சுழலிறகு விமானம்
cuḻaliṟaku vimāṉam
சுழலும் இறகிலிருந்து ஏற்றம் பெறும் ஓரு வகை விமானமே சுழலிறகு விமானம் எனப்படுகிறது.
சுழலும் இறகிலிருந்து ஏற்றம் பெறும் ஓரு வகை விமானமே சுழலிறகு விமானம் எனப்படுகிறது. பல விதங்களில் சுழலிறகு விமானம் திருகு ஊர்தியை (helicopter) ஒத்துள்ளது. ஆனால், நிலைச் சிறகு விமானங்களைப் போலவே, எந்திரத்தால் இயங்கும் ஒரு செலுத்தியும் இதில் உள்ளது. எந்திரத்தால் இயங்கும் செலுத்தி, சுழலிறகு ஆகியவற்றால் இவ்விமானம் இயங்குகிறது.
இவ்விமானத்திற்குத் தேவையான உந்து ஆற்றல் முழுதும் செலுத்தியின் மூலமே உருவாக்கப்படுகிறது. இவ்வாறு விமானம் காற்றினூடே செலுத்தப்படும் போது, காற்றியங்கு விசையினால் இறகு சுழற்றப் பட்டுப் போதுமான ஏற்றம் உருவாக்கப்படுகிறது. விமானத்தில் முன் புறம் அல்லது பின் புறம் செலுத்தி பொருத்தப்பட்டு இருக்கும்.
சில வகைச் சுழலிறகு விமானங்களில் இறகு சுழலும் தளத்தைச் சாய்ப்பதன் மூலம், நிலை மாற்றத்தையும், உருளலையும் கட்டுப்படுத்த முடியும். தொடக்க காலத்துச் சுழலிறகு விமானங்களில் குறை ஆற்றல் பற்சக்கர இணைப்பின் மூலம் ஊட்டப்பட்டு இறகு சுழற்றப்படும். விமானம் எழுவதற்கு முன்பே, போதுமான வேகத்தை இறகு அடையுமாறு செய்வது வழக்கம். இதே முறையில் விமானம் தரையில் இருக்கும் போது, இறகுக் கரங்களைச் சம தள ஆர நிலையில் வைத்து, இறகை வேகமாகச் சுழலச் செய்து, திடீரென்று இறகுக் கரங்களின் ஆர நிலையை (கோணத்தை) மாற்றுவதால், உடனடி எழுதல் நிகழ்த்தப் படலாம். இம்முறையில் தரையில் நகராமல், இருந்த இடத்திலேயே மேலெழுவதால், இதைக் குதித்து எழுதல் என்றும் கூறலாம். நீளம் குறைந்த அல்லது செங்குத்தாக மேலெழக் கூடிய செயல்பாட்டிற்குச் சுழலிறகு விமானம் சிறந்தது.
விமானங்களில் உள்ள சுழலிறகு விமானம், இரு சுழல் அளவிகளைக் கொண்டது. செங்குத்து நிலையில் உள்ள சுழல் அளவி விமானச் சிறகின் ஓர மடக்கை (aileron) விமானத்தின் உயர்த்திகளைக் கட்டுப்படுத்துகிறது. திசை காட்டி சுக்கானைக் கட்டுப்படுத்துகிறது. வானூர்தி, அது செல்ல வேண்டிய பாதையிலிருந்து விலகும் போது, சரி செய்யும் இக்குறிப்பலைகள், மின்னழுத்த இடப் பெயர்ச்சி (voltage displacement) ஆகும். இவை மிகைப் படுத்தப்பட்டுக் கலத்தை இயக்கும் துணை விசைப் பொறிகளுக்குச் (servo units) செலுத்தப்படும். துணை விசைப் பொறிகளில், வானூர்ர்தியின் கட்டுப்பாட்டை இயக்கும் சிறிய மின்னோடிகள் உள்ளன.
சுழலிறகு விமானத்தில் பல உள்ளார்ந்த நன்மைகள் உண்டு. நிலைச் சிறகு விமானங்களை விட, மிகக் குறுகிய தொலைவிலேயே சுழலிறகு விமானம் எழவும், இறங்கவும் வல்லது. குதித்து எழும் கருவி இருந்தால், இருந்த இடத்திலேயே செங்குத்தாக மேலெழ முடியும். தடுமாற்றம் நிகழ்வதே இல்லை. சில குறைபாடுகள் உண்டு. நிலைச் சிறகு விமானத்தைப் போல, இதனால் வேகமாகப் பறக்க இயலாது. திருகு ஊர்தியை விட வேகமாகப் பறக்க இயலும் என்றாலும், திருகு ஊர்தியைப் போன்று, சுழலிறகு விமானத்தால் மிதக்க இயலாது.
லாரன்ஸ் ஸ்பெர்ரி என்னும் அறிவியலார் 1912இல், விமானங்களுக்கான தன்னியக்கச் சுழல் நிலைப் படுத்தும் கருவியைக் (automatic gyroscopic stabilizing device) கண்டுபிடித்தார். இதில் நான்கு சுழல் அளவிகள் இருந்தன. தற்காலத்தில் பயன்படுத்தப் படும் சுழலிறகு விமானக் கட்டுப்படுத்தும் அமைப்பு 1932 இல் வடிவமைக்கப்பட்டது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கப்பல்களில் பயன்படுத்தப் படும் சுழலிறகு விமானம், சுழல் திசை காட்டியிலிருந்து பெறப் படும் சீராக்குங் குறிப்பலைகளைக் (corrective signals) கொண்டு சுக்கானைக் கட்டுப்படுத்துகிறது. இத்தகைய தன்னியக்கச் சுழலிறகு விமானங்கள் கப்பல்களில் 1920ஆம் ஆண்டிலிருந்து பயனில் உள்ளன. —வயி. அண்ணாமலை —வி. சண்முகசுந்தரம் —வா. அனுசுயா
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 575)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/us698hk8/
தமிழ்“சுழலிறகு விமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/us698hk8/APA
Oliyon Research. (2026). சுழலிறகு விமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/us698hk8/MLA
"சுழலிறகு விமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/us698hk8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment