சாரோப்போடா
cārōppōṭā
டைனோசார்கள் என்னும் சாரோப்போடா ஊர்வனவற்றில் சாரிஷியா துணை வரிசையைச் சார்ந்தவை.
டைனோசார்கள் என்னும் சாரோப்போடா ஊர்வனவற்றில் சாரிஷியா துணை வரிசையைச் சார்ந்தவை. இவ்வகை ஊர்வன, சுமார் 405 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, வாழ்ந்து, அழிந்த மிகப் பெரிய டினோசார்கள் ஆகும். இவ்வரிசையில் மிக மிகப் பெரிய புதை படிவங்களான, பிராண்டோசாரஸ், டிப்ளோடோகஸ், பிராக்கியோசாரஸ் என்னும் டைனோசார்கள் அடங்கியுள்ளன. இவற்றின் உடல் நீளம் ஏறக்குறைய 20—25 மீ. வரையும், எடை சுமார் 30—50 டன் வரையும் இருந்தமை அறியப்படுகிறது. எனவே இவை, அனைத்து விலங்குகளிலும் நீளம், எடை ஆகிய அளவுகளில் முதலிடம் பெற்றிருந்தன எனக் கூறலாம். சாரோப்போடா துணை வரிசையில் அடங்கியுள்ள பல்வேறு டைனோசார்கள் பல பொதுப் பண்புகளைப் பெற்றிருந்தன. இவற்றிற்கிடையே. குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் மண்டையோட்டின் எலும்புகளிலேயே காணப்படுகின்றன. மேலும், இவை உடலளவில் மிகவும் பருத்திருந்தமையால், உறுதியான மிகப் பெரிய தூண் போன்ற நான்கு கால்களைப் பெற்றிருந்தன. இருப்பினும், முன்கால்கள், பின்கால்களை விடக் குட்டையாக இருந்தமையால், இவை இரு காலிகள் வழி வந்தவை என்றும் கருதப்படும். இவற்றின் கால் எலும்புகள் தடித்து, வலிவாகவும், உறுதியாகவும் அமைந்துள்ளமையால், மிக அதிக எடை கொண்ட உடலைத் தாங்கிச் செல்லும் ஆற்றல் வாய்ந்தவையாக அமைந்திருந்தன. மேலும் இவற்றின் பாதங்கள், யானையின் பாதங்களைப் போன்று அகன்ற பாதத் திண்டுகளைப் பெற்றிருந்தன. இவ்வமைப்பு, சாராப்போடாக்களின் மிகப் பெரிய உடலைத் தாங்கி எளிதில் நன்கு ஊன்றி நடக்கப் பயன்பட்டிருக்கக் கூடும்.
கால் விரல்கள் குட்டையாகவும் சிலவற்றில் நகங்கள் வளைவாகவும் அமைந்திருந்தன. பிராண்டோசாரஸ் என்னும் டைனோசார் விலங்குகளில் முன் பாத உள் விரல்களில் மிகப்பெரும் வளை நகங்களும், பின் பாத மூன்று உள் விரல்களில் வளை நகங்களும் காணப்பட்டன.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரத்தில் கீழ்—கிரேட்டேசியப் பாறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சில பிராண்டோசாரஸ்களின் பாதப் பதிப்பில் இருந்து இவற்றின் பாத அளவு, அகன்றதாக இருக்கும் என்பது தெளிவாகிறது.
மிக அதிக எடையுள்ள இந்த டைனோசார்களின் இடுப்பு மிகப் பெரியதாகவும், வலிமையாகவும், பட்டை எலும்பு மிக நீளமானதாகவும், உறுதியானதாகவும் அமைந்திருந்தன. கழுத்து, முதுகு எலும்புகள் மிகப் பெரியனவாக இருப்பினும், எடை கூடாமல் இருக்க சென்ட்ராவின் பக்கவாட்டில் அகன்ற குழிகளைக் கொண்டுள்ளன. மேலும், முதுகெலும்புகளில் உள்ள உறுதியான முள்கள் நீண்ட கழுத்து வால் பகுதியில் உள்ள தசைகளைப் பொருத்தப் பயன்பட்டுள்ளன. இவ்விலங்குகளின் மண்டை ஓடு சிறியதாகவும், சுவாசத் துளைகள் அதன் நுனிப் பகுதியிலும் காணப்படுகின்றன. இத்தகவமைப்பினால், இவ்விலங்கினம் நீரில் மூழ்கியிருக்கும் போது, தலையை மட்டும் நீரின் மேல் வைத்துக் கொண்டு, காற்றைச் சுவாசித்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> டிப்லோடோக்கஸ் என்னும் மிகப் பெரிய விலங்கின் பற்கள் மிகச் சிறியவாகவும், உறுதியற்றவையாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பிராண்டோசாரஸ் எனப்படும் விலங்கிலும் பற்கள் இவ்வாறே அமைந்திருந்தன. மேற்கூறிய பற்களின் அமைப்பிலிருந்து இவ்வகைச் சாரோப்போடாக்கள் தளிர், இலை, தண்டு போன்றவற்றை உண்டு தாவர உண்ணியாக வாழ்ந்திருக்கலாம் என்று தெரிய வருகின்றது. இவற்றின் தாடைகள், பற்களின் அமைப்பிலிருந்து இவை பெரிய கடினமான தாவரங்களையும் உணவாகக் கொண்டன என்றும், சிலவகைச் சாரோப்போடாக்கள், மெல்லுடலிகள் பல விலங்குகளின் தசைகளையும் உண்டு வாழ்ந்திருக்கலாம் என்றும் தெரிய வருகின்றது. இப்பெரிய விலங்குகள் எவ்வாறு இச்சிறிய வாய் மூலமாக உணவு உட்கொண்டன என்பது புலனாகவில்லை. இவ்விலங்குகளின் வளர்சிதை மாற்றம் குறைந்த விகிதத்திலேயே இருந்திருக்கக் கூடும். ஆகவே, இவற்றிற்கு உடல் பெரிதாக இருப்பினும், அதிக உணவு தேவைப்படவில்லை எனக் கருத இடமுண்டு.
மேலும், சாரோப்போடாக்கள் சதுப்பு நிலம், ஏரி, ஆறு முதலிய இடங்களில் உள்ள தாவரங்களை உண்டு வாழ்ந்திருக்கக் கூடும். இவ்விடங்களை நோக்கி உணவுக்கு மட்டுமல்லாமல், தம் பாதுகாப்புக்காகவும் சென்றிருக்கலாம். அல்லோசாரஸ் போன்ற எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இவை நீருக்குள் சென்றாலும், தலைப் பகுதி மட்டும் நீருக்கு மேல் இருக்கும்படியான தகவமைப்பைப் பெற்றிருந்தன என்றும் அறியப்படுகிறது.
மேற்கூறிய தகவமைப்புகளின் மூலமாக இவ்வகைச் சாரோப்போடாக்கள் மீசோசுவாயிக் காலத்தில் உலகம் முழுதும் பரவி இருந்தன என்பதற்குப் புதைபடிவச் சான்றுகள் உள்ளன. — டி. எஸ். சரவணன் நூலோதி. E.H. Colbert, Evolution of the Vertebrates, Second Edition, John wiley & Sons, New York, 1969; A.S. Romer, The Vertebrate Body, Third Edition, W.B. Saunders Co.. Philadelphia, 1960.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 130)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wbtxzs6e/
தமிழ்“சாரோப்போடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wbtxzs6e/APA
Oliyon Research. (2026). சாரோப்போடா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wbtxzs6e/MLA
"சாரோப்போடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wbtxzs6e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment