<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நுண்ணோக்கி 1930ஆம் ஆண்டில், ஈ.என்.ஹார்வி, ஏ.எல்.லூமிஸ் எனும் அறிஞர்களால் வடிவமைக்கப் பட்டது. உயிர்ச் செல்கள் அல்லது சிறு உயிரிகளின் இயக்கத்தை உருப் பெருக்கத்தோடும், தெளிவாகவும் கண்ணால் காண்பதற்கு மைய விலக்கு நுண்ணோக்கி (centrifuge microscope) பயன் படுகிறது. இக்கருவியில், அப்பொருள்கள் மைய விலக்கு விசைக்கு உள்ளாக்கப் படுகின்றன. இது எளிய ஒளியியல் அமைப்புக் கொண்டது. இதன் அமைப்பு படத்தில் காட்டப் பட்டுள்ளது. படத்தில் A என்பது சுழற்சி அச்சு ஆகும். L,L' என்பன ஒளிர் இழை ஒளி மூலங்கள், C, C' என்பன குவி வில்லைகள். S, S' என்பன செல்கள் போன்ற பொருளைத் தாங்கியுள்ள கண்ணாடித் தட்டுகள். O, O' என்பன பொருளருகு வில்லைகள், எதிரொளிக்கும் முப்பட்டகங்கள் இவற்றை உள்ளடக்கிய அமைப்புகள். P, P' என்பன மைய எதிரொளிப்பு முப்பட்டகங்கள். OC என்பது நிலையான கண்ணருகு வில்லை. I, I' என்பன கண்ணருகு வில்லையில் உள்ள பார்வைப் புலப் பகுதிகள் ஆகும். முதலில் ஒரு பகுதியினைக் கருதலாம். குவி வில்லை Cஇன் காரணமாக ஒளி மூலத்தின் ஒளிர் இழை Lஇன் படிவம், கண்ணாடித் தட்டு Sஇன் மீதே சரியாக விழுகிறது. தட்டை ஊடுருவிச் செல்லும் ஒளி, முப்பட்டகம், பொருளருகு வில்லைப் பகுதி Oஐ அடைந்து, அங்கு உருப் பெருக்கப் பெற்று, பிறகு, மைய முப்பட்டகம் Pஇல் விழுகிறது. அங்கே, மேல் புறமாகத் திருப்பப் பட்ட ஒளி, கண்ணருகு வில்லைப் பகுதி OCஐ அடைகிறது. அதன் வழியாகப் பார்த்தால், பெரிய படிவம் தெரியும். இவ்வாறே, மறு பகுதியிலும் அமைகிறது. இவ்வமைப்பு முழுவதும் (அதாவது SOPP'S'O' அமைப்பு) A செங்குத்து அச்சைப் பற்றிக் கொண்டு சுழற்றப் படுகிறது. (விளக்குகள் L, L' வில்லைகள் C,C', oc அசைவதில்லை.) அப்போது, கண்ணாடித் தட்டில் உள்ள செல்கள் அல்லது சிறு உயிரி அமைப்புகள் தட்டின் வெளி ஓரப் பகுதியில் ஓரிடத்தில் ஒதுங்குகின்றன. அந்த இடம் சரியாக விளக்கின் படிவம் விழும் இடமாக அமைந்து விடுகிறது. மேலும் LCS பகுதி மைய அச்சிலிருந்து உள்ள தொலைவு, L'C'S' பகுதி அந்த அச்சிலிருந்து உள்ள தொலைவை விடச் சிறிது குறைவு ஆகும். இந்நிலையில் OC வழியாகப் பார்த்தால், SS'இல் உள்ள இரு பொருள்களின் தெளிவான உருப் பெருக்கப் பட்ட படிவங்களை I, I' பகுதிகளில் பெறலாம். அப்படிவங்களை நன்கு ஆய்வதன் மூலம், செல்லின் பரப்பு விசைகள், பாகு நிலை பற்றிய பல உண்மைகளை அறியலாம். இக்கருவி மூலம், உயிர்ச் செல்கள் நீள் தலையும் காண முடிகிறது. சுழற்சி வேகத்தை மிகக் கூட்டினால், ஒளி விளக்குகளின் சிமிட்டல் நிகழ்ச்சி மறைந்து விடும். மேலும், சுழலும் பகுதியில் உயர் திறன் பொருளருகு வில்லையமைப்பையோ, குறை திறன் பொருளருகு வில்லையமைப்பையோ, பொருத்தி நுண்ணோக்கியைத் தேவைக்கேற்பப் படுத்தலாம். மேலும், சுழல் வேகத்திற்கும், படிவத்தின் தெளிவிற்கும் எத்தொடர்பும் இல்லை. கண்ணருகு வில்லையமைப்பின் இடத்தை அல்லது அதற்கும் மைய முப்பட்டக அமைப்புக்கும் இடையில் வைக்கப்படும் ஒரு வில்லையின் இடத்தைச் சரி செய்வதன் மூலம் தெளிவு மிக்க படிவத்தைப் பெற முடியும். —மு. சேக் முஸ்தபா