உட்டோப்பியா என்னும் சொல் குறைவொன்றுமில்லாத கற்பனை உலகத்தைக் குறிக்கும். உட்டோப்பியா (Utopia) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ‘இந்த இடமல்ல’ (No Place) என்பது பொருள், பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகன் இல்லாத இலட்சிய சமுதாயத்தை இச்சொல் குறிப்பிடுவதா- கக் கூறுவர். நடைமுறைப்படுத்த முடியாதவற்றையும் பகற் கனவு காண்கிறவர்களையும் உட்டோப்பியர்கள் என்று சுட்டுவர். புனிதர் தாமசு மூர் (Saint–Thomas More) என்பவரே உட்டோப்பியா என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார். இச்சொல்லைத் தம் நூலின் தலைப்பாக இவர் பயன்படுத்தினார். இலத்தீன் மொழியில் இந்நூலை இவர் கி.பி. 1516–ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதன் ஆங்கில மொழியாக்கம் கி.பி. 1551–இல் வெளியிடப்பட்டது. இந்நூலில் மூர் இலட்சிய அரசு குறித்துத் தம் கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்நூலில் ஒரு பகுதி இருவரிடையேயும் நிகழும் உரையாடல் போல் எழுதப்பட்டுள்ளது. தம் காலத்தில் நிலவிய சமூக பொருளாதாரச் சீர்கேடுகளை இந்நூல் கடுமையாக குறை கூறுகிறது. மூரின் உட்டோப்பியா என்னும் நூல் இராபேல் அய்த்லோதலே (Raphael Hythlodale) என்னும் பெயருடைய போர்ச்சுகீசிய மாலுமியின் அறிக்கையாகும். இம்மாலுமி அமெரிகோ வெசுபுக்கி (Amerigo Vespucci) என்னும் கடல் ஆய்வுப் பயணியுடன் இணைந்து மூன்று முறை அமெரிக்கா சென்று வந்திருந்தார். அதுவரை கண்டறியப்பெறாத இடங்களிலும் காடுகளிலும் இவர் செய்த பயணங்களை இந்நூல் கூறுகிறது. அவற்றுள் ஒன்று உட்டோப்பியா என்னும் தீவாகும். இத்தீவில் வாழ்ந்த மக்கள் அனைவரும் ஏற்றத்தாழ்வில்லாமலும் வளமாகவும் மதி நுட்பமுள்ளவர்களாகவும் இருந்தனர் என்பது வியப்புக்குரிய செய்தியாகும். இலட்சிய சமுதாய நிலையைக் கற்பனை செய்து எழுதிய நூல்கள் பலவுண்டு. அவற்றுள் பிளேட்டோ எழுதிய குடியரசு (Republic) என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. இந்நூல் கி.மு. 375–ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது. மேலும், சாமுவேல் பட்லர் கி.பி. 1872–இல் எழுதிய எரிவான் (Erewohn) என்னும் நூலும் கி.பி. 1888–இல் எட்வர்டு பெலாமி (Edward Bellamy) எழுதிய பின்னோக்கிப் பார்த்தல் (Looking Back–ward) என்னும் நூலும் சி.எச். வெல்சு (G.H. Wells) எழுதிய இக்கால உட்டோப்பியா (A Modern Utopia) என்னும் நூலும் உட்டோப்பியக் கருத்துகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.