இளையோர் உளவியல்
iḷaiyōr uḷaviyal
மனிதர்களின் வளர்ச்சிப்பருவங்களுள் 12 வயது முதல் 20 வயது வரையிலான நிலை இளையோர் பருவம் (Adolescence) எனப்படும்.
மனிதர்களின் வளர்ச்சிப்பருவங்களுள் 12 வயது முதல் 20 வயது வரையிலான நிலை இளையோர் பருவம் (Adolescence) எனப்படும். இப்பருவத்தில் இளையோரிடையே காணப்படும் நடத்தைகளின் காரணங்களை ஆராய்ந்து அவற்றுக்கான விளக்கங்களைக் கொடுக்கும் உளவியல் துறை இளையோர் உளவியல் (Adolescent Psychology) எனப்படும். இளையோர் பருவத்தைப் பூப்புநிலை, இளநிலை இளையோர் பருவம், முதுநிலை இளையோர் பருவம் என மூன்று நிலைகளாகப் பிரித்து ஆராய்தல் வேண்டும். பூப்புநிலை என்பது 12 வயது முதல் 14 வயது வரையிலும், இளநிலை இளையோர் பருவம் என்பது 15 வயது முதல் 17 வயது வரையிலும், முதுநிலை இணையோர் பருவம் என்பது 18 வயது முதல் 20 வரையிலும் நீடிக்கின்றன. இந்நிலைகள் இருபாலாருக்கும் ஒரே வகையாக அமைந்த போதிலும், வயது அடிப்படையில் ஒரு சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. பூப்பு நிலையை ஆணைவிடப் பெண் விரைவில் எய்துகிறாள். மனவெழுச்சி முதிர்ச்சி நிலையையும் ஆணை விடப் பெண் விரைவிலும் மாறுபட்ட வகையிலும் அடைகிறாள்.
இளையோர் பருவத்தின் அடிப்படை உளவியற் கூறுகள் பூப்பு நிலையிலேயே இளையோரிடம் காணப்படுவதால், இளையோர் உளவியலைப்பற்றித் தெளிந்த அறிவு பெறுவதற்குப் பூப்புநிலை பற்றிய அறிவு தேவைப்படுகிறது. இளையோர் பருவம் வயது வந்தோர் பருவத்திற்கும் குழந்தைப் பருவத்திற்கும் இடைப்பட்ட மாறும் காலம் ஆகும். இப்பருவத்தில் இளையோர் குழந்தையாகக் கருதப்படுவதில்லை; பெரியவனாகவும் கருதப்படுவதில்லை. வயதுவந்தோரைப் போல் எல்லா வகைகளிலும் இளையோர் நடந்து கொண்டால் அதனைச் சமூகம் ஏற்பதில்லை. இதனால் இளையோரிடம் உளமுரண்பாடும் போராட்டமும் தோன்றுகின்றன.
பூப்பு நிலையின் தொடக்கத்தில் ‘பூப்பு வயதையடைந்த குழந்தை’ எனக் குறிப்பிடப்படும் இளையோன் பால் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகு ‘இளநிலை இளையோன்’ என்று குறிப்பிடப்படுகிறான். பூப்புப்பருவத்தில் இளையோனிடம் ஏற்படும் மாறுதல்கள் மிக விரைவாக ஏற்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்க் குழந்தையாக இருந்தவன் திடுமென வளர்ந்து இளையோனாகக் காட்சியளிக்கிறான். பூப்புநிலையின் முழுமையான வளர்ச்சி பெண்ணுக்கு விரைவாக ஏற்பட்டு விடுகிறது. பூப்பு நிலையைக் கீழ்க்கண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கு வரும் நிலை ‘முன்பூப்பு நிலை’ எனப்படும். இந்நிலையில் குழந்தையாக இருந்தவனிடம் இரண்டாந்தரப் பாலியல்புகள் வளர்ச்சியடைகின்றன. ஆனால், பால் உறுப்புகள் வளர்ச்சி அடைவதில்லை. இதற்கு அடுத்த நிலை ‘பூப்புநிலை’ எனப்படும். இந்நிலையில் பால் உறுப்புகளின் வளர்ச்சி ஏற்படுகிறது. பெண் மாதவிலக்கு அடைகிறாள். ஆணிடம் உறக்கத்தில் அல்லது இரவில் விந்து வெளிப்படும் நிலை ஏற்படுகிறது. இத்துடன் ஆண் பெண் இருவரிடமும் இரண்டாந்தரப் பாலியல்புகள் மேலும் வளர்ச்சியடைகின்றன. இந்த இயல்புகளின் வளர்ச்சி ஆண் பெண் இருபாலாரின் உடலிலும் வெளித்தோற்ற மாறுதல்களை ஏற்படுத்துகிறது. பாலுறுப்புகளில் பால் அணுக்கள் தோன்றுகின்றன. முழுமையான பாலியல்பு வளர்ச்சியும் பால் உறுப்பு வளர்ச்சியும் ஏற்பட்ட பின், இளையோன் பூப்புநிலையிலிருந்து இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைக்கத் தயாராக இருக்கிறான். இந்நிலை ‘பின்பூப்பு நிலை’ எனப்படுகிறது. இம்மூன்று பருவங்களும் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஏற்பட்டு விடுகின்றன. பூப்பு நிலையில் பெண் தன் உடலிலும் உடையிலும் ஏற்படும் மாறுதல்களை உணர்கிறாள். சமூகத்தில் முன்போலத் தான் குழந்தையாகக் கருதப்படுவதில்லை என்ற உணர்வும் ஏற்படுகிறது. பெற்றோர் தனது குழந்தைப் பருவத்தில் தன்னுடன் பழகிய முறையில் இப்பொழுது பழகுவதில்லை என்பதையும், தன் தம்பி தங்கைகளும் இப்பொழுது தன்னிடம் முன்பிருந்ததைக் காட்டிலும் வேறுபாடான முறையில் பழகுவதையும், குடும்பத்தில் சிறியவர்களுக்கு என விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தனக்குப் பொருந்துவதில்லை என்பதையும் அப்பெண் உணர்ந்து கொள்கிறாள். உடலில் இருக்கும் நாளமிலாச் சுரப்பிகளே பெண் பூப்பு நிலையை அடைவதற்குக் காரணமாக இருக்கின்றன. பூப்பு நிலை தொடங்குவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே உடலில் இயக்குநீர் (Hormones) சுரக்கத் தொடங்குகின்றது. பூப்பு நிலையில் இது மிகுதியாகச் சுரக்கின்றது. மூளையில் இருக்கும் மூளையடிச் (Pituitary gland) சுரப்பியும் பால் சுரப்பிகளுமே ஆண்பெண் இருவரிடமும் பால் இயல்புகளைத் தோற்றுவித்துப் பாலுறுப்புகளையும் வளர்ச்சியடையச் செய்கின்றன. மூளையடிச் சுரப்பி இருவகையான இயக்குநீரினைச் சுரக்கின்றது. வளர்ச்சிக்குரிய இயக்குநீர் குழந்தையின் உடல், உயரம், பருமன் ஆகியவற்றுக்கு உதவி செய்கின்றது.
பால் இயக்குநீர் பாலுறுப்புகளை வளரச் செய்து பெண்ணைப் பூப்புநிலைக்குக் கொண்டு வருகின்றது. பாலுறுப்புகளின் வளர்ச்சிக்கு அடிமூளைச் சுரப்பி தூண்டுகோலாக இருக்கிறது. பாலுறுப்புகளின் செயல்நிலைக்கும் அடிமூளைச்சுரப்பிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களின் காரணமாகவும், மூளையில் ஏற்படும் காயத்தின் காரணமாகவும் அடிமூளைச் சுரப்பி பாதிக்கப்படலாம். அடி மூளைச் சுரப்பி பால்சுரப்பிகளுக்குத் தேவையான இயக்கு நீரினை இனப்பெருக்கப் பருவம் முழுவதும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. முதுமையில் இந்த உற்பத்தி நின்றுவிடுகிறது. பூப்புப்பருவத்தில் ஆண் பெண் ஆகிய இருபாலாரும் பெரும்பாலும் தனிமையை நாடுகின்றனர். தம் உடலில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றி மற்றவருடன் உரையாட விரும்புவதில்லை. இப்பருவத்தில் ஆண் தன் உடல் மீது ஆராய்வூக்கம் கொண்டிருப்பதாலும் நண்பர்களின் உறவு காரணத்தாலும் தற்பால் நடத்தையில் ஈடுபடுகிறான். இதுவரையில் தனக்கு மனமகிழ்வு தந்த குழந்தை விளையாட்டுகளை வெறுக்கிறான். மனவெழுச்சி வயப்படுகிறான். இதன் காரணமாகப் பூப்புப் பருவத்தில் இளையோர் பள்ளிப் பாடத்தில் ஈடுபாடற்றவராகக் காணப்படுகின்றனர். அவர்களுடைய மதிப்பெண்களும் குறைகின்றன. இந்நிலை சிறிதுகாலம் மட்டுமே நீடிக்கிறது. உடலில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்றவாறு நடை உடைகளை மாற்றியமைக்க முடியாமல் தொல்லைக்குள்ளாகின்றனர். பூப்புப்பருவத்தில் இளையோரிடம் எதிர்மறை இயல்பு காணப்படுகிறது. மற்றவர்களைக் கடுமையான சொற்களால் தாக்குவதும் பெரியோரிடம் கீழ்ப்படியாமையும் இப்பருவத்தினரிடம் காணலாம். இனம் புரியாத மனக்கவலை, தவிப்பு, முன்கோபம், சோர்வு ஆகிய மனநிலைகளை இவர்களிடம் காணலாம். எளிய வினாக்களுக்கும் எரிந்து விழுகின்றனர். மனவெழுச்சி வயப்பட்டவராக இருக்கின்றனர். எளிதில் துயர்வயப்படுகின்றனர். தன்னம்பிக்கை இழக்கின்றனர். மற்ற எல்லாப் பருவத்தினரைக் காட்டிலும் பூப்புப் பருவத்தினர் மிகுதியான கூச்சம் உடையவராக இருக்கின்றனர். குறிப்பாக மற்றவர்கள் முன்னிலையில் தம் உடையைக் கழற்றவோ தம் உடலின் பகுதிகளை வெளிக்காட்டவோ உறுதியாக மறுக்கின்றனர். தம் உடல் தோற்றத்தைப் பற்றி மற்றவர்கள் ஏதேனும் சுட்டிக்காட்டி விடுவரோ என்று அஞ்சுகின்றனர்.
பூப்புப்பருவத்தினரை விரைவில் பூப்பு எய்துபவர், உரிய காலத்தில் பூப்பு எய்துபவர், மெதுவாகப் பூப்பு எய்துபவர் என மூன்று வகையினராகப் பிரிக்கலாம். இவ்வகையினருள் முதல், கடை வகையினர் தம் ஒப்பாருடன் பொருத்தப்பாடின்றி அல்லற்படுகின்றனர். ஒப்பார் குழுவில் பெரும்பாலானவர்கள் உடல் வளர்ச்சியின்றி இளமைப்பருவம் எய்தாமல் இருக்கும் பொழுது, ஒருவன் மட்டும் வளர்ச்சியடைந்து இரண்டாந்தரப் பாலியல்புகளும் கரகரத்த குரலும் கொண்டவனாக இருந்தால் அவனை அக்குழுவினர் ஏற்பதில்லை. அவன் வளர்ந்துவிட்ட ‘தந்தை’ என்று கேலிப் பெயர் சூட்டப்படுகிறான். மற்றப் பையன்கள் இவனைத் தம் விளையாட்டில் சேர்த்துக் கொள்வதில்லை. இதனைப் போன்றே மெதுவாகப் பூப்பு எய்துபவன் தன் ஒப்பார் குழுவில் எல்லோரும் வளர்ச்சியடைந்த இளையோராக இருக்கும் பொழுது, தான் மட்டும் வளர்ச்சியடையாத சிறிய உடலும் மெல்லிய குரலும் கொண்டவனாக இருப்பதை உணர்ந்து மற்றவர்களிடமிருந்து ஒதுங்குகிறான். மற்றவர்களுடன் சேர்ந்து அவன் விளையாட விரும்பினாலும் குழுவினர் அவனை ஏற்றுக்கொள்வதில்லை அவனுக்குப் ‘பொடியன்’ என்ற கேலிப் பெயர் சூட்டப்படுகிறது. விரைவில் பூப்பு எய்தும் பெண்ணும் மெதுவாக அல்லது காலம் தாழ்ந்து பூப்பு எய்தும் பெண்ணும் இத்தகைய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர் பூப்புப் பருவம் நிறைவு பெற்றபின், பெண் தன் உடல் அமைப்பு, முகத்தோற்றம் இவை குறித்துப் பெருமளவு அக்கறை கொள்கிறாள். இப்பருவத்தில் ஏற்படும் பிறழ்வுகள் இருபாலாரையும் வாழ்நாள் முழுவதும் பாதிக்கின்றன. நாளமிலாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், உயிர்ப்பொருள் ஆக்கக் கோளாறுகள் (Metabolic Disorders), ‘அடிசன்’ நோய் (Addisons Disease), ‘ஆல்செமியர்’ நோய் (Alzemiers Disease) போன்ற உடற்கூறுகளால் பூப்புப் பருவத்தில் தக்க வளர்ச்சி ஏற்படாமல் போவதுண்டு. இத்தகைய நிலை இளையோருக்குப் பெரும் போராட்டம் நிறைந்த காலமாக இருக்கிறது. மேலும், இளையோர் பூப்புப்பருவத்தில் பால் உறவு, பால் உந்து போன்றவை பற்றித் தகுந்த முறையில் அறிவு பெறவேண்டும். இத்தகைய அறிவு அவர்களைத் தம் பருவ மாற்றத்தினை நல்ல முறையில் ஏற்று வாழ்வதற்குத் தயா- ராக்குகிறது. இதற்கு மாறாகப் பூப்புப் பருவத்தில் தீயவர்களுடன் தொடர்பு, தகாத முறையில் பால் உறவு பற்றிய அறிவு, கற்பழிப்பு, தற்பால் நடத்தை, பெரியோர்களின் ஏற்பிலாமை, பெற்றோரின் வெறுப்பு, தகாத பால்உறவு போன்றவை ஏற்படின் இளையோர் மனவெழுச்சிச் சமநிலையை இழக்கின்றனர். அவர்களுடைய ஆளுமை வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுகிறது. தம்மைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் இளையோரிடையே இழிவான எண்ணம் உருவாகிறது. இதுவே பிறழ்வு நடத்தை, குற்ற நடத்தை, போதை மருந்துப் பழக்கம் ஆகியவற்றுக்குக் காரணமாகிறது. ஆதலின் பூப்புப் பருவத்தில் இருபாலாருக்கும் பெற்றோரின் அன்பும் பாதுகாப்பும் தேவைப்படுகின்றன. அவர்களுக்குக் காப்புணர்ச்சி ஏற்பட்டால் பூப்புக் கால உளப்போராட்டங்களை வென்று, இளமைப் பருவத்திற்குத் தம்மைத் தயாராக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு இல்லையென்றால் இருபாலாரும் தமக்கெனச் சமூகம் வைத்திருக்கும் பொறுப்புகளை ஏற்க இயலாதவராகின்றனர். பெண் தன்னுடைய சமூகப்பங்கு என்ன என்பதையும் ஆண் தன்னுடய சமூகப்பங்கு என்ன என்பதையும் அறிந்து நடப்பதற்குப் பூப்புக்கால மனவெழுச்சிச் சமநிலை இன்றியமையாததாகும்.
இளையோர் பருவம்
பூப்புநிலை நிறைவு பெற்றபின் இளையோன் இளமைப் பருவத்திற்கு வருகிறான். இளையோர் பருவம் பல சிக்கல்கள் நிறைந்தது. இப்பருவத்தில் இளையோன் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் சமுதாயத்திலும் தன் பங்கு என்ன என்பதைத் தேடுகிறான். இப்பருவத்தில் அவர்கள் பல எதிர்ப்புகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. தாம் அடையும் கல்வி தம் வாழ்க்கைக்கு ஏற்றதா, தமக்கு வேலைவாய்ப்பு உள்ளதா, எத்தனை ஆண்டுகள் வேலைக்காக அலையவேண்டும், எங்கு வேலை கிடைக்கும், எப்படி வாழ்க்கை அமையும் என்பன போன்ற பல்வேறு உளப்போராட்டங்கள் அவர்களை எப்பொழுதும் வாட்டுகின்றன. இவற்றையன்றி, இளையோர் பொறுப்பில்லாதவர், குற்ற நடத்தைகளில் ஈடுபடக் கூடியவர், ஆரவாரம் மிக்கவர், ஆழ்ந்த சிந்தனையற்றவர் என்பன போன்ற பட்டப்பெயர்கள் அவர்களுக்குப் பெரியவர்களால் இடப்படுகின்றன. இத்தகைய பெயருக்கு ஏற்ற நடத்தைகளில் ஈடுபடாமல் நல்ல பெயரை அடைய வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது. மிகச் சிறிய அளவில் கீழ்ப்படியாமை, எதிர்மறை இயல்பு, ஆரவாரம் ஆகியவை இவர்களிடம் காணப்பட்டாலும் இவர்கள் சமூகத்தினரால் பல்வேறு வகைகளில் பெயரிடப்படுகின்றனர். மேலும், இளையோர் பருவத்தில் உடல் வளர்ச்சி காரணமாக மிகுதியான உடல் திறனும் ஊக்கமும் இளையோரிடம் காணப்படுகின்றன. இத்திறன்கள் நன்கு செலவிடப்படுவதற்கான நல்ல வடிகால்களைக் கல்வி நிலையங்களும் சமூகமும் குடும்பமும் அமைத்துக் கொடுக்கவேண்டும். அதற்கு மாறாக, இளையோரின் திறமைகளும் தகுந்த வடிகால்களின்றித் தேங்கிக் கிடக்கின்றன. உள்ளார்ந்த திறன்கள் தேங்கிக் கிடப்பதால் அவை ஆழ்மன ஒடுக்கல்களாகவும் மனக்குலைவுகளாகவும் வன்முறைகளாகவும் உருவெடுக்கின்றன. இவையே இளைஞர் சமுதாயத்தினரிடையே காணப்படும் அமைதியின்மைக்குக் காரணமாகின்றன. இப்பருவத்தில் இணையோர் தாம் கற்ற ஒழுங்குமுறைகளுக்கும் நடைமுறையில் காணப்படும் ஒழுங்கு, உண்மை, நீதி ஆகியவையற்ற சமூக நிலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைக் கண்டு திகைக்கின்றனர். பின்னர்த் தாமும் இத்தகைய சமுதாயச் சூழலில் ஒரு மனிதனாக இயங்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துணிவை அடைகின்றனர்.
இளையோர் பருவத்தில் அடையும் ஆளுமைச் சமநிலையும் காப்புணர்வுமே அவர்களன அறநெறியும், ஒழுங்குணர்வும், கட்டுப்பாடும், பொறுப்பும் ஒருங்கமையப் பெற்ற பொறுப்பான மக்களாக உருவாக்குகின்றன.
இளையோர் பருவத்தில் ஒப்பார் குழுவின் தாக்கம் பெருமளவில் இளையோனால் உணரப்படுகிறது. இளையோன் உடை, முடியலங்காரம், காலணி, பேச்சுமுறை, பொழுதுபோக்குகள், படிக்கும் நூல்கள், பார்க்கும் திரைப்படங்கள் யாவும் ஒப்பார் குழுவினருடன் இயைபு கொண்டே அமைகின்றன. பூப்பு நிலையில் இருந்த தனிமை மாறுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்த கூட்டக்குழு மாறி இரண்டு மூன்றுபேர்கள் அடங்கிய சிறிய ஒப்பார் குழு உருவெடுக்கிறது. இளையோரிடம் சமூக எதிர்ப்பு இயல்பும் வன்முறையும் காணப்பட்ட போதிலும், அவர்கள் சமூக ஏற்புடைமையைப் பெரிதும் விரும்புகின்றனர். குழந்தைப்பருவத்தில் பொருளாதார நிலைக்குச் சிறப்பாகக் கவனம் செலுத்தாமல், கூட்டக் குழுவில் வறியர், செல்வர் ஆகிய எல்லாக் குழந்தைகளும் இடம் பெறுகின்றனர். ஆனால், இளையோன்றன் ஒப்பார் குழுவில் விருப்பு வெறுப்புகளுக்கும், பொழுது போக்குகளுக்கும் முதலிடம் கொடுக்கப்படுகின்றது. இளையோர் குழுவினருள் மிகுந்த ஒற்றுமையும் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையும் மிகுந்து காணப்படுகின்றன. தம் உடைமைகளைப் பங்கிட்டு அனுபவிக்கின்றனர். சுற்றுலாச் செல்லும் பொழுதும் கல்வி நிலையங்களிலும் உணவு வேளையிலும் தம் உணவை மற்றவருடன் தாராளமாகத் தன்னலமின்றிப் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களிடையே தலைவர்கள் தாமே உருவாகின்றனர். பொதுவாக, இளைஞர் குழுத் தலைவன் பொருளாதார வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான்.
ஆசிரியர்கள் மீது மதிப்பு, பெரியோர் மீது மரியாதை, சமய ஈடுபாடு போன்ற உணர்வுகள் இக்குழுக்களிலேயே உருவாகின்றன. ஆதலின் இளையோர் பருவத்தில் குழுக்களின் செல்வாக்குக் காரணமாக நன்னடத்தையோ தகாத நடத்தையோ உருவாகலாம். எத்தகைய நடத்தை உருவாகிறது என்பது இளையோன் எத்தகைய குழுவில் சேர்ந்திருக்கிறான் என்பதைப் பொறுத்திருக்கிறது. எத்தகைய குழுவில் இளையோன் சேருகிறான் என்பது இளையோனுக்குத் தன் குடும்பத்தில் எந்த அளவுக்கு அன்பும் சுதந்திரமும் கட்டுப்பாடும் பாதுகாப்புணர்ச்சியும் தரப்படுகின்றன என்பதைப் பொறுத்திருக்கிறது. மிருதியான கட்டுப்பாடு, சுதந்திரமின்மை, அன்பிலாமை, வெறுப்பு, ஏற்பிலாமை, குடும்பச் சண்டை, பெற்றோரிடையே மனவேறுபாடு, எந்த நேரத்திலும் இளையோனிடம் குற்றம் காணும் பெற்றோர் மனப்பாங்கு, ஒப்பார் குழுவினரின் முன் இளையோனை இகழ்ச்சியாகப் பேசுதல், ஒப்பார் குழுவினர் எவரேனும் வீட்டிற்கு வந்தால் அவனை இகழ்ச்சிப் படுத்தல், இளையோனின் உடல் தோற்றத்தை இகழ்ந்து கூறல், இளையோனின் பிறப்புப் பற்றிய முறைகேட்டைச் சுட்டிக்காட்டுதல், பெற்றோரின் குற்ற நடத்தை, குடிப்பழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இளையோன் குற்றக்குழுவில் சேர்ந்து விடவும்கூடும். இதன் விளைவாக இளையோன் குடிப் பழக்கம், போதைப்பொருள் பழக்கம், தற்பால் நடத்தை போன்ற தீய வழிகளில் ஈடுபடுகிறான்.
இளையோர் பருவத்தில் அறநெறி பற்றிய வன்மையான கருத்துகள் உருவாகின்றன. சட்டமும் சமூகமும் எவற்றை ஏற்புடையன என்று குறிப்பிடுகின்றனவோ அச்செயல்களைத் தாமும் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் தமக்கெனத் தனிப்பட்ட அறநெறி ஒழுக்கங்களை அமைத்துக் கொள்கின்றனர்.
துணை நூல்
Hurlock Elizabeth, Developmental Psychology, Tata McGraw Hill, New Delhi, 1980.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 501)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vr9nwxsz/
தமிழ்“இளையோர் உளவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vr9nwxsz/APA
Oliyon Research. (2026). இளையோர் உளவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vr9nwxsz/MLA
"இளையோர் உளவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vr9nwxsz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment