இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி என்பது இளங்காடு என்ற ஊரில் உள்ள பெருமானைப் பற்றி மாதவச் சிவஞான முனிவர் பாடிய ஒரு தோத்திர நூலாகும். இளசை என்பது இளங்காடு என்னும் பெயரின் மரூஉ மொழி. இவ்வூர் காஞ்சி- புரத்திற்கு அருகிலுள்ளது. இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் அகத்தீசுவரர்; இறைவி பெயர் பிரதான நாயகி, பத்துப் பத்துப் பாக்கள் ஒவ்வொரு சந்தத்தில் அமையுமாறு (பதிற்றுப்பத்து) நூறு பாக்களில், பத்து வேறு சந்த அமைப்புகளில், முதல் பாட்டின் ஈற்றுச் சொல்லோ, தொடரோ, அசையோ, சீரோ அடுத்த பாட்டின் முதலாக வரும் நிலையில், தம்முள் மண்டலித்து வருமாறு அமைக்கப்படும் நூலுக்குப் பதிற்றுப் பத்தந்தாதி என்பது பெயராகும். இந்நூல் முதலில் விநாயகர் வணக்கம். பின்னர்ப் பஞ்சாக்கர தேசிகர் வணக்கம், நூல் ஆக 102 பாக்களைக் கொண்டுள்ளது. இந்நூலாசிரியர் சிவஞான முனிவரின் இளமைப் பெயர் முக்களாலிங்கர் என்பது. தென்பாண்டி நாட்டில் பாவநாசப் பதியை அடுத்துள்ள விக்கிரம சிங்க புரத்தில் ஆனந்தக் கூத்தர், மயிலம்மை என்னும் பெற்றோருக்குத் தவமகனாய்ப் பிறந்தார். இளமையிலேயே துறவிகள் சார்பு பெற்றுத் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்து, அங்கு ஞானச் செங்கோல் ஓச்சிய வேலப்ப தேசிகரிடம் தீட்சை பெற்றார். பின்னரே இவருக்குக் சிவஞானம் என்னும் தீட்சா நாமம் வாய்த்தது. இவர் வடமொழி, தென்மொழிகளை நன்கு பயின்று, தன்னிகரற்ற புலமைவித்தகரானார். சைவ சித்தாந்த சாத்திரப் புலமையில் மேம்பட்டு விளங்கினார். இலக்கணம், இலக்கியம், தருக்கம், தத்துவம் முதலிய பல்வேறு துறைகளில் 26 நூல்கள் இயற்றி வெளியிட்டுள்ளார். அவற்றுள் தலைசிறந்தது சிவஞான போத மா பாடிய உரையாம். இவரியற்றிய இலக்கிய நூல்கள் பதின்மூன்று ஆகும். அவற்றுள் ஒன்று இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. இவர் காஞ்சிபுரத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தார். அவ்வமயம் அதன் அண்மையிலுள்ள பல ஊர்களுக்கும் சென்று அங்கங்குள்ள பெருமானை வழிபட்டு நூல்கள் பாட வாய்ப்பு நேர்ந்தது. அம்முறையில் காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள இளசையில் கோயில் கொண்ட பெருமானைப் பற்றி இந்நூல் தோன்றியது. இளங்காட்டிலுறையும் ஈசனைத் தொழாதவர்கள் ‘வறிதே பொற்கொழுக் கொண்டு வரகினுக்கேர் உழுவாரே’ (20) என்றும், ‘பிரதான நாயகியால் சிறந்து வாழ் இளங்காட்டகத்தியீச் சுரன் தாள் சேர்ந்து நின்று’ (100) பல்பேறும் பெறுக என்றும் கூறும் இந்நூல், பல அறிவுரைகளையும் சமய நுட்பங்களையும் கொண்டுள்ளது. இவருக்கு மாணவர் பன்னிருவர் இருந்தனர். அவர்கள் ஒப்பற்ற மணிகளாய் விளங்கிச் சிவஞான முனிவர் பெருமையை மிகவும் மேலோங்கச் செய்தனர். இறுதியில் இவர் கி.பி. 1785 இல் சித்திரை ஆயிலிய நாளில் காலமானார். இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி இவர்தம் இலக்கிய இலக்கணப் புலமையையும், சமய ஈடுபாட்டையும், சாத்திர நுண்ணுணர்வையும் எடுத்துக்காட்டி விளங்கும் அரிய நூலாகத் திகழ்கிறது. இரா.ச.