செல் மரபியல்
cel marapiyal
செல்லியலின் (cytology) அடிப்படைக் கண்டு பிடிப்புகளும், மரபியல் (genetics) உண்மைகளும் இணைந்து, புதியதொரு கிளையாகச் செல் மரபியல் (cytogenetics) தோன்றியது.
செல்லியலின் (cytology) அடிப்படைக் கண்டு பிடிப்புகளும், மரபியல் (genetics) உண்மைகளும் இணைந்து, புதியதொரு கிளையாகச் செல் மரபியல் (cytogenetics) தோன்றியது. குரோமோசோம்கள், மூலக் கூறுகள் ஆகியன பாரம்பரியத்திற்கு அடிப்படையாக அமையும் விதமும், மருத்துவத் துறையிலும், வேளாண் துறையிலும் இவ்வறிவைப் பயன்படுத்தும் முறையும், செல் மரபியலோடு தொடர்புடையவை.
பாரம்பரியத்துக்குக் காரணமான ஜீன்கள், குரோமோசோமில் அமைந்துள்ளன. எனவே, குரோமோசோம்களில் ஏற்படும் மாற்றங்கள் பாரம்பரியத்தின் மூலம் உண்டாகின்ற சந்ததிகளில் மாற்றங்களை ஏற்-
படுத்துகின்றன. பாரம்பரியத்துக்கு அடிப்படையான குரோமோசோம்களில் உள்ள பொருள்கள் மாறாதிருந்தால், பாரம்பரியம் மிகவும் இயல்பாக அமைகிறது. ஆனால், பல்வேறு நிலைமைகளில் குரோமோசோம்களில் மாற்றங்கள் ஏற்படவே செய்கின்றன; இவற்றால், பாரம்பரியத்தில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. குரோமோசோம்களின் அமைப்பில், எந்த மாற்றமும் நிகழாமல், அவற்றின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம் அல்லது குரோமோசோம் பிறழ்ச்சி (chromosomal aberration) எனப்படும் குரோமோசோம் அமைப்பு மாற்றங்கள் நிகழலாம். இத்தகைய மாற்றங்களால், பாரம்பரியத்தில் ஏற்படும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இம்மாற்றங்கள் இயற்கையிலேயே, தாமாக நடைபெறலாம் அல்லது அயனியாக்கும் கதிர் வீச்சுகளாலோ, வேதிப் பொருள்களாலோ உண்டாகலாம். செல் மரபியல் மாற்றங்கள் படி மலர்ச்சியில் பெரும் பங்கு கொள்கின்றன.
குரோமோசோம் எண்ணிக்கை மாற்றங்கள். ஒவ்வொரு தாவரம் அல்லது விலங்கில் ஒரே வகையான வடிவமும், ஜீன்களின் ஒவ்வொரு தொகுதியும் கொண்ட குரோமோசோம்கள் இரண்டிரண்டாக இருக்கும். இவற்றைக் குரோமோசோம் இரட்டைகள் எனலாம். இவ்விரண்டில் ஒன்று, தாயிடமிருந்தும், ஏனையது தந்தையிடமிருந்தும் பெறப் படும். எனவே, ஒரு செல்லில் மொத்தம் உள்ள குரோமோசோம்கள் இரண்டு தொகுதியாக (iwo sets) அமையும். சான்றாக, மனித செல்லில் உள்ள 46 குரோமோசோம்களில் 23 கொண்டது. ஒரு தொகுதி. இது போல், மற்றொரு தொகுதியும் 23 குரோமோசோம் கொண்டது. இவற்றுள் ஒரு தொகுதி மட்டுமே, இனப் பெருக்கச் செல்களான விந்து, முட்டை ஆகியவற்றில் உள்ளது. இதை 2 தொகுதி (diploid) அல்லது 1 தொகுதி (monoploid) என்பர்.
உடலின் ஏனைய செல்களில் 2 தொகுதி குரோமோசோம்கள் இருக்கும். சில இயல்புக்கு மாறான காரணங்களால், இத்தொகுதிகள் 3 (triploid), 4 (tetraploid) அல்லது அதற்கு மேலும் இருப்பதுண்டு. இவற்றில் முறையே, ஒவ்வொரு வகைக் குரோமோசோமிலும் 3, 4 இருக்கும். படி மலர்ச்சியில், இத்தகைய எண்ணிக்கை மாற்றங்கள் ஏற்படும் போது, அதனால் பெறப்படும் உயிரியின் அமைப்பும் மாறு படுகிறது. பொதுவாக, இரண்டு தொகுதி குரோமோசோம்கள் உள்ள செடியின் இலைகளையும், அதில் உள்ள செல்களையும் விட, ஏறக் குறைய இரு மடங்கு அளவுள்ள செல்களையும், இலையையும், நான்கு தொகுதி குரோமோசோம்கள் உள்ள செடியில் காணலாம். இவை தவிர, முற்றிலும் புதிய அமைப்புள்ள சற்று மாறுபட்ட இனம் தோன்றுவதற்கு இத்தகைய எண்ணிக்கை மாற்றங்கள் உதவுகின்றன. முழுத் தொகுதியும், பன்மடங்காக அதிகரிக்காமல், சில உயிரிகளில் ஒன்று அல்லது இரண்டு குரோமோசோம்கள் மட்டும் அதிகரிக்கவோ, குறையவோ நேரிடலாம். எனவே, இவ்வித எண்ணிக்கை மாற்றம் அடைந்த செல்களையுடைய தாவரம் அல்லது விலங்கு அமைப்பில் மாறு பட்டிருக்கும்.
செல் மரபியல் வல்லுநர்கள் இரண்டு வெவ்வேறு இனங்களைக் கலப்பினம் செய்து, முற்றிலும் புதிய அமைப்புடைய இனம் ஒன்றை உண்டாக்குகின்றனர். சான்றாக, முன்ட்சிங் (Muntzing) என்பார், காலியோப்சிஸ் புயூப்சென்ஸ் (Galeopsis pubescens) என்னும் தாவரத்தையும், கா. ஸ்பீசியோசா (G.Speciosa) என்னும் தாவரத்தையும் இனக் கலப்புச் செய்தார். இவை இரண்டிலுமே, இரட்டைத் தொகுதி எண்கள், 16 குரோமோசோம்கள் ஆகும். இவற்றால் உண்டான இரட்டைத் தொகுதிக் கலப்புயிரியில் (diploid hybrid) 8 கா. புயூப்சென்ஸ் குரோமோசோம்களும், 8 கா. ஸ்பீசியோசா குரோமோசோம்களும் இருந்தன; கலப்புயிரியின் குரோமோசோம்களை இரட்டிப்பாக்கி, ஒரு நான்கு தொகுதி உயிரியை, அவர் தோற்றுவித்தார். இதில் 32 குரோமோசோம்கள் இருந்தன. இதன் அமைப்பில் சற்றும் வேறுபடாத, கா.டெட்ராஹிட் (G.tetrahit) என்னும் தாவரம் இயற்கையில் இருப்பது தெரிய வந்தது. கலப்புயிரிக்கும், இந்த இயற்கைச் செடிக்கும் சிறிதும் வேறுபாடில்லை. இவையிரண்டையும், கலப்புச் செய்ததில், இவை எளிதில் இனப் பெருக்கம் செய்வதைக் காண முடிந்தது. எனவே, இயற்கையில் உருவாகிய கா.டெட்டராஹிட் தன் படி மலர்ச்சியில், முன் கூறிய கா.புயூப்சென்ஸ், கா.ஸ்பீசியோசா ஆகியவற்றின் கலப்பிலிருந்தே உண்டானதென்பது புலனாயிற்று.
செல் மரபியல், ஒப்புமைச் செல்லியல் (comparative cytology) ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் படி மலர்ச்சியைப் பற்றிப் புரிந்து கொள்வது எளிதாகிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இனங்களில் ஜீனோம்களை (genomes) ஒப்பிடுவதன் மூலம், வகைப்பாட்டுக்கும், படி மலர்ச்சிக்கும் செல் மரபியல் இன்றியமையாதது என்பதை மக்ளங், எஸ். நவாஷின் என்போர், முதன் முதலில் வலியுறுத்தினர். வெவ்வேறு இனங்களிடையே உள்ள தொடர்பைத் தெளிவாக்குவதற்குச் சிறந்த வழிகளைத் தருவதால், செல் மரபியல் ஆய்வுகள் வகைப் பாட்டியலில் சிறப்புப் பெறுகின்றன.
விலங்குகளிலும், தாவரங்களிலும் உள்ள வெவ்வேறு இனங்களின் குரோமோசோம் தொகுதிகளை (karyo types) ஆராய்வதால், அவற்றைப் பற்றிய உண்மைகள் புலனாயின: செல்லியல் அடிப்படையிலும், மரபியல் அடிப்படையிலும் இயற்கையில் உள்ள உயிர்த் தொகைகள் (wild populations) ஓரளவுக்கு வேறுபாடுடையவை என்பது நிறுவப் பட்டுள்ளது. சிலவற்றில், அவற்றின் ஜீன்கள் ஒரே அமைப்பில் இருந்த போதிலும், குரோமோசோம் துண்டுகளில் (segments) ஏற்பட்ட மாற்றங்களால், ஜீன்களின் வரிசை வெவ்வாறாக அமையும். இம்மாற்றங்கள் படி மலர்ச்சிக்கு அடிப்படையாகின்றன. —சோம. பேச்சிமுத்து —கி. மகிபதி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 857)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uu7jkjna/
தமிழ்“செல் மரபியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uu7jkjna/APA
Oliyon Research. (2026). செல் மரபியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uu7jkjna/MLA
"செல் மரபியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uu7jkjna/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment