கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர்ச் சிவன் கோயிலில் அம்பிகை சந்நிதி மண்டபத்தில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருப்புடை மருதூர், மருதவனம் எனவும் வழங்கப்படும். இராமநாதனுடைய புலமைச் சிறப்பினையும் பக்தியையும் உணர்ந்த ஊர் மக்கள் ‘மருதவனக் கவிராசன்’ என்னும் சிறப்புப் பெயரளித்துப் பாராட்டினர். மேலும், இவருக்கு நிலமனைகள், விழாக்காலங்களில் திருக்கோயிலில் பாடும் உரிமை முதலியனவற்றையும் நல்கினர். இச்செயல்கள் கி.பி. 1559–ஆம் ஆண்டு அளவில் நடைபெற்றனவென்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சடையமாங்குளம் என்னும் வேறோர் ஊர்க் கல்வெட்டில் கி.பி. 1481–இல் மார்த்தாண்ட பணைக்காரன் என்னும் அரசன் இவருக்கு நிலம் வழங்கிய குறிப்பு உள்ளது. இவ்வரசன் திருவாங்கூர் மன்னருள் ஒருவனாகக் கருதப்படுகிறான். திருவாங்கூர் மன்னர்களாகிய வேணாட்டரசர்களும் தமிழைப் போற்றி வந்துள்ளனர் என்பதனை இவ்வரலாற்றினால் அறிய முடிகிறது. வேறொரு கல்வெட்டில் இப்புலவரின் பெயர், ‘ரவிவர்மன் வேணாடு மருதூர்க் கவியாகிய இராமநாதன்’ என்று காணப்படுகிறது. இதனால், இக்கவிஞர் வேணாட்டு மருதூரைச் சார்ந்தவர் என்பதனை அறியலாம்.