நெய்ச் சட்டி
neyc caṭṭi
இதற்கு நெய்ச் சட்டிக் கீரை, சகதேவி, சிற்றிலை, சீதா செங்கழுநீர், சீதேவி செங்கழுநீர், தேவகந்தம் என்றும் பெயர்களுண்டு.
இதற்கு நெய்ச் சட்டிக் கீரை, சகதேவி, சிற்றிலை, சீதா செங்கழுநீர், சீதேவி செங்கழுநீர், தேவகந்தம் என்றும் பெயர்களுண்டு. இதன் தாவரப் பெயர் வெர்னோனியா சினேரியா (Vernonia cinerea) என்பதாகும். கோனிசா சினேரியா (Conyza cinerea) என்பது இதன் இணை தாவரப் பெயராகும். ஆஸ்டரேசிக் குடும்பத்தைச் சேர்ந்த, இதனைச் சிற்றூர் மக்கள் உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. இச்செடியை வெப்ப மண்டல ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் காணலாம். இது கடற்கரை, சமவெளி, மலைப் பகுதி ஆகிய இடங்களில் காணப் படும். இதனைத் தரிசு நிலங்களிலும், கூட்டங் கூட்டமாகக் காணலாம்.
அமைப்பு. இச்செடி 75 செ.மீ. உயரம் வளரும். தனியிலைகள், மாற்றடுக்கில் அமைந்தவை. முழு இலைகள் முட்டை–நீள் முட்டை முதல் தலை கீழ் ஈட்டி வடிவானவை. இலை மேற்பகுதி வழவழப்பாகவும், கீழ்ப் பகுதி சிறு மயிர் அடர்ந்தும் காணப் படும். இலை நுனி கூரானது. இலைக் காம்பு 1 செ.மீ. நீளமானது. கூட்டுப் பூத்திரள்கள் (panicles) தளர்வானவை. தலை மஞ்சரி மலர்கள் அனைத்தும் ஒரேயினத்தவை. மஞ்சரியடிச் சிதல்கள் (involucre) மணி வடிவானவை. இவை இலையையொத்து மென்மையாயிருக்கும். பூத்தளம் குழிவுடன் காணப் படும். அல்லிகள் சமமானவை; 0.7 மி.மீ. அளவானவை. குழலின் நீளம் 3.5 மி.மீ. அல்லி மடல்கள் 5, குறுகலாக இருக்கும். 5 மகரந்தப் பைகள் நீள் சதுரமாக 1 மி.மீ. அளவானவை. சூல் பை 0.8 மி.மீ. அளவானது. சூலகத் தண்டு 3.5 மி.மீ. நீளமானது. சூலக முடி கூரிய நுனியுடையது. மலர்கள் இளஞ் சிவப்பு–ஊதா நிறத்திலிருக்கும். இலைகள் நவம்பர்–ஏப்ரலில் மிகுதியாகக் காணப் படுகின்றன.
பயன். இதன் இலை, பூ, வேர் முதலியவை மருத்துவப் பயன்களைத் தரக் கூடியவை. உடலுக்கு வலிமையைத் தரும். நஞ்சை முறிக்கும் வியர்வையை உண்டாக்கும். இச்செடியை உலர்த்திப் பொடித்துச் சாறெடுத்துக் காய்ச்சலுக்குக் கொடுக்க, வியர்வையை மிகுதிப் படுத்தும். உட்சூடு, வெள்ளை, வாய்ப் புண், வாந்தி, வாய்க் கசப்பு போகும். சிறுநீர்ப் பை நோய், நீர்க் கடுப்பிற்கும் தரலாம். பசி உண்டாகும். நா வறட்சி நீங்கும்.
புதிய வேரை ஒரு பிடி எடுத்துச் சிதைத்து, மண் சட்டி யிலிட்டு நீர் சேர்த்துக் குடிநீராக்கி, நாளும் இரு வேளை குடித்து வர வீக்கங்கள் கரையும். இவ்வேர் சர்வ மேக ராஜாங்க எண்ணெயில் பயனாகிறது. உடல் சூடு தணித்து, உடல் அழகுற நெய்ச் சட்டி வேர், இலை, பூ ஆகியவற்றை இடித்துப் பிழிந்த சாறு 1 லிட்டருடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து, சுண்டக் காய்ச்சி வடித்து, வாரம் இரு முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். விதையைப் பொடித்து, வெல்லத்தில் தர, புழுக்கள் சாகும். விதையைக் குடி நீரிட்டு, உள்ளுக்குத் தரத் தோல் நோய்கள் குணமாகும். இதன் கீரையைப் பருப்புச் சேர்த்து, வேக வைத்துக் கடைந்து, நெய் சேர்த்து, உணவுடன் கலந்துண்ணக் கண்ணுக்கு ஒளி கிடைக்கும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> —கோ. அர்ச்சுனன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 181)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uzgu42cs/
தமிழ்“நெய்ச் சட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uzgu42cs/APA
Oliyon Research. (2026). நெய்ச் சட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uzgu42cs/MLA
"நெய்ச் சட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uzgu42cs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment