சிக்கல் நிறைந்த பேறுகாலம்
cikkal niṟainta pēṟukālam
குழந்தை பிறக்கும் போதோ. பேறு காலத்திலோ, பெண்ணின் இனப் பெருக்கப் பாதையுள் நோய் ஊக்கும் நுண்ணுயிரிகள் நுழைவதால், பேறு காலப் பின் விளைவு நோய்த் தொற்று உண்டாகிறது.
குழந்தை பிறக்கும் போதோ. பேறு காலத்திலோ, பெண்ணின் இனப் பெருக்கப் பாதையுள் நோய் ஊக்கும் நுண்ணுயிரிகள் நுழைவதால், பேறு காலப் பின் விளைவு நோய்த் தொற்று உண்டாகிறது. இந்நோய்த் தொற்றுக்கு ஸ்டெஃபிலோகாக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், அரிதாக எண்டரோகாக்கஸ், கிளாஸ்ட்ரிடியம் பாக்டீரியா போன்றவை காரணமாக அமைகின்றன. கிரேக்க மொழியில் காக்கஸ் என்றால், வட்டமான உலர்ந்த பெர்ரி விதை எனப் பொருள். மேற்கூறிய நுண்ணுயிரிகளில் பல, வட்டமாக அமைந்துள்ளமையால், இவை காக்கை எனப்படும். ஏதாவது ஓர் உயிரியாலோ, சில போது பல உயிரிகளாலோ நோய்த் தொற்று உண்டாகலாம்.
நுண்ணுயிரிகள், மனித உடலில் (குறிப்பாக, தோல், வெளியே தெரியும் சிலேட்டுமம்) நிலையாகக் காணப்படுகின்றன. இவை தம் இனப்பெருக்கத்திற்கு வசதியான சூழ்நிலை ஏற்பட்டால் அன்றி, நோய் ஊக்குவதில்லை. திறந்த காயத்தின் வழியாக, நுண்ணுயிரிகள் உடலினுள் நுழைவதால் நோய் நிலை தோன்றுகிறது. நச்சுக் கொடி பிரிந்த பின்னர் இருக்கும் கருப்பையின் பரப்பு, கீற்றுக் கிழிசல்கள், பிளவுகள், கருப்பைக் கழுத்தின் மீதான அரிப்புப் புண்கள், பேறு காலத்தின் யோனி ஆகியவை பேறு காலப் பிந்தைய நிலையில் நோயூக்கும் நுண்ணுயிரிகளுக்கு நுழைவாயிலாக அமைகின்றன. பேறும், சிசுப் பிறப்பும் கடினமாக இருந்தாலும், (குறிப்பாக அறுவை) இனப் பெருக்க உறுப்புகளில் ஏற்படும் காயங்கள் ஆழமாக இருந்தாலும் சீழ் தொற்றும் வாய்ப்பு எளிதாக அமையும். நோய்க் காரணிகள் வெளியிலிருந்து (புற வழிப் பாதிப்பு) உள் நுழைந்து காயங்களைப் பாதிக்கலாம் அல்லது பேறு காலத்திற்கு முன்னும் (அகவழிப் பாதிப்பு) பாதிக்கலாம்.
புற வழிப் பாதிப்பு முறை. இதில் தொற்று நீக்கப் படாத கைகள், இனப்பெருக்கப் பாதையில் தொடர்பு கொள்ளும் கருவிகள், லினன் முதலியவை குறிப்பிடத்தக்கவை. எச்சில் வழியாகப் பரவுவதும் மிகவும் கேடு தரத் தக்கதாகும்.
அகவழிப் பாதிப்பு முறை. இதில் யோனி மற்றும். புறப்பிறப்புறுப்பு ஆகியவற்றிலிருந்து நுண்ணுயிரிகள் உள் நுழைகின்றன. அரிதாக உள்வாய் போன்ற வழிகளிலும் உயிரிகள் நுழைகின்றன. கருவுயிர்த்த பெண்ணின் உடல் நலத்தைப் பொறுத்துத் தொற்றும் நோயும், நோயின் முனைப்பும் அமையும்.
முன்னரே வெளிப்பட்ட பனி நீரின் இழப்பு, நீடித்த பேறு, குருதி இழப்பு, அறுவை முறையில் கருவுயிர்ப்பு, இனப் பெருக்க உறுப்பின் இளந்திசுக்களில் கிழிசல், காயம், பொதுவான வலிமைக் குறைவு, நோயோடிணைந்த குறைந்த தடுப்பாற்றல் தன்மை, நச்சு விளைவுகள், தவறான ஊட்டச் சத்து ஆகியவை பேறு காலப் பின் தொற்றுக்கு முன்னோடிகள் ஆகும்.
நுண்ணுயிரிகள் நுழைந்த இடத்தில் தோன்றும் அழற்சி பிற இடங்களுக்கும் பரவும். கருப்பையின் உட் பரப்பும், கருப்பைக் கழுத்து, யோனி, விடபம் ஆகியவற்றின் காயங்களும்,, கிழிசல்களும், இத்தொற்றுக்கு அடிப்படையாகின்றன. தடுப்பாற்றியல் மறு வினையும், மருத்துவமும் தேவையான அளவு இருந்தால் பாதிக்கப்பட்ட பரப்புகள் விரைவில் சீரடைந்து, நோய் தடுக்கப்படும். நுண்ணுயிரிகளின் வீரியத் தன்மை மிகுதியாக இருந்து, உடலின் எதிர்ப்பாற்றல் குறைவாக இருந்தால், நோய் முதல் குவியத்தைத் தாண்டிப் பரவுகிறது. நுண்ணுயிரிகள், நிண நாளங்கள், குருதி நாளங்கள், கருவகக் குழல்கள் வழியாகப் பரவலாம். இவை ஒரே சமயத்தில் இவ்வழிகளில் பரவக் கூடும்.
கருவகத் தசையின் (myometrium) ஆழ்ந்த திசுக்கள், கருப்பைச் சூழ் திசுக்கள், கூபக உதர உறை, கருப்பைச் சிரைகள், கூபகம், தொடை எலும்பு போன்றவற்றை நுண்ணுயிரிகள் தாக்கும். தடுப்பாற்றல் குறைவாக இருந்தால், இவை உடல் முழுதும் பரவிச் சீழ்த் தொற்றை உண்டாக்கும்.
கருவுயிர்ப்பின் பிந்தைய நிலைத் தாக்கம். தொடக்க நிலை நோய்த் தொற்று, காயங்களைத் தாண்டிப் பரவுவதில்லை.
இரண்டாம் நிலை. நோய்த் தொற்று, முதல் நிலைக் குவியத்திற்கு அப்பால் பரவிய போது, கருப்பை அழற்சி, கருப்பைச் சிரை அழற்சி அடைப்பு, கருப்பையைச் சுற்றிய அழற்சி, கூபகச் சிரைகளின் அழற்சி, தொடைச் சிரையின் அழற்சி, கருவகக் குழல் சூலக அழற்சி, கூபக உதரஉறை அழற்சி ஆகியவை பரவக் கூடும்.
மூன்றாம் நிலை. பரவலான உதரவுறை அழற்சியும், பரவுகின்ற சிரை அழற்சியும், அடைப்பும்.
நான்காம் நிலை. பொதுப்படையான நோய்த் தொற்று. (பொதுப்படையான சீழ்த் தொற்று, குருதியில் சீழ் பரவல், பரவலான சீழ் பரவிய நிலை). மேற்கூறிய சீழ்த் தொற்று நிலைகளில், மருத்துவ வெளிப்பாடுகள் வேறுபட்டிருக்கும். நோயின் தீவிரத் தன்மையையும், நோய் முன் கணிப்பையும் பொறுத்து நோய்கள் வேறுபடுகின்றன. சீழ்ப் பிடிப்பு நோய்களில் பல வேறுபாடுகள் இருந்த போதும், பின் வரும் பொதுப்படையான கூறுகள் காணப்படுகின்றன.
காய்ச்சல். நோய் குறைவாக இருந்தால் (கருப்பை யக அழற்சி-endometrium) காய்ச்சலும் குறைவாகவே இருக்கும். நோய்ப் பாதிப்பு கடுமையாக இருந்தால், (குருதியில் சீழ் நிலை) காய்ச்சலும் மிகையாக இருக்கும்.
கருப்பையக அழற்சியும், பேறு காலத்திற்குப் பின் ஏற்படும் புண்களும் மிகையாகும். கருவுயிர்த்த பெண்களின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அத்துணை மிகுதியாக இல்லை. இங்கு ஓரளவான உடல் நலக் குறைவும், தலைவலியும் உண்டாகின்றன. தீவிரமான நிலைகளில் தலைவலியுடன், தூக்கமின்மையோ, துயில் நிலையோ உண்டாகலாம். பிதற்றலும் காணக் கூடும்.
சீழ்த் தொற்றுநிலை அதிகரிக்கும் போது, இதயம், குருதி உற்பத்தி உறுப்புகள், செரிமான மண்டலம், மூச்சு மண்டலம், வளர்சிதை மாற்றம் ஆகியன பாதிப்படைகின்றன.
தீவிர சீழ்த் தொற்று நோய் கொண்ட பெண், எடை இழக்கிறாள். தோல் வெளிறிச் சாம்பல் நிறமடைகிறது; சில போது,மஞ்சள் நிறமும் தோன்றுகிறது. தோலில் பொரிப்புகள் தோன்றுகின்றன.
சீழ்த் தொற்று நோய்களில் குருதிச் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கையும், ஹீமோகுளோபினின் அளவும் குறையும். வெள்ளணுக்களின் எண்ணிக்கை மிகும். கொடூரமான நோய் நிலையில், வெள்ளணுக்கள் குறைகின்றன. சிவப்பு அணு படியும் விகிதம் மிகுதியாகும். நோயின் முனைப்பில் குருதி மாற்றங்களும் மிகும். பொதுப்படையான சீழ்த் தொற்று நோயில், நோயாளியின் குருதியில் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. இந்நிலையில், ஊட்ட ஊடகத்தில் நோயாளியின் குருதியைச் செலுத்தி, நுண்ணுயிரிகளின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பேறு காலப் பிந்தைய புண்கள். விடபம், யோனிச் சுவர், கருப்பைக் கழுத்து ஆகியவற்றின் கிழிசல்களிலும், பிளவுகளிலும் காணப்படும் காயங்களே, பேறு காலப் பிந்திய புண்களாகும். காயப் பரப்பின் மீது சீழ் படிந்திருக்கும். அருகேயுள்ள திசுக்கள், சிவந்தும், வீங்கியும் காணப்படும். கருவுயிர்த்த 3, 4 ஆம் நாளில் இந்நோய் தோன்றும்; காய்ச்சல் உண்டாகும்; நாடித் துடிப்பு அதிகரிக்கும், சோர்வு உண்டாகும். குறைந்த அளவு தலைவலி இருக்கும். புறப் பிறப்புறுப்புகளில் எரிச்சல் காணப்படலாம். 4—5 நாளில் காய்ச்சல் குறைய, இந்நிலை சீரடையும். காயத்திலிருந்து சீழ்ப்படலங்கள் மறைய, படிப்படியாகக் காயம் சீரடையும். ஒவ்வாத சூழ்நிலைகளின் போது, புண்ணிலிருந்து நுண்ணுயிரிகள், சுற்றியுள்ள திசுக்களின் ஆழமான பகுதிகளுக்குச் செல்லும் போது, நோய்த் தொற்றுப் பரவுகிறது.
மருத்துவம். தகுந்த பராமரிப்புடன் ஓய்வு தேவை. சிண்டோமைசீன் குழம்பில் தோய்க்கப்பட்ட வலைத் துணியை, விடபத்தின் மேல் பரப்பலாம். சுய குருதி மருத்துவமும் பயனளிக்கிறது. நோய்த் தொற்றின் தொடக்கத்தில் பனிக்கட்டிப் பையை, விடபத்தின் மீது வைக்கலாம். சல்ஃபா மாத்திரைகள் கொடுக்கலாம். (0.5—1 கி. 4 மணி இடைவெளியில் நாளும் 5—6 முறை). பெனிசிலினையும், ஸ்ட்ரெப்டோமைசீனையும் சேர்த்தே கொடுக்கலாம்.
கருப்பையக அழற்சி. கருப்பை உட்பரப்பின் அழற்சியே, பேறுகாலப் பிந்தைய கருப்பையக அழற்சி எனப்படும். (கருப்பபையகத்தின் அடித்தள அடுக்கு, உதிர் படலத்தின் எஞ்சியவை, அருகேயுள்ள தசை இழைகள்). நோயின் மருத்துவ வெளிப்பாடுகள், பேறுகாலம் பிந்தைய 3, 4 ஆம் நாளில் தோன்றுகின்றன. உடல் வெப்பமும், நாடித் துடிப்பும் அதிகரிக்கும்; பசியும், தூக்கமும் சீர்குலையும்; நோய்த் தொடக்க காலத்தில் குளிர் தோன்றும்.
