அம்பலவாணர் திருக்கூத்து என்பது தில்லைப் பொன்னம்பலத்தில் சிவபெருமான் நிகழ்த்துகின்ற ஆனந்தத் திருக்கூத்தினைக் குறிக்கும். இதனைத் திருமூலர் ‘தேனுந்தும் ஆனந்த மாநடம்’ எனப் போற்றியுள்ளார். சிவபெருமான் ஆடுகின்ற ஆனந்தத் திருநடனம் அதைக் காண்பார்க்குப் பெரு விருப்பத்தையும் மகிழ்ச்சியையும் தோற்றுவிப்பதாகும். ‘அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே – அவர் ஆட்டங் கண்டு நாட்டங் கொண்டேன் பாங்கிமாரே’ என்று வள்ளற்பெருமானாராகிய இராமலிங்க அடிகளார் தாம் இக்கூத்தினில் ஈடுபட்டு நின்றமையைப் புலப்படுத்தியுள்ளார். பொன்னம்பலம் போலவே திருவாலங்காடு, மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம் ஆகிய ஊர்களிலும் சிவபெருமானின் நடனத் திருக்கோலம் சிறப்பாகப் பேசப்படும். அம்பலம் என்பதைப் பொது என்றும், சபை என்றும் சொல்வது உண்டு. திருவாலங்காட்டில் உள்ளது மணியம்பலம்; காரைக்காலம்மையார் அப்பன் திருவடியின் கீழ் நின்று பாட, அங்கு அவர் நடனமிடுகிறார். மதுரையில் வெள்ளியம்பலம். இங்கு மட்டும் இடக்காலை ஊன்றி வலக்காலைத் தூக்கித் தொண்டனுக்காகக் கால் மாறி ஆடுகிறார். திருநெல்வேலியில் இறைவன் நடமிடும் இடம் தாமிர சபை என்றும், திருக்குற்றாலத்தில் சித்திரசபை என்றும் போற்றப் பெறும். ‘தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்’ என்னும் மணிவாசகர் வாக்கிற்கு இயைய, தமிழ் நாட்டிலுள்ள திருக்கோயில்களில் எல்லாம் கூத்தப் பெருமான் திருவுருவங்கள், தென்திசை நோக்கியே அமைக்கப் பெற்றிருக்கின்றன. சிவபெருமானின் திருநடனச் சிறப்பையும் அதில் பொதிந்துள்ள உட்பொருள்களையும் உலகறியச் செய்த பெருமை கலாயோகி ஆனந்தகுமாரசாமி அவர்களுக்கே உரியதாகும். “சிவபெருமானின் ஆடல்கள் எல்லாவற்றிலும் பொதிந்துள்ள ஆழமான கருத்து ஒன்றேயாகும். அது இறைவன் பேராற்றலை வெளிப்படுத்துவது” என்று அவர் குறிப்பிடுகின்றார். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலையும் புரிந்து, சாட்டை இல்லாப் பம்பரம் போல் எல்லா உலகங்களையும் இறைவன் இயங்கச் செய்து வருகிறான். இறைவனின் ஐந்தொழிலும் எவ்வெவ்வாற்றால் எவ்வெவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை, :‘தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில் :சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் — ஊற்றமா :ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி :நான்ற மலர்ப்பதத்தே நாடு’ என்னும் உண்மை விளக்கப் பாடலால் விளக்கமுறக் காணலாம். தோற்றம்–படைப்பு; திதி–காப்பு; சங்காரம்-அழிப்பு; திரோதம்–மறைப்பு; முத்தி–அருள்புரிகை. உண்மை விளக்கம் உரைக்கும் உட்கோளினைப் ‘பூமலிகற்பகப்புத்தேள்’ எனத் தொடங்கும் சிதம்பர மும்மணிக்கோவைப் பாடல் ஒன்று விளக்கமுற எடுத்துரைக்கிறது. இறைவனின் ஐந்தொழில்களிலும் தலையாயது அருளல் என்பதும், மற்ற நான்கும் அதற்குத் துணை செய்வனவே என்பதும், சிவகாமியம்மை இடையறாமல் ஆனந்தக் கூத்தைக் கண்டு கொண்டிருப்பது உயிர்கள் உய்வதற்காகவே என்பதும் இப்பாடலில் நன்கு தெளிவாக்கப்பட்டுள்ளன. ஆனந்தக் கூத்தனின் சிற்பம் ஓவியம் எதிலும் தவறாமல் அம்மையாரும் இடம் பெறுவது இக்காரணத்தாலேதான். அம்பலக்கூத்தை ஒரு முறை கண்டவரும் வீடு பேற்றை அடைவர் என நூல்கள் பலவும் கூறுகின்றன. கருவிகள் யாவும் சடப்பொருள்கள் என்பதனையும், கதிரவன் வெளிச்சத்தால் கண் காண்பதைப் போல, இறைவனின் திருவருளால் உயிர்கள் செயல்படுகின்றன என்பதனையும், அநுபவ முறையில் உணர்வதே நடன தரிசனம் எனப்படும் என்பதனையும் சிவஞான தீபப் பாடலொன்று குறிப்பிடுகின்றது. கூத்தப்பெருமான் திருமேனிகளின் தோற்ற அமைப்பில் சின்னஞ்சிறு வேறுபாடுகள் காணப்படினும் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஒன்றேயாம். பெருமான் தாமரைப் பீடத்தின்மேல் பாம்பைப் பிடித்துள்ள குறளன் முயலகனின் முதுகு வளைந்து நெளியும் வண்ணம் வலக்காலை ஊன்றியுள்ளார். இடக்கால் தூக்கிய திருவடியாகும். பெருமானை நான்கு கைகளுடனும் மின்போல் ஒளிவிடும் செஞ்சடையுடனும் அமைத்துள்ளனர். சடைக்கற்றையின் அடிப்பாகம் பரந்தாடும் நிலையில் காணப்பெறும், தலையின் மேல் சீறும் பாம்பும் மண்டையோடும் கங்கையும் காட்சி தருகின்றன. சடைமுடியின் மேலாக இளம் பிறையும் கொன்றை மாலையும் தோற்றமளிக்கின்றன. பெருமானின் வலக்காதில் குண்டலமும் இடக் காதில் தோடும் இலங்குகின்றன. இடையில் சுற்றிய புலித்தோலாடை துடைகளைச் சுற்றி இறுக்கமாக உள்ளது. இடுப்பில் சுற்றிக் கட்டிய மேலாடை பறக்கிறது. திருமார்பிலே பூணூல் திகழ்ந்து ஒளி செய்கிறது. இடக்கையில் தாங்கிய தீ, கொழுந்து விட்டு எரிகிறது. கீழேயுள்ள வலக்கை அஞ்சேல் என்று அடைக்கலம் அளிக்கிறது. இடக்கையோ நல்லபாம்பைப் பிடித்துள்ள முயலகனை நோக்கியுள்ளது. பீடத்தின் இடப்பக்கத்திலிருந்து சுடர்களுள்ள திருவாசி ஆடுங்கூத்தனைச் சுற்றி வலப்பக்கம் வந்து சேருகிறது. இந்தத் திருவாசி துடியும் அனலும் ஏந்திய கைகளைத் தொட்டுச் செல்கிறது. சிவகாமி அம்மையார் திருநடனம் கண்டுகளித்து அண்மையில் நிற்கிறார். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதரும், பாம்புக்கால் முனிவராகிய பதஞ்சலி முனிவரும் திருநடனத்தைப் போற்றித் தொழுது இருபாலும் நிற்கின்றனர். மனிதப்பிறவி பெற்றார் காணவேண்டும் பெரும் பேறு இந்த நடனத்திருக்கோலமே என்று திருநாவுக்கரசர் இக்கோலத்தைக் ‘குனித்த புருவமும்’ எனத் தொடங்கும் தம் தேவாரத்தில் போற்றியுள்ளார். மேலுமவர் தம் முன்னே வந்து வணங்கும் மெய்யடியார்களை, எப்பொழுது வந்தாய் என்று நலம் உசாவுவது போலப் பெருமானின் அருட்கண் நோக்கும் அடைக்கலமருளும் திருக்கரமும் காணப்பெறுகின்றன என்பதனை ‘என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே’ என்று குறிப்பிட்டுள்ளார். நடனக்கலை பிறந்தது எம்பெருமானின் திருநடனத்திலிருந்துதான் என்பர். சங்க நூல்களுள் ஒன்றாகிய கலித்தொகை, சிவபெருமான் ஆடிய கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் மூன்று கூத்துகளைத் தெரிவிக்கின்றது. இவற்றுள் முதலிரண்டினைச் சிலப்பதிகாரமும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. இறைவனின் ஆடல் திருக்கோலம் மிகப் பழங்காலம் முதலே பாரதநாடெங்கும் பரவியிருந்தமைக்குச் சிற்பங்களும் சித்திரங்களும் சான்றாக உள்ளன. சிவபெருமான் மாலைக் காலத்தில் மேருமலையின் உச்சியில் ஆடுகின்ற மாலைப் பெருங்கூத்து, ஊழிமுடிவில் அவன் ஆடுகின்ற ஊழிக்கூத்து என்பனவும் பேசப்படும். சிவபெருமான் திருக்கூத்தில் நூற்றெட்டு வேறுபட்ட வகைமைகள் அடங்கியுள்ளன என்பர். அவற்றுள் எழுவகைத் தாண்டவத்தை மிகச் சிறப்பாக எடுத்துரைப்பர், அவற்றுள்ளும் ஐந்தொழிலையும் ஒருசேரச் செய்யும் கூத்தே அம்பலவாணனின் ஆனந்தத் திருக்கூத்து என்பதனை ‘எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநடம்’ என்று சிவயோகியாராகிய திருமூலர் தம் ஞானக் கண்ணால் கண்டு காட்டியுள்ளார். உலகங்களின் இயக்கத்திற்கு அச்சாணியாய் அம்பலவாணன் திருக்கூத்தே நிலைபெற்றுள்ளது.மு.ச.