அருமைப்பாடு
arumaippāṭu
அருமைப்பாடு என்னும் சொல் பொருளியலில் நுட்பமான சொல்லாகும்.
அருமைப்பாடு என்னும் சொல் பொருளியலில் நுட்பமான சொல்லாகும். அருமைப்பாடு இயல்பாகப் பற்றாக்குறையைக் குறிக்கும். ஆனால், பொருளாதாரத்தில் இச்சொல் ஒரு தனிப்பட்ட பொருளில் கையாளப்படுகிறது. பொருள்கள் இல்லாவிட்டால் ‘இல்லாமை’; அவை போதுமானவையாக இல்லாவிட்டால் ‘பற்றாக்குறை’. ஆனால், அருமைப்பாடு (Scarcity) என்பது பொருள்கள் கிடைத்தலின் அருமைப்பாடு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. வளங்கள் (Resources), அன்றாடம் பெருகிவரும் அறிவியலுக்கும் வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கும் ஈடு செய்வதாக அமைவதில்லை. மனிதனின் தேவைகள் வளர்ந்து கொண்டே போகின்றன. அவற்றை நிறைவு செய்யும் வழி வகைகள் போதுமானவையாக இல்லை. எனவே, வாழ்வில் மக்களின் முதன்மையான சிக்கல் ‘அருமைப்பாடு’ அல்லது ‘கிடைப்பருமை’ ஆகும். இக்கிடைப்பருமை மனிதனின் உழைப்புக் குறைவால் விளைந்ததன்று; வளங்களைப் பயன்படுத்தும் முறையினாலும், புற்றீசல் போல் வளர்ந்து வரும் புதிய தேவைகளாலும் நேரிட்டதாகும்.
பொருளியலில் அருமைப்பாடு ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. பொருளியலுக்கு இலக்கணம் வகுத்த பேராசிரியர் இராபின்சு (Robins) அருமைப்பாட்டை அடிப்படையாக வைத்தார். அவர், வளங்கள் அல்லது தேவைகளுக்கு ஈடுகொடுப்பது, வாய்ப்புகளின் கிடைப்பருமையால் எழும் சிக்கல்களை ஆய்வது ஆகியவை பொருளியலின் முக்கிய நோக்கங்களாகும் என்றார். சிட்டாசுகி (Scitovsky) என்னும் பொருளியல் வல்லுநர், பொருளாதாரம் அருமைப்பாடுடைய துணை ஆதாரங்களை நிருவகிக்கும் திறன் பற்றிக் கூறும் ஒரு சமூக அறிவியல் (Social Science) என்று கூறுகிறார். அருமைப்பாட்டிற்கு ஏன் பொருளியலில் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுவது இயல்பு. பொருளியல் பொதுவாக மனிதனின் அன்றாட வாழ்வினை ஒட்டிச் செல்லும் ஒரு அறிவியல் ஆகும். ஆழ்ந்த அறிவியல் நோக்கோடு மனிதனின் செயல்களையும் அவன் குழ்நிலையையும் நோக்கினால், மனிதன் பொருளாதார விளக்கத்தின் மையமாக விளங்குகிறான் என்பது தெளிவாகும். ஆகவே, அருமைப்பாடு என்னும் கருத்து, பொருளாதாரச் சூழவில் விளக்கப்படுவது சாலச் சிறந்தது.
இயற்கை வளங்களை மனிதன் தன் தேவைகளை நிறைவு செய்யச் செயலில் ஈடுபடுத்தும்பொழுது அருமைப்பாடு ஏற்பட ஏதுவாகிறது. வளத்தின் ஆதாரங்களான நிலம், நீர், மனித ஆற்றல், மூலதனம், எந்திரங்கள் போன்றவை அளப்பரியனவாகத் தோன்றினும், மக்கள் பெருக்கத்தினாலும் பொருள்களின் மிதமிஞ்சிய தேவையினாலும் அவை பயன்படுத்தப்படும் அளவினாலும் வளங்கள் கிடைப்பதற்கரியவை ஆகின்றன. கற்காலத்திலும் உலோகக் காலத்திலும் மனிதன் தன் கண்முன்னே பரந்து கிடந்த நிலங்களைக் கண்டு இறுமாந்திருந்தான். அவள் நிலத்தின் அருமைப்பாட்டை அன்று உணரவில்லை. ஆனால், இன்று குறிப்பாக நகரங்களில், மக்கள் வாழ இல்லங்கள் அமைக்கக் கூட நிலங்கள் இல்லாமல் அடுக்கடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக வீடுகளைக் கட்டுவதைக் காண்கிறோம். பயிரிடும் நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க இடு பொருள்களைப் (input) பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இச்செயலும் ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் எதிர்பார்க்கும் பலனைத் தருவதில்லை. ஏனெனில், குறைந்துசெல் உற்பத்தி விளைவு விதி (Law of Diminishing Returns) நிலத்தில் செயற்படத் தொடங்கி விடுகிறது. ஒரு வேளை மனிதனின் தேவைகள் கணக்கிலடங்குவனவாக இருந்திருப்பின் வளத்தின் அருமைப்பாடும் பொருள்களின் அருமைப்பாடும் உணரப்படாமல் இருந்திருக்கும். உலகில் கணக்கற்று வளர்ந்துவரும் தேவைகளையும் கணக்கில் அமைந்துள்ள வளங்களையும் இணைத்து நோக்கும் பொழுது அருமைப்பாடு நிகழ்வதை உணர முடியும்.
நிலத்தில் பயிரிடுதல், கட்டடம் கட்டுதல், போக்குவரத்துப் பாதைகள் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு வளங்களைப் பல வழிகளில் பயன்படுத்தலாம். இவ்வளங்களின் அளிப்பு, பயன்படுத்தப்படும் விதம். இரண்டுமே அருமைப்பாட்டிற்கு அடித்தளமாக அமைகின்றன. தேவைகள் எழும்போது அவற்றை நிறைவு செய்ய வழிவகைகளும் ஆயத்தமாக இருப்பின், அருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பொருளியலைக் கற்கவேண்டிய அவசியமே இல்லாது போயிருக்கும். அருமைப்பாட்டின் சிறப்பு என்னவெனில், இது ஓர் இடைக்கால இயல் நிகழ்ச்சி என்பதாகும். காலப் போக்கில் உற்பத்திக் காரணிகளின் அசைவால் ஒரு குறிப்பிட்ட அருமைப்பாடு மறைந்து விடுகிறது; மற்றொன்று தோன்றுகிறது.
வளங்களின் கிடைப்பருமையால் மட்டும் அருமைப்பாடு தோன்றுவதில்லை. மனித வாழ்வில் ஏற்படும் தேவைகள், விருப்புகள் ஆகியவற்றை அடையும் வழிவகைகளும் (Means) காரணமாகின்றன. இங்கு ‘வழிவகைகள்’ என்பது குறிப்பாகப் பணம் அல்லது செல்வத்தைக் குறிக்கிறது. வறுமை மிகுந்த நாடுகளில் தேவைகளை நிறைவு செய்யும் வழிவகைகள் குறைவாக இருக்கும் கட்டத்தில் கிடைப்பருமை நிலவுகிறது. அங்கு வளங்கள் அளவிற்குட்பட்டனவாக இருக்கின்றன. தேவைகள் அளவற்றவைகளாகின்றன. விருப்பங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், வழி வகைகள் குறைந்தவையாக இருக்கின்றன. இத்தகைய நிலையில், மக்கள் நலனை (Human Welfare) எவ்வாறு மேம்படுத்துவது எனப் பொருளியல் ஆராய்கிறது. மனிதனின் எண்ணற்ற தேவைகளுள் முதன்மையானவற்றை நிறைவேற்ற வளங்களைப் பயன்படுத்தித் தேவையான பொருள்களை உற்பத்தி செய்வது எவ்வாறு என்பதை விளக்கிக் காட்டுவதே பொருளியலாகும்.
அன்றாட வாழ்வில் அருமைப்பாடு
மனித வாழ்வு, உற்பத்தி, நுகர்வு, பங்கீடு, பரிமாற்றம் என்ற முக்கியச் செயல்களில் பின்னிக் கிடக்கிறது. உற்பத்தியில் நிலம், உழைப்பு, மூலதனம், நிருவாகம் என்ற நான்கு காரணிகள் பங்கு பெறுகின்றன. நிலத்தின் அளவு நானடைவில் உற்பத்தியின் பெருக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் படைப்புக் காலத்தில் இருந்த நிலங்கள் எல்லாம் அழிந்துவிட்டன என்பது பொருளன்று. அன்று நிலத்தில் மக்களுக்கு இருந்த ஈடுபாடு குறைவு. இன்று நிலத்தின் பயன்பாடு (Utility) மிகுந்து விட்டது. ஆகவே, நிலம் குறிப்பிட்ட தேவையை நிறைவு செய்யக் கிடைப்பதரிதாகிறது. எனவே, காடுகள் அழிக்கப்படுகின்றன. கரடுமுரடான நிலங்கள் பண்படுத்தப்படுகின்றன. காடுகளின் அழிப்பால் மழையின் இயல்பு மாறுகிறது. உலகின் பல பாகங்களில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் வறட்சி ஏற்படுகிறது. அன்று மழை நீர் வீணே ஓடிக் கடலில் சேர்ந்தது. அப்பொழுது தண்ணீர் இலவசப் பொருள், இன்று மனிதன் அந்நீரை அணைகள் கட்டித் தேக்கி வறட்சிக் காலத்தில் பயன்படுத்துகிறான். தேவைக்கேற்பத் தண்ணீரின் அளவு இல்லை என்றால் தண்ணீரும் அருமைப்பாடுடைய பொருளாகி விடுகிறது.
ஆதியில் மனிதன் தன் குறைந்த விருப்பங்களுக்கு ஏற்பப் பசி ஏற்படும்பொழுது வேட்டையாடினான். பின் பசியைப் போக்கப் பயிரிட்டான். எளிய முறையில் தன் உடையையும் உறையுளையும் அமைத்துக் கொண்டான். நாளடைவில் அவன் விருப்புகள் விரிவடைந்தன; தேவைகள் பல தோன்றின; அவற்றை நிறைவேற்ற அயராது உழைத்தான். அவன் தன் உழைப்பால் அனைத்துத் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாது என்று கண்ட பொழுது, இயந்திரங்களைக் கண்டுபிடித்து, அவற்றின் சக்தியையும் தன் உழைப்போடு கூட்டிக் கொண்டான். உழைப்பு என்பது மனித ஆற்றல். மக்கள் தொகை குறைவான நாடுகளில் மனித ஆற்றல் அருமைப்பாடு உடையதாகிறது. மனித ஆற்றல் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளில் மூலதனம் கிடைப்பது அரிதாகிவிடுகிறது. மனிதன் பெரும்பாலும் தான் ஈட்டிய செல்வத்தையும் பொருள்களையும் தனது நுகர்ச்சிக்காகச் செலவிடுவதால், மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடிய வழியில் அவற்றைச் சேமிக்காமல் ஆடை அணிகலன்களாகச் சேமிக்கிறான். இதனால், உற்பத்திக்கான முதலீட்டை எழுப்ப முடியவில்லை. நுகர்ச்சி நிறைவு பெற்றால் தான், முதலீட்டைப் பற்றிச் சிந்திக்க முடியும்.
முதலீடு தேவைக்குப் போதுமானதாக இல்லை என்றால் உற்பத்தி குறைகிறது. உற்பத்தியின் குறைவால் பண்டங்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது. குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைப் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே எப்படிப் பங்கீடு செய்வது? இன்று நம் நாட்டில் செயற்படும் நியாய விலைக் கடைகளில் உதவித்தொகை பெற்று விற்பனையாகும் பண்டங்கள் (Subsidised Goods), பொருள்களின் அருமைப்பாட்டை உணர்த்துகின்றன. தேவைக்கேற்பப் பொருள்கள் விற்பனையில் இல்லை என்றால் இருக்கும் பொருள்களுக்குப் போட்டி ஏற்படுகிறது. இதனால், பண்டங்களின் மதிப்பு (Value) உயர்கிறது; எனவே, விலையும் ஏறுகிறது. அருமைப்பாடுதான் விலை ஏற்றத்திற்கு வழி வகுக்கிறது. அதிக விலையின் விளைவு ஆதாயம் ஆகும். ஆதாயம், பதுக்கல் செய்ய வணிகர்களைத் தூண்டுகிறது.
மனிதனின் உள்ளத்தில் கிடைப்பரிய பொருள்களை நாடிச் செல்லும் நாட்டம், அன்றும் இன்றும் என்றும் உள்ளது. இதனால்தான், அருமைப்பாடு நிகழும் காலங்களில் பொருள்களின் விலை உயர்கிறது. எரிபொருளான மண்ணெண்ணெயின் விலை, ஒரே நாளில் பலர் அதற்காகத் தெருவில் அலைவதைப் பார்த்தவுடனே, நஞ்சுபோல் ஏறிவிடவில்லையா? அருமைப்பாடே பல சமூகச் சிக்கல்களுக்கு ஆணிவேராக அமைந்துள்ளது. தேவைக்கு மேல் அளிப்பு இருந்து விட்டால் அருமைப்பாட்டை வலைபோட்டுத் தேட வேண்டியிருக்கும். சூரிய ஒளி, காற்று இவ்விரண்டும் இன்றியமையாதவை. இருப்பினும், இவ்விரண்டும் அருமைப்பாட்டைத் தாண்டி நிற்பதால் இவற்றுக்கு விலை இல்லை. ஒருவேளை சூரிய ஒளியை ஓர் ஆக்கச் சக்தியாக வருங்காலத்தில் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கினால், அதற்கும் விலை கொடுக்க வேண்டி வரலாம். இன்று தங்கம் மக்களுக்குக் கிட்டாததொன்றாகி விட்டது. காரணம், தங்கத்தின் அருமைப்பாடு உலகெங்கும் உணரப்படுகிறது. தொடர்ந்து அதன் விலையும் ஏறிக்கொண்டே போகிறது. இருப்பினும், மனிதனுக்குத் தங்கத்தின் மேல் உள்ள நாட்டம் தீரவில்லை. இத்தகைய நாட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரவே மனிதன் உழைக்கிறான். அனைத்துப் பண்டங்களும் மக்களுக்குத் தங்கு தடையின்றிக் கிடைக்குமாயின் மனிதன் வேலை உண்பதும் உறங்குவதுமாகவே இருந்திருக்கும்.
அருமைப்பாடு, பொருளாதார வகையில் பிரிவினையையும் வேறுபாட்டையும் உருவாக்கியுள்ளது. பொருள்களின் கிடைப்பருமை மிக்க அளவில் உள்ள நாடுகள் ஏழை நாடுகளாகவும், கிடைப்பருமையின்றி உற்பத்திக் கூடுதலாக உள்ள நாடுகள் செல்வம் மிகுந்த நாடுகளாகவும் கருதப்படுகின்றன. உற்பத்திப் பெருக்கத்தினால் வாணிகம் வளர்கிறது. பிற நாட்டிலும் பண்டங்கள் விற்கப்படுகின்றன. செல்வம் நாட்டிற்குள் வருகிறது. அது மீண்டும் அதிக உற்பத்திக்கு ஆதாரமாக அமைகிறது. வளங்கள் நிரம்பப் பெற்ற பொருளாதார வளர்ச்சி மிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அருமைப்பாட்டிற்கு இடமில்லையா என்ற கேள்வி எழுவது இயல்பு. அந்நாடுகளில் வறுமைக் கோட்டிற்கடியில் வாழும் மக்கள் மிகச் சிலர். அந்த மிகச் சிலரும் ஏழை நாடுகளில் வாழும் நடுத்தர மக்களை விட வாழ்க்கைத் தரத்தில் மேம்பட்டவர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகள், அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் போன்றவைகளில் நிறைவு பெற்றுவிட்டன. அங்கு எழும் தேவைச் சிக்கல்கள், புதிய அமைப்புக் காரை எப்பொழுது வாங்குவது, வருமானத்தை எப்படிச் செலவிடுவது என்பன போன்றவைகளே. ஆகவே, அங்கு ஆடம்பரப் பொருள்களின் தேவை வளர்கிறது. வளரும் தேவை உடனுக்குடன் உற்பத்தியின் மூலம் தீர்க்கப்படுகிறது. அதற்குள் வாழ்க்கை முறை (Life Style) மாறுகிறது. புதிய தேவைகள் மீண்டும் எழுகின்றன. இந்தச் சூழல், அருமைப் பொருள்களின் பங்கீட்டால் ஈடுசெய்யப்படுகிறது. அந்நாடுகளில் எழும் சிக்கல்களில் முதலிடம் பெறுவது, எவ்வகையில் வள ஆதாரங்களை உற்பத்திக்குப் பங்கீடு செய்வது என்பதே! தேவையை நன்கு கணிக்காமல் உற்பத்தி செய்தால், அங்காடியில் பொருள்கள் விற்பனையாகாமல் தேங்கிவிடும். இந்நிலை பெருமளவில் நிகழ்ந்தால் பொருளாதார மந்தம் ஏற்பட்டு, அந்நாட்டை முடக்கிவிடும்.
உலகில் எல்லா நாடுகளிலும் அருமைப்பாடு உணரப்படுகிறது. ஆனால், நாட்டிற்கு நாடு அதன் இயல்பு மாறுகிறது. பேராசிரியர் மெக்கென்னா (Mekenna) பின்வருமாறு கூறுகிறார்; ‘வள ஆதாரங்களின் பற்றாக்குறையால்’ மனிதத் தேவை நிறைவு செய்யப்படாத போது, அந்நாட்டில் பொருளியல் மறைந்து விடும். ‘ஆனால், அத்தகைய நிலை ஏற்படாதது ஏனெனில் காலம் குறுகியது’ என்கிறார்.
அருமைப்பாடு ஒரு கோணத்தில் பார்த்தால், சமுதாயத்தின் வகுப்புப் பிரிவினைக்கும் காரணமாகிறது. அருமைப்பாடு மிகுந்த பொருள்களை விற்பனை செய்யும் விற்பனையாளருக்கு மிகுந்த ஆதாயம் பெற வாய்ப்புண்டு. அதே சமயம், அருமைப்பாடு மிகுந்த பண்டங்களை வாங்குவோர் (நுகர்வோர்) தங்களது எல்லைக்குட்பட்டுச் செலவிட வேண்டியதாகிறது. இதனால், சமுதாயத்தில் ஒருசாராரிடம் செல்வம் சேருகிறது; மற்றொரு சாராரிடம் செல்வம் குறைகிறது. காலப்போக்கில் இது. இருப்போர், இல்லாதோர் என்ற நிலையைத் தோற்றுவிக்கிறது. நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால், அருமைப்பாடு ஒழுங்காக ஈடுகட்டப்படாவிட்டால், அது சுரண்டலுக்கும் (Exploitation) முதலாளித்துவத்திற்கும் அடிகோலும். உலகில் காணப்படும் குறிப்பிட்ட சில பொருளாதார அமைப்புகளான சமத்துவம், முதலாளித்துவம், பொதுவுடைமை ஆகிய யாவும் அருமைப்பாட்டின் அடிப்படையில் எழுப்பப்பட்டவையே. பொதுவுடைமை நாடான உருசியாவிலும் சமத்துவ நாடுகளான இசுகாண்டிநேவிய நாடுகளிலும் அருமைப்பாட்டின் விசையூக்கத்தை (Vigour) மட்டுப்படுத்திப் பண்டங்கள் யாவருக்கும் எளிதாகவும் சம அளவிலும் கிடைக்கும்படி வள ஆதாரங்கள் யாவும் பொதுவுடைமையாக்கப்பட்டு, அரசே அனைத்துப் பகிர்வு முறையையும் நடத்தி வருகிறது.
மனிதனின் பொருள் சாராச் செல்வத்திலும் (Non–Material Wealth) அருமைப்பாடு இடம் பெறுகிறது. பொருள் சாராச் செல்வத்துள் முதன்மையான இடம் பெறுவது மனிதனின் திறமை, குறிப்பாக, பொருளீட்டும் திறன் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. இத்திறமை வேறுபாட்டால் ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. திறமை எல்லோரிடமும் சமமாக இல்லாததால், ஒரே பணியை ஒரே தகுதி பெற்றுச் செய்யும் இருவர் தம் வேலைத் திறனில் மாறுபடுகின்றனர். ஒரு வேலையைச் செய்து முடிக்க ஒரு குறிப்பிட்ட திறன் ஒரு தொழிலாளியிடம் எதிர்பார்க்கப்படுகிறது. அத்திறன் அவனிடம் குறையுமேயானால் அவனும் பாதிக்கப்படுகிறான்; உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. இதனைத் திறன் அருமைப்பாடு (Scarcity of Efficiency) என்று கொள்ளலாம். இத்தகைய திறன் அருமைப்பாட்டை நீக்கக் கல்விப் பயிற்சி, சாதகமான சூழ்நிலை, உடல் உரம் பெறச் சலுகைகள் முதலியன உழைப்பவருக்கு அளிக்கப்படுகின்றன. அருமைப்பாடு அல்லது கிடைப்பருமை, மனிதக்கையின் எல்லா நிலைகளிலும் பின்னிப் பிணைந்து கிடந்தாலும், அது மனிதனால் மேற்கொள்ள முடியாததொன்றன்று. பண்டங்களின் அருமைப்பாட்டை நீக்க, மாற்றுப் பொருள்களை (Substitutes) அவன் பயன்படுத்தலாம். சர்க்கரைத் தட்டுப்பாடு என்றால், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காப்பிக் கொட்டை கிடைப்பருமையாகிவிட்டது என்றால் தேயிலையைப் பயன்படுத்தலாம்.
அருமைப்பாடு இயற்கையின் விளைவாலும் மனிதனின் செயற்கையாலும் நிகழ்கிறது. இயற்கையின் அளிப்பில், எல்லா வளங்களும், எல்லா இடங்களிலும் சமமாகக் காணப்பட்டு, மனிதனின் ஆற்றலிலும் திறமையிலும் மட்டும் அருமைப்பாடு காணப்படின், அது மனிதனால் எழுந்தது என்று கூறலாம். ஆனால், சகாராப் பாலைவனம் இயற்கையின் கொடுமையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. எரிமலைகள் நிறைந்த இந்தோனேசியா, இயற்கையின் கொடுங்கோன்மைக்குச் சான்றாக அமைகிறது. அதே சமயம், வற்றாதவள நதிகள் பாய்ந்தோடும் செழுமையான பல இடங்கள், இயற்கையின் வள்ளல் தன்மைக்கு எடுத்துக்காட்டாகின்றன. சில இடங்களில் இயற்கை, அருமைப்பாட்டைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. பல சூழல்களில் மனிதனின் செயலும், அருமைப்பாட்டைத் தோற்றுவிக்கிறது. இயற்கை வளங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தும்பொழுது மனிதத் தேவைகளுக்கேற்ப இன்றியமையாப் பண்டங்களை உற்பத்தி செய்யாமல், உல்லாச வாழ்வுக்கான ஆடம்பரப் பண்டங்களையும் (Luxuries) மதிப்பை உயர்த்திக் காட்டும் பெருமைசார் (Prestigious Goods) பண்டங்களையும் உற்பத்தி செய்வதால், பண்டங்களுக்கு அருமைப்பாடு ஏற்படுகிறது. அன்றியும், உற்பத்தி செய்த பொருள்கள் சீரிய முறையில் பங்கீடு செய்யப்படாவிட்டாலும் அருமைப்பாடு எழும். எவ்வாறாயினும், எழுந்த, எழுகின்ற, எழும் அருமைப்பாட்டைத் தனி மனிதனின் தனி முயற்சியாலும் சமுதாயத்தின் கூட்டு முயற்சியாலும் அரசியல் அமைப்புகளாலும் திட்டங்களாலும் ஈடுசெய்ய முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் அருமைப்பாடுடைய பொருள்களைப் பகிர்ந்து வாழும் மனப் பக்குவம் அடைய வேண்டும். காண்க: அரும்பண்ட ஒதுக்கீடு.நே.எஸ்.டே.
துணை நூல்கள்
Richard G. Lipsey., “An Introduction to Positive Economics”, English Language Book Society and Wieidenfeld and Nicolson, Third Edition, Great Britian, 1971.
Hunt E.K. & Howard J. Sherman., “Economics: An Introduction to Traditional and Radical Views”, Harper International Edition, Harper & Row Publishers, Third Edition, New York, 1978.
Paish. F.W., “Benham's Economics – A General Introduction”, Sir Isaac Pitman and Sons Limited, Eighth Edition, London, 1967.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 825)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w9rmjtnf/
தமிழ்“அருமைப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/w9rmjtnf/APA
Oliyon Research. (2026). அருமைப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w9rmjtnf/MLA
"அருமைப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/w9rmjtnf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment