இராசேசுவரி அம்மையார், ஈ.த
irācēcuvari ammaiyār, ī.ta
தமிழ்ப் புலமை பெற்ற இயற்பியல் பேராசிரியர்.
தமிழ்ப் புலமை பெற்ற இயற்பியல் பேராசிரியர். இவர் தந்தையார் ஈக்காடு தணிகாசல முதலியார்; தாயார் தணிகாம்பிகை அம்மையார். இவர் தந்தையார் தம் மகளிர் நால்வரையும் நன்முறையில் கல்வி கற்கச் செய்தார். அம்மையார் தம் 12–ஆம் வயது வரை பள்ளி செல்லவில்லை. இவர் வீட்டிலேயே படித்துப் பின் சென்னை வண்ணாரப்பேட்டை நார்த்லிக்குப் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தார். அனைத்துப் பாடங்களிலும் முதல் மாணவியாகத் தேறினார். பள்ளியிறுதி வகுப்பிலும் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் பெற்றார்.
இவர் தமிழ் இலக்கண இலக்கியல்களைப் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரிடமும் சைவசித்தாந்தத்தைத் தம் தந்தையிடமும் கற்றார். இவர் சென்னையில் வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் இராணிமேரிக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப் பெண்களுள் இவரே
இராசேசுவரி அம்மையார், ஈ.த.
முதல் இயற்பியல் பேராசிரியர் ஆவர். இப்பணியில் இருக்கும்போது இங்கிலாந்து சென்று மேற்படிப்பும் பெற்று வந்தார். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆற்றல்மிக்கவர். மாணவர்களுக்கு நன்றாகக் கற்பிக்கும் ஆற்றலும், மேடைகளில் நன்கு உரையாற்றும் திறமையும், இதழ்களில் கட்டுரைகள் எழுதும் பயிற்சியும் பெற்றிருந்தார். இலக்கிய மாநாடுகளிலும் சைவ சித்தாந்த மாநாடுகளிலும் இவர் விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார். தமிழறிஞர் கா. நமசிவாய முதலியார் தோற்றுவித்த திருவள்ளுவர் திருநாள் கழகக் குழுவில் 1934, 35–ஆம் ஆண்டுகளில் இவர் உறுப்பினராக இருந்து பணியாற்றியுள்ளார். இப்போது கையாளப்பட்டு வரும் திருவள்ளுவர் தொடர் ஆண்டு அப்போது தான் தோன்றியது. மூதறிஞர் இராசாசியுடன் கலைச் சொல்லாக்கக் குழுவில் இருந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள கடிகாரம் இவரால் நிறுவப்பட்டதாகும்.
இவர் தமிழில் அறிவியல் நூல்களைத் தந்த முதல் பெண்மணியாவார். சர்.சி.வி. இராமனை அடுத்து அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதியவர் இவரேயாவர். எதனையும் இவர் திறனாய்வு மனப்போக்கோடு ஆராய்வார். இவர் சூரியன், வானக் குமிழி, ஐன்சுடீன் கண்ட காட்சி, குழவியுள்ளம், பரமாணுப்புராணம், வானக் கப்பல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் சூரியன், வானக்குமிழி என்னும் நூல்களுக்காகத் தருமபுர ஆதீனம் இவருக்குத் தங்கப் பதக்கம் அளித்துச் சிறப்புச் செய்தது.
இவர் பெற்றோரிடம் பக்தியுடன் நடந்து கொண்டார். இவர் தோட்டக் கலையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்; அளவிலா இறைபக்தி உடையவர்; இறைவழி பாட்டுப் பாடல்களைத் தவிர வேறுபாடல்களைக் கேட்க மாட்டார். தன்னம்பிக்கை கொண்ட இவர் எப்பொருளையும் பிறரிடமிருந்து பெற விரும்பியதில்லை. மேனாட்டுக்கல்வியில் சிறந்த இவர் தமிழ் நாட்டுக் குடும்பப் பெண்ணாகவே வாழ்ந்தார். உடல் நலமின்றி மருத்துவமனையில் படுக்கையிலிருந்தபோதும் மாணவர்களுக்குத் தேர்விற்கான பாடங்களைக் கற்பித்தார். இவர் ஒளவையாரைப் போன்று துறவியாக வாழ்ந்து தமிழுக்குழைத்த பெருமாட்டியாவர். இவர் 1955–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல்நாள் இயற்கையெய்தினார். தி.லீ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 49)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vpvayath/
தமிழ்“இராசேசுவரி அம்மையார், ஈ.த”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vpvayath/APA
Oliyon Research. (2026). இராசேசுவரி அம்மையார், ஈ.த. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vpvayath/MLA
"இராசேசுவரி அம்மையார், ஈ.த." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vpvayath/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment