சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன். சங்க நூல்களில் கிடைக்கும் குறிப்புகளிலிருந்து உதியஞ்சேரல் என்னும் பெயரில் இரண்டு அரசர்கள் இருந்தனர் என்பது தெரிகிறது. 1) சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன். இவனை முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் புறநானூற்று இரண்டாம் பாடலிற் சிறப்பித்துப் பாடியுள்ளார். இம்முடிநாக ராயர் தலைச் சங்கப் புலவர்களுள் ஒருவர் என்று இறையனார் களவியல் உரைப் பாயிரம் குறிப்பிடுகிறது. இதனால் இவரால் பாடப்பெற்ற உதியஞ்சேரல் என்னும் அரசனும் தலைச் சங்க காலத்தைச் சார்ந்தவனாக இருத்தல் வேண்டும் என்று கொள்ளலாம். இம்மன்னன் பாரதப் போரில் ஈடுபட்ட பாண்டவர், கவுரவர் ஆகிய இருசார் படையினர்க்கும் அப்போர் முடியும்வரை பெருஞ்சோறிட்டு உதவினான் என்பதும், அதனால் இவன் ‘பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்’ என வழங்கப்பட்டான் என்பதும் கூறப்படுகின்றன. இரு படையினர்க்கும் வரையாது சோறு வழங்கிய செய்தியினை முடிநாக ராயர், ‘அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்’ என்று (புறம்: 2) குறிப்பிட்டுள்ளார். மாமூலனார் இச்செய்தியினை ‘முதியர்ப்பேணிய உதியஞ்சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை’ என்று (அகம். 233) கட்டியுள்ளார். இவ்வரசன் பாரதப் போரில் இரு படையினர்க்கும் பெருஞ்சோறு கொடுத்தான் என்னும் செய்தியினை உடன்படாது பிறவாறு விளக்குவோரும் உள்ளனர். முரஞ்சியூர் முடிநாக ராயர் இம்மன்னனை முன்னிலைப்படுத்தி நேரே, ‘வரையாது கொடுத்தோய்’ என விளித்துச் செவியறிவுறுத்தி வாழ்த்துவதாகப் பாடியுள்ளார். மாமூலனார் இச்செய்தியை உவமையால் முன்னர் நிகழ்ந்த பழஞ்செய்தியாக்கிக் குறிப்பிட்டுள்ளார். 2) பாரதப் போர்ப் படையினர்க்குப் பெருஞ்சோறு வழங்கிய உதியஞ்சேரலாதன் என்னும் அரசனின் மரபில் வந்தவனாகக் கருதப்படும் ஒரு சேர வேந்தன். பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தினால் சிறப்பிக்கப்படும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் மூன்றாம் பத்தினால் சிறப்பிக்கப்படும் பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் தந்தையாவான். இவனைப் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தினுக்சூரிய பதிகம் ‘மன்னிய பெரும் புகழ் மறுவில் வாய்மொழி, இன்னிசை முரசின் உதியஞ்சேரல்’ குறிப்பிடுகிறது. இவனுடைய மனைவி ‘வெளியன் மகளான நல்லினி’ ஆவாள். இவனுக்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என இரண்டு புதல்வர் இருந்து, இவற்குப் பின் முறையே சேரநாட்டை ஆண்டனர் என்னும் செய்தி, பதிற்றுப் பத்தின் இரண்டு, மூன்று ஆகிய பதிகங்களால் அறியமுடிகிறது. பதிற்றுப்பத்தால் அறியலாகும் சேர அரசர்கள் உதியஞ்சேரல் மரபு என்றும், இரும்பொறை மரபு என்றும் இரு மரபினில் அடங்குவர். அவர்களுள் உதியஞ்சேரல் மரபு இம்மன்னனைத் தொடக்கமாகக் கொண்டது. மாமூலனார் தாம் பாடிய மற்றொரு அகநானூற்றுப் பாடலில் (அகம் 65) ‘நாடுகண் அகற்றிய உதியஞ்சேரற், பாடிச் சென்ற பரிசிலர் போல’ என்று ஒருவமையை ஆண்டுள்ளார். ‘இப்பாட்டுடைத் தலைவனான உதியஞ்சேரல் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் வேறானவனாய், அவன் வழியில் வந்தவன். பதிற்றுப்பத்துள் இரண்டு மூன்றாம் பத்துகளை முறையே கொண்ட நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் இவ் உதியஞ்சேரற்கு மக்களாகத் தெரிகின்றனர்’ என்று மு. இராகவையங்கார் விளக்கியுள்ளார். இளங்கீரனார் என்னும் புலவர் தம் நற்றிணைப் பாடலில் (நற். 113) உதியன் நடத்திய ஒரு பெரும் போரைக் குறிப்பிட்டுள்ளார். இப்புலவர் குறிப்பிடும் உதியன் என்பவன் முன் குறிப்பிட்ட உதியஞ்சேரலாதனேயாவன் என்று மு. இராகவையங்கார் கருதுகிறார். இவ் உதியஞ்சேரலாதன் பதிற்றுப்பத்தில் மறைந்துபோன முதலாம் பத்தின் பாட்டுடைத் தலைவனாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.