கிரேக்க நாட்டில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்பி; ஏதன்சு நகரைச் சார்ந்தவர். ஒலிம்பியாவிலும் (Olymbia) தெல்பியிலும் (Delphi) இவர் சிற்பியாக விளங்கினார். மகா அலெக்சாந்தர் அவையில் இடம் பெற்றிருந்த இவர், அலெக்சாந்தரின் அழைப்பிற்கிணங்க ஒலிம்பியாவிலுள்ள பிலிப்பியம் கோயிலைத் தம் சிற்பத்திறன் மூலம் அழகுபடுத்தினார். பிலிப்பியம் (Philippeum) கோயில் மகா அலெக்சாந்தரின் தந்தையார் பிலிப்பிற்காகக் கட்டப்பட்டது. இலியோகரசு (Leochares) அலெக்சாந்தரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களை இக்கோயிலில் சிற்பமாக வடித்தார். இவர் எலிகார்னசசுவிலும் சில சிற்பங்களைச் செதுக்கியுள்ளார். இவர் வடித்த சிற்பங்களுள் குறிப்பிடத்தக்கது அப்போலோ பெல்விடர் சிற்பமாகும்.