பால்வினை நோய்களில் ஒன்றாகிய சாங்க்ராய்டு (chancroid) என்பது ஹீமோபிலஸ் டுக்ரீய் (Haemophilus ducreyi) என்னும் கிராம் நெகடிவ் நுண்ணுயிரியால் உண்டாகிறது. 1-2 மைக்ரான் நீளமுள்ள இந்நுண்ணுயிரி சாயமேற்றப்பட்டால், மீன் கூட்டச் சங்கிலித் தொடர் போல் தோன்றும். இந்நோய் பெரும்பாலும் வெப்ப மண்டல நாடுகளிலேயே காணப்படுகிறது. நோயுடைய பெண்ணுடனோ, ஆணுடனோ புணர்ச்சி செய்த 1-8 நாளுக்குள் இந்நோய் தோன்றும், பிறப்புறுப்புகளில் தோன்றும் பரு சிறிய தாக வலியுடன் காணப்படும். விரைவில் இது சீரற்ற புண்ணாக மாறுகிறது. தொடையிடை (கவான்), நிணக் கட்டிகள் வீங்கிப் பழுத்துப் புண்ணாகும். இத்துடன் அசதியும், காய்ச்சலும் தோன்றும். இதை உடனடியாகக் கவனிக்காவிடில், தொடையிடைச் சீழ்க் கட்டிகள் தோன்றி, புண்களாக மாறி, திசுச் சிதைவு தோன்றக் கூடும். பிறப்புறுப்புகளில் தொடு வலியுடன் கூடிய பல புண்களும், நிணக் கட்டிகளும் இருக்கும்போது, சாங்க்ராய்டு நோய் என எளிதில் முடிவு செய்யலாம். எனினும் வகைப்படுத்தி முடிவு செய்யும் போது, மேக நோய், அரையாப்புக் கட்டி நோய், கொடை இடைக் கழலைகள், பிறப்புறுப்பு அக்கி ஆகிய நோய்களையும் நினைவில் கொள்ள வேண்டும். பிறப்புறுப்பின் மீது காணப்படும் புண்களிலிருந்து எடுக்கப்பட்ட நீர்மத்தைக் கிராம் முறைப்படிச் சாயமேற்றினால், ஹீமோஃபைலஸ் டுக்ரீய் நுண்ணுயிரியைக் காணலாம். சல்ஃபாடிமிடின், கோ-டிரைமாக்சசோல், ஸ்ட்ரெப்டோமைசீன், ஆக்சிடெட்ரா சைக்ளின் போன்ற மருந்துகள் பயனளிக்கின்றன. —அ.கதிரேசன் நூலோதி. A. King et.al., Venereal Diseases, Fourth Edition, Bailliere Tindall, London, 1982.