இரண்டாம் இராசராச சோழனுக்குப்பின் சோழநாட்டை ஆண்ட வேந்தன், இவன் இயற்பெயர் எதிரிலிப் பெருமாள். இவன் கி.பி. 1163–இல் இரண்டாம் இராசாதிராசனால் இளவரசனாக அமர்த்தப்பட்டான். வேந்தனாக கி.பி. 1166–இல் இராசகேசரி இராசாதிராசன் என்னும் பட்டப் பெயருடன் அரியணையேறினான். இவ்வேந்தனது மெய்க்கீர்த்திகள் ‘கடல் சூழ்ந்த பார் மாதரும்’, ‘கடல் சூழ்ந்த பாரேழும்’, ‘பூமருவிய திசை முகத்தோன்’ என்னும் மூன்று வகைத் தொடக்கங்களைக் கொண்டிருந்தன. சிதம்பரத்திலுள்ள கல்வெட்டொன்று இவ்வேந்தனை ‘இராசாதிராச தேவராகிய கரிகாலச் சோழ தேவர்’ என்று குறிப்பிடுவதால், இவனுக்குக் ‘கரிகாலன்’ என்னும் சிறப்புப் பெயரும் இருந்தது என்பது புலனாகும். தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் ஆற்றூர்க் கல்வெட்டும் இதனை உறுதிசெய்கிறது. ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோ இராச கேசரிவர்மன்’ என்ற விருதுப் பெயரும் இவனுக்கு இருந்தது. பாண்டிய நாட்டு உள்நாட்டுப் போரில் தலையிடல் குலசேகர பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அப்போது அவன் உறவினனான பராக்கிரம பாண்டியனும் பாண்டிய அரியணைக்கு உரிமை கொண்டாடினான். இவ்விருவரிடையே போர் மூண்டது. பராக்கிரம பாண்டியன் இலங்கை வேந்தனான பராக்கிரமபாகுவின் உதவியை நாடினான். இலங்கைப் படையினர் பாண்டிய நாட்டை அடையுமுன்பே குலசேகரன் பராக்கிரம பாண்டியனையும் அவன் அரசியையும் கொன்றுவிட்டான். இலங்கைப் படையினர் கி.பி. 1169–இல் குலசேகர பாண்டியனை வென்று, பராக்கிரமனின் மகனான வீர பாண்டியனை அரியணையில் அமர்த்தினர். ஆனால், தன் படை வலிமையால் குலசேகரன் வீரபாண்டியனைத் துரத்திவிட்டு மீண்டும் அரியணையேறினான். ஆனால், பராக்கிரமபாகுவால் புதிதாக அனுப்பப்பட்ட படை குலசேகரனை வென்று, வீரபாண்டியனை மீண்டும் அரியணையில் அமர்த்தியது. வேறு வழியின்றிக் குலசேகரன் இராசாதிராசனிடம் உதவி கேட்கவே, சோழ வேந்தன் தன் படைத்தலைவனான திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவரையனை அனுப்பி கி.பி. 1170–இல் சிங்களப் படைகளைத் தோற்கடிக்கச் செய்து, கி.பி. 1172–இல் குலசேகரனை மீண்டும் அரசனாக்கினான். இதனைக் கேள்வியுற்ற பராக்கிரமபாகு பாண்டியனையும் இராசாதிராச சோழனையும் வென்றடிப்படுத்தப் படைகளைத் திரட்டினான். இதனால் சினங் கொண்ட இராசாதிராசன் தன் படைத்தலைவனான வேதவனமுடையான் அம்மையப்பனான அண்ணன் பல்லவராயன், ஈழநாட்டு அரியணையைக் கைப்பற்றச் சதித்திட்டம் தீட்டிய பராக்கிரம பாகுவின் மருமகன் சீவல்லபன் ஆகிய இருவரையும் பெரும்படையுடன் இலங்கைக்கு அனுப்பி கி.பி. 1176–இல் ஆங்குப் பேரழிவினை நிகழ்த்தச் செய்தான். இதனால் சோழ வேந்தன் எண்ணிறந்த ஈழப் பொருள்களைப் பெற்றான். இராசாதிராசனின் வலிமையை அறிந்த பராக்கிரமபாகு பாண்டியன் குலசேகரனுக்குப் பரிசுப் பொருள்களை அனுப்பி, அவனுடன் நட்புப் பூண்டான். நன்றி மறந்த குலசேகரனும் ஈழ வேந்தனுடன் நட்புக் கொண்டு, சோழ வேந்தனுடன் பகைமை பூண்டான்; சோழனுக்கு எதிரான சதிச் செயலிலும் ஈடுபட்டான். இதனைக் கண்டு சினம் கொண்ட சோழ வேந்தன் தன் படைத்தலைவனைக் கி.பி. 1177–இல் அனுப்பி, குலசேகரனை அரியணையினின்றும் இறக்கி வீரபாண்டியனை மதுரையில் மீண்டும் மன்னனாக அமர்த்தச் செய்தான். இச்சாதனை புரிந்த அண்ணன் பல்லவரையனுக்குப் பத்து வேலி நிலம் சோழனால் அளிக்கப்பட்டது. இவ்வாறு இராசாதிராசன் பாண்டியர் செயல்களில் தலையிட்டு ஆங்குத் தன் மேலாண்மையை நிலைநாட்டினான். மதுரையையும் ஈழத்தையும் வெற்றிகொண்ட இவ்வேந்தன், ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோ இராசகேசரி வர்மன்’ என்னும் பட்டப் பெயரையும் பெற்றான். இவ்வேந்தனைப் பற்றிய செய்திகள் திருவாலங்காட்டுக் கல்வெட்டுகளாலும் ஆலங்குடிக் கல்வெட்டாலும் பல்லவராயன் பேட்டைச் சாசனங்களாலும் ஆர்ப்பாக்கம் கல்வெட்டுகளாலும் அறியப்படுகின்றன. இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் சோழ அரசின் பெருமையும் பரப்பளவும் சிறிது குறைந்தன. இவன் காலத்தில் பொருளாதார நிலை சீர்பெறவில்லை. இவ்வேந்தனது ஆட்சிக் காலத்திய கல்வெட்டுகள் கடம்பை மாவட்டத்திலுள்ள நந்தலூரிலும் நெல்லூர் மாவட்டத்திலும் திருக்காளத்தியிலும் காணப்பெறுவதால், அப்பகுதிகளில் இவனுக்குட்பட்ட சிற்றரசர்கள் ஆண்டுவந்தனர் எனலாம். இவர்களைக் கட்டுப்படுத்துந் திறன் இவனிடம் இல்லை. குறுநில வேந்தரும் அரசியல் தலைவர்களும் இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் இராசராச மலையரையன் ஆகிய அருளாளப் பெருமான், இராசராச சேதிராயன், இராசராச கோவலராயன், கிளியூர் இராசகம்பீர சேதிராயன், நிலமளந்தானாகிய சேதிராயன், திருவரங்கமுடையான் இராசாதிராச மலையரையன், ஆகார சூர மலையமான் முதலான மலையமான் நாட்டின் பகுதிகளை ஆண்டுவந்த சிற்றரசர்களும், திருச்சிற்றம்பலமுடையான் ஆன பெருமானம்பிப் பல்லவரையன், வேதவனமுடையான் அம்மையப்பன் அண்ணன் பல்லவரையன் முதலான முதலமைச்சர்களும், வேதவனமுடையான் கருணாகரத் தேவனான அமரகோன், செங்கேணி அம்மையப்பன் எதிரிலி சோழச் சம்புவராயன், அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன், அம்மையப்பன் சீயன் பல்லவாண்டானான இராச நாராயண சம்புவரையன், கடந்தைச்சேந்தன் ஆதித்தனான இராசராச சிங்கார முத்தரையன், சேந்தன் கூத்தாடுவானான இராசராச வங்கார முத்தரையன் (கி.பி. 1160–1168), அரச நாராயணன் ஏழிசை மோகனாகிய சந்நாத கச்சிராயன், திருக்கொடுங்குன்றமுடையான் நிடதராசன், குணமலைப்பாடி உடையான் ஆட்கொண்டான், கங்கை கொண்டானாகிய பொத்தப்பிச்சோழன், நெல்லூர்ச் சித்திரையன், புசபலவீரன் ஆகோ மல்லராசன் முதலான அரசியல் அதிகாரிகளும், சோழரது மேலாண்மையைக் காப்பதிலும் ஆட்சிமுறையை ஒழுங்குபடுத்துவதிலும் பெரும்பணி ஆற்றினர். மதிப்பீடு இவ்வேந்தன் சோழ அரசின் எல்லைகளை விரிவுபடுத்தினான் என்றோ சோழரின் பெயரினையும் புகழினையும் உயர்த்தினான் என்றோ கூறுதல் இயலாது. சிங்களப் படைகளை வெல்வதற்கு உமாபதி தேவர் என்ற சிவாச்சாரியாரை 28 நாட்கள் நோன்பிருக்கச் செய்து, மந்திர பலத்தைப் பயன்படுத்தியமை, சோழ அரசர் யாரும் செய்யாத, செய்ய முயலாத புதிய முயற்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மாந்திரீகத்தின் மூலம் சிங்களப்படைகளை வென்றதால், இவன் இவ்வகையில் மொகலாயப் பேரரசன் ஔரங்கசீபுடன் ஒப்புமை கூறத்தக்கவனாவான். மத்திய ஆட்சியிலும் அரசாங்கக் கொள்கையிலும் சிற்றரசர்களின் செல்வாக்கும் தலையீடும் மிகுதியாயின. சோழப்பேரரசின் வீழ்ச்சிக்கு இவ்வேந்தனும் ஒரு காரணமாக இருந்தான். ம.இரா.த. துணை நூல் Nilakanta Sastri, K.A., The Cholas, University of Madras, 1984.