இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம். இது நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாக விளங்குகிறது. இதன் தலைநகரம் இலட்சுமணபுரி, வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களும் புனித நகரங்களும் இம்மாநிலத்தில் உள்ளன. பொருளாதாரத் துறையில் பின்தங்கி இருந்த இம்மாநிலம் இப்பொழுது வேகமாக முன்னேறி வருகிறது. கவர்ச்சி மிகு நாட்டுபுறப் பண்பாட்டை இம்மாநில மக்கள் பெற்றுள்ளார்கள். இயற்கையமைப்பு உத்தரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாளமும் திபேத்தும் இமாசலப் பிரதேசமும் உள்ளன. அரியானாவும் இராசசுத்தானும் மேற்கில் உள்ளன. தெற்கில் மத்திய பிரதேசம் உள்ளது. கிழக்கில் பீகார் உள்ளது. இம்மாநிலத்தை இயற்கை அமைப்பின்படி பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 1. வடக்கே உள்ள இமய மலைப் பகுதிகள், உத்தாப் பிரதேசம் 2. தெற்கேயுள்ள குன்றுகளும் மேட்டுநிலப் பகுதிகளும், 3. மத்தியிலுள்ள கங்கைச் சமவெளிப் பகுதி. வடக்கே உள்ள இமயமலைப் பகுதி மாநிலத்தின் ஆறில் ஒரு பகுதி ஆகும்; இமயமலையில் 300 முதல் 6000 மீட்டர் உயரம் வரை ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. தெற்கே உள்ள குன்றுகளும் மேட்டுநிலப் பகுதிகளும் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்திற்கு மேல் இல்லை. பொதுவாக வடகிழக்கை நோக்கிச் சாய்வுகள் உள்ளன. மத்தியில் உள்ள கங்கைச் சமவெளி வளமான பகுதி ஆகும்; உழவுத் தொழிலுக்கு ஏற்றதாகும். எனவே மக்கள் தொகை இப்பகுதியில் மிகுதியாக உள்ளது. இம்மாநிலத்தின் முக்கிய ஆறுகள் யமுனை, கங்கை, இராம்கங்கா, கோமதி காகரா ஆகியவை ஆகும். அவை அனைத்தும் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. வெப்ப நிலையில் மிகுந்த வேறுபாடு இங்கே ஏற்படுகிறது. சமவெளிப் பகுதியில் சனவரி மாதம் 8°C வெப்பநிலையும் மே-சூன் மாதங்களில் 42°C வெப்பநிலையும் நிலவுகிறது. ஆண்டுக்குச் சராசரியாக 94 செ.மீ. மழை இங்குப் பெய்கிறது. அதில் பெரும்பகுதி சூன் முதல் செப்டம்பர் வரை பெய்கிறது. வரலாறு உத்தரப் பிரதேசம் என்ற மாநிலம் பழங்காலத்தில் மத்திய தேசம் என்று வழங்கப்பட்டது. வேதங்களில் அந்த சொற்றொடரே பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் வரும் கதைமாந்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வீரச்செயல்களைச் செய்ததாக அக்காப்பியங்கள் கூறுகின்றன. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌதம புத்தர் இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் தம் நற்கருத்துகளை மக்களுக்குப் போதித்தார். கி.மு. நான்காம், மூன்றாம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கியிருந்த மௌரியப் பேரரசில் இப்பகுதி அடங்கியிருந்தது. அசோகரின் தூண் கல்வெட்டுகளும் பாறைக் கல்வெட்டுகளும் இப்பகுதியில் பல இடங்களில் உள்ளன. இம்மாநிலத்தின் வட மேற்குப் பகுதி கி.பி. முதல் நூற்றாண்டில் ஆட்சி செய்த கனிசுகரின் பேரரசில் அடங்கியிருந்தது. குப்தர் பேரரசு எழுச்சி பெற்றிருந்த கி.பி. நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளிலும் இது ஒரு பகுதியாக இருந்தது. அர்சர் தானேசுவரத்தையும் பின்னர்க் கன்னோசியையும் தலைநகரமாகக் கொண்டு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தார். அவர் காலத்தில் சீனாவிலிருந்து புத்தத் துறவி யுவான் சுவாங்கு இங்கு வந்திருந்தார். கன்னோசியைத் தலைநகராகக் கொண்டு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கூர்சர–பிரதிகாரர்கள் ஆட்சி செய்தார்கள். முகம்மது கோரி கி.பி. 1192–ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தரைன் போரில் ஆசுமீர்–தில்லி அரசை ஆட்சி செய்துவந்த பிருதிவிராசனைத் தோற்கடித்தார். அதையடுத்துத் தில்லியில் முகம்மதியர் ஆட்சி அமைக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் இம்மாநிலத்தின் பெரும் பகுதிகள் இசுலாமியரின் ஆட்சிக்கு உட்பட்டன. மதுரா, கன்னோசி, காசி முதலான நகரங்களில் உள்ள இந்துக் கோயில்களின் செல்வங்கள் அவர்களால் கவரப்பட்டன. தில்லிச் சுல்தானியம் வீழ்ச்சியடையத் தொடங்கிய போது கான்பூர் அரசு தோன்றியது. அவ்வரசு கி.பி. 14–15-ஆம் நூற்றாண்டுகளில் உயர்நிலை பெற்றிருந்தது. முகலாயப் பேரரசர்கள் (கி.பி. 1526–1707) ஆட்சி செய்த போது மிகப் பெரிய கோட்டைகளும் பள்ளிவாசல்களும் கல்லறைகளும் ஆக்ரா, பதேபூர் சிக்ரி முதலான இடங்களில் கட்டப்பட்டன. அவுரங்கசீபின் மறைவுக்குப் பின்னர் அயோத்தியின் நவாபு சாதத் அலி கான் (கி.பி. 1722–39) சுதந்திரம் பெற்றுத் தனி அரசை அமைத்தார். இவ்வரசு கி.பி. 1856–ஆம் ஆண்டு வரை தனியரசாகவே செயற்பட்டது. அயோத்தியை ஆண்ட நவாபு சுசா–உத்–தவ்லா (கி.பி. 1754–75) வளர்ந்து வந்த ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியோடு போரிட வேண்டியிருந்தது. ஆங்கிலப் படையினால் கி.பி. 1764–ஆம் ஆண்டு நடைபெற்ற பக்சார் போரில் சுசா–உத்–தவுலாவும், முகலாயப் பேரரசரும், முன்னாள் வங்காள நவாபுமீர் காசிமும் தோற்கடிக்கப்பட்டார்கள். அதன்பின்னர்ச் செய்துகொள்ளப்பட்ட அலகாபாது உடன்படிக்கையின்படி (கி.பி. 1765) அயோத்தி நவாபு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்பின் கீழ்ச் செயற்பட்டார். வெல்லசுலி பிரபு கி.பி. 1801–ஆம் ஆண்டு உரோகில்கண்டு, கொராக்பூர், கீழ் தோவாப் பகுதி முதலானவற்றை அயோத்தி நவாபிடமிருந்தும், கி.பி. 1804–ஆம் ஆண்டு மேல் தோவாப் பகுதி, பண்டெல்கண்டின் ஒரு பகுதி, ஆக்ரா ஆகியவற்றை மராட்டிய சிந்தியா அரசிடமிருந்தும் பெற்றார். ஏசுடிங்சு பிரபு கி.பி. 1816–ஆம் ஆண்டு கூர்க்காக்களுடன் ஒரு பெரும்போரை நடத்தி வெற்றிகண்டார். அதன் விளைவாகக் குமவான் முதலான பல பகுதிகளை அவர் பெற்றார். அப்பகுதிகளில் முசௌரி, தேராடூன் (Dehradun), அல்மோரா, நைனிடால் முதலான கோடைவாழ் நகரங்கள் உள்ளன. அவற்றை ஆங்கிலேயர்கள் பெரிதும் விரும்பி வளப்படுத்தினர். ஆங்கிலேயர்களால் கி.பி. 1817–ஆம் ஆண்டு மராட்டிய பீசுவாவிடமிருந்து பண்டெல்கண்டின் மற்றொரு பகுதி பெறப்பட்டது. இப்பகுதிகள் அனைத்தும் கல்கத்தாவிலிருந்து ஆட்சி செய்து வந்த அரசப் பேராளரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. இவையனைத்தும் கி.பி. 1835–ஆம் ஆண்டு இணைக்கப்பட்டு, வடமேற்கு மாநிலம் என்று பெயர் தரப்பட்டு, அங்கு ஒரு துணை ஆளுநர் நியமிக்கப்பட்டார். தல்கவுகிப் பிரபு கி.பி. 1856–ஆம் ஆண்டு அயோத்தி அரசைக் கைப்பற்றிக்கொண்டார். பெருங்கலகம் கி.பி. 1857–58–ஆம் ஆண்டுகளில் நடைபெற்றபோது முக்கிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்றன. கி.பி. 1857–ஆம் ஆண்டு மே மாதம் மீரட்டில் இக்கலகம் தொடங்கியது. சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட படைத் தலைவன் நீல் (Neill) காசி, அலகாபாது, இலட்சுமணபுரி ஆகிய நகரங்களில் ஆயிரக் கணக்கான இந்தியர்களைச் சுட்டு வீழ்த்தினான். கான்பூரில் நானாசாகிபும் அவருடைய படைத்தலைவர் தாந்தியா தோபேயும் ஆங்கில ஆதிக்கத்தை முறியடிக்க முழு மூச்சுடன் போராடினார்கள். அவர்கள் பல நூறு ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்தார்கள். சான்சி நகரத்தின் இராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தார். இக்கலகம் இறுதியில் ஆங்கிலேயரால் ஒடுக்கப்பட்டது. வடமேற்கு மாகாணம், அயோத்தி அடங்கிய மத்திய மாநிலங்கள் என்று கி.பி. 1861–இல் பெயர் பெற்றது. அதுவே 1902-ஆம் ஆண்டு ஆக்ராவும் அயோத்தியும் இணைந்த மாநிலம் (United Provinces) என்று குறிக்கப்பட்டது. இது 1920–ஆம் ஆண்டு ஆளுநரால் ஆட்சி செய்யப்பட்ட மாநிலமாக மாற்றப்பட்டது. இந்திய விடுதலை இயக்கத்தின்போது முக்கிய நிகழ்ச்சிகள் இம்மாநிலத்தில் நடைபெற்றன. இலட்சுமணபுரியில் 1916–ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரசு முசுலிம் லீகு ஆகியவற்றின் மாநாடுகளின்போது ஏற்பட்ட இலட்சுமணபுரி ஒப்பந்தம் முக்கியமானதாகும். கொராக்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள சவ்ரி சவ்ரா என்ற இடத்தில் 1922–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் நடைபெற்ற வன்முறையை அடுத்துக் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவரும் சுயராச்சியக் கட்சியை நிறுவியவருமான மோதிலால்நேரு அலகாபாதைச் சேர்ந்தவர். இந்தியா 1947–ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது கலிக்குயில் திருமதி சரோசினி நாயுடு இம்மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் நான்கு தலைமை அமைச்சர்கள்–சவகர்லால் நேரு, இலால் பகதூர் சாத்திரி, இந்திரா காந்தி, இராசீவ் காந்தி–இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது 1950–ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாநிலத்தின் நிருவாகத் தலைவர் ஆளுநர். அவருக்கு உதவியாக முதல் அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் உள்ளனர். மாநிலச் சட்டமன்றம் இருசபைகளைக் கொண்டுள்ளது. பொருளாதார நிலை மொத்த மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அரிசி, கோதுமை, சோளம், பருப்பு வகைகள் முதலான உணவுப் பொருள்களும் சர்க்கரை, எண்ணெய் வகைகள், கிழங்கு வகைகள், பருத்தி, புகையிலை, சணல் முதலான வணிகப் பொருள்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுள் சர்க்கரை மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இம்மாநிலத்தில் நிலத்தடிச் செல்வங்கள் அதிகம் இல்லை. ஆனால் சிலிகா என்று சொல்லப்படும் பளிங்குக்கல் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 80 பகுதி இங்குக் கிடைக்கிறது. யமுனை, கங்கை, அவற்றின் கிளையாறுகள் ஆகியவற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர்மின்சக்தி கிடைக்கிறது. எனினும் மாநிலத்திற்குத் தேவையான மின்சக்தியில் 66 பகுதி அனல் மின்சக்தி உற்பத்தியால் செய்யப்படுகிறது. அதற்கான நிலக்கரி பீகாரிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் வருகிறது. தொழில் துறையில் இம்மாநிலம் பின்தங்கியிருந்தது. ஆனால் இப்பொழுது முன்னேறி வருகிறது. கிராமப்புறக் குடிசைத் தொழில்கள் மிகுதியாக உள்ளன. இம்மாநிலத்திற்குத் தேவையான துணி உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. கான்பூர் முக்கிய தொழில் நகரமாகும். இங்குப் பருத்தி ஆலைகள், தோல் தொழிற்சாலைகள், பலவிதமான இயந்திரங்கள் செய்யும் தொழிற் கூடங்கள் ஆகியவை உள்ளன. அரசு நடத்தும் பெருந் தொழிற் கூடங்கள் பல நகரங்களில் உள்ளன. அரித்துவாரில் பாரத கனரக மின்கருவித் தொழிற்சாலை, இரிசிகேசில் இந்திய மருந்துத் தொழிற்சாலை, வாரணாசியில் இரயில் பெட்டித் தொழிற்சாலை, அலகாபாதிலும் கோரக்பூரிலும் உரத்தொழிற்சாலை, சிங்ராலியில் நிலக்கரி வயல்கள், நைனிடாலில் இந்தியத் தொலைபேசித் தொழிற்சாலை, இலட்சுமணபுரியில் போர் விமானங்கள் கட்டும் தொழிற்சாலை, மதுராவில் எண்ணெய் தூய்மைப்படுத்தும் ஆலை ஆகியவை உள்ளன. முக்கியமான நகரங்களை இணைக்கச் சாலைகளும் புகைவண்டிப் பாதைகளும் உள்ளன. அஞ்சல், தந்தி, தொலைபேசி வசதிகள் போதிய அளவு உள்ளன. கேதாரிநாத்து, பத்ரிநாத்து, அரித்துவாரம், மதுரா, அயோத்தி, அலகாபாது, காசி முதலான பல நகரங்கள் இந்துக்களின் புனித இடங்களாகும். ஆக்ராவில் உள்ள தாசுமகால் முதலான பல கட்டடங்களைக் காண நாடோறும் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பெரும் எண்ணிக்கையில் செல்கின்றனர். முசௌரி, நைனிடால், அல்மோரா முதலானவை இன்பந்தரும் கோடைவாழ் நகரங்களாகும். இங்கெல்லாம் மக்கள் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சமூக நிலை உத்தரப் பிரதேசத்தில் ஏறத்தாழப் பன்னிரண்டு கோடி மக்கள் வாழ்கின்றனர். மாநிலத்தின் வட பகுதியில் வாழ்வோர் மங்கோலிய இனத்தினர்; தெற்கில் வாழ்வோர் திராவிட இனத்தினர்; மற்றப் பகுதிகளில் வாழ்வோர் ஆரியர். மக்கள் தொகையில் 85 விழுக்காட்டினர் இந்துக்கள்; 14 விழுக்காட்டினர் முகம்மதியர்: 1 விழுக்காட்டினர் சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள், கிருத்துவர்கள் ஆகியோராவர். மொத்த மக்கள் தொகையில் 85 விழுக்காட்டினர் இந்தி பேசுகின்றனர்; 10 விழுக்காட்டினர் உருது பேசுகின்றனர்; மற்றவர்கள் மற்ற மொழிகளைப் பேசுகின்றனர். இந்துக்களில் பெரும் பகுதியினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாநிலத்தில் பத்தொன்பது பல்கலைக் கழகங்கள் உள்ளன. அவற்றுள் அலிகார் முசுலிம் பல்கலைக் கழகமும் காசி இந்துப் பல்கலைக் கழகமும் குறிப்பிடத்தக்கவை ஆகும். மாநிலத்தின் பல நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் பல்வேறு கலைகள் வளர்ச்சி பெறுகின்றன. இலட்சுமணபுரி சிகான் என்று சொல்லப்படும் வண்ணத் துணி வேலைப்பாட்டிற்குப் புகழ்பெற்றது. காசியில் வண்ண மணிப் பின்னல்களும் வேலைப்பாடு மிகுந்த பித்தளைப் பாத்திரங்களும் செய்யப்படுகின்றன. நசினா நகரம் மரவேலைப்பாட்டிற்குப் புகழ்பெற்றது. களிப்பூட்டும் நாட்டுப் பாடல்களும் நடனங்களும் இம்மாநிலத்தின் சிறப்பான அம்சமாகும். ‘கசரி’ என்று சொல்லப்படும் நடனப்பாட்டு மிர்சாபூரிலும் காசியிலும் விரிவாக இசைக்கப்படுகிறது. அக ஊடல் என்பது நாட்டுப்புறக் காவியக் கதை ஆகும். ககர்வா என்பது ஒரு வகை நடனம். இலிலிகோரி என்பது பொய்க்கால் குதிரை விளையாட்டு. இலட்சுமணபுரியில் உள்ள நுண்கலைகள் கல்லூரியும் இசைக் கல்லூரியும், காசியில் உள்ள பண்பாட்டுக் கல்லூரியும் நுண்கலைகளின் வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றி கங்கையில் இந்துக்கள் புனிதநீராடுதல் வருகின்றன. அலகாபாதில் பல நாடக மன்றங்கள் உள்ளன. இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு அவை போற்றத்தக்க பணியினைச் செய்து வருகின்றன. நா.ப. துணை நூல் Majumdar, R.C., Ancient India, Delhi, 1922.