இராசசுத்தானத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம்; பிச்சோலா என்ற ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இது கி.பி. 1568 முதல் மேவார் இராசபுத்திர அரசின் தலைநகரமாக இருந்தது. உதயப்பூர் இந்தியாவின் அழகுமிக்க நகரங்களுள் ஒன்றாகும். இவ்வூரிலுள்ள இராணாவின் அரண்மனை மிக்க அழகு வாய்ந்தது. இவ்வரண்மனையின் முக்கிய பகுதி 1570–இல் கட்டப்பட்டது. இவ்வரண்மனையின் மற்றப் பகுதிகள் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டன. அரண்மனை இராய் அங்கன், கரன் விலாசம், பாரிபோல், அமர விலாசம் திரிபுலியா வாயில், சினி கிசித்திரா வாயில் என்று பல்வேறு பகுதிகளைக் கொண்டது. இவை யாவும் அழகுமிக்க சிற்பங்கள் கொண்டு விளங்குகின்றன. இங்குள்ள சகமந்திரத் தீவில் உள்ள குல்மகால் என்னும் கட்டடம் கி.பி. 1640–இல் கட்டப்பட்டது. சகநிவாசம் என்னும் கட்டடம் கி.பி. 1740–இல் இங்குள்ள ஏரியில் உள்ள தீவில் கட்டப்பட்டது. இவையிரண்டும் பேரழகு மிக்க கட்டடங்கள் ஆகும். சகநிவாசம் ஏரியில் மிதக்கும் வீடு போல் பார்ப்போரின் கண்களுக்கு அழகு ஊட்டும் கட்டடமாக விளங்குகிறது. இங்குள்ள சுவர் ஓவியங்கள் இன்றளவும் அழியாவண்ணம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவை இராசபுத்திரர்களின் ஓவியக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. உதயப்பூரில் உள்ள கட்டடங்கள் இசுலாமியக் கட்டடக் கலைப் பாணியைத் தழுவிய இந்துக் கட்டடங்கள் ஆகும். இங்குப் பல ஏரிகள் உள்ளன. இவற்றுள் 34 கி.மீ. பரப்புள்ள தேபார் தனிப்பத்தி என்னும் ஏரி மிகவும் அழகு வாய்ந்தது. உதயப்பூர் சமத்தானம் 1949–ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுடன் இணைக்கப்பட்டது.