கருப்பையைத் தொட்டால் வலி உண்டாகும். இயல்பான உட் சுருளுடைய, கருப்பை சுருளும். (குறைந்த உட்சுருள்வு), பேறுகாலத் தீட்டு (lochia) கலங்கலாக இருக்கும். சீழில் காணப்படும் குருதித் துளிகள் கெடு நாற்றமாக மாறும்.
பேறு காலத் தீட்டு சில போது, கருப்பையினுள் தேக்கமடைகிறது. லோகியா என்றால் கிரேக்க மொழியில் குழந்தைப் பிறப்பு எனப்படும். சிசு பிறந்த பின்னரோ, கருச்சிதைவின் பின்னரோ, கருப்பையிலிருந்து வெளிப்படும் நீர்மம் லோகியா எனப்படுகிறது. இதில் குருதி, சளி, வெள்ளணுக்கள், ஃபைப்ரின், சிதைந்த திசு ஆகியவை காணப்படுகின்றன. ஏனெனில், கருப்பை மடங்கி, அதன் கழுத்து உட்கால்வாய் குருதி உறை கட்டியாலோ, உதிர் படல எச்சங்களாலோ மூடப்பட்டிருக்கும்.
பேறு காலத் தீட்டு நிலையில், நோயாளியின் உடல் நலம் குன்றிக் காய்ச்சலும் உண்டாகும். பேறு கால வலி போன்று, பெண் நோயாளிக்குக் கீழ் வயிற்றில் வலி உண்டாகிறது. காய்ச்சலுடன், கருப்பையக அழற்சி மிகக் குறைவாக இருக்கலாம். சூழ்நிலைகள் ஏலாதவையாக இருந்தால், கருப்பையக அழற்சியிலிருந்து நோய் மேலும் பரவுகிறது.
மருத்துவம். படுக்கையில் ஓய்வு, கீழ் வயிற்றின் மேல் பனிக்கட்டி கொண்ட பை, சுய குருதி மருத்துவம், சிரை வழியாகக் கால்சியம் குளோரைடு (10 மி.லி 10% கரைசல், இரண்டு நாளுக்கு ஒரு முறை) அல்லது வாய் வழியாக (10% கரைசல் 1 மேஜைக் கரண்டி நாளும் 3—4 முறை); சல்ஃபா மருந்துகள் (0.5—1 கி. 4 மணி நேர இடைவெளியில் நாளும் 5—6 முறை) பெனிசிலின் ( 50,000—100,000 அலகு 3—4 மணி நேர இடைவெளியில்).
பேறு காலப் பின், கருப்பையக அழற்சிக்கு வெட்டை நோய் காரணமாக இருக்கலாம். கருவுயிர்ப்பின் பின்னர், வெட்டை நுண்ணுயிரிகள் கருப்பையினுள் நுழைந்து, கருப்பையக அழற்சியை உண்டாக்கும். நோய் மேலும் பரவி, கருவகக் குழல்கள், சூலகங்கள், உதரவுறை ஆகியவற்றில் அழற்சியை உண்டாக்கலாம்.
வெட்டைக் கருப்பையக அழற்சி, பேறு காலத்திற்குப் பிறகு 6—8 ஆம் நாளில் உண்டாகும். அதன் அறிகுறிகள் வருமாறு: காய்ச்சல், கருப்பையில் குறைந்த உட் சுருள்வு, வலி, சீழ் அல்லது சளியும், சீழும் கலந்த யோனி வெளிப்பாடு, நுண்ணோக்கியின் உதவியால் நோய் அறுதியிடப்படும். பெனிசிலினும், (50,000—100,000 அலகு 3—4 மணி இடைவெளியில்), சல்ஃபா மருந்துகளும் கொண்டு, வெட்டையின் கருப்பையக அழற்சியை அகற்றலாம்.
வெட்டை நோயாளிகளைப் பேணும் போது, பிற சூலிகளுக்கும், குழந்தைகளுக்கும் நோய் பரலி விடாதவாறு பாதுகாக்க வேண்டும். வெட்டை நோயாளிக்கு இறுதியில்தான் மருத்துவம் அளிக்க வேண்டும். தனக்கெனத் தனியான படுக்கை, மலக்கலம் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்; குழந்தைகளுக்குப் பாலூட்டும் முன்னர், கைகளை நன்கு கழுவ வேண்டும்.
இரண்டாம் கட்டச் சீழ்நிலை
கருப்பை அழற்சி. கருப்பையக அழற்சியைப் போன்று இல்லாமல், கருவகத் தசையில் ஆழ்ந்த அடுக்குகளும் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட கருப்பையகத்திலிருந்து குருதி, நிண நாளங்கள் வழியாக நுண்ணுயிரிகள் உள்ளே நுழைகின்றன.
பேறு காலத்திற்குப் பிறகு 4 அல்லது 7 ஆம் நாளில் இந்நோய் தொடங்கி, 3—4 வாரம் நீடிக்கும். நோயின் தொடக்கத்தில் குளிர் உண்டாகும். தொடர்ந்து 39—40°C காய்ச்சல் தொடங்கிப் பின்னர் குறைந்த அளவில் தொடரும். நோயாளியின் உடல் நிலை பாதிக்கப்படும்; பசியும், தூக்கமும் சீர்குலையும்; தலைவலி உண்டாகும். கருப்பையின் உட்சுருள்வு தடைப்படும். கருப்பையைத் தொட்டால் குறிப்பாக, அதன் பக்கங்களில் வலிஉண்டாகும். பேறுகாலத் தீட்டு, சீரமும், சீழும் கலந்திருக்கும்.
குளிருடனும், காய்ச்சலுடனும் கூடிய நிலை உண்டாகி, நோயாளி மோசமடையும் நிலை அரிதாகவே காணப்படும். சீழ்க்கட்டி, அறுவை முறைப்படி திறக்கப்படாவிடில், யோனியின் உள்ளே கவட்டுப் பந்தகத்தின் மேலோ, கீழோ, சிறுநீர்ப் பையினுள்ளோ தானாகவே திறந்து விடுகிறது.
கருவகக் குழல்—சூலக அழற்சி. (அண்மையுறுப்பு அழற்சி), கருப்பையின் அண்மை உறுப்புகளின் பேறு காலப் பின் அழற்சி, சீழ்த் தொற்றுடனோ, வெட்டை நோயுடனோ இணைந்துள்ளது. பேறு காலத்திற்குப் பிறகு, 10—14 நாளில் இந்நோய் தொடங்கும். மிகையான உடல் வெப்பம், உடல் நலம் பாதிக்கப்படுதல், கடுமையான கீழ் வயிற்று வலி, சிறுநீர்க் குலைவு, வலியுடன் மலம் போதல், மலச்சிக்கல், நோயின் தொடக்க நாளில் வயிறு இறுக்கமாக இருத்தல், தொடு வலி என்பன நோய் அறிகுறிகளாகும்.
கூபக உதர உறை அழற்சி. பேறு காலத்தின் பின் 15 அல்லது 25 ஆம் நாளில், இந்நோயின் தொடக்கத்தில் குளிரும், மிகையான காய்ச்சலும், கீழ் வயிற்றில் குத்து வலியும் உண்டாகும். குமட்டல், வாந்தி, திண்மையடைந்த வயிற்றுத் தசைகள், ஷ்செட்கின்—பிளம்பர்க் அறிகுறி பாசிடிவ் ஆகியவை காணப்படும்.
மருத்துவம். அழற்சிக் குவியத்தை இடமமையச் செய்து, அதை அகற்ற வழி வகுக்கிறது. கூபக உதரவுறை அழற்சியுள்ள நோயாளியின் உடலின் மேற்பகுதி உயர் மட்டத்தில் (படுக்கையின் தலைப் பகுதியை உயர்த்தி) இருக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் யோனி ஆய்வு செய்ய வேண்டும். உளஞ் சார்ந்த ஓய்வும் தேவை.
போதிய ஊட்டத்துடன் (சுவையான எளிதில் செரிக்கக் கூடிய உணவு, வைட்டமின்கள்) முழுமையான பராமரிப்பும் மிகவும் இன்றியமையாதது. தோலைப் பாதுகாத்தல், வினைத் தூய்மைப்படுத்துதல், அறைக்குக் காற்றோட்டம் ஆகியன பராமரிப்பு முறைகளாகும். பொதுவாக, சீழ்த் தொற்று நோயாளிகளுக்கான நியதிகள் கையாளப்பட வேண்டும்.
நோயின் முனைப்பில், நோயாளியின் கீழ் வயிற்றின் மீது, பனிக்கட்டிப் பையும், வலி நீக்கு உள்வைப்புக் குளிகைகளும் வைக்க வேண்டும். அழற்சி எதிர் மருத்துவம் அளிக்க வேண்டும். கால்சியம் குளோரைடு சிரை வழியாக (10 மி.லி. 10% கரைசல் 1—2 நாள் இடைவெளியுடன்) வாய் வழியாக (10% கரைசல் ஒரு மேஜைக் கரண்டி நாளும் 3—4 முறை), அமிடோஃபைரின் (ஒரு மேஜைக் கர்ண்டி 2% கரைசல் நாளும் 3—4 முறை) கொடுக்கலாம்.
பெனிசிலினுடன், ஸ்ட்ரெப்டோமைசீனும் பிற எதிர் உயிர் மருந்துகளும் கொடுக்க வேண்டும். பென்சிலினை, புரோகைன் ஹைட்ரோ குளோரைடுடன் கலந்து ஊசி மருந்தாகக் கொடுக்க வேண்டும் (0.25—0.5% கரைசல்), மருத்துவ வெளிப்பாட்டையும், நோய்க் காரணியின் மறு வினையையும் பொறுத்து, மருந்தின் அலகு அமையும். நாளும், 600,000—800,000 அலகு கொடுக்க வேண்டும். சல்ஃபா மருந்துகளும் நன்மை அளிக்கின்றன. 4 மணி நேர இடைவெளியில் 1 கிராமும், அடுத்த 2—4 நாளில் 0.5 கி. 4—6 மணி இடைவெளியிலும் கொடுக்க வேண்டும்.
சிரை வழியாகக் குளூக்கோஸ் செலுத்த வேண்டும். சுய குருதி மருத்துவம் அல்லது மீண்டும், மீண்டும் குருதி உட்செலுத்துதல் பரிந்துரைக்கப்படுகிறது. கருப்பையைச் சுற்றிய திசுக்களில், கூபக உதரவுறை சீழ்நிலை தோன்றினால், அறுவை தேவைப்படும். யோனியின் பின்புற வளைவு வழியாகவோ, வயிற்றுச் சுவர் வழியாகவோ, சீழ்க்கட்டியைத் துளையிட்டுச் சீழை அகற்ற வேண்டும்.
உறை கட்டிச் சிரை அழற்சி. பேறுகாலப் பின் சிரை அழற்சியில், சிரையின் சுவர் அழற்சி அடைந்து உருவாகும் உறை கட்டி சிரையின் துளையை அடைத்து, குருதி ஓட்டத்தைத் தடை செய்கிறது. கருப்பை, கூபகத் தொடை ஆகிய சிரை உறை கட்டியில் அழற்சி உண்டாகும். கருப்பையக அழற்சியிலிருந்து கருப்பைச் சிரைகளின் உறை கட்டி அழற்சி உண்டாகிறது. பொதுவாக, இதன் அறிகுறிகள், கருப்பை அழற்சியைப் போன்றே இருக்கும். கருப்பை யின் உட்சுருள்வு தடைப்படுகிறது; குருதி கலந்த வெளிப்பாடு நீடிக்கும்' மேற்கூறிய நிகழ்வு, சில நோயில் கூபகச் சிரை வரை பரவுகிறது; யோனி ஆய்வின் போது, நெளிந்த, வலி கொண்ட நீள் திட்டுகளைத் தொட்டுணர முடியும். இந்நிகழ்வு முற்றும் போது, இலியாக் சிரைகளும், தொடைச் சிரைகளும் அடைபடுகின்றன. கொடூரமான பேறு காலப் பிந்தைய நோயாகத் தொடைச் சிரைகளில் உறை கட்டிச் சிரை அழற்சி உருவாகிறது.
தொடைச் சிரைகளின் நாள அடைப்பு. பேறு காலத்திற்குப் பின் 2, 3ஆம் வாரத்தில் வெளிப்படுகிறது. நோயின் தொடக்கத்தில் குளிர் உண்டாகி, உடல் வெப்பமும், நாடித் துடிப்பும் அதிகரித்து, நோயாளியின் காலில் வலி தோன்றும். தலைவலி, உறக்கமின்மை போன்றவையும் இருக்கும்.
தொடைச் சிரையின் உறை கட்டி அழற்சியின் இட வெளிப்பாடுகள் வருமாறு: கவட்டைப் பகுதிப் பள்ள மறைவு சிரையின் மேல் ஊடுருவலும், வலியும், (கவட்டைப் பந்தகத்தின் கீழே, தொடையின் முன்புற நடுப்புறப் பரப்பு); கால் வீக்கமும் இருக்கும். இரண்டு, மூன்று வாரங்களுக்குக் காய்ச்சல் நீடிக்கும். காலின் வீக்கம் இரண்டு, மூன்று மாதங்களுக்கு நீடிக்கிறது. நலமுறும் கட்டத்தில் நோயாளியின் கால்களில் ஊரல் (அரிப்பு) ஏற்படுகிறது.
சீழ் கொண்ட குருதி நிலைக்கு எந்த மருத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே மருத்துவம் ஒரு சில மாற்றங்களுடன், உறை கட்டிச் சிரை அழற்சிக்கும் அளிக்கப்படும். அண்மையில் உறை கட்டிச் சிரை அழற்சிக்கு அறுவை அளிக்கப்படுகிறது.
மூன்றாம் கட்டச் சீழ்நிலை. இந்தக் கட்டத்தில், பரவலான உதரவுறை அழற்சியும், பெருகி வரும் உறை கட்டிச் சிரை அழற்சியும் அடங்கும்.
பரவலான தீவிர உதரவுறை அழற்சி, பரவலான உதர உறை அழற்சி, பேறுகாலத்தின் பின் 3—8 நாளில் தொடங்குகிறது. இந்நோயின் கொடூரமான மருத்துவ வெளிப்பாடுகள் வருமாறு: குமட்டல், வாந்தி, வயிற்றுப் பொருமல், (ஷ்செட்கின்—பிளம்பர்க் அறிகுறி காணப்படாது ) மிகையான உடல் வெப்பம், (நிலைமை மிகவும் மோசமாக இருந்தால், உடல் வெப்பம் அதிகரிக்காது) நாடித் துடிப்பு அதிகரிப்பு, குருதி அழுத்தக் குறைவு என்பன. உலர் நாக்கு, முக பாவ மாற்றம் ஆகியவையும், சில நோயில் நினைவிழப்பும் காணப்படும். அதிகரித்து வரும் உறை கட்டிச் சிரை அழற்சி. இந்நோயில் சிரைகளின் அழற்சியும், உறை கட்டிகள் உருவாவதும், முதல் நிலைக் குவியத்துடன் நிற்காமல், சிரையின் வழியாக மேல் நோக்கியும் பரவி அடைக்கும். உறை கட்டி, சீழ் நிலையடைந்து, சீழ்த் துகள்கள் குருதி ஓட்டத்தின் வழியாக உடல் முழுதும் பரவி, பிற திசுக்களிலும், உறுப்புகளிலும், சீழ்ப் பிடிப்பின் புதிய குவியங்களைத் தோற்றுவிக்கும்.
சீழ்க் குவியங்கள், கூடு உறைப்பைகளில் (cysts) அடைபட்டு விடுவதால், நோய்த் தொற்று, உடலின் பிற பகுதிகளுக்குப் பரவுவதில்லை. பரவலான உதர உறை அழற்சிக்கும், மேலேறும் உறை கட்டிச் சிரை அழற்சிக்கும், பொதுவான சீழ்ப் பிடிப்பு நோய்க்கு அளிக்கப்படும் முறையே தரப்பட வேண்டும்.
நான்காம் கட்டம் (பொதுப்படையான சீழ் நிலை). சீர் கெட்ட குருதி நிலையும், சீழ் கொண்ட குருதி நிலையும் இதில் அடங்கும். எதிர் உயிர் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். பெனிசிலின், ஸ்ட்ரெப்டோமைசீன், எரித்ரோமைசின், டெட்ராசைக்ளின், ஓலியாண்டோமைசீன், டெட்ராசைக்ளின், சல்ஃபா மருந்துகள் ஆகிய எதிர் உயிர் மருந்துகளின் கூட்டு மிகவும் நன்மையளிக்கும்.
பேறுகாலப் பிந்தைய முலை நோய். முலை அழற்சி (mastitis) சில நேரங்களில் தோன்றுகிறது. கீழ் உண்டாக்கும் நுண்ணுயிரிகள், குறிப்பாக, ஸ்டெஃபிலோகாக்கஸ் (எப்போதாவது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மற்றும் பல நுண்ணுயிரிகள் அழற்சி நிகழ்வுகளை உண்டாக்கும் காரணிகளாகும்). தூய்மையில்லாத துணியாலும், காற்று வழியாகவும், நுண்ணுயிரிகள் முலைக் காம்புகளை அடைகின்றன.
முலைக் காம்புகளின் மேலுள்ள சிறிய பிளவுகள, வெடிப்புகள் வழியாக, இவை உட்செல்கின்றன. முலைக் காம்பு எப்பித்தீலியத்தின் மிகச் சிறிய நைவுகள் வழியாக மார்பகச் சுரப்பியினுள் நுண்ணுயிரிகள் ஊடுருவலாம் அல்லது குருதி, நிண நீர் ஓட்டம் வழியாக மற்ற நைவுகளிலிருந்தும் உள் நுழையலாம்.
குளிருடன் கூடிய, திடீரென்று அதிகரிக்கும் உடல் வெப்பத்துடன் (39° அல்லது அதற்கு மேலும்), முலை அழற்சி தொடங்குகிறது. முலையில் வலி. பொதுப்படையான உடல் நலக் குறைவு, தலைவலி, தூக்கமின்மை, பசியின்மை ஆகியவை தோன்றும். முலை பெரிதாகும்; முலையைத் தொட்டுப் பார்க்கும் போது, திடமான வலியுள்ள ஓர் அமைப்புத் தெரிய வரும். பாதிக்கப்பட்ட பகுதியில், தோல் சிவந்து காணப்படும். அக்குள் நிணக் கணுக்கள் வீங்கி, வலியுடன் காணப்படும்.
அழற்சியால் பால் நாளங்கள் அடைபடுவதால், பால் தேக்கமடைகிறது. இந்தக் கட்டத்திலேயே நிகழ்வு தடுக்கப்பட்டு, நோயாளி சீரடையலாம்; பாதகமான நிலைகளில் (உடலின் குறைந்த எதிர்ப்பு ஆற்றல் நோயூக்கு நுண்ணுயிர்களின் மிகை வீரியம், முறையற்ற மருத்துவம்) நோய் முற்றிச் சீழ் நிலை அடைகிறது.
நோயாளியின் உடல் நலம் மோசமடையும்; குளிரும், விட்டு விட்டுக் காய்ச்சலும் உண்டாகும்; மார்பக வளி அதிகரிக்கும்; ஊடுருவலின் மேலுள்ள தோலில் குருகித் திரட்சி காணப்படும்; நீல நிறமடையும்; சீழ் கொண்ட மார்பக அழற்சி, கொடூரமான, நாட்பட்ட நோயாகும்.
காற்றுக் குமிழால் குருதி நாள அடைப்பு. பேறு காலத்தின் பிறகு, கருப்பையின் திறந்த சிரையினுள் காற்றுக் குமிழ் நுழைந்து, கீழ்ப் பெருஞ்சிரை வழியாக இதயத்தையும், நுரையீரல் தமனியையும் அடைகிறது. பெண்ணின் நிலை மோசமடைந்து (வெளிறிய தோல், விரிவடைந்த பாவைகள், இதய, நுரையீரல் சீர் குலைவு) மரணமேற்படும்.
காற்றுக் குமிழால் குருதி நாளம் அடைபடுவது கருவுயிர்ப்பின் அரிதான சிக்கலாகும். சிசுவைச் சுழற்றுதல், கையால் நச்சுக் கொடியை அகற்றுதல் போன்ற மகப்பேறு அறுவைகளின் போதும், கீழ் நிலை நச்சுக் கொடியிலும், கருப்பை மந்த நிலையிலும் இச்சிக்கல் தோன்றலாம்.
உளநோய். முந்தைய கால மனச் சிதைவு நோய், அளவு மீறிய உளநோய் (எ. டு: வெறி நோய்) ஆகியவற்றின் போது, உடல் சீர் கேடடையலாம். சில சமயம் முதன் முதலாக இந்நோய் தோன்றலாம். அண்மைக் காலங்களில் இது அரிதாகக் காணப்படுகிறது. —அ. கதிரேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 180)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vckz4ust/
தமிழ்“சிக்கல் நிறைந்த பேறுகாலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vckz4ust/APA
Oliyon Research. (2026). சிக்கல் நிறைந்த பேறுகாலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vckz4ust/MLA
"சிக்கல் நிறைந்த பேறுகாலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vckz4ust/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment