இரண்டாம் உலகப் பெரும் போரின்போது வெடிக்கப்பட்ட கொடுமையான வெடிகுண்டு. 1945–ஆம் ஆண்டு சூலை 16-ஆம் நாள் நியூமெக்சிகோவில் அணுக்குண்டு வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க விமானங்கள் சப்பானிலுள்ள ஈரோசிமா, நாகசாகி என்னும் ஊர்களின் மீது அணுக்குண்டுகளை வீசின. 1945 ஆகசுட்டு 6-ஆம் நாள் ஈரோசிமாவின் மீதும், 9-ஆம் நாள் நாகசாகியின் மீதும் அணுக்குண்டுகள் வீசியதால் பல்லாயிரக்கணக்கானவர் உயிர்துறந்தனர். அவ்விரு நகரங்களும் தரை மட்டமாயின. இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர இவ்வணுக்குண்டுத் தாக்குதல்கள் பெரிதும் உதவின. எனினும், இக்கொடுமையை ஆசியர்களான சப்பானியரே முதன் முதலாக அனுபவித்தனர். மன்பதைமீது சுமத்தப்பட்ட மாபெரும் குற்றமாகும் இவ்வணுக்குண்டு வீச்சு. உலக நாடுகளில் வல்லரசுகளாகக் கருதப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், சோவியத்து உருசியா, சீனா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளிடம் அணுக்குண்டுகள் கையிருப்பில் உள்ளன. அணுக்குண்டுப் போரைத் தவிர்க்காவிடில் மனிதகுலம் அழிவுறும் எனும் அச்சம் நீடிக்கிறது.