பண்டைய கிரேக்கரின் ஒரு பிரிவினரான அயோனிய சமூகத்தைச் சேர்ந்தவர். அரிசுடாட்டிலை (Aristotle) ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம் என்று கூறவேண்டும். இவர் கிரீசின் புகழ்பெற்ற ஆதென்சு நகருக்கு அண்மையில் இசுதாகிரா (Stagira) என்ற ஊரில், கி.மு. 384–ஆம் ஆண்டில் நிகோமகசு (Nicomachus) என்னும் மருத்துவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தந்தை, மகா அலெக்சாந்தரின் பாட்டனாருக்கு அரசாங்க மருத்துவராகப் பணிபுரிந்தவர். அச்சூழ்நிலை காரணமாக அரிசுடாட்டிலுக்கு இளமையிலேயே மருத்துவத் துறையில் ஓரளவு அனுபவம் இருந்தது. இவரும் ஒரு மருத்துவராக வரவேண்டுமென்று இவர்தம் பெற்றோர் விரும்பிய போதிலும், இவர் தத்துவத் துறையிலும் வேறு பல சமூகச் செய்திகளிலும் மிக்க நாட்டம் கொண்டிருந்தார். அதனால் பெற்றோரின் விருப்பம் நிறைவேறவில்லை. மேலும், இவர் அரிசுடாட்டில் அயோனிய–கிரேக்கப் பிரிவைச் சேர்ந்தவர். அயோனியர்கள் இவற்கையை விரும்பிப் போற்றி வந்தவர்கள்; அதைப்பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபாடு கொண்டவர்கள். ஆகவே, இவருக்கும் அத்தகைய வேட்கை மேலோங்கியிருந்தது. அக்காலத்தில் கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்கிய ஆதென்சு நகரம் அரிசுடாட்டிலின் கருத்தைக் காந்தம்போல் ஈர்த்தது. கி.மு. 367–இல் இவர் ஆதென்சுக்குச் சென்று, முதலில் ஐசோக்ரேட்டசு என்னும் ஆசிரியரிடத்தும், பின்னர்ப் பிளேட்டோ என்னும் பேரறிஞரிடத்திலும் கல்வி பயின்று, 17 ஆண்டுகள் மாணவராக விளங்கினார். அக்காலத்தில் பல அரசியல் தத்துவங்களை ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து, பிளேட்டோவின் கல்விக் கூடத்திற்குச் சிறந்த பெயரைப் பெற்றுத் தந்தார். மனிதனின் கூடி வாமும் தன்மையை விளக்கிச் சமுதாயத்தைப் பற்றிய அரசியல் நூலை ஓர் அறிவியல் நூலாக வகுத்த முதல் அறிஞர் அரிசுடாட்டில். அக்காலத்திய சூழ்நிலையில் இவர் தம் கட்டுரைகளிலோ நூல்களிலோ குறிப்பிடாத சிறப்பான செய்தி எதுவுமே இல்லை என்று துணிந்து கூறலாம். இவர் பெருமையை உணர்ந்த மாசிடோனிய (Macedonia) மன்னர் இரண்டாம் பிலிப்பு, இவரை அழைத்துத் தம் மகன் அலெக்சாந்தருக்குக் கல்வி பயிற்றுவிக்கத் தனி ஆசிரியராக அமர்த்தினார். இச்சேவையை அரிசுடாட்டில் 12 ஆண்டுகள் புரிந்த பின் கி.மு. 334–இல் ஆதென்சுக்குத் திரும்பிச் சென்று, தாமே “இலைசியம்” (Lycium) எனப்பெறும் ஒரு கல்விக் கூடத்தை நிறுவினார். இக்கூடத்தின் தோட்டத்தில் இவர் நம் மாணவர்களுடன் நடந்து கொண்டே கல்வி பயிற்றுவித்ததால், இக்கல்விக் கூடத்திற்கு “நடமாடும் கழகம்” என்று ஒரு பெயர் ஏற்பட்டிருந்தது. இவரிடம் மிகுதியான மாணவர்கள் வந்து சேர்ந்ததால், பிளேட்டோ நிறுவிய கல்விக் கூடத்தைவிட இதன் சிறப்பு மிகுதியாக ஓங்கியது. இவர் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்ததுமட்டுமன்றி, நாளும் பொது மக்களுக்கும் அரிய போதனைகளைச் செய்துவந்தார். தம் நண்பர் கிப்பியாசு (Hippius) என்பாரின் வளர்ப்புப் பெண் ஒருத்தியை இவர் திருமணம் புரிந்திருந்தபோதிலும், வாழ்க்கையின் பெரும் பகுதியைத் தம் ஆராய்ச்சிகளிலேயே கழித்தார். இவரது இல்வாழ்க்கை பற்றி மிகுதியாகக் குறிப்புகள் கிடைத்தில. இவர் கல்விக் கூடத்தில் ஒரு பொருட்காட்சியும் அமைந்திருந்தது. இவர் தம் மாணவர்கள், பல்வேறு இடங்களிலிருந்து அனுப்பிய அரும்பொருள்களை அங்கே சேகரித்து வைத்திருந்தார். தம் மாணவரான அலெக்சாந்தர் உலகின் பல இடங்களிலிருந்து கொண்டுவந்த பொருள்கள் பலவற்றை அப்பொருட்காட்சிச் சாலைக்கு அனுப்பியிருந்தார். அலெக்சாந்தர் பாரசீகத்தை வென்ற பிறகு ஏறத்தாழ ஒரு கோடி உரூபாய் மதிப்புள்ள பொருள்களை அரிசுடாட்டிலுக்குப் பரிசாக வழங்கினார். ஆனால், இறுதிக் காலத்தில் அரிசுடாட்டில்–அலெக்சாந்தர் நல்லுறவு பாதிக்கப்பெற்றது. இதற்குக் காரணமாக இருந்தவர் காலிசுதனீசு (Callisthenes) என்ற அலெக்சாந்தரின் அரசியல் ஆலோசகர் என்பது கருதப்படுகிறது. காலிசுதனீசும் அரிசுடாட்டிலும் நெருங்கிய நண்பர்கள். காலிசுதனீசு உண்மையை அஞ்சாமல் கூறும் இயல்புடையவர். அவரை ஒருவர் “மிகச் சிறப்பான நிலைமைக்கு நீர் வரவேண்டுமானால் அதற்குச் செய்யவேண்டியது யாது? என வினவினார். இக்கேள்விக்கு, அவர் அளித்த விடை தம்மைவிட மிகச் சிறப்பாக விளங்குபவரை ஒழித்துக்கட்ட வேண்டியதுதான்” என்பதாகும். இதைக் கேள்வியுற்ற அலெக்சாந்தர் அவரைச் சிறையில் அடைத்து அங்கேயே இறக்குமாறு செய்து விட்டார். அத்தகைய மனவோட்டத்திற்கு, அரிசுடாட்டில் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு காரணமாக, அலெக்சாந்தர் அரிசுடாட்டிலைத் தம் பகைவராகக் கருதத் தொடங்கினார். ஆனால் தம் முன்னாள் ஆசிரியரைக் கொன்றுவிடவில்லை; சிறைப்படுத்தவும் இல்லை. அலெக்சாந்தர் கி.மு. 323 ஆம் ஆண்டில் இறந்த பின், அலெக்சாந்தரின் நண்பர்கள் அரிசுடாட்டிலை வெறுத்தனர். இதை உணர்ந்த அக்கலைஞர் இபோயா (Euboea) நாட்டில் உள்ள சால்சிசு (Chalcis) என்னும் ஊருக்கு ஓடி, அடுத்த ஆண்டில் (கி.மு. 322) அங்கேயே தம் பூத உடலை நீத்தார். இவர் இறந்ததற்கு அளவுகடந்த உழைப்பால் ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுதான் காரணம் என்று அவருடைய மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். பின்வரும் சந்ததியினருக்கு இவர் தம் நூல்களை மட்டும் அன்றி, ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கையையும் விடுத்துச் சென்றுள்ளார். கிரேக்க வரலாற்றறிஞர் சே.பி. பியூரி, (J.B. Bury) அரிசுடாட்டிலை, “அஞ்சாத சுயசிந்தனை என்னும் (கிரேக்க) மரபைக் காப்பாற்றிய பெருமையுடையவர்” என்று சிறப்பித்துள்ளார். தம் வாழ்க்கையையே அறிவு வளர்ச்சிக்காக ஈடுபடுத்தியவர் இவர். இவர், 158 அரசியல் அமைப்புகளின் வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆய்ந்து எழுதிய நூல், அரசியல் (Politics) என்பது. அரசியலே அன்றி, மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அந்நூல் குறிப்பிடுகிறது. இதைத் தவிர இவர் எழுதியுள்ள நூல் வகைகளாவன: உளவியல், விலங்கியல், அளவை நூல், அரசியல் அமைப்பு, வானிலை இயல் (Meterology), மெய்யறிவு, இயற்பியல், செய்யுளியல், பேச்சுக்கலை, ஒழுக்கவியல், உயிர் நூல், புலங்கடந்த நுண்பொருள் ஆராய்ச்சிநூல், அழகுக் கலை முதலிய பலவாம். அரிசுடாட்டிலின் உளவளர்ச்சி, தொடக்கத்தில் பிளேட்டோவின் கற்பனை ஆராய்ச்சியில் தொடங்கி, அறிவியல் ஆராய்ச்சியில் முடிவுற்றது. இலக்கியத் திறனாய்வு முறைக்கு உரிய சில அடிப்படை விதிகளையும் இவர் வகுத்துக்கொடுத்து அத்துறையில் மிகப் பெரிய மேதையாக விளங்கினார். உலகம் முதலிய அண்டகோளப் பொருள்களைப் பற்றிச் சிந்தித்து, எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இறைவன் ஒருவன் உளன் என்னும் முடிவுக்கு இவர் வந்திருந்தபடியால், தாம் எடுத்துக்கொண்ட அரசியல் முதலிய எல்லாச் செய்திகளிலும் ஒழுக்கத்தையும் நேர்மையையும் அதனதன் இயல்புத் தன்மையையும் வற்புறுத்தியுள்ளார். ஒவ்வொரு பொருளுக்கும் முடிவு அல்லது முடிவான காரணம் ஒன்று உண்டு என்பதே இவர் நம்பிக்கை. எப்பொருளிலும் அதன் வெளி உருவத்திற்கும் அதன் உட்பொருளுக்கும் வேறுபாடு உண்டு எனவும் இவர் போதித்தார். இவருடைய “அரசியல் நூல்” இன்றும் விவாதத்திற்குரிய ஓர் அரிய கருவூலமாகத் திகழ்கிறது. உலகில் உள்ள உயரிய நூல்களின் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளதே இதற்குச் சான்றாகும். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பெற்ற அந்நூல், இன்றும் கல்வியாளர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பயனுள்ளதாக இருப்பதைக் காண்கிறோம். அளவை நூலில் “சிலாசிசம்” என்னும் விவாத முறையை முதலில் வகுத்தவர் இவரே. இயற்கைப் பொருள்களைப் பற்றிய அறிவியற் கலைகளை முதன் முதலில் வகுத்தவரும் இவரே. ஓரளவு மருத்துவ அறிவு பெற்றிருந்ததால், மனித உறுப்புகளின் தன்மையை ஆய்ந்து அதற்கேற்ப ஒழுக்க விதிகளை வரைந்தார். அரசியல் தத்துவத்தையும் ஒழுக்க விதிகளையும் இணைத்துப் பேசிய பெரியார் இவர். இவருடைய தத்துவக் கோட்பாடுகளைப் பிற்காலத்தில் புனிதர் தாமசு அக்வைனசு (St. Thomas Aquinas), இசுபினோசா (Spinoza), தெக்கார்ட்டே (Descartes), பிரான்சிசு பேகன் (Francis Bacon), இம்மானுவல் கான்ட்டு (Emmanual Kant) முதலிய அறிஞர்கள் நன்கு கற்றுணர்ந்து, அந்த அடிப்படையில் தத்தம் கோட்பாடுகளை விளக்கலாயினர். அரிசுடாட்டிலின் கருத்துகளில் தாம் வாழ்ந்த காலத்தின் தாக்கம் (Impact) காணப்படுகிறது. இசுபார்ட்டாவின் (Sparta) ஆதிக்கம் சிதைவுற்று, தீப்சின் ஆதிக்கம் ஓங்கிக் கொண்டிருந்த காலம் அது. தீப்சின் உயர்நிலையும் நிலைத்து இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, அரசியல் மாறுபாடுகள் வந்து கொண்டே இருக்கும் என்பதை இவர் வலியுறுத்தினார். வரலாறு, வட்டமாகச் சூழவரும் இயல்பினது; அதாவது, சகடக்காற் போலத் திரும்பத் திரும்ப நிகழும் செய்திகளை உடையது; அது மாறுபடாத பழமையை விளக்குவது; மேலும் வரலாறு என்பது ஒரு விளக்கம்; பழமை என்பது என்றும் மாறுபடாதது; இவை இவர்தம் வரலாற்று வரைவியல் கொள்கைகள். இவர் நீதி பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்துகள் பிளேட்டோவின் கருத்துகளுடன் மாறுபாடு உடையனவாக இருக்கின்றன. நீதியை, இவர் இரண்டு வகைகளாகப் பிரித்தார். ஒன்று பொதுவான உலக நீதி. இது எல்லோராலும் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தருமம் ஆகும். மற்றொன்று தனிப்பட்ட நீதி; அதாவது, ஓர் அரசு, அதன் மக்களின் தன்மைக்கு ஏற்ப, ஒவ்வொருவருடைய தகுதிக்கும் ஏற்ப விதிக்கும் சட்டங்கள் ஆகும். பிளேட்டோவின் பொது உடைமைக் கருத்துகளையும் இவர் மறுத்துப் பேசுகிறார். பொதுவான சொத்துடைமை முறையில், மக்களுக்கிடையே மாறுபாடுகளும் சச்சரவுகளும். ஏற்பட்டுப் பல இன்னல்கள் விளையக் கூடுமாதலால், ஒருமைப்பாடு தோன்றாது என்பது இவரது கருத்து. ஆகவே, அரசின் ஒற்றுமை உணர்வு என்ற கருத்தை அடிப்படையாக வைத்து அரசியலமைப்பின் உறவுகளை ஆய்வு செய்து, மக்களின் நலன் ஒன்றையே கருதி, அரசு இயங்கவேண்டும் என்று இவர் விளக்கியுள்ளார். பெண்டிர் நிலை பற்றிப் பிளேட்டோவும் அரிசுடாட்டிலும் வேறுபடுகின்றனர். மகளிர், தம் இல்லத் துயர்களிலிருந்து விடுபட்டு, அரசுக்குத் தொண்டு செய்ய வரவேண்டுமெனவும், அவர்களிடையே பொதுவுடைமை வளர வேண்டுமெனவும் பிளேட்டோ குறிப்பிட்டிருப்பதை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. குடும்ப வாழ்க்கைதான் பெண்களுக்கு அழகு என்று வற்புறுத்திய இவர், பெண்களின் விடுதலை பற்றி எதுவுமே கூறவில்லை. தத்துவ ஞானிகள் மன்னர்களாக மாட்சிமை பெறவேண்டும் என்னும் பிளேட்டோவின கருத்தையும் இவர் மறுக்கிறார். இவர் கருத்துப்படி ஓர் அரசியல் வல்லுநனுக்கு இன்றியமையாத தேவை செயல்முறைப் பகுத்தறிவே தவிர, தத்துவ ஞானமன்று என்பதாகும். அரசியலின் தன்மை பற்றி இவர் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார். இவர் விரும்புவது ஒரு தனிப்பட்ட, தூய்மையான அரசியல் அன்று; சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு கலப்பட அரசியலையே இவர் வரவேற்றார். தலைமை அல்லது இறைமை அதிகாரம் ஒருவரிடத்திருந்தால் அது முடியாட்சிலாகும். அது, திறமைக்கேற்ப அமைவதாகும். இந்த ஒற்றை ஆட்சியாளர் சிறந்த குறிக்கோளினின்று விலகிச் சென்று விடக் கூடும். அப்பொழுது, அது வல்லாட்சி ஆகிறது. அதற்கு எதிர்ப்பு ஏற்படுவது இயற்கை, அதன் வினைவாகத் தலைமை அதிகாரம் சிலரிடத்திற்கு மாறும். உயர்ந்த குறிக்கோளினின்றும் வழுவாமல், இச்சிலர் தூய அரசாங்கத்தை நடத்தும் வரை, இதை “உயர் குடியினராட்சி” (Aristocracy) என்று போற்றலாம். ஆனால், காலப் போக்கில் இம்முறையில் குறைகள் தோன்றக்கூடும். அதன் விளைவாக அமைவது செல்வச் சிறுகுடியாட்சி (Oligarchy) ஆகும். இம்முறையில் செல்வம் இல்லாத வறியவர்மீது செல்வச் சிறு குடியினர் ஆதிக்கம் செலுத்துவர். இது நிலைத்து நிற்காது. இதனை எதிர்த்து மக்கள் குடியாட்சியை அமைப்பார்கள். இதில் தலைமை அல்லது இறைமை அதிகாரம் எல்லாக் குடிமக்களிடத்திலும் மாறுகிறது. இதற்கு அரிசுடாட்டில் தந்துள்ள பெயர் அரசமைப்பு (Polity) என்பதாகும். அதாவது, மிதமான குடியாட்சி ஆகும். இம்முறையில், உடைமைக் கோட்பாடும் உரிமைக் கோட்பாடும் இணைந்து காணப்படும். நேர்முறை மக்களாட்சி என்றும் இதைக் கூறலாம். இங்கே, அரசியல் அலுவல்கள் யாவும் சட்டமன்றம், நிருவாகம், நீதிமன்றம் ஆகியவற்றிடையே பிரிக்கப்பட்டு, அலுவலர்கள், தேர்தல்முறை, திருவுளச் சீட்டு முறை ஆகிய இரண்டும் கலந்த ஒரு கலவை முறையில் அமர்த்தப்படுவார்கள். ‘அரசமைப்பு’ என்று இவ- ரால் கருதப்பட்ட சிறந்த ஆட்சி முறையும் சீர்கேடுகளுக்கு உட்படுவது இயல்பு. இத்தகைய ஆட்சி தூய்மையற்றுப் போகும்பொழுது, குடியாட்சி அல்லது மக்களாட்சி அமைகிறது என்பது இவரது கருத்து. இன்றைய மக்களாட்சியை இவர் எதிர்மறை மக்களாட்சி என்று குறிப்பிடுகிறார். குழப்பங்கள் நிறைந்த இந்த மக்களாட்சியை எதிர்த்து முடியாட்சி மறுபடியும் ஏற்பட்டு, அமைதி நிலவும் என்று கூறுவதன் வாயிலாக இவர், அரசியலமைப்பில் சுழற்சி மாறுதல் (Cyclical Change in Politics) தவிர்க்க முடியாதது என்பதை விளக்கியுள்ளார். இம்மாறுதலுக்குக் காரணமான புரட்சிகளைத் தவிர்ப்பது எந்த அரசுக்கும் ஒரு முதன்மையான பணியாகும் என்பதையும் இவர் வற்புறுத்தியுள்ளார். அரசியல் நன்முறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுதல் நற்பயனை விளைவிக்கும் என்பதும் இவர் கோட்பாடு. சிறப்பாக, இவர் குறிப்பிடுவது சட்டத்தை மதித்து மக்கள் நடப்பார்களேயானால், அதனால் அவர்களுக்கு நன்மை உண்டு என்பதாகும். அரசியலமைப்புக்கு உட்பட்ட வாழ்வை அடிமைவாழ்வு என்று கருதாமல், உயர்ந்த நலன் பயக்கும் வாழ்வு என்று நம்பி, அதற்கு யாவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது இவருடைய அவா. அரசைப் பற்றிய பல்வேறு கருத்துகள் நிலவிய அப்பழங்காலத்தில், அரசின் குறிக்கோள், “மக்கள் நல்வாழ்க்கை ஒன்றே” என வலியுறுத்திய பெருமை இவருக்கே உரியது. ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கைக்கு இவர் தனி மதிப்புத் தருகிறார். செயற்கை இயற்கையை ஒட்டியதாக இருக்க வேண்டுமென்பதும், இயற்கையை ஒத்தே அது அமையும் என்பதும் இவர் கோட்பாடுகள். அரசின் தோற்றத்தை விளக்கும் பொழுதும், வேறுபலர் கூறியுள்ள ஒப்பந்தக் கோட்பாட்டை (Contract Theory) இவர் ஒப்புக் கொள்ளவில்லை. குடும்ப வாழ்க்கையினின்று இயல்பாகவே விரிவுற்று அரசு தோன்றியது என்பது இவரது கருத்து. உரிமை என்பதற்கு இவர் தரும் பொருள் போற்றற்குரியது. அதாவது, வாழ்க்கையின் குறிக்கோள், தமக்கு நலனைத் தேடிக் கொள்வதுடன், பிறருக்கும் நலனை நாடி, அதன் வழியாகத் தம்முடைய நலனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த உரிமை சிதைவுறும் பொழுதெல்லாம் புரட்சியும் அரசியல் மாற்றமும் இயல்பாக அமையும் என்றும் இவர் விளக்கியுள்ளார். இவர்தம் அரசியல் கருத்துகள், அக்காலத்தில் மாறுபாடுகள் நிறைந்த கிரேக்க அரசியல் முறைகளின் தாக்கத்தால் உருவாகியவை; அவை எக்காலத்திற்கும் பொருந்தாதவை என்ற குற்றச் சாட்டுகள் இருப்பினும், அடிப்படைக் கருத்தைப் பொறுத்தவரை இவருடைய விளக்கங்கள் பல இன்றும் மக்கள் சிந்தனையைத் தூண்டும் தன்மையன. அவற்றில், ஆன்மீகத் தன்மையையும் தார்மீகத் திறனையும் காண முடிகிறது. சட்டமியற்றல், நிருவாகம், நீதி என்ற வகையில் அரசின் அதிகாரங்கனைப் பிரிக்கும் கருத்து முதன் முதலில் இவரால் தோற்றுவிக்கப் பெற்றது என்பதும் நினைவுகூரத் தகும். ஆனால், பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்ததுபோல விரிவான முறையில் இவர் அதை விளக்கவில்லை; குறிப்பிட்டுக் காட்டிச் சென்றார். சட்டமியற்றும் பெரும் பொறுப்பைப் பெற்றவர்கள், என்னென்ன நற்குணங்களை உடையவர்களாகவும், எத்தகைய தீய பண்புகளை விட்டொழித்தவர்களாகவும் இருக்கவேண்டுமென்பதையும் இவர் விளக்கியுள்ளார். அடிமை முறையை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டு இவர்மீது உளது. ஆனால், அப்பொழுது இருந்த கிரேக்க நகர அரசுகளின் போக்கிற்கு ஏற்பத் தம் கருத்துகளை மாற்றிக் கொள்ள இவரால் முடியவில்லை. மக்கள் முன்னேற்றத்திற்குச் சிலர் அடிமைகளாக இருக்க வேண்டியது இன்றியமையாதது என்பதும், அவர்கள் குடியாட்சி உரிமைகளைக் கேட்க முடியாது என்பதும் இவர் கருத்துக்கள் ஆகும். கிரேக்க நகர அரசை அடிப்படையாக வைத்து, இவர் வகுத்த அரசியல் கோட்பாடுகள், பிற்காலத்திய பல்வேறு வகைப்பட்ட அரசியலமைப்பு வகைகளைச் சீர்தூக்கி ஆராய்வதற்கு உதவிபுரிகின்றன. கிரேக்க அரசியல் எழுத்தாளர்களுள் தலைசிறந்தவராக விளங்கிய இவர் தம் இரு மனைவியர் மூலம் பீதியாசு (Pythias) என்ற ஒரு மகளையும் நிகோமசூசு என்ற மகனையும் பெற்றிருந்தார். இவர் தம் மகளையும் மகனையும் பற்றி அதிகமாக அறியப்படவில்லை. ஆனால், இவர் விட்டுச்சென்ற எழுத்தோவியங்கள், இக்காலத்திய அறிஞர்கள் உள்ளங்களிலே ஊடுருவி நிலைபெற்றுவிட்டன. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால மேதையான இத்தாலியக் கவிஞர் தாந்தே (Dante) ஒரே வரியில் இவரை மதிப்பிட்டுள்ளார். அதாவது “அறிஞர்க்கு அறிஞர்” என்பதாகும். (Master of those who know). இது மிகவும் பொருத்தமான பாராட்டேயாகும்.சை.வே.சி. துணை நூல்கள் Barker, Ernest., “The Political Thought of Plato and Aristotle”, Rev., Ed., London, New York, 1959. Randall, John, R., “Aristotle,” New York, 1960. Ross, William, D., “Aristotle”, 5 Ed., Rev., London, 1949. Appadorai, A., “The Substance of Politics”, London, 1972.