காயல் பட்டினத்தில் தோன்றிய இசுலாமியப் புலவர். இவர் உதுமான் நயினார் இலெப்பை என்றும் அழைக்கப் பெற்றார். சாமு நயினார் இலெப்பை இவருக்குத் தந்தை. இவர் எழுதியுள்ள நூல்கள் யாவும் கி.பி 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சார்ந்தனவாக இருப்பதால், இவர் அக்காலப் பகுதியைச் சார்ந்தவராகவே இருத்தல் வேண்டும். இவர்தம் பிறப்பு, இறப்புப் பற்றிய காலக் குறிப்பினைச் சரியாக அறிய முடியவில்லை. இசுலாமியத் தமிழிலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முசுலிம் புலவர்களுள் உதுமான் நயினார் புலவரும் ஒருவர். இவர் தமிழில் பல்வேறு வண்ணங்கள், சலவாத்துப் பாடல்கள், பதசுகள், நாகூர்ச் சிறப்பு முதலானவற்றை இயற்றியுள்ளார். இவர்தம் சலவாத்துப் பாடல்கள் பெருமானார் நபி (சல்) அவர்களின் புகழினைச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன. சலவாத்து என்பதன் பொருள் ‘நபி புகழ்’ என்பதாகும். இவரது சலவாத்துப் பாட்டு முதன்முதல் கி.பி. 1874–இல் அல்லாப் பிச்சைப் புலவரால் சென்னை மனோன்மணி விலாச அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பதிகமாக அமைந்துள்ள இச்சலவாத்துப் பாடலின் பின்னர்க் கீர்த்தனைப் பாடல் ஒன்றும் அமைந்துள்ளது. இச்சலவாத்துப் பாடல்கள் கப்பற்பாட்டு, ஊஞ்சற்பாட்டு, கும்மிப் பாட்டு, தாலாட்டு, தோழிப்பாட்டு என்ற முறையில் அமைந்துள்ளன. இவர் இயற்றிய பதசுகள் 1900-இல் காதர் பாட்சா புலவரால் சென்னை வாணி விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுநிலையில் பெருமானாரின் சிறப்பு, இசுலாத்தின் பெருமைகள் ஆகியன எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதே ஆண்டில் இவரது நாகூர்ச் சிறப்பு என்னும் நூலும் காதர் பாட்சா புலவரால் சென்னை வாணி விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் இறைநேசச் செல்வர் நாகூர் சாகுல் அமீதாண்டவர் என்பவரின் சிறப்பு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சென்னையில் காலமான இவரது உடல் அங்கப்ப நாயக்கன் தெரு மசுசிதெ மகுமூலில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சி.ந.