தமனிக் குருதியில், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு ஆகிய வளிம அழுத்தத்தைச் சுவாச மண்டலத்தில் பேண முடியாத நிலையைச் சுவாசக் குறைவு (respiratory insufficiency) அல்லது சுவாசத் தளர்வு என்பர். தமனிக் குருதியில் ஆக்சிஜன் அழுத்தம் 95 மி.மீ. பாதரசமாகவும், கார்பன் டைஆக்சைடு அழுத்தம் 35-40 மி. மீ. பாதரசமாகவும் உள்ளன. ஆக்சிஜன் அழுத்தம் 60 மி. மீட்டருக்குக் குறைந்தாலோ, கார்பன் டைஆக்சைடு அழுத்தம் 50 மி.மீட்டருக்கு மிகுந்தாலோ, அந்நிலையைச் சுவாசத் தளர்வு எனலாம். இது தீவிர நிலையாகவோ, நாட்பட்ட நிலையாகவோ இருக்கலாம். நோய் அறிகுறிகள் சுவாசப் பாதிப்பு. திசு அடி வளிமம் (emphysema), நாட்பட்ட மூச்சுக் குழல் அழற்சி, ஆஸ்துமா போன்ற நாட்பட்ட மூச்சுப் பாதை அடைப்பு, நுரையீரல் உறையில் (pleura) வளிமத் தேக்கம், நார்ப் பொருள் மிகையான நுரையீரல் போன்ற நிலைகளில் மார்பு விரிந்து சுருங்குவது குறைகிறது. வயிற்று அறுவை, மகோதரம், உதரவுறை அழற்சி, கொழுத்த உடல் போன்ற நிலைகளில் உதர விதானத்தின் குறைந்த அசைவு, இளம் பிள்ளை வாதம், கில்லியன்பார் கூட்டியம், தீவிர தசை நலிவு, பொட்டுலிசம், இசிவு நோய், நரம்பு மண்டலக் காயங்கள், மருந்துகள், நச்சுக் காரணிகள் (குராரே, அசெட்டைல்கோலின் எஸ்ட்ரேஸ் அடக்கிகள் போன்றவை) நரம்பு—தசைக் குறைபாடுகளாகத் தோன்றிச் சுவாசத்தைப் பாதிக்கின்றன. தூக்க மருந்துகள், பார்பிச்சுரேட்டுகள், அமைதியூட்டிகள், உணர்வு நீக்கி மருந்துகள், பெரு மூளைச் சிதைவு அல்லது காயம், அளவுக்கு மீறிய ஆக்சிஜன் மருத்துவம் ஆகியவை மூச்சைப் பாதிக்கின்றன. தடைப்பட்ட வளிமப் பரிமாற்றமும், பரவலும். சார்காய்டோசிஸ், ஹாமன்ரிச் கூட்டியம், தொழில் வழி நோய்கள் போன்ற நுரையீரல் நார்ப் பொருளை அதிகரிக்கும் நிலைகளில், நுரையீரல் நீர்த் தேக்கம், குருதி உறை கட்டித் துகள் பரவல் (இதில் குருதி, கொழுப்பு, எலும்பு மச்சை, பனிக் குட நீர்மம் ஆகியவை பங்கு கொள்கின்றன). நுரையீரல் திசு இழப்பு (இதில் நுரையீரல் புற்றுக் கட்டிகளும், நுரையீரல் அகற்று மருத்துவமும் அடங்கும்) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நோயின் காரணத்தைப் பொறுத்து, அறிகுறிகள் அமைகின்றன. ஆக்சிஜன் அழுத்தக் குறைவால் அமைதியின்மை, இயக்கப் பணிகள் பாதிப்பு, நினைவிழப்பு, குருதிக் குறையழுத்தம், மிகை நாடித் துடிப்பு, வெப்பமான கை கால்கள் ஆகியன காணப்படும். கார்பன் டைஆக்சைடு அழுத்த அதிகரிப்பால் தலைவலி, கிறுகிறுப்பு, குழப்பம், நினைவிழப்பு, தசைத் துடிப்பு, குறுகிய கண் பாவை, உட் கண் சிரை வீக்கம், குருதி மிகை அழுத்தம், மிகையான வியர்ப்பு முதலியவை தோன்றலாம், நோய் அறுதியிடல். தமனிக் குருதியில் ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றின் அழுத்தத்தை மிக எளிதில் அளவிட்டு, நோயை உறுதி செய்யலாம். மருத்துவம். சுவாசக் குறைவால் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை, கார்பன் டை ஆக்சைடு தேக்கம், குருதியின் குறை pH ஆகிய மூன்று குறைபாடுகளையும் நீக்கும் வகையில், மருத்துவம் அமைய வேண்டும். உடனடி மருத்துவம் மிக, மிக இன்றியமையாதது. ஆக்சிஜன், நுண்ணுயிர், எதிர் மருந்து, ஸ்டீராய்டு, மூச்சு மண்டல ஊக்கிகள், மூச்சுக் கிளைக் குழல் விரிப்பி, டிஜாக்சின், சிறுநீர்ப் பெருக்கி, சுவாசிக்க உதவுதல், கார்பன் டைஆக்சைடு தேக்கத்தைத் தவிர்த்தல், அமில நிலையைச் சீர் செய்தல் ஆகியவை மருத்துவத்தில் அடங்கும். ஆக்சிஜன். 1-2 லி./நிமிடம் என்னும் அளவில் கொடுக்க வேண்டும். ஆக்சிஜனின் செறிவு 24% ஆக இருக்க வேண்டும். குருதியில் ஆக்சிஜன் அழுத்தம் ஆக இருக்க வேண்டும். நுண்ணுயிர் எதிர் மருந்துகள். நுண்ணுயிர்ப் பாதிப்பைத் தடுப்பதால், சளிச் சுரப்பு குறைகிறது; மூச்சுக் கிளைக் குழல் அடைப்புத் தவிர்க்கப்படுகிறது; சுவாசம் எளிதாகிறது. குளோரம்பெனிகால் .மருந்து மிகவும் சிறந்ததாகும். கார்டிகோ ஸ்டீராய்டுகள், மூச்சுக் கிளைக் குழல் விரிப்பிகள் (அமைனோஃபைலின் போன்றவை) கொடுக்கப் பட வேண்டும். மூச்சுக் குழலுள் குழல் செருகி, ஆக்சிஜனை உள் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால், செயற்கை முறையில் நோயாளிக்குச் சுவாசம் அளிக்க வேண்டும். —அ. கதிரேசன் நூலோதி. J.R. Shah, API Text Book of Medicine, Third Edition, Vol.I. API Publishers, Bombay, 1979. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->