வழக்கமான முறையில் ஒரு பகுப்பாய்வு செய்யும் போது, புதிய கண்டு பிடிப்புகளைக் காண நடத்தப் பெறும் வினைகளை நிகழ்த்தும் போதும், ஒரு பொருள் எடையில் வேண்டியிருந்தால், ஏறத் தாழ 1 கிராம் அளவிற்கும், அதுவே கரைசலாக இருந்தால், ஏறத் தாழ 200 மி.லி. அளவிற்கும் தேவைப் படும். இவ்வாறு, பொருள்களைக் கொண்டு ஆய்வில் ஈடுபட ஆய்வுக் குழாய், முகவை, வடி கட்டும் புனல் ஆகியன பயன் படுகின்றன. ஆனால், மிகக் குறைந்த அளவு பொருள்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியிருப்பின், பயன்படுத்தும் நுண்ணளவுப் பொருள்கள் பயனாவதால், ஆய்வுச் செலவும் வெளிப் பொருள் கலப்பும், பிழைகளும் பெருமளவிற்குக் குறையும். சரியான முறையில் கணக்கீடு செய்வதும் எளிதாகிறது. இதன் காரணமாகப் பற்பல புதிய நுட்பங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டு, சரியான அளவீடு நுண்ணளவுப் பகுப்பாய்வு பெரிதும் பயனாகிறது. வழக்கில் உள்ள பேரளவு ஆய்வு முறையுடன், நுண்ணளவு ஆய்வை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நுண்ணளவுப் பகுப்பாய்வில் பயன் படுத்தப் படும் பொருள்களிள் அளவு நூறில் ஒரு பங்கு மட்டுமே. பேரளவு ஆய்வு முறையில் பொருள்களின் எடை, 0.5 கிராம் அளவிலிருந்து, 1 கிராம் அளவிற்கும், கரைசல்கள் சாதாரணமாக 10 மி.லி. அளவிற்கும் வேண்டியிருக்கும். சிற்றளவு முறையில் 50 மி.கி. எடையும் 1 மி.லி. கரைசலும் தேவைப் படலாம். ஆனால், நுண்ணளவு முறையில் 5 மி.லி. எடையும், 0.1 மி.லி. கரைசலும் மட்டுமே தேவைப்படும். இதிலிருந்து இந்த முறையிலான பகுப்பாய்வில் எவ்வளவு குறைவான அளவுப் பொருள்களிலிருந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறியலாம். ஆகவே, நுண்ணளவுப் பகுப்பாய்வு மில்லி கிராம் ஆய்வு முறை என்றும் குறிப்பிடப் படுகிறது. பொருள்களின் எடைக்கேற்ப கரைப்பான்களின் கன அளவும் குறைக்கப் படுவதால், ஆய்வு செய்யப் படும் பொருள்கள் மற்றும் அயனிகளின் திறன் மாறாதிருக்கும் பயன் படுத்தப் படும் பொருள்களின் அளவைப் பொறுத்து, வெவ்வேறு வகையான பகுப்பாய்வு முறைகள் வகைப் படுத்தப் படும். அவை பின் வருமாறு: பேரளவு முறையில் வடி தாள் வழியாகக் கரைசல் வடி கட்டப் படும். இவ்வாறு செய்யும் போது, ஓரளவு வடி நீர் விரயமாகும். வடிக்கப் படும் நீரும் வடி தாளிலேயே தங்குவதற்கும் இடமுண்டு. வடி தாள் மேலிருக்கும் வீழ் படிவிலும் சேதம் ஏற்படும். வடி தாளிலிருந்து அனைத்து வீழ் படிவையும் முழுதுமாக எடுத்து விட இயலாது. பயன் படுத்தும் பொருளின் பெரும் அளவைக் கணக்கில் கொண்டால், இவ்வாறு வீணாவது குறைவேயாகும். ஆனால், நுண்ணளவு முறையில் பயன்படும் பொருளின் அளவு 20க்கு ஒன்றாகவோ அல்லது 100க்கு ஒன்றாகவோ இருக்கும் போது, இவ்வாறு சேதம் ஏற்பட்டால், அது ஒதுக்கக் கூடாததும், பாதிக்கக் கூடியதுமாகும். பழைய வழியில் வடி கட்டுவதோ, வீழ் படிவை எடுப்பதோ பயனளிக்கா. ஆகையால், செய் முறையில் மாற்றத்தை ஏற்படுத்திப் புதிய முறையைக் காண வேண்டும். நுண்ணளவு முறையில், வடி கட்டும் முறையில் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க மைய விலக்கு விசையைப் பயன்படுத்துவதால், வீணாகும் அளவு மிகவும் குறைவாகவும், ஒதுக்கக் கூடிய அளவிலும் இருக்கும். சொட்டு ஆய்வுகளில் (Spot test) சில பொருள்களை ஆய்வு செய்ய இயலும். இந்த ஆய்வு முறையில், சிறு துளி கரைசலை 0.05 மி.