இராமலிங்கனார், கீ
irāmaliṅkaṉār, kī
செங்கற்பட்டு மாவட்டத்தில் தொண்டை மண்டல வேளாளர் குலத்தில் கீழச்சேரி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
செங்கற்பட்டு மாவட்டத்தில் தொண்டை மண்டல வேளாளர் குலத்தில் கீழச்சேரி என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவர் தாயார் பாக்கியம்மாள்; தந்தையார் இரத்தின முதலியார், பிறப்பு 12.11.1899.
இவர் கீழச்சேரி மாதாகோவிற் பள்ளியிலும் இராயப்பேட்டை வெசிலி உயர்நிலைப் பள்ளியிலும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று 1924–இல் பி.ஏ. பட்டம் பெற்றார். பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் இவரோடு தொடக்கப்பள்ளியில் ஒருசாலை மாணவராய் இருந்துள்ளார். தமிழ்ப் பெரியார் திரு.வி.க. வெசிலி உயர்பள்ளியில் இவர் கற்ற காலையில் தமிழாசிரியராகத் திகழ்ந்தார்.
கல்வி முடிந்து 1926–ஆம் ஆண்டு இவர் பதிவுத் துறையில் அலுவல் ஏற்றார். அப்போது கட்டாயம் தெலுங்கு மொழி பயிலவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே, தெலுங்கு ஆசிரியர் ஒருவரை அமர்த்திக் கொண்டு தெலுங்கு பயின்றார். இவர் தமிழைத் தனிமுறையில் படித்துத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதித் தேறினார். பின்னர், சைதாப்பேட்டை நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய பொழுது, திருப்பாதிரிப் புலியூர்த் தவத்திரு ஞானியார் சுவாமிகள் அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் நடத்திய சிவஞான போத வகுப்புகளில் கலந்து கொண்டும் சமய அறிவு கைவரப் பெற்றார். விழுப்புரம் நகராட்சி ஆணையராய் இருந்தபொழுது 1942–ஆம் ஆண்டில் தமிழ் எம்.ஏ. தேர்வினைத் தனிமுறையில் படித்தெழுதித் தேர்வு பெற்றார்.
கீ. இராமலிங்கனார்க்கு 1923–இல் திருமணம் நிகழ்ந்தது. மனைவியார் சிவகாமு சுந்தரம். இவருக்கு மக்கள் இருவர்.
தமிழ் நாட்டின் பல ஊர்களில் பல்வேறு அரசுப் பணிகளை ஆற்றிய இப்பெரியார் ‘பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை வீட்டில் ஒரு வானொலிப் பெட்டி வாங்கி வைக்க என்னால் முடியவில்லை’ என்று தாம் தம் இறுதிக் காலத்தில் எழுதிய ‘என் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதைக் காணும் பொழுது, இவர் வாழ்வின் நேர்மையும் செம்மையும் புலனாகின்றன. முப்பத்தைந்து இடங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்னையில் வந்து தங்கிய பொழுதுதான் மாநகராட்சி ஆணையர் உதவியால் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அது ‘தமிழ் மணம்’ எனப் பெயரிடப்பெற்றது.
பதிவுத்துறை அலுவலர், நகராட்சி ஆணையர், பங்கீட்டுத் துறை அலுவலர், தருமபுர ஆதீனக் கல்லூரி முதல்வர், தொழிலாளர் நல அலுவலர், ஆட்சிமொழித் தனி அலுவலர், தமிழறியார்க்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர், ஆட்சிமொழி ஆசிரியர், சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் எனப் பல்வேறு பணிகளைப் பாங்குற ஆற்றிய இப்பெரியார் 20—9—1986–இல் காலமானார்.
எண்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த இவர் தனித் தமிழ்ப் பற்றாளர். தமிழ்த் திருமணங்களை நடத்தி வைப்பதில் தனி ஆர்வங் காட்டினார். இவர் எந்தச் சொல்லிற்கும் தனித்தமிழ்ச் சொல் கண்டு மகிழ்ந்தார். ஆட்சித்துறைச் சொற்களில் கலப்படம் இல்லாமல் தூய தமிழ் மொழிச் சொற்கள் இடம் பெறப் பாடுபட்டு ‘ஆட்சிச்சொற் காவலர்’ என்றும் பட்டத்தினைப் பெற்றார். சைவ சித்தாந்த சமாசம், ஆட்சிமொழிக்குழு, சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைச் சொல்லாக்கக்குழு முதலான பல அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டு தமிழை வளர்த்தார்.
இவர் எழுதிய நூல்கள், ‘இசைச் சக்கரவர்த்தி நயினாப்பிள்ளை வரலாறு’, ‘உண்மைநெறி விளக்கம்’, ‘நகராட்சி முறை’, ‘தமிழ் ஆட்சிச் சொற்கள்’, ‘திருமுறைச் சமுதாயம்’, ‘ஆட்சிச் சொல் அகராதி’, ‘தொழிலாளர் சட்டத்தொகுப்பு’ முதலியனவாகும். சி.பா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 136)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wafekdvc/
தமிழ்“இராமலிங்கனார், கீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wafekdvc/APA
Oliyon Research. (2026). இராமலிங்கனார், கீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wafekdvc/MLA
"இராமலிங்கனார், கீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wafekdvc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment