அகோரா என்பது பண்டைக் கிரேக்க நகரங்களில் இருந்த சந்தைக் கடையாகும். மக்களின் சமூக வணிக வாழ்வின் மையமும் அதுவேயாம். அகோரா திறந்த வெளிச் சதுர அமைப்பைக் கொண்ட முற்றம் போன்றது. திறந்தவெளி அரங்கத்தைச் சுற்றிலும் எல்லையாகப் பொதுக் கட்டிடங்களும், நகரின் சிறப்பான கோயில்களும், கடைகளும் இருந்தன. தொன்மையான கிரேக்க நகரங்களில் அகோராக்கள் எனப்படும் சந்தைக்கடைகள் யாதொரு திட்டவட்டமான அமைப்பில்லாமல் ஒழுங்கீனமான முறையில் எழுந்தன. ஆனால், அலெக்சாந்தரால் நிறுவப்பெற்ற நகரங்கள் எழுந்தபோது அகோராக்கள் திட்டமிட்ட முறையில் அமைக்கப்பெற்றன. ஆதன்சு (Athens) நகரில் அகோராக்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு வகைகளையும் இணைத்து எழுப்பப் பெற்றன.