அரிவாள் தாய நாயனார்
arivāḷ tāya nāyaṉār
திருத்தொண்டர் புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்; சோழ நாட்டில் உள்ள கணமங்கலம் என்னும் ஊரினர்.
திருத்தொண்டர் புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்; சோழ நாட்டில் உள்ள கணமங்கலம் என்னும் ஊரினர். இவ்வூர் தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி புகைவண்டி நிலையத்திற்கு வடக்கே 2½ கல் தொலைவில் உள்ள தண்டலைச் சேரிக்கு அருகில் உள்ளது. இப்போது இவ்வூர் கணமங்கலத்திடல் என வழங்கப்படுகிறது. வேளாளர் குலத்தில் பிறந்த அரிவாள் தாயர் நாள்தோறும் சிவபெருமானுக்குச் செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடுவும் கொண்டு படைத்து வழிபாடு செய்து வந்தார். இது இவர் மாறுபடாமல் தொடர்ந்து செய்து வந்த தொண்டாகும்.
அப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு வறுமையால் வாடியபோதும், தாம் பட்டினி கிடந்தும் இத்தொண்டினைத் தவறாது செய்து வந்தார். ஒருநாள் பசியால் உடல் மெலிந்து தளர்ந்த நிலையில் சிவபெருமானுக்குரிய படையல் பொருள்களைக் கூடையில் வைத்துத் தலைமேல் சுமந்து சென்றார். அவர் மனைவி ஆனைந்தினை (பஞ்சகவ்வியத்தை) மட்கலத்தில் எடுத்துக் கொண்டு பின்சென்றார். இவ்வாறு வயல் வழியே செல்லும்போது, பசி மயக்கத்தால் நாயனார் தள்ளாடிக் கீழே விழ, அவர் மனைவியார் ஒரு கையால் அவரை அணைத்துப் பிடித்தும் கூடையில் இருந்த பொருள் அனைத்தும் கமரில் (நிலவெடிப்பு) சிந்தின. இதனைக் கண்ட நாயனார், ‘இனிக் கோயிலுக்குப் போய்ப் பயன் இல்லை; உயிரோடிருந்தும் பயன் இல்லை’ எனக் கருதி, அரிவாளால் தம் கழுத்தை அறுத்துக் கொள்ளத் தொடங்கினார். சிவபெருமான் அதைத் தடுக்கத் திருவுளங் கொண்டு தாயனாரின் கையைப் பிடித்து நிறுத்தினார். தரையிலிருந்து வெடிப்பு வழியாகச் சிவபெருமான் நீட்டிய கையும், மாவடுவைக் கடிக்கும் விடேல், விடேல், என்னும் ஒலியும் ஒரே நேரத்தில் எழுந்தன.
தாயனார், சிவபெருமான் கருணையை வியந்தார். சிவபெருமான் உமையாளொடுங் காட்சி கொடுத்துத் தம் உலகிற்குத் தாயனாரை அவர் மனைவியுடன் அழைத்துக் கொண்டார்.
தாம் மேற்கொண்ட சிவத்தொண்டிற்கு ஊறு நேர்ந்தபோது உயிர் வாழ விரும்பாமல் தம் கழுத்தை அரிவாளால் அரிந்ததால் தாயனார் அரிவாள் தாயனார் என்று அழைக்கப் பெற்றார். இவர் முத்தியடைந்தது தைத்திங்கள் திருவாதிரை நாளில் ஆகும். இவரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத் தொகையில் “எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்” எனக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.வி.பா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 793)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vt59zhdr/
தமிழ்“அரிவாள் தாய நாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vt59zhdr/APA
Oliyon Research. (2026). அரிவாள் தாய நாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vt59zhdr/MLA
"அரிவாள் தாய நாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vt59zhdr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment