடிவம் தைக்க வேண்டும். (இச்சித்திரப் பின்னலுக்கும் பொதுவான வழி முறையில் துணியின் மீது பென்சிலால் மெலிதான இரட்டைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டு வடிவத்தை வரைந்து, துணியை வட்ட வடிவச் சட்டத்தில் இறுக இழுத்துக் கட்டி, கோடுகளின் மீது தையலைச் செய்தல் வழக்கம்.) இவ்வகைச் சித்திரத் தையலுக்கு வெள்ளை லினன், லான் இழை, நெருக்கமான சல்லாத் துணி, கேம்பிரிக், லாங் கிளாத், கேஸ்மெண்ட் ஆகிய துணிகள் ஏற்றவை. இங்கு மலர் வடிவங்களே பெரிதும் விரும்பப்படுகின்றன. மலரின் இதழ்கள் முட்டை வடிவில் தைக்கப்படுகின்றன. காம்புத் தையல், முடியற்ற பொத்தான் துளைத் தையல், துளைத் தையல் (punch work), சாட்டின் தையல், உருட்டுத் தையல், சிறு முடித் தையல், வட்டமான சாட்டின் தையல் (tots), விதைத் தையல், ஒழுங்கற்ற குட்டை, நெட்டைத் தையல் ஆகியவற்றால் வனப்பூட்டலாம். புடவை ஓரங்கள், முந்தானை, சட்டை ஆகியவற்றில் இத்தையல் இடப்படும். ரிச்லோ சித்திரப் பின்னல். 17ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் முதன் முதலாக வழக்கத்தில் கொணரப் பட்ட இம்முறையில், துணியின் மீது வரைந்த வடிவக் கோடுகளின் மீது தையலிட்டு, வடிவமற்ற பிற பகுதிகளில் துணியை வெட்டி எடுத்து விட வேண்டும். இவ்வாறு துணியை வெட்டி எடுக்கும் போது, வடிவம் அமைந்த துணிகள் கீழே விழுந்து விடாமல் இருக்க, இடையில் மிகுதியான குறுக்கு நூலோட்டத் தையல்களைப் பட்டைகள் (bars) என்ற அமைப்பை நிறுவ வேண்டும். இக்குறுக்கு நூலோட்டங்களில் கவர்ச்சியூட்டும் வகையில், சிறு மணிகளைப் போன்ற நுண் வளையங்களைத் தைக்கலாம். இக்குறுக்குக் கோடுகளை மரக் கிளை, சிலந்திக் கூடு என உருவத் தோற்றங்களாகவும் மாற்றலாம். வெனிசிய சித்திரப் பின்னல். வெள்ளைத் துணியின் மீது வெள்ளை நூல் கொண்டோ, வண்ணத் துணியின் மீது, அதே வண்ணங் கொண்ட நூல் கொண்டோ தைத்து உருவாக்கப்படுகிறது. இழை நெருக்கம் கொண்ட கேஸ்மெண்ட், லாங்கிளாத், சீட்டி, கேம்பிரிக், லினன், மடப்பலம் போன்றன இத்தையலுக்கு ஏற்றவையாகும். வடிவக் கோடுகள் யாவற்றையும், சங்கிலித் தையலால் உருவாக்கி, ஏறக்குறைய ரிச்லோ தையலையொத்த வகையில் பின்னப்படுகிறது. வெட்டு வேலை சித்திரப் பின்னல். இங்கு வடிவக் கோடுகளையும், வெளிப்புற எல்லைக் கோட்டையும் ஒன்றோடொன்று இணைப்பதற்குக் குறுக்குத் தையல் தேவைப்படுவதில்லை. பட்டைகளுக்குப் பதிலாக, வடிவங்களை ஒன்றோடொன்று இணைத்துத் தைக்க வேண்டும். வடிவங்களின் கோடுகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும் போது, இடைவெளி பெரிதாக இருக்கக் கூடாது. தேநீர்த் துணி, தலையணை உறை, பாவாடைக் கீழ் ஓரம், மேசை விரிப்பு, படுக்கை விரிப்பு, திரைச் சீலை, வானொலிப் பெட்டி மேலுறை ஆகிய- வற்றை இத்தையல் வகையால் அழகுபடுத்தலாம். சென்னையில் உள்ள விக்டோரியா தொழில் நுட்ப நிறுவனம் இவ்வகைக் கலைப் பொருள்களை மிகுதியாக ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையத்தின் முகப்பில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் கலை நுணுக்க மிகு பொருள்களில் வெட்டு வேலைத் துணிகளும் உள்ளன. அசிசி தையல். இத்தாலியப் படைப்பான இச்செய்முறையை லினன், மட்டி, கித்தான், அக்பக் எனும் துணிகளின் மீது அமைப்பர். உண்மைக்குப் புறம்பான வடிவங்களையும், பண்டைக் காலக் காப்பியங்களில் விவரிக்கப்படும் யாளி, மச்ச கன்னி போன்ற உருவங்களையும் உருவாக்க உதவும் இத்தையலுக்குப் பல வகை வண்ணங்கள் தேவை. வடிவங்களைத் துணியின் மீது வரைவதில்லை; பதிலாக, கட்டமிட்ட தாளில் வரைந்துள்ள வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு, இழைகளை எண்ணித் தைக்க வேண்டும். வடிவத்தில் உள் பகுதியை நிரப்பித் தைக்காமல், வடிவத்தின் வெளிப் பகுதியை மட்டுமே நிரப்ப வேண்டும். இது புடவைக் கரை, மேசை விரிப்பு, தலையணை உறை, படுக்கை விரிப்பு, சன்னல் திரை ஆகியவற்றுக்குப் பயனாகிறது. எழுத்துகள் தைத்தல் (monograms), துணியின் மீது துணி பொருத்தித் தைத்தல், தேர் ஒப்பனைத் துணி தைத்தல், கொசுவலைத் துணி மீது துணி ஒட்டித் தைத்தல், நிழல் தோற்றத் தையல், பஞ்சு திணித்துத் தைத்தல் (quilting embroidery), பகட்டு—மங்கல் படிப்படி மாற்றம், சிறு கண்ணாடித் தகடு செருகித் தைத்தல், கோல்பர்ட் சித்திரத் தையல், துளை மிகுந்த தோற்றம் கொண்ட சித்திரத் தையல், ஸ்விஸ் சித்திரத் தையல் எனப் பல வகை அழகூட்டும் தையல் வகைகள் உள்ளன. இவை தவிர, புதுத் தையல் வகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவை வடத் தையல், பொத்தான் துளை, ஊசி வழி நெசவு ஆகியனவாகும். —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman. Textiles—Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985.