குளிர் பதன வசதி தேவைப்படும் உணவு பதப்படுத்தும் தொழிலகம், சிப்பக் கட்டகம் (packing house) எனப்படுகிறது. புலால் சிப்பக் கட்டகங்களில் விலங்குகளைக் கொன்று, புலாலைத் தூய்மைப்படுத்திப் பதப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இவ்விடங்களில் குளிர்ச்சிக் கிடங்குகளும், உறை குளிர்ச்சிக் கிடங்குகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. புதிதாகப் பறிக்கப்பட்ட பழங்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. ஏற்ற விலைச் சூழ்நிலைகள் ஏற்பட்டு, மிகு வருவாய் கிடைக்கும் வாய்ப்புத் தோன்றும் போது, அவை சந்தைகளுக்கு அனுப்பப்படும். காய்கறி, பழம் ஆகியவை அறுவடை செய்யப்பட்டவுடன், அவற்றிலிருந்து வெப்பத்தை விரைவாக நீக்கிக் குளிர வைக்கக் கூடிய கருவிகளைக் கொண்ட சிப்பக் கட்டகங்கள், முன் குளிரூட்டு நிலையங்கள் (pre cooling plants) எனப்படும். —கே. என். இராமச்சந்திரன்