இரும்பிடர்த்தலையார்
irumpiṭarttalaiyār
சங்க காலப் புலவர்களுள் ஒருவர், இயற்பெயர் அறிய இயலவில்லை.
சங்க காலப் புலவர்களுள் ஒருவர், இயற்பெயர் அறிய இயலவில்லை. ஒருவர் பாடிய பாடலில் அமைந்துள்ள சிறப்பான தொடரால் அப்புலவரைக் குறிப்பிடுவது சங்க நூல்களுள் காணும் மரபாகும். இவர் பாடிய பாடலில் அமைந்துள்ள ‘கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் பெருங்கையானை இரும்பிடர்த்தலையிருந்து’ என்னும் பகுதியிலுள்ள ‘இரும்பிடர்த்தலை’ என்னும் தொடரின் பொருள் நயங்கருதி, இவர் இப்பெயரால் அழைக்கப்பெற்றார் எனத் தெரிகிறது. இரும்பிடர்த்தலை என்பதனைச் சிலர் ஊரின்பெயர் என்றும் கருதுகின்றனர். இவர் கரிகாற் சோழனுக்கு அம்மான் முறையினராவார். அரசியலில் அம்மன்னனுக்குப் பெருந்துணையாக விளங்கியுள்ளார். இச்செய்தியைச் ‘சுடப்பட்டுயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் – கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇனான்’ என்னும் பழமொழிப் பாடற்பகுதியாலும் அதன் பழைய உரையாலும் உணரலாம்.
இப்புலவர் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி என்னும் பாண்டிய மன்னனைப் பாடாண்டிணையில், செவியறிவுறுத்துப் பாடியுள்ளார். இதில் இம்மன்னனைக் ‘கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி’ என்றே குறிப்பிட்டுள்ளார். இப்பெயரை நோக்கும்போது, இத்தொடர்ச் சிறப்பால் இப்பாண்டிய மன்னன் இந்தப் பெயரால் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது புலனாகும். வழுதி என்பது பாண்டியரைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும். இவருடைய ஒரே பாடல் புறநானூற்றில் நான்காம் பாடலாக அமைந்துள்ளது. இதன் கண் பாண்டி மன்னனை விளித்து, ‘நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்’ என்று அறிவுறுத்தியிருப்பது சிறப்பாக உள்ளது. பாடியவர் பாடப்பட்டவர் ஆகிய இருவரின் இயற்பெயரும் அறியமுடியாத நிலையில், தம்மிடம் அமைந்துள்ள தொடர்களால் அவர்களுக்குப் பெயர் வழங்கிய பெருஞ்சிறப்புடையது இப்பாடல்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 226)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvpkkcg4/
தமிழ்“இரும்பிடர்த்தலையார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vvpkkcg4/APA
Oliyon Research. (2026). இரும்பிடர்த்தலையார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vvpkkcg4/MLA
"இரும்பிடர்த்தலையார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vvpkkcg4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment