அமாவாசை என்பது இரவில் சந்திரன் தோன்றாத, மதி மறை நாளைக் குறிக்கும் பெயராகும். நாட்டில் வான கணித — சோதிட நூல்களின்படி கணிக்கப்பட்ட ‘பஞ்சாங்கம்’ என்ற நாள்குறிப்பு ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. பஞ்ச அங்கம் பஞ்சாங்கம். ஐந்து உறுப்புகளைக் கொண்டிருப்பதால் இஃது இப்பெயரால் குறிக்கப்படுகிறது. ஐந்துறுப்புகளாவன:– நட்சத்திரம், திதி, வாரம், யோகம், கரணம் என்பன. இவற்றுள் நட்சத்திரங்கள் அசுவனி முதல் இரேவதி ஈறாக இருபத்தேழு ஆகும். திதிகள் பதினைந்து என வரையறுக்கப்பட்டுள்ளன. பிரதமை முதலாகத் தொடங்கும் இப்பதினைந்து திதிகளும் தொடக்க நிலையில் ‘சுக்கில பக்க’த்திற்குரியவை. பின்னர் வரும் பதினைந்து திதிகளும், ‘கிருட்டிண பக்க’த்திற்குரியவை. ஒரு பக்கம் என்பது பதினைந்து நாள்கள் கொண்டது. முதல் பதினான்கு திதிகளுடன் பதினைந்தாவதாக முழுமதி நாளைச் (பௌர்ணமி) சேர்த்தால் அது சுக்கில பட்சமாகி விடுகிறது. இதனை வளர்பிறை நாள்கள் அல்லது முற்பக்கம் எனக் குறிக்கின்றனர். அவ்வாறே முதல் பதினான்கு திதிகளுடன் பதினைந்தாவதாக மதிமறைநாளைச் (அமாவாசை) சேர்த்தால் அது கிருட்டிண பக்கமாகிவிடுகிறது. இதனைத் தேய்பிறை நாள்கள் அல்லது பிற்பக்கம் என்று சொல்லுகின்றனர். ‘அமாவாசை’ என்னும் வடசொல் வழக்கு காலப் போக்கில் தமிழில் தோன்றியதாகும். இச்சொல் அமாவாசை, அமாவசி, அமாவாசி, அமாவாசியை, அமவாசி, அமாமசி எனப் பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது. அமாவாசையைச் சூரியனும் சந்திரனும் கூடும் நாள் என்னும் கருத்தில் இரவிமதியோகம் எனவும் கூறுவர். “இந்துவோ டிரவிக் கூட்டம் அமாவாசை அமையும் என்ப” என்பது சூடாமணி நிகண்டு. அமாவாசையன்று இரவு, உலகம் இருண்டு கிடக்கும்; வெண்நிலவைக் காண முடியாது. அமாவாசை கழித்து மூன்றாம் நாள்தான் பிறைத் திங்களைக் காணமுடியும். அது வளர்ந்து பதினாறு கலைகளும் நிறைந்து முழு நிலவாகிறது. இதனை அடியொற்றி எழுந்த புராணக் கதைகள் எண்ணற்றவை. அமாவாசையன்று இரவு உலகம் இருண்டிருப்பது ஏன் என்பதற்கான காரணத்தைப் புவி இயல் வல்லுநர்கள் நன்கு ஆய்ந்து விளக்கம் தந்துள்ளனர். இப்புவி ஓர் உருண்டை வடிவமான கோளம். அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அது தன்னைத் தானே சுற்றுவதற்கு 24 மணி நேரமும், சூரியனைச் சுற்றி வர 365¼ நாள்களும் ஆகின்றன. சந்திரன் புவியைச் சுற்றுகிறது. அது புவியினை ஒரு முறை சுற்றி வர ஒரு திங்கள் ஆகிறது. அவ்வாறு சுற்றி வரும்போது திங்களுக்கு ஒரு முறை சந்திரன் புவிக்கும் சூரியனுக்கும் நடுவில் வருகிறது. ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில் இம்மூன்றும் வரும்போது சந்திரனின் நிழல் புவியின் மீது விழுவதால் புவி இருள் படுகிறது. இவ்வாறு இருண்ட நாள் ‘அமாவாசை’ என்று சொல்லப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் அமாவாசை, பெளர்ணமி என்னும் இரண்டையும் ‘உவா’ என்ற பெயரால் குறிப்பிடுகின்றன. “உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை” என்னும் புறநானுற்றுப் பாடற்பகுதி கொண்டும், “ஓவா திரண்டு உவவும் அட்டமியும் பட்டினிவிட்டு ஒழுக்கம் காத்தல் தாவாத் தவம்” என்றும் சீவகசிந்தாமணிப் பகுதி கொண்டும் உணர்தல் கூடும். பிற்கால இலக்கண உரையாசிரியர்கள் உம்மைத் தொகைக்கு ‘உவாப் பதினான்கு’ என்பதனை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளனர். இது உவாவும் பதினான்கும் என விரியும். இது கொண்டு பதினான்காம் திதியை அடுத்துப் பதினைந்தாம் நாளாக உவா – அதாவது அமாவாசை அல்லது பௌர்ணமி வருகிறது என்பது அறியப்படுகிறது. இந்துக்களுள் பெரும்பாலோர் இறந்த முன்னோர்க்கு, அமாவாசை நாளில் திதி கொடுப்பதும், நோன்பிருப்பதும் கடமையாகக் கொண்டுள்ளனர்.ஆ.ந.