உத்தம நம்பி
uttama nampi
இவர் கூரத்தாழ்வான் காலத்தவர்; திருவரங்கம் பெரியகோயில் அதிகாரியாக இருந்தவர்.
இவர் கூரத்தாழ்வான் காலத்தவர்; திருவரங்கம் பெரியகோயில் அதிகாரியாக இருந்தவர். கூரத்தாழ்வான் திருவரங்கத்தில் தங்கி, வீடுகளில் ஐயமேற்றுக் குடும்பச் செயல்களை நடத்தி வந்தார். இவர் ஒவ்வொரு நாளும் பெற்ற உணவில் மறுநாளைக்கென்று சிறிதும் மிச்சப் படுத்தி வைத்துக் கொள்வதில்லை. இவ்வாறு வாழ்ந்து வந்தபோது ஒருநாள் மழை இடைவிடாமல் பொழிந்தது. அதனால் வெளிச்செல்ல இயலாமல் போயிற்று. அதனால் அன்று தண்ணீரையே உட்கொண்டு திருவாய் மொழிச் சிந்தனையையே உணவாக உண்டு வேறு உணவு இன்றி இருந்தார். அன்று இரவு திருவரங்கம் பெரிய கோயிலிலே பெரிய பெருமாள் அமுதுசெய்யும் போது எழுந்த திருச்சின்னவொலி காற்றில் மிதந்துவந்தது. அதுகேட்ட ஆழ்வான் மனைவி ஆண்டாள் பெருமானைக் குறித்து, ‘உம்முடைய அடியவர் பட்டினி கிடக்க, நீர் குலாவிக் குலாவி அமுதுசெய் தருளுகிறீரோ?’ என்று நினைத்தார். திருவரங்கப் பெருமான் அந்த ஆண்டாள் நினைப்பைத் திருவுள்- ளம் பற்றினான். உடனே கோயில் திருப்பணிகளை நடத்திவரும் உத்தமநம்பிக்கு அர்ச்சகர்முகமாகக் கட்டளையிட்டு, தாம் அமுதுசெய்த அக்கார அடிசிலை அனுப்பிவைத்தான். உத்தமநம்பி குடை, கொடி, சாமரம் முதலிய வரிசைகளோடும் பல்வேறு இசைக்கருவிகளின் முழக்கத்தோடும் ஆழ்வான் திருமாளிகைக்கு எழுந்தருளினார். அதுகண்டு பதறி எழுந்த ஆழ்வான், ‘இது என்?’ என்று திகைத்து எதிர்கொண்டார். உத்தமநம்பி, ‘நம்பெருமாள் தேவரீருக்கு அக்கார அடிசில் அனுப்பியருளினார்; ஏற்றருள வேண்டும்’ என்று சொல்லிப் பெருமாளுடைய கட்டளையைத் தெரிவித்தார். ஆழ்வான் அதனைப் பெருஞ்செல்வமாகப் போற்றி அதில் தமக்கும் தம் பத்தினிக்குமாக இருதிரளைகளை எடுத்துக் கொண்டு உத்தமநம்பியை அனுப்பிவைத்தார். பின்னர் ஆழ்வான், ‘பெருமாள் இப்பொழுது அக்கார அடிசில் வரக்காட்டியது எதனால்?’ என்று சிந்தித்தார். ஆண்டாளை நோக்கி, ‘நீ ஏதேனும் நினைத்ததுண்டோ?’ என்று வினவினார். அதற்கு அந்தப் பெருமாட்டி, யான் வேறொன்றும் நினைக்கவில்லை; பெருமாள் இரவு அமுதுசெய்தருளிய போது திருச்சின்னம் ஒலித்தது; அப்பொழுது, ‘உம்முடைய அடியவர் இப்படிப் பசித்திருக்க, நீர் குலாவிக் குலாவி அமுதுசெய்கிறீரோ!’ என்று மட்டும் நினைத்தேன் என்றார். ஆழ்வான் அதனைக் கேட்டு, நீ இப்படிப் பெருமாளைக் குறித்துக் கடுமையாக நினைக்கலாமோ? என்று அவளுக்கு நல்லறிவு கூறி, இறைவன் பேரருளை வியந்து நின்றார். அந்த அடிசிலில் ஒரு பகுதியைத் தாம் உட்கொண்டு எஞ்சியதை மனைவிக்குக் கொடுத்தருளினார். தயரதனுக்குப் பிள்ளைகளைத் தரும் வேள்வியில் (புத்திர கரமேட்டி யாகம்) கிடைத்த பிண்டத்தின் கூறுகளே மக்கள் நால்வருடைய பிறப்புக்குக் காரணமாயினாற்போல, ஆழ்வானுக்குப் பராசரபட்டர், வேதவியாசபட்டர் என்னும் இருபிள்ளைகள் பிறப்பதற்கு இத்திரளைகளே காரணமாயின. தெ.ஞா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 873)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6zuaj42/
தமிழ்“உத்தம நம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v6zuaj42/APA
Oliyon Research. (2026). உத்தம நம்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v6zuaj42/MLA
"உத்தம நம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v6zuaj42/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment