அரிவை என்ற சொல் ‘பெண்’ எனப் பொருள்படும். இச்சொல் இலக்கியங்களில் பெரும்பாலும் ‘பெண்’ என்னும் பொதுப் பொருளிலேயே வழங்கி வந்துள்ளது. சங்க காலம் முதல் இக்காலம் வரை தோன்றியுள்ள செய்யுள்களில் அமைந்துள்ள இவ்வழக்காற்றைச் “செறி எயிற்று அரிவை” (2) என்னும் குறுந்தொகைச் செய்யுட் பகுதி கொண்டும், “ஆர அமர அரிவை உரை கேட்டிடுவாய்” என்னும் (முகில் விடுதூது) முடியரசன் கவிதைப் பகுதி கொண்டும் அறிய முடிகிறது. கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் இச்சொல் வழக்கில், ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாயிற்று. இந்நூற்றாண்டில் எழுந்ததெனக் கருதப்படும் சிற்றிலக்கிய வகைகளில் சிறப்பானது உலாவாகும். அவ்வுலாக்களுள் முதன்மையானது திருக்கயிலாய ஞான உலாவாகும். இதன் பின்னர்ப் பல உலா நூல்கள் தோன்றின. பாட்டுடைத் தலைவன் தெருவில் உலா வரும் போது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய எழுவகைப் பருவ மாதர்களும் அவனழகைக் கண்டு காமுற்று மையல் கொண்டு மயங்கியதாக வைத்துப் பாடுவது உலாவின் இலக்கணம். இம்மரபு எல்லா உலா நூல்களிலும் ஒரே விதமாக அமைந்துள்ளது. இதனை, “திறந்தெரிந்த பேதை முதல் எழுவர்” எனத் தொடங்கும் வச்சணந்தி மாலைப் பாடலால் அறியலாம். இவ்வேழு பருவங்களுள் அரிவை என்பது இருபது முதல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட பருவத்தினைக் குறிக்கும். இதனைப் பிறவாறும் கூறுவர். ஏழு பருவங்களில் அரிவைப் பருவம், இளமை நன்கு கனிந்து வினைந்து விளங்கும் பருவம். எனவே இப்பருவ மகளிர், சிறந்த உறுப்பு நலனும் உணர்ச்சி முதிர்வும் பெற்றவராயிருத்தலின், அகப்பொருட் சுவை ததும்பும் வண்ணம் உலா நூல்களில் வருணிக்கப் பெற்றுள்ளனர்.ஆ.ந.