உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு
uyarnilaip paḷḷik kalvik kuḻu
இந்திய அரசால் 1952–ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குழு (Secondary Education Commission) அமைக்கப்பட்டது.
இந்திய அரசால் 1952–ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குழு (Secondary Education Commission) அமைக்கப்பட்டது. இதன் தலைவர் முன்னாள் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர். ஏ. இலட்சுமணசாமி முதலியார் ஆவார். இக்குழுவில் மொத்தம் ஒன்பது கல்வி வல்லுநர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்தியாவின் உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் செயற்படுத்த வேண்டிய மாற்றங்களுக்கான பரிந்துரைகளை 1953–இல் ஓர் அறிக்கையாக இக்குழு அரசிடம் அளித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இரு உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களாட்சிப் பண்புகளுள்ள குடிமகனாக மாணவர்களை வளர்த்தல், மாணவர்களின் தொழில் திறமைகளை உயர்வடையச் செய்தல், இந்தியாவின் பண்பாடு, மரபுகளுக்கு உகந்த வகையில் மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை வளர்த்தல், தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு உகந்தவாறு மாணவர்களிடம் தலைமைப் பண்புகளை (Leadership Qualities) வளர்த்தல் ஆகியவை உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள் ஆகும் என இக்குழு வரையறுத்தது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுத் தொடக்கப் பள்ளிக் கல்வி, மூன்றாண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்வி, நான்காண்டு மேல்நிலைப் பள்ளிக் கல்வி அமைத்திட இக்குழு பரிந்துரை செய்தது. பல்நோக்குப் பள்ளிகள், தொழிற் பள்ளிகள் ஆகியவற்றை மிகுந்த எண்ணிக்கையில் திறத்தல், மாணவ மாணவியர் இணைந்து பள்ளியில் கற்றல், மேல்நிலைப் பள்ளி வரையில் தாய் மொழியிலேயே கற்பித்தல், பாடநூல் உருவாக்கிட ஓர் உயர்நிலைக் குழு அமைத்தல் போன்றவை முதலியார் கல்விக் குழுவின் சில சிறந்த பரிந்துரைகளாகும்.
பள்ளியில் தேர்வுகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், தேர்வுத் தாள்களில் கட்டுரைக் கேள்விகளைக் குறைத்து, ஒற்றைவிடை வினாக்கள் (Objective-type questions), அகமதிப்பீடு (Internal Assessment) ஆகியவற்றால் மாணவர்களை மதிப்பீடு செய்தல், மேல்நிலைப் பள்ளிக் கல்வி இறுதியில் பொதுத் தேர்வு நடத்துதல் போன்றவையும் இக்குழுவின் பரிந்துரைகளில் அடங்கும். ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இலவசமாகப் பள்ளி இறுதிவரை கல்வி, ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு உதவித் தொகை, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குக் கல்வி, தொழில் தொடர்பான அறிவுரை வழங்குதல் ஆகியனவும் உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழுவின் பரிந்துரைகளுள் குறிப்பிடத்தக்கனவாகும்.
துணை நூல்
Agarwal, J.C., Development and Planning of Modern Education, Vikas: New Delhi, 1982.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 962)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v2erntme/
தமிழ்“உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v2erntme/APA
Oliyon Research. (2026). உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v2erntme/MLA
"உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v2erntme/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment