ஒருவரைப் பற்றி அவதூறான செய்தியை வெளியிடப் போவதாக மற்றொருவர் கூறுகிறார். அவ்வாறு வெளியிடாமல் இருக்க வேண்டுமெனில் தமக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த அவதூற்றுக்கு அஞ்சி, முன்னவர் பணம் கொடுக்கிறார். இந்த வகையில் ஒருவர் மற்றொருவரை அச்சுறுத்திப் பணம் பெறுவது அச்சுறுத்திப் பறித்தல் (Extortion) எனப்படும். இது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒருவர், உடம்பில் காயம் ஏற்படுத்தப் போவதாக மற்றொருவரை அச்சுறுத்திப் பணம் பெறுவதும், ஒரு கொடையாவணத்தில் (Gift-deed) கையெழுத்துப் பெறுவதும் குற்றமாகும். ஒன்றும் எழுதப்படாத ஒரு வெள்ளைத் தாளில் ஒருவர் மற்றொருவரிடம் ஏதேனும் காரணம் கூறிக் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறார். பின்னர் அத்தாளினை ஒரு கடனுறுதிச் சீட்டாகவோ (Promissory Note) மதிப்பாவணமாகவோ (Valuable Security) மாற்றிக் கொள்கிறார். இவ்வாறு, தீய நோக்குடன் ஒரு வெள்ளைத் தாளில் ஒருவரை அச்சுறுத்திக் கையெழுத்துப் பெறுவதும், கடனுறுதிச் சீட்டு அல்லது மதிப்பாவணத்தில் கையெழுத்துப் பெறுவதும் குற்றமாகும். இவ்வாறு இந்தியக் குற்றவியல் சட்டம் கூறுகிறது. ஒருவருக்குச் சொந்தமான ஒரு பொருளை அதன் சொந்தக்காரரின் இசைவின்றி எடுத்தல் திருட்டுக் குற்றம்; ஆனால் அதனையே அச்சுறுத்திப் பெறுதல் ‘அச்சுறுத்திப் பறித்தல்’ என்னும் குற்றம். ஒருவரின் புகழ், பொருள் இவைகளுக்குக் கேடு விளைவிப்பதாகவோ உள்ளத்தைப் புண்படுத்துவதாகவோ அமைகிற தீங்குகளில் ஏதாவது ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்திப் பொருளைப் பெறுதலும் ‘அச்சுறுத்திப் பறித்தல்’ என்ற குற்றமாகும். அச்சுறுத்தலின் விளைவாக அச்சுறுத்தப்பட்டவரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவரின் மனம் குழம்பி நிற்கும் நிலையில், அவர் செய்யும் செயல்கள் தன்னிச்சையான செயல்கள் ஆவதில்லை. இந்நிலையில் அவர் பிறரிடம் பொருள் முதலியன கொடுப்பது அவராக இசைந்து கொடுப்பதாகாது. தமக்கு விளையவிருக்கும் துன்பத்திற்கு அஞ்சியே, தம்முடைய பொருளைப் பிறரிடம் கொடுக்கிறார். இவ்வாறு, அச்சத்தால் கொடுக்கப்பட்ட பொருளைப் பிறர் பெற்றுக் கொள்ளல், அவரது இசைவின்றி வலிந்து எடுத்துக் கொள்ளும் செயலையே ஒக்கும். இத்தகைய குற்றத்திற்குரிய தண்டனையாக மூன்று ஆண்டுச் சிறைத் தண்டனை கொடுக்கலாம். அச்சுறுத்தியவர் ஒருவராகவும், அச்சுறுத்தப்பட்டவரிடமிருந்து பொருளைப் பெறுபவர் அவர் அல்லாத மற்றொருவராகவும் இருக்கலாம். அச்சுறுத்தியவரே பொருளைப் பெற வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. அச்சுறுத்துபவர் நேருக்கு நேர் நின்று இன்னொருவரை அச்சுறுத்த வேண்டியதில்லை; அஞ்சல் அனுப்பி ஒருவர் மற்றொருவரை அச்சுறுத்தலாம்; தொலைபேசி மூலமாகவும் அச்சுறுத்தலாம். தீங்கை உடனடியாக விளைவிக்கப் போவதாகக் அச்சுறுத்த வேண்டியதில்லை. சில நாட்கள் கழித்துத் தீங்கு விளைவிக்கப் போவதாகக் கூறியும் அச்சுறுத்தலாம். அச்சுறுத்தியவுடன் பொருளைப் பெறவேண்டும் என்பது கட்டாயமில்லை. அச்சுறுத்தப்பட்டுச் சில நாள்கள் கழிந்த பின்னும், அச்சுறுத்தப்பட்டவரிடமிருந்து பொருளைப் பெறலாம். ஒருவர் மீது குற்றம் சுமத்தப் போவதாகக் கூறி அச்சுறுத்தலும், தீங்கு விளைவிப்பதாகக் கூறி அச்சுறுத்தலேயாகும். ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்திருக்கலாம். அதனை வெளிப்படுத்தி வழக்கிடப் போவதாகக் கூறுவதும் அச்சுறுத்தலேயாகும். துணை நூல் மா. சண்முகசுப்பிரமணியம், “குற்றவியல் சட்டம்”, தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1966. Atchuthan Pillai, P.S., “Criminal Law”, N.M. Tripathi Private Limited, Bombay, 1983.