<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> இது ஒரு சல்ஃபைடு கனிமம் ஆகும். இது தாமிரம், இரும்பு ஆகிய இரண்டின் சல்ஃபைடு (CuFeS) ஆகும். இதைத் தமிழில் பித்தளை நிமளை என்று கூறுகின்றனர். இதற்கு, தாமிர-பைரைட் (copper pyrite), மஞ்சள் தாமிரத் தாது (yellow copper ore) என்னும் வேறு பெயர்கள் உண்டு. சில சமயங்களில் தங்கம், வெள்ளி ஆகியவை சிறிய அளவில் இருக்கும். சால்கோபைரைட் (chalcopyrite) நீள் சதுரத்- தொகுதியின் ஸ்பீனாய்டு வகுப்பைச் சேர்ந்தது. இதன் படிகக் குத்து அச்சின் நீளம் C = 0.98525 ஆகும். சால்கோபைரைட் பெரும்பாலும் நான்முக வடிவப் படிகங்களாகவும், ஸ்பீனாய்டு வடிவத்துடன் சேர்ந்தும் காணப்படுகிறது. சால்க்கோபைரைட் படிகங்கள் (111) தளத்தில் இரட்டுறல் உடையனவாய்க் காணப்படுகின்றன. (101), (110) தளங்களிலும் படிக இரட்டுறல் காணப்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சால்கோபைரைட் திண்மமாகவும், கெட்டியாகவும், குமிழ்குவை அல்லது முந்திரி வடிவமாகவும் காணப்படுகிறது. இதில் கனிமப் பிளவு (201) தளத்திற்கு இணையாகச் சில சமயங்களில் தெளிவாகக் காணப்படும். சீரற்ற முறிவு உடையது; நொறுங்கக் கூடியது. இதன் கடினத் தன்மை 3.5—4; ஒப்படர்த்தி 4.1—4.3; உலோக மிளிர்வு உடையது, சால்கோபைரைட் பித்தளை அல்லது வெண்கலம் போன்ற மஞ்சள் நிறம் உடையது. இதன் தூள் நிறம் பசுமை கலந்த கறுப்பு. ஒளிப் புகாத் தன்மையது. இது நைட்ரிக் அமிலத்தில் கரையும். சால்கோபைரைட் தோற்றத்தில், பொன் போலவே இருக்கும். ஆகையால் இதைச் சிலர் முட்டாளின் தங்கம் (fool's gold) என்பர். தங்கம், சால்கோபைரைட் இரண்டையும் அவற்றின் தூளின் நிறத்தைக் கொண்டு எளிதில் வேறுபடுத்தி அறியலாம். சால்கோபைரைட் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. பைரைட்டுடன் தாமிர சல்ஃபைடு சேர்த்து உருக்கியும், தாமிர, இரும்பு ஆக்சைடுகளை ஹைட்ரஜன் சல்ஃபைடு வளிமத்தைச் சூழ வைத்துச் சூடாக்கியும் தயாரிக்கின்றனர். சால்கோபைரைட், பைரைட், போர்னைட், சால்கோசைட், டெட்ராஹைட்ரேட், மாலக்கைட், அஸீரைட் முதலிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படும். சில சமயங்களில் கலீனா, ஸ்பேலரைட், ஆர்சினோபைரைட், காசிட்டரைட் முதலிய தாது, கனிமங்களுடனும் கிடைக்கின்றது. சால்கோபைரைட் அதிக வெப்ப நிலையில் உண்டான வெப்ப நீர்ப் படிவுத் தாரைகளிலும், தொடு ஏற்புப் பாறையின் மாற்றப் படிவுகளிலும் காணப்படுகின்றது. இது அனற்பாறை, பெக்மடைட் பாறைகள், நைஸ், படலப் பாறை (schist) முதலிய மாற்றுருப் பாறைகளிலிருந்தும் கிடைக்கிறது. சால்கோபைரைட் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் சால்கோபைரைட் ஏனைய தாமிரத் தாதுக்களுடன் சிங்பும், மொசபானி, ஆந்திரத்திலுள்ளஅக்னி குண்டலா, ஜபல்பூர், சிக்கிம், கர்நாடகா (கோலார்) முதலான பகுதிகளில் காணப்படுகின்றது. சால்கோபைரைட், தாமிரத்தின் முக்கிய தாதுப் பொருள்களில் ஒன்றாகும். சால்கோபைரைட் என்னும் பெயர் சால்கோஸ் என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. —இல. வைத்திலிங்கம் நூலோதி. W. E. Ford, Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Pvt. Ltd, New Delhi, 1985.