சங்க காலப் புலவர்களுள் ஒருவர். போதி என்பது அரசமரத்தினைக் குறிக்கும். புத்தர் பெருமான் இம்மரத்தினடியில் தவமியற்றிப் போதம் – மெய்யறிவு – பெற்றமையால், இம்மரம் போதிமரம் என வழங்கப்பட்டது; புத்த சமயத்தினர்க்கு இம்மரம் போற்றிப் பேணுதற்குரிய புனிதத் தன்மையுடையதாயிற்று. புத்தர் பெருமானும் போதியார், போதி மாதவன் என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார். இக்கருத்துக்களை உளங்கொண்டு ஆய்வாளர்கள் இளம்போதியார் என்னும் சங்கப்புலவர் புத்த சமயத்தவராக இருத்தல் கூடும் என்று கருதுகின்றனர். சங்க காலத்தில் தமிழகத்தில் புத்த சமயம் இடம்பெற்றிருந்தது என்பார் கருத்திற்கு அரணாக அமையும் ஏதுக்களில் இப்பெயரும் ஒன்றாகும். இவருடைய ஒரே பாடல் நற்றிணை 72–ஆம் பாடலாக அமைந்துள்ளது. பழந்தமிழரின் அகப்பாட்டு நெறியில் அமைந்துள்ளமையால் பாடலிலிருந்து இவர்தம் சமயம் பற்றிய குறிப்பு ஒன்றும் அறிந்துகொள்ள இயலவில்லை. பாடல் நெய்தல் திணையில் தோழி தலைவியிடம் சிறைப்புறங்கூறும் பாங்கில் உள்ளது. இதில் தோழிக்கும் தலைவிக்கும் இடையிலுள்ள நட்பினை ‘உயிர் ஓரன்ன செயிர்தீர் நட்பு’ என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.