பட்டை முறை ஓட்டு
paṭṭai muṟai ōṭṭu
ஈர் அச்சுத் தண்டுகளுக்கு இடையே, திறனைக் கடத்தும் முறைக்குப் பட்டை முறை ஓட்டு (belt drive) எனப் பெயர்.
ஈர் அச்சுத் தண்டுகளுக்கு இடையே, திறனைக் கடத்தும் முறைக்குப் பட்டை முறை ஓட்டு (belt drive) எனப் பெயர். பொதுவாக வலியூட்டப் படாத இழுவை, வலிவூட்டப் படாத நெகிழி,வலுவூட்டப் பட்ட தோல், துணி எஃகு, வலிவூட்டப் பட்ட இழுவை, வலிவூட்டப் பட்ட தோல், இழு திறன் கொண்ட கயிறு, இழு திறன் கொண்ட துணி (rubberized fabtic), இழு திறன் கொண்ட கயிறு மற்றும் துணி இவற்றின் கலவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினால், பட்டை தயாரிக்கப்பட்டிருக்கும். பயன்பாட்டிற்கேற்பப் பட்டைகள் தெரிவு செய்யப் படுகின்றன.
பட்டை வகைகளும் பயன்பாடும். பொதுவாகப் பட்டைகள் நால் வகைப்படுகின்றன. இவற்றின் சிறப்பியல்புகள், திறன், பயன் அனைத்தும் மாறு படுகின்றன.
தட்டைப் பட்டைகள். தொழில் புரட்சி ஏற்பட்டது முதல், இவ்வகைப் பட்டைகள் பரவலாகப் பயன் பட்டு வருகின்றன. இப்பட்டைகள் அதிக அளவு திறனைக் கடத்துவதை விட, மிக வேகத்தில் செயல் பட வேண்டிய போது, பயன் படுகின்றன. 370 KW திறனை ஏறக் குறைய, 500 hp வேகத்தில் இயங்கிக் கடத்தும். பொதுவாக, இவ்வகைப் பயன்பாடுகளில் மையத் தொலைவு மிகுதியாக இருக்கும் சிறிய கப்பிகள் (small pulleys) இடம் பெறும். V–பட்டைகள். மிகு வேகத்தில் இயங்கி, மிகு திறனைக் கடத்துவதுடன், நீண்ட காலமும் இயங்க வேண்டிய போது. V₁ பட்டை பயன் படுத்தப் படுகிறது. V₁ பட்டைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றமும், கோடக (Trapezoidal) வடிவத்தில் இருக்கும். இக்கப்பிகளின் மேல் உள்ள V₁ வடிவக் காடிகளின் மேல் இப்பட்டைகள் சுற்றும். V₁ பட்டைகளின் வெளிப் பரப்பு, கப்பியின் காடிகள் மேல் செயல் படும். பட்டை மிகு திருக்கத்தைக் கடத்துகிறது. பெரிய கப்பியின் விட்டத்தை விட மிகுதியாகவும், இரு கப்பிகளின் விட்டங்களின் கூட்டுத் தொகையின் மும்மடங்கை விடக் குறைவாகவும் இருக்குமாறு, மையத் தொலைவுகள் தெரிவு செய்யப் படுகின்றன. ஒரே கப்பியின் வெவ்வேறு காடிகளின் மேல் வெவ்வேறு பட்டைகளைப் பயன் படுத்தினால், அம்முறை பல பட்டை ஓட்டுகள் (multiple–belt drives) எனப் படும்.
ஒரே முழு நீளத்திற்குத் தொடர்ச்சியாக, ஒரே V பட்டை கிடைக்காத போது, தேவையான நீளத்திற்குத் தனித் தனி V₁ பட்டைகள் இணைத்துக் கொள்ளப் படுகின்றன. ஆனால், இவை தொடர் V₁ பட்டையைப் போல் வலிவானவை அல்ல. ஒரே முழு நீள V₁ பட்டை (endless V–belt) உயர் அளவாக நொடிக்கு 35 மீ. வேகத்தில் செயல் படும். தனித் தனி V₁ பட்டைகளால் இணைக்கப் பட்ட V₁ பட்டையோ, நொடிக்கு 20 மீ. வேகத்தில் செயல் படும்.
படலப் பட்டைகள். இவை தட்டைப் பட்டைகளில் ஒரு வகை என்று கூறப் பட்டாலும், உண்மையில் இப்பட்டைகள் தனி வகையே. இவை 100–4000 மைக்ரோ மீ. வரை தடிமன் உள்ள பட்டைகள். இப்பட்டைகள் நெகிழியால், பெருமளவிலும் இழுவையால் அரிதாகவும், தயாரிக்கப் படுகின்றன. மிகு வேகத்தில் இயங்கி, 7 KW போன்ற மிகக் குறைந்த திறனைக் கடத்தும் பயன்பாடுகளுக்கு இப்பட்டைகள் ஏற்றவை. இப்பட்டைகள் மிகக் குறைந்த வெப்பத்தையே உண்டாக்குகின்றன. எனவே, வணிகத் தொடர்பான எந்திரங்கள், நாடாப் பதிவு ஒலிப்பான்கள் போன்றவற்றில் பெரிதும் பயன் படுகின்றன.
நேரப் பொருத்து பட்டைகள். இவற்றை ஒத்திசைவு பட்டைகள் (synchronous belts) என்றும், பற்களுடைய பட்டைகள் (cogged belts) என்றும் கூறுவர். ஏனைய பட்டைகளை விட, இவற்றிற்கு மிகக் குறைந்த இழு விசையே தேவைப் படுகிறது. ஆனால், மிகு திறனைக் கொடுக்கக் கூடியவை. இப்பட்டைகளில், வெளிப் பகுதி சம தளமாகவும், உட்பகுதி பற்களுடையதாகவும் இருக்கும். இப்பற்கள் கப்பிகளின் காடிகளினுள், பொருந்தி இயங்கும். இப்பட்டைகள் சங்கிலி ஓட்டுகளைப் போல் ஒரே மாறா வேகத்தில் இயங்கும்.
சங்கிலிகள், பற்சக்கரங்கள் பயன் படுவனவற்றுள் குறைந்த இரைச்சலுடன், உயவு எண்ணெய் பயன் படுத்தத் தேவையில்லாத நிலையில், இப்பட்டைகள் பயன் படுகின்றன. இப்பட்டை நொடிக்கு, 800 மீ. வேகத்தில் செயல் பட்டு 150 KW திறனைக் கடத்துகிறது.
பட்டை–கப்பி இணையமைவுகள். இதில் இரு பிரிவுகள் உள்ளன. அவை திறந்த பட்டை ஓட்டு (open belt drive), குறுக்குப் பட்டை ஓட்டு என்பன. திறந்த பட்டை ஓட்டில், ஈர் இணை அச்சுத் தண்டுகளும் ஒரே திசையில் சுழலும். குறுக்குப் பட்டை ஓட்டில், ஈர் இணை அச்சுத் தண்டுகளும் எதிரெதிர்த் திசையில் சுழலும். நேரப் பொருத்து மற்றும் V₁ பட்டைகளைக் குறுக்குப் பட்டை ஓட்டு முறையில் இயக்க இயலாது.
கப்பிகளுக்கிடையேயான வேகங்கள். பொதுவாக,புரியிடைத் தொலைவு (pitch diameter), புரியிடை விட்டம், கப்பிகளின் விட்டக் கூட்டுத் தொகை (effective pulley diameter) ஆகியவற்றைப் பொறுத்து வேகங்கள் அமையும். கப்பிகளின் மேல் ஒட்டித் திரும்பி வளையும் இடத்தில் உள்ள பட்டையின் வெளிப் பக்கம் இழு விசைக்கும், உட்பக்கம் அமுக்கத்திற்கும் உட்படுத்தப் பட்டிருக்கும். இவற்றின் இடைப் பட்ட பகுதியில், புரியிடைத் தொலைவுக் கோடு இருக்கும். இக்கோடு எவ்வித மாற்றத்திற்கும் உட்படுத்தப் படாது. படல மற்றும் தட்டைப் பட்டைகளின் புரியிடைத் தொலைவுக் கோடு பட்டைப் பரப்பின் மையத்தில் இருக்கும். நேரப் பொருத்து மற்றும் பட்டைகளுக்குப் புரியிடைத் தொலைவுக் கோடு, V பட்டையின் வடிவத்தையும், அளவையும் பொறுத்து அமையும். கப்பிகளுக்கிடையே உள்ள வேகங்களைப் பின் வருமாறு குறிப்பிடலாம்.
கப்பி வேகங்கள் 0.5–1% எனக் குறைவாகவே இருக்கும். நேரப் பொருத்து பட்டையின் வேகத்தைப் பின் வருமாறு குறிப்பிடலாம்.
பட்டை வடிவமைப்பு. ஒரு பட்டை ஓட்டை வடிவமைக்க, ஓட்டும் மற்றும் ஓட்ட வேண்டிய அச்சுத் தண்டுகளின் வேகங்கள், கடத்துத் திறன் இவை இன்றியமையாதவை. ஓட்டு அமைப்பு, இடத்தை நிரப்பிக் கொள்ளாதவாறு சிறியதாக இருக்க வேண்டுமாயின், குறைந்த விட்ட அளவுள்ள கப்பிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பட்டை அளவுகள். பட்டையை வடிவமைக்கும் போது, அது பயன் பட இருக்கிற நீளம், அளவு, வடிவம், பட்டை தயாரிக்கப் பயன் படுத்த வேண்டிய பொருள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
திறந்த மற்றும் குறுக்குப் பட்டை ஒட்டுகளில் பயன் படும் அனைத்து வகைப் பட்டைகளின் நீளத்தையும், பின் வருமாறு கணிக்கலாம்.
இதில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள D₁இன் குறி குறுக்குப் பட்டை ஓட்டுகளுக்கு நேர் குறியாகவும் (+), திறந்த பட்டை ஓட்டுகளுக்கு எதிர்க் குறியாகவும் (-) இருக்கும்.
கப்பி, பட்டை இவற்றிற்கு இடையிலான தொடு கோணத்தைப் (angle of contact) பின் வருமாறு குறிப்பிடலாம்.
sin \big[\frac {D_2 - D_1}{2C}\big]
இதில், பெரிய கப்பிகளுக்கு நேர் குறியையும், சிறிய கப்பிகளுக்கு எதிர்க் குறியையும் கொள்ள வேண்டும். குறுக்குப் பட்டை ஓட்டுகளுக்குப் பின் வருமாறும் கணக்கிடலாம்.
sin \big[\frac {D_2 + D_1}{2C}\big]
இதில் கிடைக்கும் இரு கோணங்களில் குறைந்த கோணத்தையே கணக்கீடுகளுக்குப் பயன் படுத்த வேண்டும்.
பட்டை இழு விசை. திறனைக் கடத்தப் பட்டைகளுக்கு இழு விசை தேவைப் படுகிறது. பட்டை இறுக்கமாக இருக்கும் போது, மிகு திறனைக் கடத்தும். மிக அதிக சுமை இருக்கும் போது, பட்டை நழுவாதிருந்தால், அப்பட்டையில் உண்டாகும் குறைந்த இழு விசை விரும்பத் தக்கதாகும். கப்பிகள், அச்சுத் தண்டுகளுக்கு இடையேயான நீளத்திற்கு நேர் கோட்டில் சமமாக இருக்கும் பட்டையை, ஓர்அங்குல நீளத்திற்குக் கீழிறங்கச் செய்யத் தேவைப் படும் விசையை அளந்து, அதன் மூலம், பட்டை இழு விசை (belt tension) கணிக்கப் படுகிறது.
பட்டைத் தேய்மானம். பட்டையில் தேய்வை விட அயர்வே (fatigue) மிகுந்து காணப் படும். ஒரு கப்பியைச் சுற்றி வளைந்து வரும் பட்டையில் செலுத்தப் படும் சுழல் அழுத்தத்தினால் (cyclic stress) அயர்வு உண்டாகிறது. மிகு பட்டை இழு விசை, அதிக நழுவல் (slippage), அதிர்ச்சி, அதிர்வு போன்றவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால், பட்டையின் நீடிக்கும் காலம் குறையும். —இரா. இந்து
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 454)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtcge7gm/
தமிழ்“பட்டை முறை ஓட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vtcge7gm/APA
Oliyon Research. (2026). பட்டை முறை ஓட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vtcge7gm/MLA
"பட்டை முறை ஓட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vtcge7gm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment