பொருளியலில் அடக்க விலை (Cost Price) என்பது ஒரு பண்டம் உற்பத்தி செய்வதற்கு ஆகும் மொத்தச் செலவினைக் (Total Cost) குறிக்கும். செலவுகள் பல வகைப்படும்: அலுவற்செலவு, மொத்தச் செலவு, மாறுஞ் செலவு, மாறாச் செலவு, குறுங்காலச் செலவு, நீள்காலச் செலவு, மாற்றுச் செலவு, இறுதி நிலைச் செலவு ஆகியவை சிறப்பானவை. அலுவற் செலவு ஒரு நிறுவனத்தின் மேலாண்மைச் செலவுகள் மட்டும் அலுவற் செலவுகள் (Business Costs) எனப்படும். கச்சாப் பொருள்களை வாங்குவதற்கான செலவு, தொழிலாளருக்குக் கொடுக்கப்படும் கூலி, சில வரிகள், எரிபொருட்செலவு ஆகியன இவற்றில் அடங்கும்; நிறுவன நிருவாகம், பட்டுவாடா செய்யும் பணச் செலவுகளே இவை. வெளிப்படைச் செலவுகள் (Explicit Costs) என்றும் இவை சொல்லப்படும். மொத்தச் செலவு அலுவற் செலவுகளுடன் வேறு சில வகைச் செலவுகளையும் கூட்டிக் கணிக்கும் தொகை மொத்தச் செலவு (Total Cost) எனப்படும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் தாம் செய்யும் வேலைக்கு ஊதியம் பெறாதிருப்பின் அவருக்குரிய ஊதியச் செலவும், அவர் தம் பணத்தை முதலீடு செய்திருந்தும் அதற்கான வட்டியைப் பெறாவிடின் அந்த முதலுக்குரிய வட்டித் தொகையும், அவருடைய நிலத்திலும் கட்டடத்திலும் அத்தொழிற்சாலை அமைக்கப்பட்டு அதற்கான வாடகையைப் பெறாவிடின் வாடகையும், அலுவல் செலவுகளுடன் சேர்க்கப்படும். சுருங்கக் கூறின், உரிமையாளர் கொடுத்துதவும் உற்பத்திக் காரணிகளுக்கு, அவற்றிற்குரிய அங்காடி விலைகளைச் செலவு இனங்களாகக் கருதி அவையும் கூட்டப்படுகின்றன. இவற்றையெல்லாம் எவ்வாறு கணிப்பது? ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் இன்னொரு நிறுவனத்தில் உழைப்பாரேயானால், அதில் அவர் பெறக் கூடிய ஊதியம் தம்முடைய சொந்த நிறுவனமும் தரவேண்டிய ஊதியமாகும். எவரிடமிருந்து நிறுவன உரிமையாளர் மிகுதியான ஊதியம் பெறுவாரோ அவ்வூதியம் அவருடைய உழைப்புக்கு வாய்ப்புப் பெறுமானம் அல்லது மாற்றுச் செலவு (Alternative Cost) எனப்படும். இவை சொந்த நிறுவனத்தின் செலவுகளுடன் சேர்க்கப்படும். இவ்வகையில் அவருடைய முதலுக்கு வட்டி அதனைப் பிறருக்குக் கடனாகக் கொடுத்தால் கிடைக்கக் கூடிய உயர் நிலை வட்டி, அவருடைய நிலம், கட்டிடம் முதலியவற்றைப் பிறருக்கு வாடகைக்கு விட்டால் கிடைக்கக்கூடிய வாடகைகளில் மிகுதியான வாடகை ஆகியவை மொத்தச் செலவுக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் வெளிப்படைச் செலவுகள் அல்ல. ஆனால், அனுமானத்தில் ஏட்டில் எழுதும் செலவுகள், இவை உட்கிடைச் செலவுகள் (Implicit Costs) எனப்படும். இயல்பான ஆதாயம் நிறுவன உரிமையாளர் ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து, அதன் செயல்பாட்டைக் கண்காணித்து, உயர்நிலை முடிவுகளான எப்பொருள் செய்வது, எத்தனை அலகுகள், எவ்வகை எந்திரம், எம்முறை உற்பத்தி போன்றவற்றை முடிவு செய்து செயலாற்றினால் அவர் ஒரு தொழில் முயலுநரின் (Entrepreneur) பணிகளைச் செய்கிறார் என்பதாகும். ஒரு தொழிலைத் தோற்றுவித்தலோடு புதிய தொழில் நுட்பம், புதிய கச்சாப் பொருள், புதிய அங்காடி போன்ற புதுமைப்படுத்தல் முயற்சிகளனைத்தும் தொழில் முயலுநரின் சிறப்புப் பணிகளாகும். இவற்றை உணர்ந்து செயலாற்ற அரிய திறமை வேண்டும். இவை கண்காணிப்பாளர் மட்டுமே செய்யும் பணிகளல்ல. பொதுவாக இவை நிருவாகிகளால் செய்யமுடியாத பணிகள். இப்பணிகளுக்குப் பொதுவான நிருவாகியின் ஊதியம் போதாது. ஆகவே, தகுந்த வெகுமதியில்லாவிடில் தொழில் முயலுநர் எவரும் ஊக்கத்துடன் செயலாற்ற இயலாது. சிறப்புத் திறன் மிக்க ஒரு தொழில் முயலுநர், நாள்தோறும் செய்யவேண்டிய நிருவாக அலுவல்களை ஊதியம்பெறும் நிருவாக அலுவலரிடம் ஒப்படைத்து விடுவார். தொழில் முயலுநரை ஊக்குவித்துப் புதுமை புகுத்தலைத் தொடர்ந்து செய்யக் குறைந்த அளவு வெகுமதியாவது கொடுப்பது இன்றியமையாதது. இல்லையேல் நுகர்வோர் புதிய பொருள்களை மலிவான விலையில் நுகரும் வாய்ப்பினை இழப்பர். தொழில் முயலுநருக்கு அளிக்கப்படும் வெகுமதியையே பொதுவான அல்லது இயல்பான ஆதாயம் (Normal Profit) என்பர். இயல்பு ஆதாயமும் நிறுவனத்தின் மொத்தச் செயலில் அடங்குகிறது. விற்பனைச் செலவு முதலாளித்துவப் பொருளாதாரத்தில் விற்பனைச் செலவு (Selling Cost) ஒரு சிறந்த இடம் பெறுகிறது. ஏனெனில், நிறைவுப் போட்டி (Perfect Competition) இப்பொருளாதாரத்தின் உயிர்நாடி. எனவே, இதனை விலை மையப் பொருளாதாரம் என்றும், அங்காடி மையப் பொருளாதாரம் என்றும் கூறுவதுண்டு. ஒரே பொருளைப் பல உற்பத்தியாளர் பல வணிகப் பெயர்களுடன் விற்பதால், அவர்களுக்கிடையே வலுவான போட்டி ஏற்படுகிறது. போட்டி என்பது முதலாளித்துவத்தின் கொள்கை, உற்பத்தியாளர் அனைவரும், பொருள்களை விற்கவும் போட்டியில் வெற்றிபெறவும் விளம்பரத்திற்குப் பெரிய அளவில் செலவு செய்வர். சில பொருள்களுக்கு உற்பத்திச் செலவு குறைவாகவும் விளம்பரச் செலவு மிகுதியாகவும் ஆவதுண்டு. எடுத்துக்காட்டாக வாசனைப் பாக்கு, வாசனைப் புகையிலை, பீடி, தலைவலி மாத்திரை முதலியவற்றைக் கூறலாம். விற்பனை நடக்காத காலத்திலும் கூட விளம்பரச் செலவு இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும். போர்க்காலத்தில், இங்கிலாந்தின் புகழ்பெற்ற “அன்ட்லீ & பாமர்சு” மாச்சில்லுகளும் (Biscuits) ஓவல் துகள்களும் (Ovaltine) இந்திய அங்காடிக்கு வரவில்லை. இருப்பினும் அக்காலங்களில் போர் முடிந்தவுடன் உங்களுக்குச் சுவைமிக்க “பிசுகோத்துகளும் ஓவல்டின்களும் கிடைக்கும்” என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, இப்போது விளம்பரம் இல்லாத பொருள்கள் குப்பையிலே என்று கூறுவதுகூட மிகையாகாது. எனவே, விளம்பரச் செலவு தொடர்ந்து இடைவிடாது செலவிடப்படின், அதுவும் மொத்தச் செலவில் ஓர் இனமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மொத்தச் செலவு = அலுவல் செலவுகள் + நிறுவன உரிமையாளரின் வாய்ப்புப் பெறுமானங்கள் + இயல்பான ஆதாயம் + விற்பனைச் செலவுகள். மாறுஞ்செலவும் மாறாச் செலவும் மொத்தச் செலவை மாறுஞ்செலவு, மாறாச் செலவு என்று இருகூறுகளாகப் பிரிப்பது பொருளியல் மரபு. மாறுஞ்செலவுகள் (Variable Costs) உற்பத்தியின் அளவுக்கேற்ப மாறும். கச்சாப் பொருள் (Raw materials), எரிபொருள், தொழிலாளர் கூலி, ஆயத் தீர்வை முதலியவற்றிற்காகும் செலவுகள் மாறுஞ் செலவுகளாகும். மாறாச் செலவுகளில் (Fixed Costs) தலையாயது நிலம். மற்றவை தொழிற்சாலைக் கட்டிடம், எந்திரங்கள் ஆகியவற்றுக்கு முதலீடு செய்த முதலுக்குரிய வட்டி, தேய்மானம், சில வரிகள், சில காப்பீட்டுக் கட்டணங்கள், சிலவகை ஊதியம் முதலியன. ஒரு தொழிற்சாலை மூடிக் கிடக்கும் காலத்திலும் அதற்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் மாறாச் செலவுகள் என்று கூறலாம். மூடிக் கிடப்பினும் நிருவாகி நிருவாக அலுவலர்கள், தொழில் நுட்பஅறிஞர், காவல்காரர் முதலியோரை வேலையிலின்றும் நீக்க முடியாது. அவர்கள் நிலையாக வேலையில் அமர்த்தப்பட்டவர்கள். எனவே, அவர்கள் சம்பளங்கள் மாறாச் செலவில் இடம்பெறுகின்றன. மேலும், எந்திரங்கள் துருப்பிடிக்காமலிருக்க அவைகளுக்கு எண்ணெய் முதலியன தடவுவதற்கு ஆகும் செலவும் மாறாச் செலவில் அடங்கும் சில வரிகளும் (மனை வரி) கட்டியே ஆகவேண்டும். தொழிலதிபரின் மாற்றுப் பெறுமானங்கள், விளம்பரச் செலவுகள் ஆகியவை மாறாச் செலவைச் சேர்ந்தவையே. இவ்வாறு நோக்கின், மாறாச் செலவு நடைமுறையில் பொதுச் செலவுகளைவிட மிகுதியான இனங்களைக் கொண்டது என்பது விளங்கும். மாறுஞ் செலவுகள் முதன்மை அல்லது நேர்ச் செலவுகள் (Prime or Direct Cost) என்றும் மாறாச் செலவுகள் துணைச் செலவுகள் (Supplementary Costs) என்றும் கூறப்படும். மொத்தச் செலவு = மாறுஞ் செலவு + மாறாச் செலவு. குறுங்காலச் செலவுகளும் வளைகோடுகளும் அடக்கவிலையை ஆயும் பொருளியல் வல்லுநர்கள், குறுங்கால, நீள்காலச் செலவுகளில் மிகுந்த கவனம் செலுத்துவதுடன் அவற்றில் வேற்றுமையும் காண்கின்றனர். குறுங்காலத்தில் ஒரு நிறுவனத்தின் மாறாச் செலவுகள் நிலையாக இருக்கும். உற்பத்தி, பூச்சியத்திலிருந்து உயர்நிலை உற்பத்தி அளவைத் தொடும் வரை மாறாச் செலவு உற்பத்தியைப் பாதிப்பதில்லை. ஏனெனில், நிறுவப்பட்ட கட்டிடம், எந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டே உயர்நிலை உற்பத்தியை எட்டிப் பிடித்துவிடலாம். ஆகவே, குறுங்காலத்தில் உற்பத்தித் திட்டங்களை மாறுஞ் செலவுகள் மட்டுமே பாதிக்கின்றன. உற்பத்தியைக் கூட்டினால் மாறுஞ்செலவும் அதே விகிதத்தில் கூடும். உள்ளீடுகளின் விலை நிலையாக இருப்பின், உற்பத்தி வளர்ச்சியின் வேகத்திலேயே மாறுஞ் செலவுகளும் வளரும். வளர்ச்சி குன்றினால், மாறுஞ் செலவும் குறையும் தன்மையுடையது, அங்காடியின் தேவைக்கேற்ப, ஒரு நிறுவனம் உற்பத்தியைக் கூட்டவும் குறைக்கவும் செய்யும். கச்சாப் பொருள்கள், எரிபொருள்கள், ஆயத்தீர்வை, கூலிகள், குறுகிய காலக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி முதலிய மாறுஞ் செலவுகள் மாற்றமடைகின்றன. கீழ்க்காணும் அட்டவணை, குறுங்காலத்தில் எவ்வாறு அடக்க விலை வரையறுக்கப்படும் என்பதைக் காட்டுகிறது. குறுங்காலத்தில் உற்பத்தி பூச்சியத்திலிருந்து உயர்நிலை உற்பத்திக்கு உயர்ந்தாலும், உள்ளீடுகளின் (கச்சாப் பொருள்கள் முதலியன) விலைகள் மாறாது நிலையாகவிருக்கும் என்னும் கருது கோளில் (Hypothesis) தொகுக்கப்பட்டது. அட்டவணை (1): மாறுஞ்செலவு, மாறாச் செலவு முதலியன உற்பத்திப் பெருக்கத்திற்குத் தேவையான உள்ளீடுகளின் விலைவாசி நிலையாக இருக்கும் என்ற கருதுகோளினால், சராசரி மாறுஞ் செலவு உரூ. 0.50 ஆக நிலைத்திருப்பதுடன் மொத்த மாறுஞ்செலவு உற்பத்தியின் வீதத்தில் கூடிச் செல்கிறது. மாதாச் செலவு (பத்தி–2) உரூ. 1000-உம் உற்பத்தி பூச்சியத்திலிருக்கும்போதும் மற்ற உற்பத்தி அளவுகளிலும் அப்படியே மாறாதிருக்கிறது. உற்பத்தி அளவு கூடக் கூட, ஓர் அலகுக்குரிய சராசரி மொத்தச் செலவு (பத்தி-6) குறைந்துகொண்டே செல்கிறது (உரூ. 1.50 இலிருந்து உரூ. 0.83 வரை). ஏனெனில் இது மொத்த உற்பத்திச் செலவை (பத்தி-5) உற்பத்தி அலகுகளால் (பத்தி-1) வகுத்துவரும் ஈவு. சராசரிச் செலவு (Average Cost AC) இரண்டு பகுதிகளையுடையது: (1) சராசரி மாறாச் செலவு (Average Fixed Cost, AFC), (2) சராசரி மாறுஞ் செலவு (Average Variable Cost AVC) அதாவது சராசரிச் செலவு = சராசரி மாறாச் செலவு + சராசரி மாறுஞ்செலவு AC = AFC + AVC. இறுதிநிலைச் செலவு இறுதிநிலைச் செலவு என்பது ஓர் அலகு மிகுதியாக உற்பத்தி செய்வதனால் ஏற்படும் மிகுதிச் செலவு (AC). இறுதிநிலைச் செலவு மாறாச் செலவினால் சிறிதேனும் பாதிக்கப்படாதது. இறுதிநிலைச் செலவு மாறுஞ் செலவினால் மட்டுமே பாதிக்கப்படும் என்பதைக் கணிதவியல் முறையில் ஆராயலாம். மொத்த உற்பத்தி ‘n’ அலகுகள் என்க. அப்பிடியிருப்பின், MC(n) = TC(n) — TC(n-1) := (TVC(n) + TFC) — (TVC(n-1) + TFC) := TVC(n) – TVC(n-1) = AVC இதில் Mc (n) என்பது, “n” - ஆவது அலகின் இறுதி நிலை உற்பத்திச் செலவு ஆகும். இதுபோன்று TC(n), ‘n’ அலகுகளின் மொத்தச் செலவு; TC (n-1), (n-1) அலகுகளின் மொத்தச் செலவு; TFC, மொத்த மாறாச் செலவு; TVC, மொத்த மாறுஞ் செலவு; TVC (n-1), (n-1) அலகுகளின் மொத்த மாறுஞ் செலவு; AVC, சராசரி மாறுஞ்செலவு. இச்சமன்பாட்டில் இறுதிநிலைச் செலவு, மாறுஞ் செலவுடன் மட்டுமே இணைந்தது. சராசரி மாறுஞ் செலவு, ஒரே நிலையில் உள்ள காலத்தில் அதுவும் நிலைச்செலவும் சமமாயிருக்கும் என்பது தெளிவாகிறது. மாறுஞ்செலவு, மாறாச் செலவு உற்பத்தி எந்த அளவிலிருப்பினும் மொத்தச் செலவு ஒரே நிலையிலிருப்பதை TFC என்னும் கிடைகோடு காட்டுகிறது. உற்பத்தி பூச்சியமாயினும் TFC உரூ. 1000 என்பதை OY அச்சில் அது தொடும் உயரத்திலிருந்து காண்க. மொத்த மாறுஞ்செலவுக் கோடு TVC, O-விலிருந்து கிளம்புவது, உற்பத்தி பூச்சியமாயுள்ள போது மாறுஞ் செலவும் பூச்சியம் என்பதைக் காட்டுகிறது அது, மேல்நோக்கிச் செல்வது, வெளியீடு (output) பெருகும்போது மாறுஞ்செலவும் அதே விகிதத்தில் பெருகுவதைக் காட்டுகிறது. TC = TFC +- TVC என்பதை TC என்னும் மொத்தச் செலவுக்கோடு காட்டுகிறது. இது இருவகைச் செலவுகளையும் (TFC, TVC) செங்குத்தாகக் கூட்டிவரும் தொகையைக் காட்டும்படி வரையப்பட்டுள்ளது. TCயும் TVCயும் இணைகோடுகள், இவற்றினிடையேயுள்ள செங்குத்துத் தூரம் உரூபாய் 1000-ஐக் குறிக்கும். படம்-1 மாறுஞ்செலவு, மாறாச்செலவு குறுங்காலச் சராசரிச் செலவு வளைகோடுகள் மொத்தச் செலவைக் காட்டிலும் ஓர் அலகு உற்பத்தி செய்வதற்கு ஆகும் சராசரிச் செலவில் மட்டுமே பொருளியல் வல்லுநரும் தொழிலதிபரும் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். ஒரு நிறுவனத்தின் செலவு வளைகோடுகள் (Cost Curves) வளைவாகவும் வழவழப்பாகவும் முக்குகள் (Corners), கோணங்கள் இல்லாமலுமிருக்கும். அவற்றில் நான்கு வகைக் கோடுகள் சிறப்பானவை. மொத்தச் செலவுக்கும் சராசரிச் செலவுக்குமுள்ள தொடர்பைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம்:– இதில் △ என்பது ஒரு சிறு அளவு மிகுதி (மாறுஞ் செலவிலும் மொத்த அலகு எண்களிலும்) என்பதைக் காட்டும் குறியீடு. மரபுவழிக் குறுங்காலச் செலவு வளைகோடுகள் மரபுப்படி புகழ் பெற்ற நான்கு குறுகிய காலச் படம் (2) மரபுவழி, குறுங்காலச் செலவு வளைகோடுகள் செலவு வளைகோடுகளைக் காட்டுவதுடன் அவற்றின் வடிவங்களையும் அவற்றிற்கிடையேயுள்ள உறவு முறைகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது. முதலில் AFC வளைகோடு ஒரு செவ்வக இருபுற வளைவு (Rectangular Hyperbola) என்பதைக் காட்டுகிறது. இதன் இரு நுனிகளும் முறையே செங்குத்து (OY), கிடை (OX) அச்சுகளை அணுகிக் கொண்டே சென்றாலும் அவற்றைத் தொடவில்லை. உற்பத்தி (OM) சிறிதளவாயிருப்பின் ஓர் அலகின் மாறாச் செலவு MN உயரமுள்ளது. உற்பத்தி பெரிய அளவில் (OM) விரிவடைந்தால், மிகவும் குறைந்த உயரத்தில் (MN) உள்ளது. சராசரி மாறாச் செலவு எந்த அளவாயிருந்தாலும் உற்பத்தி அலகுகளைக் கொண்டு பெருக்கினால் ஒரே தொகையாக (உரூ. 1000 என்று அட்டவணை (1)இல் கொடுக்கப்பட்டது போல்) இருக்கும். கணிதவியலில் இதற்குரிய வாய்பாடு X x Y = K. இதில் X ஓர் அலகின் விலை; Y உற்பத்தி அலகின் எண்: K நிலையான தொகை. சராசரி மாறுஞ்செலவு AVC வளைகோடு உற்பத்தி அளவு பூச்சியத்திலிருந்து நிறுவனத்தின் திறன் அளவு (Capacity Output OP) வரை மிகும் போது வளர்ந்துசெல் விதியின் செயல்பாட்டினால் AVC குறையும். AVC வளைகோடு கீழ் நோக்கிச் செல்லும்; நிறுவனத்தின் திறனளவை அடையும்போது AVC மிகக் குறைந்த அளவிலிருக்கும். திறனுக்கு அப்பால் AVC கோடு மேல் நோக்கிச் செல்கிறது. இதற்குக் காரணம், இந்நிலையில் குறைந்து செல் விளைவு விதி செயல்படுவதே. படத்தில் AVC முதலில் கீழ் நோக்கியும் பின்னர் மேல் நோக்கியும் செல்கிறது. ஆகவே இது U வடிவம் பெறுகிறது. சராசரி மொத்தச் செலவுக் கோடு இது சராசரி மாறுஞ் செலவும் சராசரி மாறாச் மாறாச் செலவும் சேர்ந்த கூட்டுத்தொகை. இவற்றில் முன்னது (AVC) திறனளவு வரை கீழ்நோக்கியும் பின்னர் மேல் நோக்- கியும் செல்கிறதென்பது தெளிவு. பின்னதாகிய AFC கீழ்நோக்கியே செல்லும். AFC-இன் தீவிர வீழ்ச்சியினால், சராசரி மொத்தச் செலவுக் கோடு AVC மேல் நோக்கிச் செல்லத் தொடங்கிய பின்னும் சிறிது தூரம் கீழ்நோக்கியே செல்கிறது. ஆனால் இறுதியில் AVC-இன் வேகம் வலுப்பட்டு ATC-யையும் மேல் நோக்கி வளையச்செய்கிறது. எனவே ATC வளைகோடும் U வடிவம் பெறுகிறது. இறுதிநிலைச் செலவுக் கோடு இதன் வடிவம் தூய கோட்பாட்டின (Pure Theory) படி எப்படி இருக்கும் என்பதை ஆராயலாம். மாறு விகித விளைவு விதியின் (Law of variable proportions) படி, தொடக்கத்தில் உள்ளீடுகளால் மிகுதியான வெளியீடும் (Output), பின்னர் ஒரு கட்டத்திற்கு அப்பால் வெளியீடு குறைந்தும் காணப்படும். வெளியீடு மிகுதியாகும் போது MC குறைவதால் MC வளைகோடு கீழ் நோக்கிச் செல்லும். பின்னால், வெளியீடு குறையும் போது MC கூடிக்கொண்டும் அதனால் MC வளைகோடு மேல் நோக்கியும் செல்லும். எனவே MC வளைகோடும் U வடிவம் பெறும். இதைப் படத்தில் காணலாம். MC வளைகோடு கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும்போது AVC மற்றும் ATC வளைகோடுகளிரண்டையும் அவற்றின் மிகவும் தாழ்ந்த நிலைப் புள்ளிகளில் கீழிருந்து வெட்டி மேல் நோக்கிச் செல்லும். மேலும் MC வளைகோட்டின் கீழ்ப்பகுதி, அதாவது இரண்டு அச்சுகளுக்கும் (OX,OY) உள்ளடங்கிய பரப்பு மொத்தச் செலவைக் காட்டும். படம் (1)இல் காட்டியுள்ளவற்றை ஒரு வரைகோட்டுக் கோவை என்று கூறலாம். அதைக் கூர்ந்து ஆராய்ந்தால், அது எவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிறுவனம் செயல்படுகிறது என்பதைக் காட்டுவதாகும். குறுங்காலச் சராசரி மொத்தச் செலவு தொடக்கத்தில் குறைந்து கீழ்நோக்கிச் சென்று பின்னர் மேல் நோக்கிச் செல்லும். இதில் மிகக் குறைந்த அளவு செலவில் விளையும் உற்பத்தியைத் திறனளவு உற்பத்தி என்று கூறுவர். இதுவே உயர்ந்த நிலை உற்பத்தியளவு அன்று. திறனளவு உற்பத்திக்கு மேல் உற்பத்தி செய்தால் செலவுக்கோடு மேல் நோக்கிச் செல்லும். எந்தத் தொழிற்சாலையிலும் பொறியியல் வல்லுநர்கள், ஒரு குறிப்பிட்ட அளவு அல்லது திட்டமிட்ட உற்பத்தி அளவு (Designed or planned output)-க்கு என எந்திரங்களை அமைக்கிறார்கள். திட்டமிட்ட அளவுக்குக் குறையினும் கூடினும் எந்திரங்களைப் பயன்படுத்துவதென்பது நடைமுறையில் இயலக் கூடியதே. ஆனால், இந்நிலையில் அலகு ஒன்றிற்காகும் சராசரி மொத்தச் செலவு உயர்ந்துவிடும். இதனால், மொத்தச் செலவுக்கோடு U வடிவம் பெறுகிறது. மொத்தச் செலவில், மாறாச் செலவின் விழுக்காடு மிகுமேயானால் சராசரி மொத்தச் செலவு விரைவாகக் குறையும்; இதில் U வடிவத்தின் இரு முனைகளும் செங்குத்து நிலையைப் பெறும். மாறாச் செலவு மொத்தச் செலவில் ஒரு சிறு பகுதியே; சிறு விழுக்காடாயிருப்பின் U வடிவத்தின் இரு கைகளும் ஒரு தட்டின் (saucer) விளிம்புகள் போலத் தட்டையாக இருக்கும். படத்தில் நான்கில் மூன்று வளைகோடுகள் U வடிவத்திலும் AFC வளைகோடு இருபுற வளைவுக் கோடாகவும் (Hyperbola) இருப்பதைக் காணலாம். இவ்வகைச் செலவுக் கோடுகள் வழவழப்பான வளைகோடுகளாக இருக்க வேண்டியதில்லை. உற்பத்தி வளர்ந்து செல்கையில், ஒரு பெரும்பகுதிக்கு AVC-யும் MC-யும் கிடைக்கோடாகவும் (horizontal line) இருக்கக் கூடும். அப்போது AVC-யும் MC-யும் சமமாகவிருக்கும். சராசரி மாறுஞ்செலவுக் கோடு (AVC) கிடைக்கோடாக இருப்பின், அதன் பொருள், AVC மாறவில்லை ஒரே நிலையில் இருக்கும் என்பதுவே, இந்நிலையில் “மிகுகின்ற ஒவ்வொரு அலகுக்கும் ஒரே செலவு” தானிருக்கும். இதுவே இறுதிநிலைச் செலவு (MC) ஆகும். இறுதிநிலைச் செலவும் சராசரி மாறுஞ் செலவுச் கோடுகளும் இணைந்து செல்வதைப் படம் (3)–இல் காணலாம். படம்: 3 இறுதி நிலைச் செலவு வளைகோடு படம் (3)-இல் AB பகுதி முழுவதும் AVC-யும் MC-யும் சமமாயுள்ளன. ஆயினும் இச்சமநிலைக்கு ஒரு முடிவு தெரிகிறது. MC செங்குத்தாக மேல் நோக்கிச் செல்வதையும் AVC மேல் நோக்கிச் செல்வதையும் காட்டுகிறது. படம் (2)–இல் காணும் AVC, MC கிடைகோடுகளைப் பற்பல அனுபவ ஆய்வுகள் (empirical studies) உறுதிப்படுத்தியுள்ளன. சில நிறுவனங்களில் உற்பத்தி அளவு விரிவிடையும்போது, நீண்ட கட்டத்திற்கு இறுதி நிலைச் செலவு மாறாமல் அல்லது மிக நுண்ணிய மாறுதலுடன் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி பெருகும்போது ஒரு பெரிய விரிவுக் கட்டத்தைத் (expansion path) தாண்டுவது வரை இறுதிநிலைச் செலவு மாறாதிருக்கும். நீள்காலச் செலவு வளைகோடுகள் நீண்ட காலத்தில் ஒரு நிறுவனத்தில் எல்லா உள்ளீடுகளும் மாறும். ஏனெனில், நீண்ட காலத்தில் நிறுவனர் புதுக் கட்டடங்களைக் கட்ட முடியும்; பழைய கட்டடத்தை விரிவாக்க முடியும்; புது எந்திரங்களை நிறுவமுடியும்; புதிய தொழில் நுட்ப வல்லுநர்களை அமர்த்த முடியும். உள்ளீடுகளை எந்த விகிதத்திலும் மாற்றிக் குறைந்த அளவுச் செலவில் அமைத்துக் கொள்ள முடிகிறது. எனவே, நீண்ட காலத்தில் உற்பத்தி விளைவுகள் (returns to scale) பெருகி வரும். படம்-4 நீள்காலச் செலவு வளைகோடுகள். படம் (4)-இல் வரையப்பட்டவை சராசரி மொத்தச் செலவுக் கோடுகள் (இனி மொத்தம் எனும் அடையை நீக்கியே குறிக்கப்படும்). குறுங்காலத்தில் மூன்று வகைத் திறனளவு உற்பத்தி கொண்ட A,B,S எனும் நிறுவனங்களின் சராசரிச் செலவுக் கோடுகள் முறையே SAC, SAC, SAC என்பன. A நிறுவனத்தின் திறனளவு உற்பத்தி மிகக் குறைந்ததே; B நிறுவனம் A-ஐ விடப் பெரிது; C நிறுவனம், B-ஐ விடவும் பெரிது. இவற்றில் B நிறுவனம்தான் மிகக் குறைந்த சராசரிச் செலவில் உற்பத்தி செய்கிறது என்பதை SAC-இல் உள்ள P எனும் புள்ளி, மிகத் தாழ்ந்த இடத்திலிருந்து காட்டுகிறது. இதற்குக் காரணம் பேரளவு உற்பத்தி நல்கும் சிக்கனங்கள் (Economics of large scale production) ஆகும். C நிறுவனம் B-ஐ விடப் பெரியதாயிருப்பதனாலேயே அதன் சராசரிச் செலவு B-யினதை விட மிகுதியாக இருப்பதை SAC கோடு சற்று உயரத்திலிருப்பதன் மூலமாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தொழிற்சாலையாக C ஆகிவிட்டதனால், இரண்டு சிக்கனக் கேடுகள் அதனைப் பாதிக்கின்றன:- 1) உற்பத்தியில் குறைந்து செல் விளைவு விதியின் (Law of decreasing return or law of increasing Cost) தாக்கு வலுவடைகிறது. (2) மிகப் பெரிய அளவு உற்பத்தியினால் ஏற்படும் அச்சிக்கனக் கேடுகள் (Diseconomies of scale) வலுவடைகின்றன. OA உற்பத்தியை A அல்லது B நிறுவனத்தில் ஒரே சராசரிச் செலவில் செய்யக்கூடும்; எதில் உற்பத்தி செய்தாலும் சராசரிச் செலவு DA தானிருக்கும். SAC, SAC செலவுக் கோடுகளும் D-இல் வெட்டிச் செல்வது, இரண்டு நிறுவனங்களிலும் சராசரிச் செலவு சமம் என்பதைக் காட்டுகிறது. OA அளவு உற்பத்தி A நிறுவனத்தின் கொள்ளளவு உற்பத்தியாகும். ஏனெனில், A-யின் செலவுக் கோட்டின் குறைந்த அளவுச் செலவு AF. அதாவது, OA என்பது இந்நிலையில் உற்பத்தியாகும். ஆனால், B நிறுவனத்தில் இதே OA உற்பத்தியைச் செய்தால் சராசரிச் செலவு AE ஆகும்; இது AF-ஐ விடஉயரத்தில் குறைவு; அதனால், சராசரிச்செலவும் EF அளவுக்குக் குறைவு என்பது தெளிவாகிறது. B நிறுவனத்தின் திறனளவைவிடக் குறைவான OA உற்பத்தியை B-யில் செய்வதனால், A-யின் உற்பத்தியை விடக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யமுடியும் என்பது வடிவக் கணிதவியல் மூலம் நிறுவப்படுகிறது. இதிலிருந்து ஒரு பொதுத் தேற்றத்தை உருவாக்கலாம்:– வளர்ந்துசெல் விளைவு விதி செயல்படுகையில், குறிப்பிட்ட அளவு உற்பத்தியை அதற்கு நிகரான திறனளவு கொண்ட நிறுவனத்தில் செய்வதை விட, அதனைக் காட்டிலும் பெரிய நிறுவனத்தில் அதன் திறனளவுக்குக் குறைந்த போதிலும் அதில் உற்பத்தி செய்வதனால், மிகக் குறைந்த அளவுக்குச் சராசரிச் செலவு குறையும். ஒரு சிறிய நிறுவனம் படிப்படியாகப் பெரியதொரு நிறுவனமாக வளருவதாகவும், ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் புதிய எந்திரங்களை நிறுவி வருவதாகவும், அவற்றை இயக்கத் திறன் மிக்க தொழிலாளர்கள் கிடைப்பதாகவும் அனுமானத்தில் கொண்டு, நீண்டகாலச் செலவு வளைகோட்டைப் பகுத்தாயலாம். படம்-5 நீள்காலச் செலவு வளைகோடு நீள்காலச் செலவு வளைகோடு வரைபடம் 4-இல் பற்பல குறுங்காலச் செலவுக் கோடுகள் (SAC) வரையப்பட்டுள்ளன. அவற்றில், இடப்புறமிருந்து வலப்புறமாகப் பார்ப்போமானால் ஒவ்வொன்றும், ஒவ்வொரு திறனளவு உற்பத்தி அளவைக் கொண்டது என்பது புலப்படும். ஒவ்வொரு வலப் புற SAC-யின் நிறுவனமும் இடப்புறமுள்ள SAC-யின் நிறுவனத்தை விடப் பெரியது. ஒவ்வொரு ஆலையின் திறனளவும், குறைந்த அளவுச் செலவும் ஒவ்வொன்றிற்கும் வேறுபடும். LAC என்பது நீள்கால மொத்தச் சராசரிச் செலவுக் (Long run total average cost) கோடு. SAC வளைகோடுகள் அனைத்தையும் கீழ்ப்பகுதியில் தொட்டுக் கொண்டு செல்வதால், LAC அவைகளுக்கு ஒரு தொடுகோடாக (tangent) அமைகிறது. பல வகையான உற்பத்தித் திறன் படைத்த தொழிற்சாலைகளை அமைத்து, அவற்றின் குறைந்த அளவு செலவுகளைக் கண்டுபிடித்து, அதன் பின் அங்காடியில் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களின் மொத்தத் தேவையைக் கணக்கிட்டு, அதில் தனக்கு என்ன கிடைக்கக்கூடும் என்று ஆய்ந்து, அந்த அளவுள்ள நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததொன்று. பொதுவாகத் தொழில் முயலுநர் ஒவ்வொருவரும் தாம் எந்த அளவில் பொருள்களை விற்கக் கூடும் என்று முன்னரே கணக்கிட்டு அதில் ஓர் உறுதியான அளவைச் செய்வதென்று முடிவுகட்டுவார். பின்னர், தம் அனுபவத்துடன் பொறியியல் ஆய்வுகள், அகச் சிக்கனங்கள், சிக்கனக் கேடுகள் முதலியவற்றையும் ஆராய்ந்து, எந்த அளவு நிறுவனத்தை நிறுவுவது என்பதை முடிவு செய்வர். இந்த ஆய்வுகளின் மூலம் இவற்றை அறிய முற்படுவதால், நீள்காலச் செலவு வளைகோட்டைத் “திட்டமிடும் வளைகோடு” (planning Curve) என்றும் கூறுவதுண்டு. படம்-6 மரபுவழிச் செலவுக் கோடுகள் நீள்காலமும் குறுங்காலமும் மரபுவழி நீள்காலச் செலவு வளைகோடு படம் 5-இல் நீள்காலச் செலவு வளைகோடும், இறுதி நிலைச் செலவுக் கோடும், குறுகியகாலச் சராசரிச் செலவுக் கோடும் அதன் இணையான இறுதி நிலைச் செலவுக் கோடும், வரையப்பட்டுள்னை. குறைந்த செலவைக் குறுகிய காலத்தில் SAC இன் மிகத் தாழ்ந்த புள்ளி E காட்டுகிறது. அப்போது உற்பத்தியின் அளவு OA ஆகும். நிறுவனர் இப்பொழுதுள்ள உற்பத்தியைக் காட்டிலும் மிகுதியாக உற்பத்தி செய்ய முடிவு செய்தால் அம்முடிவை (Decision), இரண்டு வழிகளில் செயல்படுத்த இயலும். 1) இப்பொழுது நிறுவப்பட்டுள்ள எந்திரங்களைக் கொண்டே மிகுதியான உற்பத்தி செய்வது ஒரு வழி. இதனைப் பின்பற்றினால் மிகை உற்பத்திச் செலவுப் பாதை, குறுகியகால இறுதிநிலைச் செலவுக் கோடு SMC ஆகும். 2) தமது தொழிற்சாலையில் மேலும் பல எந்திரங்களை நிறுவி உற்பத்தியைப் பெருக்குவதே மற்றொரு வழி. இப்படிச் செய்தால், அதன் சராசரிச் செலவு (LAC) உயரும். இப்படிச் செலவு உயர்ந்து இறுதிநிலைச் செலவுக் கோடுகளும் சராசரிச் செலவுக் கோடுகளும் மேல் நோக்கிச் செல்வதற்குக் காரணம், குறைந்து செல் விளைவு விதியின் (Law of decreasing returns) செயற்பாடாகும். பொருளியல் அறிஞர்கள் நீள்காலச் செலவு வளைகோடுகளையும் அவற்றின் வடிவத்தையும் முடிவு செய்வது, மூன்று வகை விளைவு அல்லது செலவு விதிகள் என்பர். குறைந்த அளவு செலவை அடையும்போது ஒரு நிறுவனம் தனது திறனுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்கிறது. அதற்கும் மிகுதியாக உற்பத்தி செய்யத் துணிந்தால், வளர்ந்துசெல் செலவு விதி (Law of increasing costs) செயல்பட்டு LAC மேல் நோக்கிச் செல்லலாம். மாறாச் செலவு விதி (Law of Constant Costs) செயல்பட்டு LAC கிடைக்கோடாகவும் செல்லலாம். அல்லது குறைந்து செல் செலவு விதி (Law of decreasing costs) செயல்பட்டு LAC கீழ்நோக்கியும் செல்லலாம். இம்முறையில் காணும் இம்மூன்று முடிவுகளில் LAC கிடைக்கோடாக அல்லது கீழ்நோக்கிச் செல்லும் என்ற முடிவுகளை வல்லுநர்கள் மறுக்கிறார்கள். ஏனெனில், 1) புறச் சிக்கனங்களைக் குறைத்து மதிப்பிட்டும் அதன் கேடுகளை மிகைப்படுத்தியும் சராசரிச் செலவு மிகும் என்கிறார்கள். மேலும் தூய போட்டியில் (Pure Competition) தொழில் முயலுநர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுவதால், கச்சாப் பொருள்களும் கிடைப்பருமைப் (Scarce) பொருள்களின் விலைகளும் வேகமாக உயரும். இதன் காரணமாகச் செலவு மிகும் என்கிறார்கள். LAC கீழ்நோக்கிச் செல்லுமேயானால், நிறுவனம் ஒன்று மட்டுமே பொருள் உற்பத்தி செய்வதனால், சமூகத்தின் பொருள்கள் உள்ளீடுகளாக வீணடிக்கப்படுவதில்லை. நுகர்வோர்க்கும் குறைந்த விலையில் பண்டங்கள் கிடைக்கும். அப்படி LAC கீழ்நோக்கிச் சரியாவிடில் ஒவ்வொரு தொழிலிலும் பல உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுத் தீவிர போட்டி ஏற்பட வழிவகுக்கும். அளிப்புக் கோடு (Supply curve) கீழ்நோக்கியே சென்றால், தேவைக்கோட்டை (Demand curve) வெட்டாமலே செல்வதற்கு வாய்ப்புண்டு. அப்படியானால், உறுதிச் சமநிலை (Determinate Equilibrium) ஏற்பட வழியில்லை எனவே கீழ்நோக்கிச் செல்லும் செலவு அல்லது அளிப்புக் கோட்டிற்கு வழியில்லை என்பது மற்றும் ஒரு கருத்து. நீண்டகாலச் சராசரி செலவுக் கோடு தொடக்கத்தில் கீழ் நோக்கிச் சென்று, குறைந்த அளவு செலவைத் தொட்டுவிட்டு மேல் நோக்கிச் செல்லும் தன்மையுடையது. எனவே LACயும் U-வடிவமுடையது என்பது தெளிவாகிறது. L—வடிவ நீள்காலச் செலவு வளைகோடு இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த ஆராய்ச்சி முடிவுகள், L வடிவ நீள்காலச் செலவுக் கோட்டை வலியுறுத்துகின்றன. படம்-7 L-வடிவ நீள்காலச் செலவு வளைகோடு படம் (7)–இல் LAC தொடக்கத்தில் கீழ்நோக்கிச் சென்று இறுதியில் கிடைக்கோடாகச் செல்கிறது. இதன்படி ஒரு தொழிலில் இயங்கும் பற்பல தொழிற்சாலைகள் தொடர்ந்து விரிவடையும்போது உற்பத்தி அளவு OA இலிருந்து OB வரை ஒரே குறைந்த அளவுச் செலவில் செயல்படுகிறது என்று தெரிகிறது. ஒரு தொழில் துறையில் இயங்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் ஒரே திறன் அளவையும் ஒரே தொழில் நுட்ப முறைகளையும் பின்பற்றுவதில்லை என்பது நடைமுறையில் தெரிந்த உண்மை. ஆயினும் அவை ஒரே அங்காடியில் தங்கள் பொருள்களை விற்கின்றன; இயல்பான ஆதாயத்துடன் விற்கின்றன. என்பதையும் மறுக்க முடியாது. இயல்பான ஆதாயம் இல்லாமல் இழப்பு ஏற்படுமாயின் இழப்பு ஏற்படும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிடும். அவ்வாறின்றி, செயல்முறையில் தொழிற்சாலைகளின் திறன் அளவு வேறுபட்டிருப்பினும் A முதல் B வரையான உற்பத்தி அளவைக் கொண்ட நிறுவனங்கள், ஒரே குறைந்த அளவுச் செலவில் அல்லது சிறு வேறுபாடுகளுடன் இயங்குகின்றன. நீள்காலச் செலவு கோடுகள் முதலில் கீழ்நோக்கிச் சரிந்தாலும் பின்னர், கிடைக்கோடாகவே இருக்கும், எனவே LAC வளைகோடு L வடிவம் பெறும் என்பதாகிறது. கீழ்நோக்கிச் செல்லும் நீள்காலச் செலவு வளைகோடுகள் இயற்கையான முற்றுரிமைகன் (Natural monopolies) தனிவகையானவை. மின்சக்தி, தண்ணீர் வசதி முதலிய பொது வசதிகள் (Public Utilities), தொலைபேசி ஆகியவை இயற்கை முற்றுரிமை வகையைச் சேர்ந்தவை; இவற்றிற்கு அளவுச் சிக்கனங்கள் மிகுதியாகக் கிடைக்கும். எனவே எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நிறுவனம் பெரியதாக அமைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் மொத்தச் சராசரிச் செலவு குறையும். இதன் நீள்காலச் செலவுக்கோடு கீழ்நோக்கிச் செல்லும் பண்புடையது. இவ்வகை வசதிகளை இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளித்தால் நீண்டகாலச் செலவுக் கோட்டின் கீழ்நோக்கிச் செல்லும் பகுதியின் நடுவில் அல்லது இடைவெளிகளில் அவற்றின் உற்பத்தி அளவு இருக்கும். படம்: 8. பொதுப்பணி நிறுவனங்களின் நீள்காலச் செலவு வளைகோடு ஒரு பொதுப்பணி நிறுவனம் தன் தேவையை நிறைவு செய்ய அதன் உற்பத்தி OM-ஆக இருக்க வேண்டும். அப்படியானால், ஓர் அலகின் சராசரிச் செலவு MP ஆகும். இந்த அளவு உற்பத்தியை இரண்டு நிறுவனங்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுப்பின், நிறுவனத்தின் உற்பத்தி OM" ஆகக் குறைந்து, ஓர் அலகின் சராசரிச் செலவு M" P" ஆக மிகும். மொத்தத் தேவைக்குரிய அளிப்பை மூன்று நிறுவனங்களுக்குச் சமமாகப் பங்கிட்டளித்தால், ஒவ்வொன்றின் உற்பத்தி அளவும் OM' ஆகவும் ஒரு அலகின் சராசரிச் செலவு M' P' ஆகவும் மிகும். இப்படத்தில் OM" = ½ OM; OM' = ⅓ OM என்று குறிக்கப்பட்டிருக்கின்றன, M' P' மிகுதியான செலவாகவும் M" P" அதற்கடுத்தும், மிகக் குறைந்த செலவாக MPயும் உள்ளன. மொத்த அளிப்பையும் ஒரு நிறுவனமே உற்பத்தி செய்ய அனுமதித்தால் தான் மிகவும் குறைந்த விலையில் நுகர்வோர் மின்சக்தியைப் பெறுவர். இந்த எடுத்துக்காட்டினால் வெளிப்படும் உண்மை என்னவெனில், கீழ்நோக்கிச் செல்லும் நீள் காலச் செலவுக் கோடுடைய நிறுவனத்தை, போட்டியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 2 அல்லது 3 நிறுவனங்களாகப் பிரித்து நடத்தினால், சராசரிச் செலவு மிகவும் உயர்ந்துவிடும். இப்படிச் செய்வதால் தவிர்க்கக் கூடிய சுமையை நுகர்வோர்மேல் வைப்பதாகும். எனவே இயற்கை முற்றுரிமைகளைப் பலமான போட்டி எனும் குறிக்கோளை வைத்து நிறுவனத்தை உடைத்துச் சிறு நிறுவனங்களாக ஆக்கினால் சமூக நலன் (Social Welfare) கெடும். அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம் ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு தொழிலிலும் சில மிகப் பெரும் நிறுவனங்கள் (Giant Firms) இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக இரும்பு, எஃகு, மோட்டார், சர்க்கரை ஆலைகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றின் நீள்காலச் செலவுக் கோடுகள் படம் (5) இல் காண்பது போல் L வடிவம் பெற்றவை, ஒரே நிறுவனத்திடம் குறிப்பிட்ட பொருளில் உற்பத்தியை ஒப்படைத்தால் சராசரி மொத்தச் செலவு (ATC) கிடைக்கோட்டு மட்டத்திலேயே இருக்கும். இதன் உற்பத்தியை எட்டு அல்லது பத்து நிறுவனங்களிடம் பகிர்ந்தளித்தால், ஒரே சராசரிச் செலவுதான் அவை அனைத்துக்கும் நேரிடும்; ஒரு தீமையும் சமூகத்திற்கு வராது. ஆனால் ஒரே நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அது முற்றுரிமை பெற்று மிகையான ஆதாயம் திரட்டுவதில் முனையும். இதவைத் தடுக்கவும், இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களிடம் மொத்த அளிப்பும் அகப்பட்டால் அவை ஒன்று கூடி மறைமுக உடன்பாடுகளின் பேரில் விற்கும் விலையை உயர்த்தி நுகர்வோரைச் சுரண்டுவதைத் தடுக்கவும், அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்குக் காரணமும் கருவியுமாக இருந்தது L வடிவ நீள்காலச் செலவு வளைகோடே.கே.எஸ்.சோ. துணை நூல்கள் Donald Stevenson Watsonz, “Price Theory and Its Applications”, Scientific Book Agency, Calcutta, 1970. Samerelsou, P.A., “Economics”, McGraw - Hill Book Company, Tokyo, 1958. Richard P. Libsey, “Positive Economics”, Wien-denfeld and Nicholson, London, 1963. William Feliner, “Modern Economic Analysis”, Mc Graw - Hill Book Company, Tokyo, 1960. Jacob Viner, “Cost Curves And Supply Curves”, Homewood, 1952. George J. Stigler., “Production and Distribution in the Short Run”, Blackiston, 1946.