அடிப்படைப் புள்ளிவிவரம் என்பது மக்கள் தொகைத் தொடர்பான செய்திகளைத் தரும் ஓர் அடிப்படைக் குறிப்பு, மனிதன் உலகில் தோன்றுவதும் மறைவதும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகக் கருதப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் மனிதனின் வாழ்நாளில் நிகழும் தோற்றம், முடிவுகள் ஆகியவற்றை விளக்குவன. மக்கள் தொகை இயலின்படி செத்துப் பிறத்தல் (Still Birth), கருவில் இறப்பு (Foetal Death) ஆகிய நிகழ்ச்சிகளும் இன்றியமையாதனவாகக் கருதப்படுகின்றன. மனித வாழ்வில் ஏற்படும் திருமணம், மணமுறிவு, தத்தெடுப்பு (Adoption) போன்ற நிகழ்ச்சிகள் மனிதனின் சமூக நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் காரணமாக இவை அடிப்படை நிகழ்ச்சிகளாகக் கொள்ளப்படுகின்றன. அடிப்படை நிகழ்ச்சிக் குறிப்புகன் (Vital Records) என்பவை பிறப்பு, இறப்பு, செத்துப் பிறத்தல், திருமணம், மணமுறிவு மற்றும் பலவித நிகழ்ச்சிகளைத் தொடர்புடைய அலுவலகத்தில் பதிவு செய்தல் பற்றியனவாகும். சான்றாக, பிறப்பினைப் பெற்றோர் பதிவு செய்வதும், இறப்பினைத் தொடர்புடைய அலுவலகத்தில் சுற்றத்தார் தெரிவிப்பதும், தனிப்பட்ட ஒருவன் தன் திருமண நிகழ்ச்சியைத் தானே பதிவு செய்வதும் இக்குறிப்புகளில் அடங்கும். அனைத்துச் சமுதாயங்களிலும் பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடப்பவையே, இவையாவும் அவ்வப்பொழுது முறையே பதிவு செய்யப்படுகின்றன. இவ்வகையில் திரட்டப்படும் விவரங்கள் யாவும் அலுவலர்களால் பிரித்துத் தொகுக்கப்பட்டு அதனால் கிடைக்கக்கூடிய விவரங்கள் அடிப்படைப் புள்ளிவிவரங்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளுக்குமேல் சில துணை விவரங்களும் திரட்டப்படுகின்றன. ஒரு குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யுங்கால், அக்குழந்தை பிறந்த தேதி, பால் (Sex), தாயின் வயது, முன்னர்ப்பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, பிறப்பின் வரிசை எண் (Birth Order), தாயின் இருப்பிடம் போன்ற விவரங்களும் கேட்டறியப்படுகின்றன. இது போலவே இறப்பினைப் பதிவு செய்யும்போது இறந்த தேதி, இறந்தவரின் வயது, பால், இறந்த இடம், இறந்தவரின் வழக்கமான இருப்பிடம், இறப்பிற்கான காரணம் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. இப்புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழக் கூடிய இயற்கையான மக்கள் தொகையின் மாற்றத்தைக் (Natural Change in Population) கணக்கிட இயலும். ஐக்கிய நாடுகளின் வெளியீட்டில் இதன் விளக்கம் கீழ்க்கண்டவாறு அளிக்கப்படுகிறது. இது இன்றியமையாத நிகழ்ச்சிகளையும், பண்புகளையும் தொடர்ச்சியாகவும், நிலையாகவும், கட்டாயமாகவும் ஒரு நாட்டின் சட்ட வடிவிலான தேவைகளுக்காகப் பதிவு செய்வதாகும். இம்முறையில் திரட்டப்படும் விவரங்கள் யாவும் பிறப்பு, இறப்பு, மணமுறிவு, மனவிலக்கு (Annulment), சட்டப்படியான மண வாழ்க்கைப் பிரிவு (Judicial Separation), தத்தெடுப்பு, சட்டப்படியான முறைமை, மற்றும் அங்கீகாரம் (Legitimation and Recognition) போன்றவற்றை உள்ளடக்கியவை. ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சட்ட முறைப்படி இது போன்ற நிகழ்ச்சிப் பதிவு முறை காலங் காலமாகச் செயல்பட்டு வருகிறது. அடிப்படைப் புள்ளி விவரம் என்பது குடியுரிமைப் பதிவு முறை (Civil Registration System) என்ற வேறு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இப்பதிவுகள் மக்கள் தொகை மாற்றத்தை அறிவதற்கான கருவியாகப் பயன்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் நிகழக்கூடிய அத்தனை நிகழ்ச்சிகளும் முறையே தெரிவிக்கப்படுவதுடன் பதிவு செய்யப்பட்டுத் தொகுக்கப்படவேண்டும். இவ்வாறான பதிவுகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமே பொதுவாக முறைப்படி திரட்டப்பட்டுள்ளன. இதற்குச் சான்றாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, இங்கிலாந்து, பிரான்சு, சுவீடன், சப்பான், ஆசுதிரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைக் கூறலாம். ஆனால், வளரும் நாடுகளான இந்தியா, பாகிசுதான், வங்காள தேசம், இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, கென்யா போன்ற நாடுகளில் இப்புள்ளி விவரங்கள் நிறைவான வகையில் அமையவில்லை. இந்நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் பிறப்பும், இறப்பும் கூட பதிவு செய்யப்படுவதில்லை. ஆகவே இக்குறிப்பேடுகள் நிறைவில்லாமனும் துல்லியமில்லாமலும் காணப்படுகின்றன. அடிப்படைப் புள்ளி விவர முறையில் திரட்டப்படும் விவரங்கள் யாவும் நிகழ்ச்சிகளின் தொகுப்பே தவிர, இப்புள்ளி விவரங்கள் முழுமையான அனைத்து விவரங்களையும் தரக்கூடியன அல்ல. குறிப்பிட்ட கால கட்டத்தில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளின் செயல்பாட்டைத் தெரிவிப்பதால் இவை நிகழ் விவரம் (Flow data) என்றழைக்கப்படுகின்றன. இப்பதிவு தொடர்ச்சியாக நடைபெறுவதால் இச்செயல்முறை நிலையான ஒன்றாக அமைகிறது. இடையிடையே தடைபடக் கூடியதாக, குறுகிய காலம் ஒன்றிற்கே திரட்டப்படும் புள்ளி விவரங்கள் நிகழ்கால நிலையைத் தெரிவிக்காமல் பயனற்றுப் போகும். பதிவு செய்வது சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்படுவதால் இப்பதிவைச் செவ்வனே செய்ய இயலும், சில நாடுகளில் இப்பொறுப்புத்தொடர்புடைய குடும்பத்திற்கும் வேறு சில நாடுகளில் துப்புரவுப் (சுகாதாரப்) பணியாளரிடமும் அல்லது ஈமச் சடங்குகளைச் செய்வோரிடமும் ஒப்படைக்கப்படுகிறது. அடிப்படைப் புள்ளிவிவர முறையினால் திரட்டப்படும் நிகழ்ச்சிகளுடன் அவற்றுக்குத் தொடர்புடைய மனிதரின் சில பண்புகள் குறித்தும் விவரங்கள் திரட்டப்படுவதால் இப்புள்ளி விவரம் மக்கள்தொகைக் கணிப்பிலிருந்து (Census) மாறுபடுகிறது. இருப்பினும் மனிதனின் சில தனிப்பட்ட பண்புகளான வயது மற்றும் பால் போன்ற விவரங்களின் தொகுப்பு இரண்டிற்கும் பொதுவானதாகவே உள்ளது. பயன்கள் அடிப்படை நிகழ்ச்சிக் குறிப்புகள் சட்ட ஆவணமாகப் பயன்படுகின்றன. தனி மனிதன் ஒருவன் தன் வயது, குடியுரிமை, மண வாழ்க்கை நிலை ஆகியவை தொடர்பாக அவ்வப்பொழுது சான்று அளிக்கும் கட்டாயத்திற்குட்படுகிறான். ஆகவே இவ்விவரங்கள் தொடர்புடைய அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுத் தேவைப்படும் நேரத்தில் அவற்றைக் கேட்டுப் பெறுவது அவனுக்கும் அவன் சார்ந்த அரசுக்கும் இன்றியமையாததாகிறது. இப்பதிவுகள் முறைப்படியான புள்ளி விவரமாகத் திகழாமலும் இருக்கலாம். ஆனால், இவ்விவரங்களின் தொகுப்பும் ஆய்வும் அரசுக்கு மக்கள் தொகைத் தொடர்பான செய்திகளைத் தருவிக்கின்றன. இச்செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்படுவதுடன் நலவழித் தொடர்புடைய நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படுகின்றன. எதிர்கால மக்கள் தொகை மதிப்பீடுகளைச்செய்யப் பிறப்புப் புள்ளி விவரங்களின் இன்றியமையாமை உணரப்பட்டுள்ளது. திருமணம், மணமுறிவு, மணவிலக்கு மணவாழ்க்கைப் பிரிவு, தத்தெடுப்பு, சட்டப்படியான சட்டப்படியல்லாத பிறப்புப் போன்ற விவரங்கள் அரசின் சமூக நலத்துறை திறம்படச் செயல்புரியத் தேவைப்படுகின்றன. காண்க: இந்தியக் குடியுரிமைப் பதிவு முறை, மக்கள்தொகை, மக்கள்தொகைக் கணிப்பு. துணை நூல்கள் Bhende, Asha, A. & Tara Kanitkar, “Principles of Population Studies”, Himalaya Publishing House, Bombay, 1982. Benjamin, Bernard, “Health and Vital Statistics”, Allen & Unwin, London, 1968. Spiegelman, Mortimer, “Introduction to Demography”, Revised Edition, Mass., Harvard University Press, Cambridge, 1968.