இன்றைய உலகில் ஏறக்குறைய 500 கோடிக்கு மேற்பட்ட மக்கள் உடல் ஊனமுற்றோராய் உள்ளனர். ஐக்கிய நாடுகள் அனைத்துலகக் குழந்தைகள் அவசர நிதி (UNICEF) என்ற அமைப்பின் தலைவர் 1985–ஆம் ஆண்டு ஒவ்வொரு நாட்டிலும் பத்திற்கு ஒருவராவது உடல், உள்ளம் அல்லது உணர்வுகள் ஊனமுற்றோராய் உள்ளார் என்று கூறினார். சமூகத்தில் உள்ள அடிநிலை வகுப்பாரிடத்தில் ஊனமுற்றோர்கள் பலர் உண்டு. ஆகவே, முன்னேற்றமடைந்த நாடுகளை விட முன்னேற்றமடைந்துவரும் நாடுகளில் ஊனமுற்றோரின் எண்ணிக்கை மிகுந்துள்ளது. ஒவ்வொரு சமுதாயத்திலும் 25% மக்கள் ஊனமுற்றோராய் இருப்பர் எனவும், அவர்களைக் கண் தெரியாதோர், காது கேளாதோர், மூடமானோர், மனநலமற்றோர், சமூகத்தோடு ஒத்து வாழ முடியாதோர், தொழு நோயாளர், புற்று நோயால் பாதிப்பு அடைந்தோர் என வகைப்படுத்தியும் ‘உலக உடல்நல நிறுவனம்’ (WHO) கூறியுள்ளது. ஆதிகால முதல் மனிதன் ஊனமுற்றோரை வெறுக்கின்றவனாக, ஒதுக்கித் தள்ளுகிறவனாக இருந்தான். ஊனமுற்ற குழந்தைகள் கி.பி. 4–ஆம் நூற்றாண்டில் கொலை செய்யப்பட்டனர். ஒருவரின் உயிரைக் கடவுளால்தான் போக்க முடியும் என்று கி.பி. 4 முதல் 13–ஆம் நூற்றாண்டுக் காலங்களில் எண்ணியதால் அக்குழந்தைகளை மடங்களிலும் வளர்க்க விரும்பும் மக்களிடமும் விட்டுவிட்டனர். குழந்தைகளின் உணர்ச்சிகளை உணர்ந்து, தங்கள் விருப்பம்போல் அவர்களை மாற்ற கி.பி. 13 முதல் 17–ஆம் நூற்றாண்டுக் காலத்தில் நினைத்தனர். குழந்தைகளின் வாழ்க்கையைச் சீர்படுத்துவது அல்லது பயிற்சி அளிப்பதில் பெற்றோர் கி.பி. 17–19–ஆம் நூற்றாண்டுகளில் தலையிடந் தொடங்கினர். குறையுள்ள மக்களைப் பாதுகாத்து வளர்ப்பது சிறந்த சேவையென கி.பி. 19 முதல் 20–ஆம் நூற்றாண்டின் மத்திய நாட்கள் வரையிலான காலங்களில் கருதப்பட்டது. இக்காலத்தில் குறையுள்ளோரைப் பாதுகாத்தலோடு தக்க பயிற்சியும் அளித்து இயல்பான வாழ்க்கை நிலைக்குக் கொண்டுவர முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. உலக அளவில் ஊனமுற்றோரின் நலத்தைப் பற்றிப் பார்க்குமிடத்து, முதன் முதலில் சுவீடன் நாட்டில் அரசாங்கமே ஊனமுற்றோரைப் பாதுகாக்கத் தொடங்கியது. அவர்களுக்கென இல்லங்கள் அமைக்கப்பட்டன. அமெரிக்காவில் ஊனமுற்றோர் குழந்தைகளுக்கென இலவசக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. பின் இவ்வாறு தனிப்பட இல்லங்கள் அல்லது பள்ளிகளில் வாழவைப்பதோடு, சமுதாயத்தில் ஒன்றித்து வாழ வைத்தால் ஊனமுற்றோர் மனநிலையில் சமூகத்தில் தானும் ஓர் அங்கம் என்ற மனநிறைவையும் தகுதியையும் உண்டாக்க இயலும் என உணரப்பட்டதன் மூலம், தனிக் கல்வித் திட்டங்கள், சிகிச்சை முறைகள், சாதனங்கள், வேலை வாய்ப்புத் திட்டங்கள், பயிற்சி நிலையங்கள் ஆகியவை சிறந்த செயல் முறையில் உருவாகத் தொடங்கின. இந்தியாவில் முதன் முதலாகப் பீகாரில் உள்ள இராஞ்சியில் 1934–ஆம் ஆண்டு ‘உளவியல் மருத்துவ நிலையம்’ தொடங்கப்பட்டது. பம்பாயில் 1941–இல் ஊனமுற்றோர் தங்கிப் படிக்கவும், பராமரிக்கப்படவும் ஏற்றபடி ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. பின் 1944 முதல் 1954 வரை ஏறக்குறைய 18 நிறுவனங்களும், பள்ளிகளாகவும் இல்லங்களாகவும் தொழிற்பயிற்சி மையங்களாகவும் சிகிச்சை நிலையங்களாகவும் தொடங்கப்பட்டன. இல்லங்கள் பெரும்பாலும் கிறித்தவ மதக் கொள்கைப் பரப்புநரால் ஊனமுற்றோரின் அன்றாடத் தேவைகள் நிரப்பப்படும் வகையில் நடத்தப்பட்டு வந்தன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் தனிமனிதனின் உரிமை, சுதந்திரம், பெருமை ஆகியவற்றை மிகுதியாக வலியுறுத்தியதன் விளைவாக 1981–ஆம் ஆண்டு ‘அனைத்துலக ஊனமுற்றோர் ஆண்டாக’ அறிவிக்கப்பட்டது. ‘சமஉரிமையும் முழு ஈடுபாடும்’ என்பதே அதன் நோக்கமாகும். ‘ஊனமுற்றோரின் பத்தாண்டுகள்’ (Decade of the Disabled) என 1983–1992 வரை உள்ள காலம் ஐக்கிய நாடுகளின் சபையில் 1982–ஆம் ஆண்டு திசம்பர் 3–ஆம் நாள் வரையறுக்கப்பட்டது. ஓர் ‘உலகச் செயல் திட்டமும்’ (World Plan of Action) மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஊனமுற்றோரின் குறைபாடுகளைத் தடுக்கவும், அவர்கள் சமூக வாழ்வின் முன்னேற்றத்தில் முழுமையாகப் பங்கு பெற வாய்ப்பளிக்கவும் செயல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்திட்டங்கள் உடல் ஊனத் தடுப்பு முறைகளைப் பற்றியும், உடல் ஊனமுற்றோருக்கு மறு சீரமைப்பு, சுய வாய்ப்பு, ஓட்டுரிமை, குடியிருப்பு வசதி, ஊதியம், பாதுகாப்பு, கல்வி, தொழிற் பயிற்சி, வேலைவாய்ப்பு முதலியன அளித்தல் பற்றியும் பொழுதுபோக்கு, கலை ஆர்வமிக்க நிகழ்ச்சிகள், மதம், விளையாட்டு ஆகியவற்றில் ஊனமுற்றோரை ஈடுபடுத்துதல் பற்றியும் அமைந்துள்ளன. அத்திட்டங்களின்படி இந்தியாவில் பல தேசிய சீரமைப்பு நிறுவனங்கள் அரசாலும் தன்னார்வமிக்க மக்களாலும் சமய நிறுவனங்களாலும் அரிமா சங்கம் (Lions Club), சுழற் கழகம் (Rotary Club), செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross Society) போன்ற சமூக சேவையில் ஆர்வமிக்க குழுக்களாலும் தொடங்கப்பட்டன. ஒற்றைக் குறைபாடு உள்ளவர்களுக்கும், பலவகைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் தனியாகவும் கூட்டாகவும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஊனமுற்றோரின் நலங்கருதி அவர்களின் கல்வி, தொழிற் பயிற்சி, வேலைவாய்ப்பு, மறுசீரமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் அரசு மிக்க கவனம் செலுத்தி வருகிறது. ஏறக்குறைய 15 அல்லது 16 வயதுவரை இலவசக் கட்டாயக் கல்வி சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் அளிக்கப்படுகிறது. நல்ல உடல் இயக்கத்திறம் உடையவர்களுக்குத் தொழிற்பயிற்சிகள் அவர்களின் குறைபாடுகளுக்கேற்றபடி அமைக்கப்பட்ட சாதனங்களின் உதவியுடன் அளிக்கப்படுகின்றன. கண் தெரியாதோருக்காக அதிகமான கண்சிகிச்சை முகாம் ஏற்படுத்தப்பட்டுச் சிறந்த மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது. காது கேளாதோருக்கு இலவசமாகக் காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய உதவிகள் கிராமப்புறத்தில் உள்ளோருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். செயற்கைக் கால்கள் குறைந்தவிலை அல்லது இலவசமாக ஏழை மக்களுக்குக் கிடைக்கும்படி செய்யலாம். அதிகமான ஊனமுற்றோர்கள் தங்கி வேலைப் பயிற்சி பெற்று வேலை செய்யும் இடங்கள் மிகுதியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அரசால் தொடங்கப்பட்டுள்ள பல்வகைச் சீரமைப்புத் திட்டங்கள் ஏழைமக்களைச் சென்றடையும்படி செய்ய வேண்டும். தொழிற் பயிற்சி மையங்கள் 14க்கு மேற்பட்டும், சிறப்பு வேலை வாய்ப்பு அளிக்கும் நிலையங்கள் 22க்கு மேற்பட்டும் அமைக்கப்பட்டு எல்லாவகைக் குறைபாடுகள் உள்ளோருக்கும், அவர்களின் குறை, தகுதி, விருப்பம் ஆகியவற்றிற்கேற்ப வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுத்து வேலைக்கமர்த்தும் முறைப்படி ‘C’, ‘D’ வேலைகளில் 3% அதாவது 1% கண் தெரியாதோருக்கும், 1% காது கேளாதோருக்கும், 1% முடமானோருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகத் திறமையுடையோர் ‘A’, ‘B’ பதவிகளுக்குங்கூட அமர்த்தப்படலாம். அரசு சிறந்த ஊழியர் எனத் தேசிய விருது அளித்து அவர்களை ஊக்குவித்து வருகிறது; மேலும் உதவித் தொகை, போக்குவரத்துச் சலுகை, நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் உதவி, மின்சாரம், தண்ணீர் போன்றவற்றிற்கு வரிச் சலுகை, மேல் நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் ஊனமுற்றோருக்கு உதவுகின்ற சாதனங்களுக்கு வரிச்சலுகை முதலியவை அளித்து வருகின்- றது. இன்னும் அதிகமாக ஏழ்மை நிலையில் உள்ள பலருக்கு இவ்வுதவிகள் கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கேற்ற எளிய, செலவு குறைந்த குடிசைத் தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிப்பதோடு, அவ்வாறு செய்த பொருள்களைக் கண்காட்சிக் கூடங்கள் அல்லது கூட்டுறவுப் பண்டசாலைகள் மூலம் விற்பனை செய்து பொருளுதவியும் ஊதியமும் கிடைக்கும்படியும் செய்ய வேண்டும். விவசாயம், தோட்டக்கலை, கோழி, ஆடு, மாடு வளர்த்தல் மூலம் சுய வேலைவாய்ப்பும் அளிக்கலாம். ஊனமுற்றோருக்கும் பொழுதுபோக்குக் கூடங்கள், தொலைக்காட்சி வசதிகள் தேவை என உணர்ந்து சமூக நல ஊழியர் தலைமையில் அமைத்துக் கொடுக்கலாம். மருத்துவ வசதிகள், உதவிகள், இன்றைய புதிய சாதனங்கள், அவற்றின் அமைப்பு, பயன்படுத்தும் விதம், சில ஊனமுற்றோரின் கலைத்திறன் ஆகியவற்றைத் தொலைக்காட்சி வாயிலாகக் காண்பிப்பதன் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு ஊக்குவிப்பதோடு, இக்குறைபாடுகள் ஏற்படாவண்ணம் தடுத்தலும் அவசியம். தொடக்கத்திலேயே கண்டுபிடித்தல், தடுப்பூசி போடுதல், மகப்பேற்றிற்கு முன், பின் மருத்துவ உதவி அளித்தல், குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவு குழந்தைப் பருவத்தில் கிடைக்கச் செய்தல் ஆகியவை மிகமிக அவசியம். சமுதாயத்தில் காணப்படும் சுத்தமின்மை, சுகாதாரக் கேடுகள், குடி போன்ற பொருள்கள் ஆகியவை அதிக ஊனங்களுக்குக் காரணமாகின்றன. இந்திய அரசு பல திட்டங்களின் மூலம் இக்குறைபாடுகளைக் களைந்தெறிய முயலுகின்றது. அரசு 7–ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 1,00,000 ஊனமுற்றோருக்கு அவர்களின் வாழ்வைச் சீரமைத்து முன்னேற்றவும் அவர்களுக்கு ஆதாயமுள்ள தொழில் அமைத்துக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யத் தீர்மானித்துள்ளது. இந்திய மைய அரசும் மாநில அரசுகளும் இவற்றை நிறைவேற்றும்போது நிச்சயமாக ஊனமுற்றோர் வாழ்வு மேம்படும். பம்பாயில் 1985 பிப்பிரவரி மாதம் 4–ஆம் நாள் முதல் 8–ஆம் நாள் வரை ஊனமுற்றோருக்குச் சம வாய்ப்பு அளிக்கும் தேசிய கழகம் அமைத்த இரண்டாம் அனைத்திந்திய மாநாட்டிலும், மார்ச்சு 24–28–ஆம் நாட்களில் தில்லியில் நடைபெற்ற 7–ஆம் உலக மனநலமற்றோருக்கான ஆராய்ச்சி மாநாட்டிலும் பலமுன்னேற்றத் திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டன. அரசும் தன்னார்வமிக்க நிறுவனங்களும் சேர்ந்து செய்யும் இம்முயற்சிகளில் ஊனமுற்றோரின் ஒத்துழைப்பும் சமுதாயத்தின் ஒத்துழைப்பும் மிகமிகத் தேவை. மக்களிடையே ஏற்படும் ஊனங்களைத் தடுக்கவும், அவ்வாறுள்ளவர்களை ஆதரித்து முழுச் சீரமைப்புக்குப் பல முன்னேற்றத் திட்டங்களைச் செயற்படுத்தவும் தீர்மானித்தால், ஊனமுற்றோர்களும் தாமும் இச்சமுதாயத்தில் ஓர் அங்கம், இந்நாட்டின் ஆக்க வேலைகளுக்குரிய குடிமக்கள் என்ற பெருமையையும் தகுதியையும் அடைய இயலும். சா.தி. துணை நூல்கள் Charles C, Veland and Jan.D. Swartz, Exceptionalities through the Life Span, Macmillan Publishing Company, New York, 1982. Usha Bhatt, The Physically Handicapped in India, Oriental Watchman Publishing House, Poona, 1963. Yash Pal Bedu, A Hand Book of Hygiene and Public Health for Medical and Public Health Student, Atma Ram & Sons, New Delhi, 1971.