அர்செண்டினா நாட்டிலுள்ள பியோனோசு எரியசில் (Buenos Arics) கி.பி. 1877–இல் பிறந்தார். இவர் மருத்துவம், உளவியல், மதிப்பீட்டியல், புலன் கடந்த மெய்ப் பொருளியல் (Meta Physics) போன்ற துறைகளில் பயின்று தேர்ச்சி பெற்றார். இவர் சிறந்த இயற்கைக் கோட்பாட்டாளர் (Naturalist); உறுதிக் கோட்பாட்டாளர் (Determinist); புரட்சிக் கருத்துடையவர். இன்சினிரோசு, சோசு (Ingenieros, Josh) சில காலம் செருமனியிலும் சுவிட்சர்லாந்திலும் வாழ்ந்தார். இவர் மருத்துவம், தத்துவம் ஆகிய இருதுறைகளிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். எனினும் இவர்தம் தத்துவக் கருத்துகளே இவரை உலகறியச் செய்தன. இவர் தத்துவத்தில், குறிப்பாகப் புலன்கடந்த மெய்ப்பொருளியற் கோட்பாட்டில் ஆழ்ந்த கவனம் செலுத்தி, அதன் உட்பொருளை அறிய முயன்றார். மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட கடவுள், ஆன்மா, இறவாப் பெருவாழ்வு போல்வன பற்றி விளக்குவதே புலன்கடந்த மெய்ப்பொருளியல் மனித அறிவும் ஆற்றலும் வரையறைக்குட்பட்டவை என்றும் கடவுள், ஆன்மா போல்வன வரையறைக்குட்படாதவை என்றும் இது விளக்குகிறது. கடவுள், ஆன்மா போல்வன மனித அறிவிற்கும் சோதனைக்கும் அப்பாற்பட்டவை எனக் கூறப்படுகின்றமையால், அவற்றைப் பொருளற்றவை எனக் கொண்டு சோசு மறுக்கிறார். இம்மெய்ப் பொருளியல் மூடநம்பிக்கையற்றது; ஆய்வுக்கு அடிப்படையானது; குறைவில்லாதது; சார்பற்றது; இது நிலையில்லா மாயக் கருத்துகள் உடையது; இக்கருத்துகள் மனித வாழ்க்கையை நன்கு நெறிப்படுத்த உதவுகின்றன என்பது இவர் தம் ஆழ்ந்த நம்பிக்கை. கடந்த உயிரியல் (Meta Biology), கடந்த உளவியல் (Meta Psychology), கடந்த பிரபஞ்சவியல் (Meta Cosmology) ஆகியவற்றோடு புலன்கடந்த மெய்ப்பொருளியலை ஒப்பிட்டும் உறழ்ந்தும் ஆய்ந்து புகழ்பெற்ற இவ்வறிஞர் 1925–ஆம் ஆண்டு காலமானார்.