லி. அளவிற்கு (அல்லது அதற்குக் குறைவாக) அல்லது மி.கி. அளவுள்ள திண்மப் பொருள் களைப் பயன்படுத்தி முடிவுகள் காணப் படுகின்றன. இவ்வினைகள் பேரளவு முறையில் செய்யப் படும் வினைகளை விடச் சரியான முடிவினைத் தருகின்றன. ஒரு படிகத்தின் தன்மையை விரைவில் அறிய நுண்ணோக்கியைப் பயன் படுத்துவது எளிய முறையாகும். இது சரியான முடிவைத் தருகிறது. பண்பறி பகுப்பாய்வில் நுண்ணளவு வேதியியல். ஒரு திண்மப் பொருளின் ஒரு படித்தான, படிகவியல் பண்பு, ஒளியியல் பண்பு ஆகியன நுண்ணோக்கி வழியாக அறியப் படுகின்றன. நுண்ணளவுக் கணக்கீட்டு அமைப்புகளும் (manipulator) ஒரு திண்மப் பொருள் மற்றும் கலவையில் உள்ள பகுதிப் பொருள்களை உறுதிப் படுத்த உதவுகின்றன. வீழ் படிவை எடுத்து, அதை ஆய்வு செய்வதை விட வண்ண வினைகள் வழியாக முடிவு அறிவது பெரும் பயனைத் தரும். மிகக் குறைந்த அளவுப் பொருள்கள் மட்டுமே இருப்பின், ஓர் அயனியின் தனி வினையின் மூலம் விரைவில் முடிவை அறியலாம். நுண் குழாய் அல்லது பரப்பு ஊன்றுகை வழியான விளைவுகளாலும், வினையின் வேக மாறுபாடுகளாலும், மாறுபட்ட ஊடு பரவு தன்மைகளாலும், விளை பொருள்களில் தனித் தனியான மண்டல அமைப்புகள் தோன்றுவது தெளிவாகத் தெரியும். விளை பொருள்கள், அவற்றை காணும் முறை, அவற்றின் கரை திறன், அளவு, வண்ணங்கள் ஆகிய இவற்றைப் பொறுத்து, நுண்ணாய்வு வேதி வினை மாறுபடும். சொட்டு வினையில் வினையாற்றப் படும் நேரம், பொருள்களைக் காணும் முறை, மின் பகு பொருள்களின் தன்மை, ஹைட்ரஜன் அயனிகளின் திறன், கூழ்மப் பொருள்களின் பண்புகள், ஆய்வின் முறை போன்றவற்றைச் சரியாகக் கணக்கிட வேண்டும். வழக்கமான ஆய்வு முறையில் பல வினைகளில் பயன் படுத்தும் ஆய்வுக் குழாய், முகவை, குடுவைக்குப் பதிலாக நுண்ணளவுப் பகுப்பாய்வில் மிகவும் சிறிய அளவுகளைக் கொண்ட 0.5–2.0மி.லி. சுழற் குழாய்கள் பயன் படுத்தப் படுகின்றன. கையால் அல்லது மின் விசையால் குழாய்களைச் சுழற்ற, வீழ் படிவுகள் உண்டாகின்றன. சுழற்சி நிறுத்தப் பட்டுக் குழாயின் அடிப் பகுதியில் சேர்ந்துள்ள வீழ் படிவுகள் மேலே உள்ள கரைசலை கவிழ்த்துக் கொட்டியோ, நுண் குழாயைப் பயன்படுத்தி வெளியேற்றியோ, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன. வீழ் படிவைத் தூய்மையாக்க, கரைசலைச் சுழற் குழாயில் உள்ள வீழ் படிவுடன் சேர்த்து, ஒரு பிளாட்டினக் கம்பியை அல்லது நுண்ணளவுக் கலக்கியை விட்டு, நன்றாகக் கலக்கி அதன் பிறகு மைய விலக்கு விசைக்கு உட்படுத்திச் சுழற்ற வேண்டும். மேலாக இருக்கும் கரைசலை, நுண் குழாயைப் பயன் படுத்தி வெளியேற்றி விட வேண்டும். இவ்வாறு, இரண்டு அல்லது மூன்று முறையாவது தூய்மைப்படுத்த வேண்டும். நுண்ணளவுப் பகுப்பாய்வு முறையில் ஒரு வீழ் படிவை வெளியே எடுத்து மாற்றி, ஆய்வுகள் செய்வது கடினமான செயலாகும். அனைத்து வினைகளிலும், கரைசலைப் பயன் படுத்துவது வழக்கமானாலும், வீழ் படிவுகளைப் பயன் படுத்தி ஆய்வு செய்வது இன்றியமையாததாகும். படிக வடிவமான வீழ் படிவாயிருப்பின், அதை ஓர் உலர் சொட்டு பிப்பெட்டின் உதவியால் இழுத்துத் தேவையான இடத்தில் மாற்றிக் கொள்ளலாம் வீழ் படிவு இறுகு நிலையில் இருந்தால், அதை ஒரு குறு கண்ணாடிக் குழாய் அல்லது பிளாட்டினத் துடுப்பைப் பயன் படுத்தி வெளியே எடுக்கலாம். சுழற் குழாய்களில் உள்ள கரைசல்களைச் சூடேற்ற, ஒரு தாங்கியில் அமைக்கப் பட்டிருக்கும் சூடான நீர்த் தொட்டியைப் பயன் படுத்தலாம். ஆவியாகக் கூடிய அளவிற்குச் சூடு தேவைப் பட்டால், அதை ஒரு நுண்ணளவு முகவை அல்லது புடக் குகைக்கு மாற்றிச் சூடேற்றலாம். அளவறி பகுப்பாய்வில் நுண்ணளவு வேதியியல். பண்பறி பகுப்பாய்வில் மைய விலக்கு விசை எவ்வாறு பயன் படுகின்றதோ, அது போல அளவறி பகுப்பாய்வில் நுண்ணளவு வேதித் தராசு தேவைப் படுகிறது. இதைப் பயன் படுத்தும் போது, ஏற்படும் தவறுகள் மிகக் குறைவாக, தள்ளக் கூடியதாக இருக்கும். மிகக் குறைந்த அளவு பொருள்களைக் கவனத்தில் கொண்டே, தனித் தனியான கருவிகள் தயாராகின்றன. மிகச் சிறிய புடக் குகை 0.05 மி.லி.–0.001 மி.லி. அளவிற்கு கூடத் துளியை விடும் பியூரெட், மிகச் சிறிய கழுவு சீசா ஆகியவை தயாரிக்கப் படுகின்றன. சூடேறிய பிறகு குளிர வைக்கவும், தனியான கருவிகள் இருக்கின்றன. அவை நெகிழிகளால் செய்யப் பட்டிருந்தால், அதற்குக் கூடுதலான பயன்களும் உண்டு. நீர் இருக்கும் பொருள்களை உலரச் செய்யத் தனியாக உலர் குழாய்களும் உள்ளன. முறித்தல் முறையில் (titration) இறுதி நிலையை துல்லியமாகக் காண்பது நல்ல சரியான முடிவுகளைத் தரும். அதனால், இம்முறையில் பயனாகும் கரைசல்கள் ஏறத் தாழ நடுத் தரத் திறன் உடையவையாக இருக்க வேண்டும். மிகக் குறைந்த நீர்த்தக் கரைசல் அல்லது அதிக அடர் கரைசல் தவறான முடிவுகளையே தரும். குறைந்த அளவே பயன் படுத்தினும், அனைத்துக் கரைசல்களும் தகுந்த அளவில் திறன் பெற்றிருந்தால், இறுதி நிலை தெளிவாக இருக்கும். நுண்ணளவு முறித்தலுக்கென்றே தனியாகப் பியூரெட்டுகளும், பிப்பெட்டுகளும் உள்ளன. இயற்பிய–வேதி முறைகள். நன்றாகப் பயனளிக்கும் நுண்ணளவு வேதி முறை நுணுக்கங்களையும், அதற்கான கருவிகளையும் பயன் படுத்தி, ஒரு பொருளின் உருகு நிலை, அது அமைந்த கலவையின் உருகு நிலை. ஆகியவற்றை ஒப்பிட்டு, உருகு நிலையைக் கணக்கிடும் முறையில் தவறே ஏற்படாது. அதே போல, ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணைக் காண மிகச் சிறிய அளவு பொருளே போதுமானது. கட்புல நிற மாலை, கிளர் ஒளி நிற மாலை, புற ஊதா நிற மாலை,அகச் சிவப்பு நிற மாலை ஆகியவற்றைக் காண மிகக் குறைவான அளவிலேயே பொருள் தேவைப் படும். நுண்ணளவு ஆய்வு முறைகள், இவ்வாறு பல வழிகளில் மேம்பட்டனவாக இருக்கின்றன. உணவுப் பொருள்களில் கலப்படத்தை அறியவும், மருந்துகளில் இருக்கும் வேற்றுப் பொருள்களை எளிதில் காணவும், குற்றவியல் தடயங்களை உடனுக்குடன் அறியவும், இம்முறை பெரிதும் பயன் படுகிறது. நுண்ணளவுப் பகுப்பாய்வு நடத்தப் பொறுப்பான, தடையற்ற மனித ஆற்றல் தேவை. சிறிதளவு பொருள்களைக் கொண்டே முடிவுகள் அறிய வேண்டும் என்னும் ஆர்வமும் இன்றியமையாதது. —ச. வெங்கடாச்சலம் துணை நூல். J. Bassett et. al., Vogel's Text book of quantitative Inorganic Analysis, Second Edition, ELBS, London, 1979.