சுருங்குதல் கருதுகோள்
curuṅkutal karutukōḷ
எரிமலை போன்றவற்றால், புவி, வெப்பத்தை வெளிப் படுத்திக் கொண்டே உள்ளது.
எரிமலை போன்றவற்றால், புவி, வெப்பத்தை வெளிப் படுத்திக் கொண்டே உள்ளது. இதன் விளைவாகப் புவி உருகிய நிலையிலிருந்து குளிர்ச்சி அடைந்தது என்று கெல்வின் என்பார் கூறினார். புவி குளிர்ச்சி அடைந்து வருகிறது என்ற இவரின் கருத்து, எலி டி பியூமாண்ட் (Elie De Beaumont) என்பாரின் சுருங்கி வரும் புவி என்ற கருதுகோளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது. புவி குளிர்ச்சி அடைவதன் காரணமாகச் சுருங்கி வருகிறது என்பதே சுருங்குதல் கருதுகோள் கூறும் கருத்தாகும்,
புவியின் புறப் பகுதி, குறிப்பாகப் புற ஓடும் அதை அடுத்துள்ள புவி இடைப் பொரையின் மேற்பகுதியும் மிகவும் குளிர்ச்சி அடைந்து வருகின்றன. அதே சமயத்தில், புவியின் உட்பகுதி விரைவாகக் குளிர்ச்சியடைந்து சுருங்குவதால், புற ஓட்டுப் பகுதியினின்றும் பிரிந்து விடுகிறது. புவி, ஈர்ப்பு விசைக்கு ஏற்ப, விரைவாகக் குளிர்ச்சி அடைந்து சுருங்கும் உட்பகுதியின் மீது பொருந்துமாறு, புறப் பகுதியின் பக்க வாட்டத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. உட்பகுதியில் இழு விசை (tension) உண்டாகிறது. பக்கவாட்டு அழுத்தம் அல்லது அமுக்க விசையின் பயனாகப் புவிப் பொரை அல்லது புற ஓட்டுப் பகுதியில் உள்ள திடம் குறைந்த பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதனால், அந்தத் திடம் குறைந்த புவியின் பகுதிகளில் பிளவுப் பெயர்ச்சி, (படலங்களின் ) தடிப்பு மிகுதல், நொறுங்கிப் பொடியாதல் பேன்ற மாற்றங்கள் நிகழ்கின்றன.
அமுக்கு விசைக்கு உட்பட்ட புவிப் புறப் பகுதிக்கும், இழு விசைக்கு உட்பட்ட உட்பகுதிக்கும் இடையே உள்ள மட்டத்தில் இவ்விரு வகை விசைகளும் இல்லை. சம நிலை நிலவுகின்றது. இம்மட்டம் புவியின் மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. ஆழத்தில் இருக்குமெனக் கருதப்பட்டது.
சுருங்குதல் கருதுகோள் ஒரு காலத்தில் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இக்கருத்து சற்றும் பொருத்தமற்றது; ஏற்றுக் கொள்ளும் தரமுடையது அன்று எனப் பலரும் கருதுகின்றனர். சுருங்குதல் கருதுகோளின் படி, புவி வெப்பத்தை வெளியிடுவதால், சுருங்குவதாகக் கருதப்படுகிறது, ஆனால், புவி இழக்கும் வெப்பத்தை விடப் பன் மடங்கு வெப்பம் உண்டாகிறது என்று கூறுகின்றனர். புவியின் பல பகுதிகளில், குறிப்பாக இடைப் பொரையின் மேற்பகுதிகளில் கதிரியக்கத் கனிமங்கள் செறிந்து கிடக்கின்றன. இவை, கதிரியக்கச் சிதைவு அடைவதால், மிகப் பெருமளவில் வெப்பத்தை வெளியிட்டுப் புவியின் இப்பகுதிக்கு மேலே (வெளியே) அமைந்துள்ள புவி ஓட்டைச் சூடாக்கி, அதனால், விரிவடையச் செய்யக் கூடும் என்று கருதப்படுகிறது. புவி இழக்கும் வெப்பத்தை விடக் கதிரியக்கச் சிதைவிலிருந்து பெறும் வெப்பத்தின் அளவு பன்மடங்கு மிகுதி என்று கணக்கிட்டுள்ளனர். இதிலிருந்து புவி சுருங்குகிறது என்னும் கருத்துப் பொருந்தாது என்று இக்காலத்தில் பலரும் கருதுகின்றனர். இம்மறுப்புக்குச் சுருங்குதல் கருதுகோளால் விடை காண இயலவில்லை. —இல. வைத்திலிங்கம் நூலோதி. Marland P. Billings, Structural Geology, Third Edition, Prentice Hall of India Private Ltd., New Delhi, 1987.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 516)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wakbyp9y/
தமிழ்“சுருங்குதல் கருதுகோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wakbyp9y/APA
Oliyon Research. (2026). சுருங்குதல் கருதுகோள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wakbyp9y/MLA
"சுருங்குதல் கருதுகோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wakbyp9y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment