அத்திரம் பாக்கம்
attiram pākkam
சென்னையிலிருந்து 35 கி.மீ.
சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் செங்கல்பட்டு மாவட்டம் திருவள்ளூர் வட்டத்தில் சத்தியவேடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர். அளகூர்–சத்தியவேடு மலைத்தொடரின் குன்றுகளை இவ்வூர் அரண்களாகப் பெற்றுள்ளது. பண்டைக் கற்கால மனிதன் வாழ்ந்தமைக்கான சான்றுகள் இவ்வூரில் பெருமளவில் கிடைக்கின்றன. கொற்றலையாற்றின் கரைகளிலும், அத்திரம்பாக்க ஓடையின் கரைகளிலும் தொல்பழங்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகள் கிடைக்கின்றன. கொற்றலையாற்றை முற்காலத்தில் ‘விருதச்சீர் ஆறு’ என்று வழங்கினர். இதுவே பழைய பாலாறுமாகும். இக்கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்கு உலகப் புகழ் பெற்றது. நாடோடிகளாகத் திரிந்து வந்த கற்கால மனிதனை இவ்விடம் கவர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், அவனுக்கு வேண்டிய கருவிகளைச் செய்வதற்கு இக்குன்றுகளின் கற்கள் மிகுதியாகப் பயன்பட்டிருக்கின்றன.
பழங்கற்காலக் கற்கருவிகள் காணப்படும் ஆற்றடுக்கு
உலகப் பழங்கற்கால வரலாற்றில் அத்திரம்பாக்கத்திற்குச் சிறப்பான இடம் உண்டு. இங்குக் கற்கால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திவிட்டுச் சென்ற கற்கருவிகள் அளவிடற்கரியன, கற்கால மனிதனின் ‘தொழிற் கூடமாக’ இவ்விடம் இயங்கி வந்ததாகக் கருதலாம். அந்த அளவிற்குக் கற்கருவிகள் இவ்வூர் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இப்பள்ளத்தாக்கில் ஆற்றடுக்குகளும் (River Terraces) காணப்படுகின்றன. பண்டைக் கற்காலக் கருவிகள் இவ்வடுக்குகளில் புதைந்து கிடக்கின்றன. அவற்றின் காலம் ஒரு சில இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இவ்விடத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வமயம் பல வகையான கற்கருவிகள் அடுக்கடுக்காக வெளிப்பட்டன. அவற்றுள் பழங்கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடரி, வெட்டுக் கருவிகள், துளையிடும் கருவி போன்றவை குறிப்பிடத்தக்கவை. பழங்கற்காலத்தை அடுத்து வந்த ‘கடைப்பழங்கற்காலத்திற்குச்’ சொந்தமான சில்லுக் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை வடிவில் சிறியனவாகவும் மிகுதியான வேலைப்பாடுடனும் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில கருவிகள் வேப்பிலை வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
இங்குக் கிடைத்த கருவிகளுள் கைக்கோடரிகளே மிகுந்த எண்ணிக்கையுடையன. கைக்கோடரியின் இரு பக்கங்களும் செதுக்கப்பட்டுக் கூர்மையான விளிம்புகளையும் இணையான பக்கங்களையும் கொண்டு விளங்குகின்றன. இத்தகைய கைக்கோடரி “இருமுகக் கைக்கோடரிகள்” (Bifacial hand axes) என்பர். இவை போன்ற கைக்கோடரிகள் இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றன. எனவே இக்கற்கருவிகளை “மதராசுக் கற்கருவிகள்” என்றும் கூறுவர். உலகக்கற்கால வரலாற்றில் இக்கருவிகள் புகழ்பெற்றவை எனலாம். தென் ஆப்பிரிக்காவில் இவை போன்ற கைக்கோடரிகள் அகப்படுகின்றன. எனவே தமிழகமும் தென் ஆப்பிரிக்காவும் கற்காலத்தில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்றாகிறது.எஸ்.கு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 315)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uz2qw9kr/
தமிழ்“அத்திரம் பாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uz2qw9kr/APA
Oliyon Research. (2026). அத்திரம் பாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uz2qw9kr/MLA
"அத்திரம் பாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uz2qw9kr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment