உமறுப் புலவர்
umaṟup pulavar
கி.பி. 17 – ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய புலவர்களுள் ஒருவர்.
கி.பி. 17 – ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய புலவர்களுள் ஒருவர். இவர் எழுதியுள்ள செந்தமிழ்க் காப்பியமாகிய சீறாப்புராணம் தமிழில் விளங்கும் பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாகலாபுரத்தில் முகம்மது நயினார் பிள்ளை என்பாரின் மகனாக கி.பி. 1642–இல் பிறந்தார்.
சீறாப்புராணத்துடன் முதுமொழி மாலை, செய்தக்காதி நொண்டி நாடகம், சீதக்காதி திருமண வாழ்த்து என்னும் மூன்று நூல்களும் இவர் எழுதியனவாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் 88 விருத்தப்பாக்கள் அடங்கிய முதுமொழி மாலை மட்டும் அதன் இலக்கியத் தரம், பக்திச் சுவை முதலியன காரணமாக உமறுப் புலவரால் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பின்னிரு நூல்களும் உமறுப் புலவரால் எழுதப்பட்டவை அல்ல எனக் கருதப்படுகின்றன.
உமறுப் புலவர் கடிகைமுத்துப் புலவரிடத்தில் தமிழ் கற்றவர் என்றும், வாலை வாருதி என்னும் ஆணவங்கொண்ட புலவரைத் தம்முடைய கவிதைத் திறனால் வென்றார் என்றும், எட்டயபுரச் சமத்தானத்தின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தார் என்றும் செய்திகள் வழங்குகின்றன.
முகம்மது நபி வகுத்த இசுலாமியச் சமய நெறியாகிய தீன் நெறியை நிலைநாட்டிய செய்தியைக் கருப்பொருளாகக் கொண்டு உமறுப் புலவர் சீறாப்புராணத்தை எழுதியுள்ளார். இக்காப்பியம் எழுதத் தேவையான செய்திகளைக் கேட்டறிய இவர் சதக்கத்துல்லா அப்பா என்னும் சான்றோரை அணுகியதாகவும், அவர் உமறுப் புலவரின் தோற்றத்தைக் கண்டு உதவிசெய்ய மறுத்துவிட்டதாகவும், பின்னர் முகமது நபி கனவில் தமக்கிட்ட ஆணையை ஏற்று அவர் உமறுப் புலவருக்கு உதவியதாகவும் கதை வழங்குகிறது. மாமேதையும் பல நாடுகளைச் சுற்றிக் கண்டவரும் இசுலாமிய ஞானக் கடலாகத் திகழ்ந்தவருமாகிய சதக்கத்துல்லா அப்பா அவர்கள் உருவுகண்டு எள்ளும் இயல்பினர் அல்லர். எனவே இக்கதை நம்பத்தக்கதன்று.
சதக்கத்துல்லா அப்பா அவர்களின் உதவியுடன் உமறுப் புலவர் பறங்கிப்பேட்டைக்குச் சென்று சதக்கத்துல்லா அப்பாவின் மாணவராகிய முகம்மது திபி என்பாரிடத்தில் இசுலாமியச் சமயக் கருத்துகளைக் கற்றுத் தெளிந்தார். பறங்கிப் பேட்டையில் வாழ்ந்திருந்த அபுல் காசிம் என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பட்டுச் சீறாப்புராணத்தை இயற்றினார். உமறுப் புலவர் வள்ளல் அபுல் காசிமைத் தம்முடைய காப்பியத்தில் இருபத்தோர் இடங்களில் நன்றியுணர்ச்சியுடன் புகழ்ந்து பாடியுள்ளார்.
சீறாப் புராணம் எழுத உமறுப்புலவருக்குச் சீதக்காதி உதவினார் என்னும் கருத்தொன்றும் நிலவுகிறது. இக்கருத்தை நிறுவத் தேவையான அகச் சான்று எதுவும் இந்நூலில் இல்லை. இதன்கண் ஓரிடத்திலேனும் சீதக்காதியின் பெயர் குறிக்கப்படவில்லை. இதன் இரண்டாம் படலமாகிய நாட்டுப் படலத்தின் நாற்பத்தொன்றாம் பாடலில், வள்ளல் அபுல் காசிம் புகழ்ப்படுவதால் தொடக்க காலத்திலிருந்து உமறுப் புலவருக்கு உதவியவர் வள்ளல் அபுல் காசிம் என்பது பெறப்படுகிறது. சதக்கத்துல்லா அப்பாவைப் போற்றிப் புகழ்ந்துள்ள உமறுப்புலவர் சீதக்காதி பற்றியாதொன்றும் கூறாமையாலும் சீதக்காதி உதவினார் என்று நம்ப இடமில்லை. எனினும் இது பற்றிய கருத்து வேறுபாடுகள் இலக்கியத் திறனாளர் இடையில் நிலவுகின்றன.
சீறாப் புராணம் விலாதத்து (இளமைக்காலம்), நுபுவத்து (தூதர் பட்டம் கிடைத்த காலம்), இசுரத்து (குடிபெயர்ந்து சென்ற காலம்) என மூன்று காண்டங்களாகப் பகுக்கப் பெற்றுள்ளது. இக்காப்பியத்தில் 92 படலங்கள் உள்ளன. ‘திருவுருவா’ எனத் தொடங்கும் காப்புச் செய்யுள் நீங்கலாக 5028 விருத்தப்பாக்கள் உள்ளன.
சீறாப்புராணத்தில் காப்பியக் கட்டுக்கோப்புச் சிறப்பாக அமைந்துள்ளது. முகமது நபியின் வரலாறு பின்னணியாக அமையத் தீன் நெறியாகிய அறநெறி மறநெறியை எதிர்த்து வெற்றிகண்ட செய்தி நன்கு விளக்கப்பட்டுள்ளது. காப்பியத் தலைவரைத் ‘தீன் எனும் பயிர்க்கோர் செழுமழை’ எனப் புலவர் அறிமுகப்படுத்துகிறார். நுபுவத்துக் காண்டத்தின் முதல் பாடலில் ‘தீன் பயிர் விளைத்த கூறெலாம் விரித்தெடுத்துரைப்பாம்’ எனவும், இசுரத்துக் காண்டத்தின் முதல்பாடலில், ‘தீன் ஓங்கச் செய்தவை எடுத்துச் சொல்வோம்’ எனவும் கூறுகிறார். பதறு என்னும் போர்க்களத்தில் 313 முசுலிம்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியப் பகைவர்களை வென்று இசுலாமியச் சமயத்தை உறுதியாக நிலைநாட்டிய நிகழ்ச்சியைக் கூறும் பதறுப்படலத்தின் இறுதிப் பாடலில் ‘தீன் எனும் பயிரும் பதிவு பெற்றிருந்து தழைத்தது’ எனக் கூறுகிறார். இவ்வாறு சீறாப் புராணம் மிகச்சிறந்த காப்பியக் கட்டுக்கோப்புடைய நூலாகத் திகழ்கின்றது.
இப்புலவர் தம்முடைய காப்பியத்தில் ஏறத்தாழ ஆயிரம் அரபுச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இவற்றுள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இசுலாமியச் சமயம், தத்துவம், பண்பாடு முதலியனவற்றை விளக்கும் கலைச் சொற்களாகும். அரபுச் சொற்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் பொருளையும் இணைத்துக்கூறும் இயல்பு உமறுப் புலவருக்கு உண்டு.
இவர் இசுலாமிய மரபும் தமிழ் மரபும் இணைந்து வரும் வகையில் பாடும் இயல்புடையவர். அராபியாவைத் தமிழ்நாடு எனத் தோன்றுமாறு பாடியுள்ளார். ஐந்திணை நெறி கூறல், காப்பியத் தலைவரின் பண்புகளைப் புனைதல், மகளிர் அழகும் புகழும் சாற்றல், வள்ளுவம் உள்ளிட்ட தமிழ் அறநூல் கருத்துகளை வாய்ப்பறிந்து பயன்படுத்துதல் போல்வனவற்றில் இவருடைய தமிழ் உள்ளத்தைக் கண்டு மகிழ்தல் கூடும்.
சீறாப் புராணம் தன்னுடைய செந்தமிழ்ச் சுவை காரணமாகத் தமிழறிந்தோர் இடையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. தண்டபாணி சுவாமிகள் தம்முடைய புலவர் புராணத்தில் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ள இசுலாமியத் தமிழ் இலக்கியம் சீறாப்புராணமே ஆகும்.
உமறுப் புலவர் தம்முடைய கவிதைத் திறத்தாலும் படைப்பாற்றலாலும் இசுலாமியத் தமிழ்ப் புலவர்களின் தலைவராகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். இவர் தம் அறுபத்தோராம் வயதில் எட்டயபுரத்தில் கி.பி. 1703–ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். எட்டயபுரத்தில் இவர் சமாதி உள்ளது. செ.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 937)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vmvpbem8/
தமிழ்“உமறுப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vmvpbem8/APA
Oliyon Research. (2026). உமறுப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vmvpbem8/MLA
"உமறுப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vmvpbem8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment