அசுவசேனன் தட்சகன் என்னும் நாகமன்னனின் மகன். இவனைப்பற்றிய செய்திகள் வில்லிபாரதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன. கண்ணன் அருச்சுனன் ஆகியோர் துணையுடன் தீக்கடவுள் காண்டவக்காட்டை எரிக்குங்கால், தேவர்க்கரசனான இந்திரன், அக்காட்டில் தன் குடும்பத்துடன் வாழும் தட்சகன் என்னும் பாம்பினைக் குறித்துக் கவலைப்பட்டான். அவனைக் காக்கத் தேவப்படையுடன் புறப்பட்டான். முகில்களை அனுப்பித் தீயை அணைக்கப் பணித்தான். அருச்சுனன் அம்புக் கூடம் அமைத்துத் தீக்கடவுளைக் காத்தான். மேகங்கள் செயலற்றன. தேவர்கள் தட்சகனைத் தேடினார்கள். தட்சகனின் மனைவியான பெண் நாகம் தன் குட்டியை வாயில் பற்றியவாறு வானில் எழுந்தது. அருச்சுனன் அப்பெண்நாகத்தைத் தலை துணித்துக் கொன்றான். இந்திரன் அதன் மகவை, உடன்சென்று காத்தான். தன் அன்னையின் வாயுடன் தன் வாலும் சிறிதே துணிக்கப்பெற்ற தட்சகன் புதல்வன் அசுவசேனன் பெரிதும் வருத்தமுற்றான், அதனால் அருச்சுனன்பால் சீற்றமும் பகைமையும் கொண்டான். அருச்சுன்னுடைய பகைவன் யாரெனப் பலரையும் வினவிக் கன்னனை அடைந்து அவன்பால் கணையாகி அருச்சுனனைப் பழி தீர்க்கும் நோக்கத்துடன் வளரலானான். கன்னன் அருச்சுனனைக் கொல்ல முடிவு செய்தான். காண்டவக் காட்டை அருச்சுனன் எரித்த நாளில் தன்னிடம் கணையாக வந்து தங்கிய பாம்புக் கணையை எடுத்தான். அதற்குத் தீபம், புகை, மலர் ஆகியவற்றால் வழிபாடு இயற்றி வணங்கும்போது. அவனை நோக்கிச் சல்லியன் “சூழ்ச்சித் திறமுள்ள கண்ணன் அங்குள்ளான். ஏதேனும் சூழ்ச்சியால் கணையைத் தடுத்துவிடுவான். ஆகையால், நீ கணையைக் கழுத்திற்கு நேர் குறியாகச் செலுத்தாமல், மார்புக்கு நேரே குறிவைத்துச் செலுத்து” என்று கூறினான். கன்னன் சல்லியன் கூற்றை ஏற்கவில்லை. தன் முடிவுப்படி கழுத்தையே இலக்காக்கி எய்தான். கழுத்து நோக்கிவரும் பாம்புக் கணையைக் கண்ட கண்ணன் தேரைப் பன்னிரண்டு அங்குலம் நிலத்தில் அழுந்தச் செய்தான். அதனால் அப்பாம்புக்கணை கழுத்திற்கும் மேல் ஓடி, அருச்சுனன் மகுடத்தைத் தட்டி இடறிக்கொண்டு சென்றது. அருச்சுனன் பின்புறமாக அம்பெய்து அப்பாம்புக் கணையை இரண்டு துண்டாக்கி வீழ்த்தினான். அழிகின்ற நிலையை அடைந்த அப்பாம்பு, ஐந்து தலையுடன் கூடிய தன் உடலின் முற்பகுதியுடன் கன்னன்பால் சென்று மறுமுறை தன்னை அருச்சுனன்மேல் ஏவும்படி வேண்டியது. குந்திக்கு அளித்த உறுதிமொழி கருதிக் கன்னன் கணையை மறுமுறை ஏவ மறுத்திட்டான் அதனால் அப்பாம்பு, கன்னனை நொந்து கூறி உயிர் துறந்தது. இவ்வரலாறு வியாசபாரதத்தில் சிறிது வேறுபாட்டுடன் கூறப்பட்டுள்ளது. எஸ்.செள.