செதில்கள்
cetilkaḷ
மீன்களில் தலை முதல் வால் வரை தோல் மூடியாக உள்ள வட்ட வடிவ மென்தகடுகள், செதில்கள் எனப் படுகின்றன.
மீன்களில் தலை முதல் வால் வரை தோல் மூடியாக உள்ள வட்ட வடிவ மென்தகடுகள், செதில்கள் எனப் படுகின்றன. ஒரு சில இரு வாழ்விகளிலும், ஊர்வனவற்றிலும் செதில்கள் உண்டு. மீனின் செதில்கள், தோலின் உட்பகுதியிலிருந்து (அகத் தோல்) தோன்றிப் பதிந்துள்ளன. ஊர்வனவற்றின் செதில்கள், புறத் தோலிலிருந்து தோன்றுகின்றன. மீனின் செதில்கள் தோலுக்குப் பாதுகாப்பளிக்கின்றன. பெரும்பாலான மீன்களில், செதில்களே தோல் சட்டமாக அமைந்துள்ளன. மீன் செதில்களில் காஸ்மாய்டு, ரோம்பாய்டு, கேனாய்டு, பிளேக்காய்டு, சைக்ளாய்டு, டீனாய்டு எனப் பலவகையுள்ளன.
தொல்லுயிரூழியின் சைலூரிய, டிவோனியக் காலங்களில் வாழ்ந்து அற்றுப் போன மீனையொத்த முதுகெலும்பிகளின் முன்னோடிகளான தகட்டுத் தோலிகளில், பல வடிவத் தகடுகளோ, செதில்களோ காணப்பட்டன. இத்தகடுகள், அடிப்படையில் மூன்று அடுக்குகளுடையவை. அகவடுக்கு, அடர்த்தியாக அமைந்த எலும்புப் பொருளாலும், நடுவடுக்கு, பஞ்சு போன்ற மென்மையான எலும்புத் திசுக்களாலும், புறவடுக்கு, தந்தினிப் (dentine) பொருளாலும் ஆனவை. இப்புறச் சட்டகத்தின் மேற்பகுதியில், தந்தினியாலான புடைப்புகளும், தடிப்புகளும் இருந்தன. இவை தற்காலக் குருத்தெலும்பு மீன்களில் உள்ள செதிலமைப்பில் உள்ளன. மீன்களின் முன்னோடியான அகாந்தேடியன்களில் இருந்த செதில்கள், இன்றைய சில எலும்பு மீன்களில் காணப்படும் கேனாய்டு செதில்களை ஒத்துள்ளன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> செதில்களின் உருவமைப்பு, அளவு, பருமன் ஆகியவை இனத்திற்கு இனம் மாறுபடும். நுண்ணோக்கிக் கொண்டே பார்க்கக் கூடிய அளவிற்கு மிகச் சிறிய விலாங்கு மீன் செதில்களிலிருந்து, சில நன்னீர் மீன்களில் காணப்படும் 20 ச. செ. மீ. அளவுள்ள பெரிய செதில்கள் வரை பல வகை உள்ளன. டிரங்க் மீன் வகைகளில், செதில்கள் இணைந்து பெட்டி போன்ற அமைப்புடன் உடல் முழுதும் மூடி- யுள்ளன. கடற் குதிரை, குழல் மீன் வகைகளில் செதில்கள் நெருக்கமாக இணைந்து, வரிசை வரிசையாக அமைந்துள்ளன.
காஸ்மாய்டு செதில்கள். இவை மறைந்த கதுப்புத் துடுப்பு மீன்களிலும், நுரையீரல் மீன்களிலும் காணப்பட்டன. காஸ்மின் என்ற பொருளால் ஆக்கப்பட்ட இச்செதில்களின் மேல் மெல்லிய காரை (enamel) போன்ற பொருள் உள்ளது. இதற்கு விட்ரோ தந்தினி (vitro dentine) எனப் பெயர். காஸ்மின் அடுக்கு, மையத்திலிருந்து பரவிச் செல்லும் நுண் குழாய்களையும், கூழ்க் குழிகளையும், சிறு துளையுடன் கூடிய குருதி அறைகளையும் கொண்டது. செதில்களின் அடியில், ஐசோபீடின் அடுக்குகளும், புறப் பரப்பில் காஸ்மின் உறை பொருள்களும் சேர்வதால், இவை வளர்கின்றன.
காஸ்மாய்டு செதில்கள் சாய் சதுர வடிவமாகவோ, வட்ட வடிவமாகவோ இருக்கும். இவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டோ, முனையும், துளையும் இணைப்புக் கொண்டோ அமைந்துள்ளன. தற்காலம் வாழும் நுரையீரல் மீன்களான செரட்டோடஸ் (ஆஸ்திரேலியா), புரோட்டாப்டிரஸ் (ஆஃப்ரிக்கா), லெபிடேசைரன் (தென் அமெரிக்கா) ஆகியவை படிமலர்ச்சியில், காஸ்மாய்டு செதில்களை இழந்து விட்டன. மெல்லிய சைக்ளாய்டு செதில்களே உள்ளன. 1960இல் உயிருடன் பிடிக்கப்பட்ட லாட்டிமீரியா என்னும் சீலக்காந்த மீனில், பண்டைய மீன்களைப் போலவே, செதில்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தன. செதில்கள் டீனாய்டு அமைப்புடனும், பிளேகாய்டு முள்கள் நிறைந்தவையாயும் இருந்தன.
முதனிலை முதுகெலும்பின் செதில்களின் குறுக்கு வெட்டித் தோற்றம்
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கேனாய்டு செதில்கள். இவை தொன்மையான கதிர்த் துடுப்பு மீன்களில் (actinopterygian) காணப் பட்டன. இச்செதில்கள் பளபளப்புள்ள காரையையொத்த கேனாயின் என்னும் செல்லற்ற கனிம உப்புகளால் ஆக்கப்பட்டுப் பல அடுக்குகளைக் கொண்டிருந்தன. உருவமைப்பிலும், வளர்ச்சி முறையிலும் இவை காஸ்மாய்டு செதில்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. வளர்ச்சியின் போது, மேலும், கீழும் புதிய அடுக்குகளைச் சேர்த்துக் கொள்வதால், செதில்கள் தடித்துப் பெருக்கின்றன.
கேனாயின் அடுக்கின் கீழே நுண் குழாய்களும், குருதிக் குழாய் கொண்ட தந்தினி அடுக்குகளும் உள்ளன. இவ்வடுக்கின் மேற்பரப்பிலிருந்தே செதில் வளர்ச்சி தொடங்குகிறது. கீழ்ப் பகுதி தடித்த எலும்பு அடுக்குகளைக் கொண்டுள்ளது. செதில்கள் சாய் சதுரமாகவோ, வட்டமாகவோ இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக, அடுக்குடனோ, முனையும், துளையும் கொண்ட இணைப்புடனோ இருக்கும். சிலவற்றில் கூரிய நுண் முள் இருக்கும்.
தற்காலம் வாழும் காண்டிராஸ்டியை (chondrostei) மீன்களில் உள்ள கேனாய்டு செதில்கள், சிறு மாற்றங்களுடன் காணப்படுகின்றன. பாலிப்டிரஸ் வகையில், மூவடுக்குடைய இணை செதில்கள் உள்ளன. ஸ்டர்ஜன், துடுப்பு மீன் ஆகியவற்றின் செதில்களில், கேனாயின் அடுக்குகள் இல்லை. வால் துடுப்பின் மேற்பகுதியில் மட்டும், சில நீள் சதுரச் செதில்கள் உள்ளன. துடுப்பு மீன்களில், ஆங்காங்கே முள்கள் தோலில் பதிந்து காணப்படுகின்றன, இன்று வாழும் கதிர்த் துடுப்பு மீன்களில், கார்பைக் (garpike) என்னும் மீனைத் தவிர, ஏனைய எலும்பு மீன்களின் செதில்களிலும் சேனாயின் பொருளில்லை. இதனால் செதில்களின் திண்மையும், உறுதியும் குறைந்து விட்டன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கார்பைக் மீன்களின் செதில்களில் எலும்புப் பொருளாலான உள்ளடுக்குகளும், மேலே தடித்த சேனாயின் அடுக்குகளும் உள்ளன. காஸ்மாய்டு குழாய்களும், அடுக்குகளும், குழிகளும் இல்லை. மாறாக, கிளைகளற்ற, சிறு கால்வாய்கள் மேலிருந்து கீழாக ஊடுருவியுள்ளன. இக்கால்வாய்களில் நடுப்படைச் (mesoderm) செல்களும், குருதி நுண் குழல்களும் காணப்படுகின்றன. இக்குழல்கள், செதில்களின் கீழ்ப் பரப்பிலிருந்தும், பக்கவாட்டிலிருந்தும் தொடங்கி, அடுக்குகளின் குறுக்காக உள் நோக்கிச் செல்கின்றன. இரு பக்கங்களிலும், பொருள்கள் அடுக்கடுக்காகச் சேர்க்கப்படுவதால், வளர்கின்றன. கேனாயின் அடுக்கு 90–100μ பருமன் இருக்கும். மேற்பரப்பில், பிளேக்காய்டு முள்கள் காணப்படுகின்றன. செதில்கள், சாய் சதுர வடிவமுள்ளவை. அவை ஒன்றோடொன்று துளைகளின் மூலம் இணைக்கப்பட்டு, இணைப்புத் திசுவால் கட்டப்பட்டுள்ளன. ஹோலாஸ்டியை வகையைச் சேர்ந்த வில் துடுப்பு மீனில் செதில்களின் கேனாயின் போர்வை காணப்படவில்லை. உருவமைப்பில் இவை சைக்ளாய்டு செதில்களையே ஒத்துள்ளன.பிளேக்காய்டு செதில்கள். ஒரு சில சிறப்பினங்களைத் தவிர, சுறா, திருக்கை, எலி மீன்களில் இவை காணப்படுகின்றன. பல சுறாமீன்களின் தோலில் இவை சாய்ந்தவாறு உள்ளன. திருக்கை மீன்களில், செதில்கள் ஒழுங்கற்றுப் பரவலாகப் பொருந்தியுள்ளன. எலி மீன்களின் உடலில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன. ஒவ்வொரு பிளேக்காய்டு செதிலிலும், தட்டையான சாய் சதுர அடித் தகடும், அதிலிருந்து பின்னோக்கி வளைந்து புறத்தே நீட்டிக் கொண்டிருக்கும் முள் போன்ற பகுதியும் உள்ளன. அடித் தகடு தோலின் மேற்பகுதியில் புதைந்துள்ளது. அமைப்பில், பிளேக்காய்டு செதில் ஒரு பல் போன்று காணப்படும். முள் போன்ற பகுதி, தந்தினியால் ஆன புறச் சுவரையும், அதனுள் அடங்கிய கூழ்க் குழியையும் கொண்டுள்ளது. இக்குழியிலிருந்து எண்ணற்ற நுண் கால்வாய்கள் வெளி நோக்கிக் கிளைத்துப் பரவுகின்றன. செதிலின் அடித் தகடு, தோலின் புறவடுக்குச் செல்களோடு சிறு துளைகள் மூலம் தொடர்பு கொண்டுள்ளமையால், அதன் மூலம் குருதி நாளங்களும் நிண நீர் கால்வாய்களும், நரம்புகளும் செதிலில் கலக்கின்றன. செதிலின் முள் போன்ற புறப் பகுதி, மேலே ஒளி ஊடுருவக் கூடிய உறுதியான காரை போன்ற விட்ரோ தந்தினியால் போர்த்தப் பட்டுள்ளது. பிளேக்காய்டு செதில்களில் கூம்பு வடிவம், குமிழ் வடிவங் கொண்ட பல வகை உண்டு. சிலவற்றில தட்டை வடிவத்தில், நெருக்கமாக, ஓடு போல் தோல் மீது வேயப்பட்டோ, பரவலாக ஒழுங்காகப் பதிக்கப்பட்டோ இருக்கும்.
சைக்ளாய்டு, டீனாய்டு செதிலகள். தற்கால எலும்பு மீன்களின் செதில்கள், காஸ்மின், கேனாயின் அடுக்குகளை முற்றிலும் இழந்து விட்டன. செதில்கள் வளையும், ஒளியூடுருவும் மெல்லிய அமைப்புடன் உள்ளன. சைக்ளாய்டு செதில்கள் அமைப்பில் எளியவை. இவ்வகைச் செதில்கள் தொன்மையான மென் கதிர்த் துடிப்பு எலும்பு மீன்களிலும், டீனாய்டு செதில்கள் மேம்பட்ட முள் கதிர்த் துடுப்பு எலும்பு மீன்களிலும் காணப்படுகின்றன. சில மீன்களில் இவ்விரு வகைச் செதில்களும் காணப்படும். எ-டு. சேற்று மீன் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் இவ்விரு வகைச் செதில்களும் ஒத்திருப்பினும், புற அமைப்பில் பெரிதும் வேறுபட்டுள்ளன. டீனாய்டு செதில்களின் பின்புறத்தில், நுண்ணிய கூர் முள்களுள்ளன. சைக்ளாய்டு செதில்களில், இத்தகைய முள்கள் இல்லை. சில மீன்களில், கூர் முள்கள் மென்மையாகவும், குட்டையாகவும் இருக்கும். இவற்றைக் குற்றிழை முள்கள் என்பர். ஒவ்வொரு செதிலும், எலும்பாலான மேற்பரப்பையும், நார்களாலான உட்பகுதியையும் கொண்டது.
வேதியியல் அமைப்பு. நீரற்ற, உலர்ந்த செதில்கள் பொதுவாக 41–80% புரதமும், 50–60% தாதுப் பொருள்களும் கொண்டவை. புரதப் பொருள்களில் கொலாஜன் 24% உம், இக்திலெப்பிடின் 76%உம் உள்ளன. சூரிய மீன், கார்பைக் மீன், பேத்தை மீன் (puffer fish), குருத்தெலும்பு மீன்களின் தோல் சட்டகங்களில் இக்திலெப்பிடின் இல்லை.
பல எலும்பு மீன்களில், சைக்ளாய்டு, டீனாய்டு வகைச் செதில்களுக்குப் பதிலாக, வேறு வகைச் செதில்கள் உள்ளன. உள்ளான் மீனில், பிளேக்காய்டு செதில்களை ஒத்தவை காணப்படுகின்றன. வௌவால் மீனின் செதில்களில், ஒற்றை முள்ளும், தவளை மீனில் கிளையுள்ள முள் பகுதியும் உள்ளன. விசை மீன்களிலும், அர மீன்களிலும் செதில்களின் அடித் தகட்டில் பல முள் இருக்கும். சில கவசக் கெழுத்தி மீன்களில், அடித் தகட்டு முள்கள் அசையக் கூடியனவாக இருக்கும். முள்களும், பெருமளவில் பிளேக்காய்டு செதில் அமைப்பை ஒத்துள்ளன.
குழல் மீன், குதிரை மீன் போன்றவற்றில் கண்ட அமைப்புகள் பெற்ற எலும்புத் தகடு தோல் சட்டகமாக உள்ளது. தென் அமெரிக்கக் கவசக் கெழுத்தி மீன், முதலை மீன், பெட்டி மீன்களில் எலும்புத் தகடுகள் உள்ளன. முள்ளம் பன்றி மீன், கோள மீன் ஆகியவற்றின் தோலில் கூர் எலும்பு முள்களுள்ளன. இம்மீன்களை எதிரிகள் அணுகினால், உடலைப் பந்து போல் வைத்துக் கொள்ளும். அப்போது முள்கள் நிமிர்ந்து அஞ்சத் தக்க தோற்றத்தை அளிப்பதால், எதிரிகள் ஓடி விடுகின்றன. இம்முள்கள் தற்காப்புக்காகப் பயன்படுகின்றன.
ஸ்கல்பின் மீன்களில் தோலில் புதைந்து காணப்படும் சிறு முள்களே, அவற்றின் உண்மைச் செதில்களாகும். மொத்த உறிஞ்சு மீன்களில் (lump sucker) காணப்படும் செதில்கள் எலும்பு மருக்களே. குதிரை மேக்கரல் ட்ரகூரசில் (horse mackeral trachurus) மருங்குக் கோட்டிலும், ஹெர்ரிங் மீன்களின் நடு வயிற்றுப் புறத்திலும் காணப்படும் கவச முள்களும் செதில்களே. முக்கூர் முள் முதுகில் (three spined stickle back) செதில்களுக்குப் பதிலாகப் பக்கவாட்டு வரிசைத் தகடுகள் உள்ளன.
வான்மீனின் இள நிலையில் காணப்படும் தடிப்புடைய செதில்கள், வளர் நிலையில் காணப்படுவதில்லை. கெழுத்தி மீன்களிலும், முதிர் நிலையில் செதில்களில்லை. விலாங்கு மீன்களில், செதில்கள் மிகச் சிறியனவாகவும், டார்பான் மீன்களில், செதில்கள் 5 செ.மீ. நீளம் உடையனவாகவும், பார்பஸ் டார் மீன்களில் 6–8 செ.மீ. நீளமுடையனவாகவும் உள்ளன.
சைக்ளாய்டு செதில்கள் எளிதில் உதிரும் வகையிலும், டீனாய்டு செதில்கள், தோலில் ஆழமாகப் பதிந்த முறையிலும் உள்ளன. பொதுவாக கவசப் போர்வையால் முற்றிலும் போர்த்தப்பட்ட மீன்கள் விரைவாக நீந்தா. மாறா, அசையும் முறையில் இணைக்கப்பட்ட செதில்களுடையவை எளிதாக, உடலை வளைத்து நீரில் விரைவாக நீந்தும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மாறுபட்ட செதில்கள். சில மீன்களில் காணப்படும் புற உறுப்புகள் தோலிலிருந்து தோன்றுவதிலும், அடிப்படை அமைப்பிலும், செதில்களை ஒத்துள்ளன. இவை உண்மையில் செதில்களே. செதில்கள் மாறுபட்டும், வளர்ந்தும் விரிவடைவதால், தேவைக்கேற்ற உருவைப் பெற்றுள்ளன. இவ்வாறு, மாறுபட்ட ஒரு சில உறுப்புகள் புறத் தோற்றத்திலும், அமைப்பிலும் செதில்களை ஒத்திருப்பன அல்ல.
சுறா மீன், சிறப்பாக முள் நாய் மீன்களின் இரு முதுகுத் துடுப்புகளிலும் காணப்படும் ஒற்றை முள். செதில்களின் இணைப்பால், தோன்றியதாகவே கருதப் படுகிறது. கிமேராக்களிலும் (chimacras) முதுகு முள் உண்டு. இவை, நச்சுச் சுரப்பிகளுடன் தொடர்பு கொண்டுள்ளமையால், தற்காப்பு உறுப்புகளாகப் பயன்படுகின்றன. கொட்டும் திருக்கைகளின் வாலில் காணப்படும் வரிப் பள்ளமுடைய முள்கள் செதில்களின் இணைப்பாலோ, மாற்றத்தாலோ ஏற்பட்டவை. இவையும், தற்காப்பு உறுப்புகளே. அறுவை மீன் வாலின் அடிப் பகுதியில் செதில்கள் கத்தி போன்ற பட்டை முள்களாக மாறியுள்ளன. தோலினாலான பைகளில் புதைந்துள்ள இவை, தேவைப் படும் போது வெளிப்பட்டுப் பயன்படும்.
வேலா மீன் அல்லது ரம்ப மீன்களின் முன் புற நீள் மூக்கு மருங்கில் காணப்படும் பற்கள், பிளேக்காய்டு செதில்களின் மருவலால் உண்டான அமைப்பு- களேயாகும். இவ்வுறுப்பு தற்காப்புக்கும், இரையை வீழ்த்தி விழுங்குவதற்கும் பயன்படுகிறது.
சுறா போன்ற குருத்தெலும்பு மீன்களில் உள் வாய், தொண்டைப் பகுதிகளில் காணப் படும் பற்கள், பிளேக்காய்டு செல்களின் மருவல்களே. இரையைக் கவ்விப் பிடிக்க, இவை பயன்படுகின்றன. சில எலும்பு மீன்களில் உள்ள இணைந்த துடுப்புக் கதிர்களை உருவாக்கும் சதுர அல்லது நீள் வட்ட வடிவங்கொண்ட கண்டங்களும், மருவிய செதில்களேயாகும். பல எலும்பு மீன்களில், மார்புத் துடுப்பு உடலோடு இணைந்துள்ள மேல் கோணத்திலும், இடுப்புத் துடுப்பின் வெளிப் பகுதியிலும், கூர்மையான குத்து வாளையொத்த ஓர் உறுப்புக் காணப்படும். இதுவும், செதிலின் மருவலெனக் கருதப்படுகிறது.
ஒட்டு மீன்களிலும், மின்னோ வகை மீன்களிலும், இனப் பெருக்கக் காலங்களில் செதில் மீது கரணை, மரு, குருணை போன்ற முத்து உறுப்புகள் தோன்றுகின்றன. ஆண், பெண் இன உறவின் போது, தோலில் உண்டாகும் கோழையால் வழுக்கி விடாமல், சுரசுரப்புத் தன்மை கொடுக்க, இவ்வுறுப்புகள் பயன்படுகின்றன; பின்னர், இவை மறைந்து விடுகின்றன. —கோவி. இராமசுவாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 738)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v8pwjekc/
தமிழ்“செதில்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v8pwjekc/APA
Oliyon Research. (2026). செதில்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v8pwjekc/MLA
"செதில்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v8pwjekc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment