இருத்தல் கொள்கை
iruttal koḷkai
இக்கொள்கை மேலை நாட்டில் அண்மைக் காலத்தில் புகழ்பெற்று விளங்குகிற தத்துவமாகும்.
இக்கொள்கை மேலை நாட்டில் அண்மைக் காலத்தில் புகழ்பெற்று விளங்குகிற தத்துவமாகும். இது செருமனியில் தோன்றிப் பிரான்சில் பரவியது. இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட நாச விளைவுகள், குழப்பம், பாதுகாப்பின்மை, மரண பயம் ஆகியவை இதன் வளர்ச்சிக்குக் காரணங்களாகும். சுருங்கக் கூறின் இருத்தல் கொள்கை (Existentialism) சமுதாயத் தோல்வியின் வெளிப்பாடு ஆகும். இது அண்மையில் தோன்றியதெனினும், இக்கொள்கையின் கருவைச் சாக்கிரட்டீசு, பவுல், அகசுதீன், பாசுகல் முதலியோரின் தத்துவத்தில் காணலாம். கர்க்கிகார், கெய்டெக்கர், நீச்சே, சால்சுபர்சு, மார்சல், சார்த்துரே ஆகியோர் இக்கொள்கையை வளர்த்தவர்கள். பிரான்சு நாட்டுச் சார்த்துரே இதன் தலைமைக் குரு என்று கருதப்படுகிறார். அவர் தம் நாவல்கள், நாடகங்கள் மூலம் இதைப் பரவச் செய்தார்.
மற்ற மெய்ப்பொருளியல் கொள்கைகளைப் போல இக்கொள்கை வரையறைக்குட்பட்பட்டதன்று. இதில் ஆத்திகர்களும் உண்டு; நாத்திகர்களும் உண்டு. சிலர் தம் தத்துவம் இருத்தல் கொள்கை அன்று என்றும் கூறுகின்றனர். எனினும் இந்தக் கொள்கையை இனம் கண்டு கொள்ளும்படியான சில பொதுவான கூறுகள் இருக்கின்றன. இதன் அடிப்படைக் கருத்து ‘இருப்பு இயல்பிற்கு முற்பட்டது’ (Existence Preceedes Essence) என்பதாகும்.
வாழ்க்கைதான் மனிதனின் பண்புகளை உருவாக்குகிறது. மரபுவழித் தத்துவம் பொதுமையான மனிதனை அறிய முயற்சி செய்தது. அது மனிதனை மனித குலத்திற்கான பொது இயல்புகளை உடையவனாக ஆராய்கிறது. ஆனால், இருத்தல் கொள்கை இதற்கு முரணானது. ஒவ்வொரு மனிதனும் தனியானவன். அவன் மனிதகுலப் புள்ளி விவரத்தில் மதிப்பற்ற வெறும் புள்ளியல்ல. பொதுவான மனிதன் (General Man) என்று யாருமில்லை. தனித்தனியாகவே மனிதன் (Individual Man) இருக்கிறான். எனவே மனிதனை பொதுமைக் கருத்துகளோடு பார்க்காமல், தனிமனிதனாக வாழ்க்கைப் போராட்டத்தில் தனியே எதிர் நீச்சல் அடித்துக் கொண்டிருப்பவனாகக் காண வேண்டும். அவன் வெறும் கருத்தமைவு (Concept) அல்லன். உடலும் உணர்வுகளும் உடையவன். பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்கிறவன். அதனால், மனிதனை அவன் சூழ்நிலையோடு சேர்த்து அறிய வேண்டும். ஒவ்வொரு மளிதனின் பிரச்சினைகளும் தனித்தனியானவை. சில பொதுவான பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றைத் தனியாக அவன் எப்படிச் சந்திக்கிறான் என்பதில் தான், அவன் வாழ்க்கையின் சிறப்பு அடங்கியிருக்கிறது.
இருத்தல் கொள்கையினரின் அறவியல் கருத்துகள் மரபுவழித் தத்துவங்களிலிருந்து மாறுபடுகின்றன. கருத்து முதற் கொள்கை (Idealism) என்ற மரபுவழித் தத்துவத்தின்படி மனித இனத்தின் பயன்களும் (Values), குறிக்கோள்களும் என்றும் மாறாதவை. இவற்றை நாடுவது தான் மனிதனின் கடமை, இயற்கைக் கொள்கை (Naturalism)யின்படி என்றும் மாறாத நன்மைகள், பண்புகள், கடமைகள் என்று எவையுமில்லை. இடம், காலம் முதலிய சுற்றுப்புறச் சூழ்நிலைகளைக் கொண்டே குறிக்கோள்களும் கடமைகளும் அமைகின்றன. நன்மையும் தீமையும் இயற்கையால் தீர்மானிக்கப்படுபவையே தவிர வெறும் அறிவால் மட்டுமல்ல. எனவே, ஒரு காலத்தில் அறம் என்று கருதப்பட்டது. மற்றொரு காலத்தில் தீமையாகக் கருதப்படலாம். எனினும் அறவொழுக்க மாறுதல்கள் ஓர் ஒழுங்கமைப்புக்குட்பட்டவையே. அதை அறிந்து கொண்டால் எல்லோருக்கும் பொதுவான அறவொழுக்க விதிகளை எல்லாம் வகுத்துக் கொள்ள முடியும் என்று இயற்கைக் கொள்கை கூறுகிறது.
மேற்கூறிய இரண்டு மரபுகளையும் இருத்தல் கொள்கை எதிர்க்கிறது. பொதுவான அறவொழுக்க விதிகள் இல்லை. மனிதன் தனியானவன் (Alone). அவன் செய்வதோ செய்யத் தவறுவதோ ஒரு குறிப்பிட்ட தனிச் செயல். சுக்கானில்லாமல் அவன் இவ்வுலகில் தள்ளப்பட்டிருக்கிறான். தன் நிலைமைக்கேற்றவாறு அவன் செயற்பட வேண்டும். அவனது அறவொழுக்கத்திற்கு வழிகாட்டிகள் இல்லை. ஏனெனில் ஒருவருடைய வாழ்க்கையை இன்னொருவர் வாழ முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் செயற்படும் விதம், தன் குறிக்கோள் ஆகியவற்றை அவன் தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தானே தேர்ந்தெடுத்துச் செயற்படுவதனால் தன் பண்புகளைத் தானே உருவாக்கிக் கொள்கிறான்.
இருத்தல் கொள்கையின் மற்றொரு சிறப்பான கருத்து செயலுரிமை (Freedom) என்பது. மனிதன் கட்டற்றவன், அதனால்தான் தான் செய்ய வேண்டியதைத் தானே தீர்மானிக்க முடிகிறது. சமூகத்தால் நிருணயிக்கப்பட்ட நீதி, தர்மம், கடமை முதலியவற்றைத்தான் அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. தனக்குச் ‘சரியானது’ என்று தோன்றுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையிருக்கிறது. மற்ற அறிவியல் அறிஞர்களும் மனிதன் செயலுரிமையுடையவன் என்று கூறுகின்றனரெனினும், இருத்தல் கொள்கையினர் இதை வற்புறுத்திய அளவுக்கு அவர்கள் வற்புறுத்தவில்லை. மனிதன் எல்லையற்ற செயலுரிமை உடையவன். செயலுரிமை எவ்வளவுக்கு இருக்கிறதோ அவ்வளவு பொறுப்பும் இருக்கிறது. அவனுடைய இருப்புக்குக் காரணம் எதுவுமில்லை. ஆகவே அவன் ஏன் ஒரு குறிப்பிட்ட காரியத்தைத் தேர்ந்தெடுத்தான் என்று அதை நியாயப்படுத்துவதற்கான காரணமும் இல்லை. எனினும், தன் செயல்களுக்குத் தானே பொறுப்பாளி, அதானல் செயலுரிமை அவனுக்கு மலைப்பைத் தருகிறது.
இருத்தல் கொள்கையின் மற்றொரு சிறப்பான கருத்து இறப்பைப் பற்றியது. இறப்பு இருப்பின் இறுதி எல்லை, இவ்வுலகில் வேறெதுவும் உறுதியில்லை. இறப்பு ஒன்றே உறுதி. ஆனால், அது எப்போது ஏற்படும் என்று கூற முடியாது. அதனால் நாம் செய்ய வேண்டியவை அனைத்தையும் இறப்பை எதிர்நோக்கிய உணர்வுடளே செய்து தீர வேண்டும். ஆகவே ஒரு குறிக்கோள் அல்லது திட்டத்தின் அடிப்படையில் வாழ்க்கை அமைய முடியாது. திட்டமிட்ட வாழ்க்கை திடீர் இறப்பினால் பொருளற்றதாகி விடலாம். அதனால் ஒருவன் அடைய வேண்டியது அனைத்தையும் இன்றே, இப்பொழுதே அடைய முயற்சி செய்ய வேண்டும்.
வாழ்க்கையின் நிலையாமையும், தன் செயல்களுக்குத் தானே பொறுப்பு என்ற உணர்வும் ஒருவனுக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. வேதனை அல்லது கொடுந்துயரம் இருத்தல் கொள்கையின் மற்றொரு சிறப்பியல்பாகும். விருப்பு, வெறுப்பு, அன்பு, பயம் முதலிய உணர்வுகள் ஒரு குறிப்பிட்ட பொருளை நோக்கியமைந்தவை. ஆனால், இருத்தல் கொள்கையினர் கூறும் கொடுந்துயரம் எந்தப் பொருளையும் பற்றியதன்று. இதையே அவர்கள் மொழியில் கூறவேண்டுமென்றால், வேதனைக்குக் காரணமான பொருள் வெறுமை (The Object of Augnish is ‘nothing’). ஒருவனுக்கு மிக இன்றியமையாதவையாக, மேன்மையாகத் தோன்றியவை அனைத்தையும் இந்தக் கொடுந்துயர உணர்வு பொருளற்றவையாக வெறுமையாக்கி விடுகிறது. மனத்தை ஈர்த்து எழுச்சி பெறச் செய்த சூழ்நிலைகளெல்லாம் இந்த வேதனையுணர்வு வந்த பிறகு கையறுநிலையைத் தருவதாக உள்ளன. உலகத்தைப் பார்க்கும் பொழுது சலிப்பும் அருவருப்பும் ஏற்படுகிறது.
கொடுந்துயரத்திலிருந்து தப்புதற்கு மக்கள் பல வழிகளைத் தேடுகிறார்கள். தம்முடைய தனித் தன்மையை மறைத்துக் கொண்டு பொதுமைப் போர்வைக்குள் பாதுகாப்புத் தேடிக் கொள்கிறார்கள். சமுதாய அல்லது மந்தை மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். மரபொழுக்கம். பொதுமைப் பண்புகள் என்ற முகமூடி அணிந்து கொள்கிறார்கள். தாம் பேசும் பேச்சுகள் கூடத் தம் அகத்தை வெளிப்படுத்தா வண்ணம் மிக்க எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ‘நான் அப்படி நினைக்கிறேன்’, ‘நான் செய்ய மாட்டேன்’ என்பவற்றிற்குப் பதிலாக, ‘அவர்கள் அப்படி நினைப்பார்கள்’, ‘சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது’, ‘பொதுவாக இப்படிச் செய்ய மாட்டார்கள்’, ‘இதுதான் மரபு’ என்று தம் பொறுப்பைத் தட்டிக் கழித்து மற்றவர்கள் மீதும் சமூகத்தின் மீதும் அதைச் சுமத்துகிறார்கள். சுருங்கக் கூறின், போலி வாழ்க்கையின் மூலம் பாதுகாப்பு தேடிக் கொள்கிறார்கள். ஆனால், இருத்தல் கொள்கையின்படி மனிதன் செயலில் முழுமனத்துடன் ஈடுபட வேண்டும். அத்தகைய செயல்கள் மூலம் மனிதன் தன்னையே படைத்துக் கொள்கிறான். எனவே, இருத்தல் கொள்கை வெறும் ஏட்டளவில் ஆராயப்படுகின்ற கொள்கை அன்று. அது செயல் முறைத் தத்துவம், ஓர் இயக்கம் ஆகும். தன் உலகத்தைத் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். தன் வாழ்க்கைக்குத் தானே தலைவன்.
கீர்க்கிகார்டு
கீர்க்கார்டு (Kierkegaard) இருத்தல் கொள்கையின் தந்தை என்று கருதப்படுபவர். இவரது கொள்கை ‘இது அல்லது அது’ (Either–or) என்னும் நூலில் மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது. இவர் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உடையவர். இவர் காலத்தில் செருமானியத் தத்துவ மேதை எகலின் கருத்துமுதற் கொள்கை மேலோங்கியிருந்தது. எகலின் கருத்துப்படி மனிதன் குடும்ப, சமூக, அரசியல் அமைப்பில் ஓர் உறுப்பு. அந்த முறையில் தன் கடமைகளை நிறைவேற்றுதல் மூலந்தான் தன் உண்மையான ஆன்மாவை அவன் அறிய முடியும். ஓர் அமைப்பின் பகுதியாக விளங்காத தனிமனிதன் இல்லை, எகலின் கருத்து முறைத் தத்துவம் (Speculative Philosophy) கீர்க்கிகார்டுக்கு உடன்பாடாக இல்லை.
கீர்க்கிகார்டு கொள்கையின்படி மனிதன் தனியானவன்: பொது வழக்குச் சொற்கள் மூலம் அவனை புரிந்து கொள்ள முடியாது. சமுதாயத்தின் உறுப்பாக விளங்குவதிலும், அதன் குறிக்கோள்களையே தன்னுடையதாக்கிக் கொள்வதிலுந்தான் அவன் வாழ்க்கையின் குறிக்கோள் இருக்கிறதென்றும் கூற முடியாது. மனிதன் நிறைவடைந்த படைப்புப் பொருளல்லன். வாழ்க்கையின் பளுவைச் சுமக்கும் போது அவன் தன் பண்புகளைப் படைத்துக் கொள்கிறான். அவனே தனியாகத் தன் குறிக்கோளைத் தேர்ந்தெடுக்கிறான். அவன் தேர்ந்தேடுக்கும் முடிவுகளுக்கு இறைவனோ வேறு எந்த உளவியலோ, அறிவியலோ காரணம் இல்லை.
கீர்க்கிகார்டின் இருத்தல் கொள்கைக் கருத்துகள் அவர்தம் கடவுள் கொள்கையில் மிகச் சிறப்பாக வெளிப்படுகின்றன. கீர்க்கிகார்டு கிறித்தவச் சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர், அவர் மறுப்புரையாளராகிய கிறித்தவர். அதனால், கிறித்தவ மதச் சபையின் கொள்கைகளை எதிர்த்தார். வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கடவுள் மனிதனாக அவதரித்தார் என்று கிறித்தவச் சமயம் கூறுகிறது. இந்த நம்பிக்கை அறிவினைப் பழிப்பதாக இருக்கிறது. இதன் உண்மையை அறிவால் நிலைநாட்ட முடியாது. எனினும் நான் இந்த நம்பிக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். கிறித்தவனாகப் பிறந்ததால் அல்லது மதச்சபை போதிப்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை. நானே உணர்ந்து முழு மனத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். ஏன் அதைத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான அறிவார்ந்த எக்காரணமும் இல்லை. இது நானே தனிமையில் எடுத்த முடிவு. இவ்வாறு கீர்க்கிகார்டு கூறுகிறார்.
எனவே, மனிதன் வெறும் சிந்தனை உடையவன் அல்லது அறிபவன் மட்டும் அல்லன்; உணர்வும் மனவெழுச்சிகளும் கொண்டவன்; பலவிதமாக மாறுகின்ற நிலைகளுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருப்பவன். அதற்கிடையில் தன் செயலுரிமையால் வேறு எந்தத் துணையுமின்றித் துணிகரமான முடிவுகளை எடுக்கிறான். இந்த முடிவுகளுக்கு அவனே முழுப் பொறுப்பு.
நீச்சே
‘சரதுட்டிரர் இவ்வாறு பேசினார்’ (Thus Spoke Zarathustra), ‘நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்’ (Beyond Good and Evil) ‘ஆற்றல் குறித்த செயலுறுதி’ (The Will to Power) ஆகிய நீச்சேயின் (Neetzsche) நூல்கள் சிறப்பு வாய்ந்தவை. இவர்தம் கொள்கையின்படி பொதுமையான அறிவு, அடிப்படைப் பண்புகள், தன்னிலையில் உள்ள பொருள் என்று எவையுமில்லை. உள்ளனவெல்லாம் தனி மனிதர்கள், அவர்களுக்கு இடையிலுள்ள உறவுகள், தனிப் பொருள்கள், அவற்றுக்கு இடையிலுள்ள தொடர்பு- கள் அவை பற்றிய நம் விளக்கங்கள், மதிப்பீடுகள் முதலியவையே. அறிவு உண்மையைத் தர முடியாது, அது மக்களுக்குத் தேவையும் இல்லை. தனிப் பொருள்களுக்கு இடையிலுள்ள தொடர்புகளைத் தமக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்வதுதான் பயன்படும் அறிவு. இவ்வாறு தாமே அமைத்துக் கொண்ட விதிகளைப் பிரபஞ்சத்தில் உண்மை என்று மரபுவழி மெய்ப்பொருளியலார் நம்புகின்றனர். அதனால் மாறுதல்கன், பரிணாமம், முரண்பாடுகள் முதலியவற்றைத் தோற்றம் அல்லது மாயை என்று கருதுகின்றனர். முற்றொருமை, முரணாமை, பொதுமை, ஒழுங்கமைப்பு முதலியவை தமக்குப் பயன்படுகிற அடிப்படை ஏற்புகள் என்பதை மறந்து அவையே முழு உண்மை என்று நம்புகின்றனர். தனி மனிதக் கோணத்திலிருந்துதான் பிரபஞ்சத்தைப் பார்க்க முடியும். தனிமனித உறவுகளைக் கடந்த நிலையிலிருந்து வெறும் கூடுகளைத்தான் பார்க்க முடியும்; வாழ்க்கையின் உயிரோட்டத்தைக் காணமுடியாது. வெறும் சிந்தனை மூலம் இருப்புப் பற்றி அறிய முடியாது.
அறவொழுக்கத்தில் இரண்டு நிலைகள் உண்டென்று நீச்சே கருதுகிறார். மரபு வழி அல்லது அடிமைகளின் ஒழுக்கம் (Slave Morality); மற்றொன்று மேம்பட்ட மக்களின் ஒழுக்கம் (Super man Morality). மரபு வழி ஒழுக்கத்தில் தனி மனிதனுக்குச் செயலுரிமையில்லை. சமூக நியதிகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறான். சமூகத்தைப் புறக்கணிக்கும் பொழுது குற்றவுணர்வு அல்லது தண்டனை பற்றிய பயம் ஏற்படுகிறது. இதையே மனச்சாட்சி என்று கூறுகின்றனர். வலியோர் நலித்தோரைத் தம் பிடியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகப் பயன்படும் குணங்களை நற்பண்புகள் என்றும், அதற்கு மாறானவற்றைத் தீமை என்றும் நிருணயித்தனர். அன்பு, அருள், இரக்கம் முதலியவை போராட்டத்தில் பணிந்தவர்களின் பண்புகளாகவும், மறப்பண்புகள் வெற்றியடைந்தவர்களின் பண்புகளாகவும் விளங்குகின்றன. மதத்தின் பெயரால் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட குருமார்கள், தோல்வியுற்றவர்கள் அதிருப்தியடைந்து மீண்டும் எழுச்சி பெற்றுவிடாமல் இருப்பதற்காகத், தாமே தம் துயரங்களுக்கெல்லாம் காரணம் என்றும், தம் தோல்வி தவிர்க்க முடியாததென்றும், பணிந்து வாழ்வதே சிறந்த பண்பு என்றும் போதிக்கின்றனர். மனிதன் மனமுடைந்து கையறு நிலையில் நின்று விடலாகாது. மரபுவழி அறவொழுக்கக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடவேண்டும். தன் செயலுரிமையை நிலைநாட்டுபவனே மேம்பட்ட மனிதன். அச்சமயத்தில் அவன் வெற்றிக்கு வழிகோலுபவையே தலையாய அறப்பண்புகள். எனவே, மனிதன் அறத்தைத் தானே தீர்மானிக்கிறான். பண்புகளின் படைப்பிடம் தான் என்பதை உணர்கிறான். மேம்படும் மனிதன் தன்னையே சிறப்பித்துக் கொள்கிறான். அவன் நன்மை, தீமை ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன். எனவே, அடிப்படைப் பண்புகளைப் பற்றிய புதிய மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நீச்சே கூறுகிறார்.
காரல்சாசுபர்சு
காரல்சாசுபர்சு (Karl Jaspers) இருத்தல் மூன்று வகையானது என்கிறார். அவை புறநிலை இருப்பு (Being there) தனிநிலை இருப்பு (Being oneself), தன்னிலை இருப்பு (Being in itself). பொருள்கள் நிலையான தன்மையுடையவை. அதனால், அவை குறித்த பொதுவான நிச்சயமான அறிவைப் பெறமுடியும். அவை பற்றிய உலகளாவிய விதிகளை (Universal) அறிய முடியும். அறிவியல், மனிதனையும் பௌதீகப் பொருள்களைப் போலப் புறநிலை இருப்புடையவனாக அறிய முற்படுகிறது. உளவியல் கூட மனிதனின் அகநிலையை (Subjectivity), ஆன்மாவை, ‘நான்’ என்று குறிப்பிடப்படும் பொருளை ஆராய்வதில்லை. அறிவியல்களின் குறிக்கோள் புறநிலை அறிவு (Objective Knowledge) பெறுவது. பொருள்களையும் அவற்றின் தொடர்புகளையும் சில விதிகளுக்குட்படுத்திவிட்டால், அவை மாறிவிடுமோ, அவற்றோடு எவ்வாறு பழக வேண்டுமோ என்ற ஐயப்பாடு, அச்சவுணர்வுகளுக்கு இடமில்லை. ஆனால், அறிவியல்கள் கருதுவது போல மனிதன் புறநிலை இருப்புடையவன் மட்டுமல்லன், அவனுக்கு அகநிலை இருப்பும் இருக்கிறது. அது காரண காரிய நியதி என்ற அறிவியல் கட்டுப்பாட்டிற்குள் அடங்காதது. அவன் செயலுரிமையால் தனிநிலை இருப்பு உடையவன்.
அறிவியல்கள் சடப் பொருள்களைப் பற்றிய முழு அறிவையும் கொடுத்து விட்டதாகவும் கூற இயலாது. ஏனெனில் அறிவியல் முறையான தொகுப்பு வழியில் (Inductive Method) கிடைக்கும் அறிவு நிகழ்திறம் (Probability) படைத்ததே தவிர. உறுதியானது என்று அறுதியிட்டுக் கூறவியலாது. உலகத்தின் அடிப்படை உண்மை, எண்ணிக்கை, சடப் பொருள், ஆன்மா அல்லது சக்தி என்று எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இந்தத் தோல்வியானது அறிவியலின் எல்லைக் கோட்டைக் காட்டுகிறது. அறிவியல்கள் கைவிட்டதை மெய்ப்பொருளியல் தொடர்கிறது. அது மனிதனின் அறிவைத் தொடக்க நிலையாகக் கொள்ளாமல் அவன் இருப்பிலிருந்து தொடங்குகிறது. மனிதன் தன் இருப்பு நிலையை உணரும்பொழுது பிற பொருள்களிலிருந்து வேறுபட்டு விளங்குகிறான். ‘நான்’ என்பது என் உடல், சமூகத்தில் நான் வகிக்கும் இடம், என் தொழில் அல்லது நடத்தையன்று; இவையனைத்திற்கும் மூலமாக விளங்குகின்ற கட்டற்ற ஆற்றல்; என் உள்ளத்தின் உறுதி (Will). இதன் மூலம் உணர்வோடு கூடிய ஆன்மாவை நானே படைத்துக் கொள்கிறேன். ஆகையால், தனி நிலை இருப்புடையவனாக விளங்குகிறேன். என் செயலுரிமையைப் பயன்படுத்த வில்லையென்றால் எனக்கும் பொருள்களைப் போலப் புறநிலை இருப்பு மட்டுமே உண்டு. ‘நான்’ நானாகவிளங்காமல் ‘அது’வாக இருப்பேன். எனவே தனிநிலை இருப்பில் நான் என் சொந்தப் படைப்பு.
தனிநிலை இருப்பில் விளங்குகின்ற ஆன்மா எல்லைக்குட்பட்டது. நம் பெற்றோர், நம் இளமைப் பருவம், சூழ்நிலை முதலியவை தம்மால் தீர்மானிக்கக்படுவனவல்ல. ஆனால், அவற்றை நாம் விரும்பி ஏற்றுக் கொள்ளலாம். அந்தச் சூழ்நிலைகளிலிருந்து தப்புவதற்கு முயற்சி செய்யாமல், அதன் அடிப்படையில் செயற்படலாம். அவ்வாறு ஏற்றுக்கொள்ளது கையறு நிலை அல்லது தவிர்க்கவொண்ணாத நிலை காரணமாக அன்று. என்னை நான் நேசிப்பது போல இவற்றையும் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். இவை தவிர இறப்பு, துன்பம், குற்றவுணர்வு முதலியலையும் மனிதனின் இருப்பை வரையறை செய்கின்றன. அவையும் இருப்பின் எல்லைகளைக் காட்டுகின்றனவே தவிர, அதற்கு முட்டுக்கட்டையாக விளங்கவில்லை. இந்த எல்லைக்கோடுகளில் தான் மனிதன் கடந்த நிலையிலுள்ள தன் ஆன்மாவை (Being–in–itself) உணர்கிறான்.
மார்ட்டின் எய்டெக்கர்
பொருள்களின் இருப்பு அவற்றின் பயனில் அடங்கியுள்ளது. ‘பேனா’ எழுதுவதற்குப் பயன்படும் கருவி. அதன் பயனிலிருந்து அதைப் பிரித்துவிட்டால் அதன் இருப்புக்குப் பொருள் இல்லை. ஆனால், மனிதனின் இருப்பு பயன்படும் காரணத்தால் அமைவதில்லை. ‘நான் இருக்கிறேன்’ என்ற உணர்வு அடிப்படை உணர்வாகும். பொருளின் பண்புகள் அதன் இருப்பைத் தீர்மானிக்கின்றன. ஆனால், மனிதனின் பண்புகள் அவன் இருப்பிற்குப் பிறகே உருவாகின்றன. ஒரு பொருள் மற்றொரு பொருளாக முடியாது. ஏனெனில், அதன் பண்புகள் ஏற்கெனவே வரையறை செய்யப்பட்டவை. ஆனால், மனிதனின் பண்புகள் இதுவரை அவன் அடைந்த நிலைகளைக் குறிப்பிடும். இன்னும் பல புதிய பண்புகளை அவன் அடையலாம். அது அவன் இறக்கும் வரை நிகழக்கூடியது. மற்ற உயிரினங்களிலிருந்தும் மனிதன் வேறுபடுகிறான். தாம் இருக்கிறோம் என்பதை அவை உணர மாட்டா. மேலும் அவை காலம் இடம் போன்ற சூழ்நிலைகளின் அடிமைகள்; செயலுரிமையற்றவை; காரண காரிய நியதிக்குட்பட்டவை.
மனிதனையும் வரலாற்றுச் சூழ்நிலைத் தொடர்புகளிலிருந்து பிரிக்க முடியாது. அவன் விரும்பிப் பிறப்பதில்லை. சூழ்நிலைகளை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை. அதில் அவன் தள்ளப்பட்டிருக்கிறான். ஆனால், அவன் வெறும் பார்வையாளனாக இருந்து விட முடியாது. அதில் அவன் பங்கேற்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் தன்னை முழுமையாக உணர முடியும். நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? என்பது நமக்குப் புரியவில்லை. பிறப்புக்கு முன்பும் இறப்புக்குப் பின்னும் என்ன என்பது தெரியவில்லை. வெறுமையிலிருந்து வெறுமை வரைதான் வாழ்க்கை. என் இருப்பு இன்றியமையாதது அன்று. நான் தோன்றாமலே இருந்திருக்கலாம். உறுதியற்ற வாழ்க்கையில் இறப்பு ஒன்றே உறுதி. இவ்வுணர்வு நமக்குப் பெருங்கவலையைத் தருகிறது. இருப்பைப் பற்றிச் சிந்திக்காதவர்களுக்குக் கொடுந்துயர் இல்லை. ஆனால், அவர்கள் பொய் வாழ்க்கை வாழ்கிறார்கள். கொடுந்துயரத்திலிருந்து விடுபடுவதற்காகச் சடப் பொருள்களைப் போல வாழ்கின்றனர்; அல்லது உலகைத் துறந்து கற்பனை வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். ஆனால் இறப்பை எதிர் நோக்கிய கொடுந்துயருடன் கூடியதே உண்மையான வாழ்க்கை. இவ்வாறு மார்ட்டின் எய்டெக்கர் {Martin Heidegger) விளக்கம் தருகிறார்.
கபிரியேல் மார்சல்
கபிரியேல் மார்சல் (Gabriel Marcel) கண்ட கொள்கை ‘கிறித்துவ இருத்தல் கொள்கை’ என்று கூறப்படும். மனிதனின் ‘இருப்பு’ புரியாத மறைச்செய்தி (Mystery) அல்லது தேவ இரகசியம் போன்றது. இதைப் புதிர் அல்லது சிக்கல் என்பதிலிருந்து பிரித்துணர வேண்டும். அறிவின் துணையால் சிக்கலுக்கு விடை காணலாம். சிக்கலின் பொருளை ஒருவன் புறநிலையில் வைத்துத் தெளிவு பெறலாம். அதில் அறிவோன், அறியப்படும் பொருள் என்ற வேறுபாடு உண்டு. ஆனான் மறைச் செய்தியை ஒருவன் அயலாக வைத்து அறிய முடியாது. அறிபவனையும் அறியப்படும் பொருளையும் அதில் வேறுபடுத்த முடியாது. இருப்புப் பற்றிய கேள்வியும் இத்தகையதே. இருப்பை ஒருவன் தனக்கு அயலாக இருந்து ஆராயவியலாது. எனவே இருப்பு அறிவால் விளக்க முடியாத, வாழ்தலின் மூலம் மட்டும் உணர முடிந்த இரகசியம்.
இருப்புக்கும் (Being), உடைமைக்கும் (Having) வேறுபாடிருக்கிறது. உடைமை என்பது புறப்பொருள்களின்மேல் மனிதனுக்குள்ள உரிமையாகும். பொருள்களை வைத்துக் கொள்ளுதல் அல்லது விட்டுவிடுதல் செய்யலாம். பொருள்கள் நமக்குக் கட்டுப்பட்டவை. செயலுரிமையை மறந்த நிலையில் மனிதன் தன் இருப்பு நிலையிலிருந்து கீழிறங்கி உடைமை நிலைக்கு அதாவது பொருள்களின் நிலைக்கு வருகிறான். அதே வேளையில், பொருள்களிலிருந்து வேறுபட்டு இருப்பு நிலையில் தனித்து நிற்பதும் இயலாது. இருப்பு நிலைக்கும் உடைமை நிலைக்கும் இடையிலுள்ள இந்த இறுக்கம் இயல்பானதும் இன்றியமையாததும் ஆகும். அதுவே வாழ்வின் உயிர்நாடி.
இருப்பில் மக்களுக்குள்ள நம்பிக்கை தம்மைப் போல மற்றவர்களும் இருப்புடையவர்கள் என்பதை உணர்த்துகிறது. இந்த நம்பிக்கை மூலம்தான் கடவுளின் இருப்பையும் உணர்கின்றனர். கடவுளின் இருப்பு அறிவியலால் மெய்ப்பிக்க முடியாது. கடந்த நிலையிலுள்ள அகவுணர்வு மூலம் இந்த நம்பிக்கை ஏற்படுகிறது. கடவுளுக்கும் மக்களுக்குமுள்ள உறவு, பொருள்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ளது போன்றதன்று. கடவுளுக்கும் மக்களுக்கும் நடுவில் எந்தத் தடையுமில்லை. அது உடனடி அனுபவம்; மக்களுக்கும் அவன் நண்பனுக்குமுள்ள உறவு போன்றது; மறைவானது. இதில் தன்னைத்தானே ஒப்புவித்துக் கொள்கிறான். அப்பொழுதுதான் கடந்த நிலையிலுள்ள தன் ஆன்மாவின் மறைச் செய்தியை உணர்கிறான். அந்த அனுபவத்தினால்தான் துரோகம், இறப்பு, அச்சம் நிறைந்த இவ்வுலகில் நம்பிக்கை, அன்பு, அருள், பொறுமை முதலிய பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது.
சீன் பால் சார்த்துரே
கொள்கைப்படி இருப்பு இரண்டு வகைப்படும். ஒன்று தன்னிலையில் இருப்பது (Being–in–itself) மற்றொன்று தனக்காக இருப்பது (Being–itself). தன்னிலை இருப்பு உணர்வற்ற நிலை. சடப் பொருள்களின் இருப்பு இத்தகையது. தனக்காக இருப்பது உணர்வுடன் கூடிய நிலை. உணர்வு எப்பொழுதும் ஒரு பொருளைச் சார்ந்திருக்கிறது. ‘இது நாற்காலி, இது புத்தகம்’ என்று பொருள்களைப் பற்றியது. உணர்வு கொண்டு மனிதனால் எதிர்மறைத் தீர்ப்புகளைக் கருத முடிகிறது. அதாவது தான் மற்றப் பொருள்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் வேறுபட்டவன் என்ற உணர்வு பெறுகிறான். மேலும் தான் அடைய வேண்டிய பண்புகள் அனைத்தையும் இன்னும் அடைந்து விடவில்லை, தான் முழுமை பெறவில்லை என்பதையும் அறிகிறான். சடப் பொருள்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுகின்ற இவ்வுணர்வைச் சீன்பால் சார்த்துரே (Jean Paul Sartre) ‘இடைவெளி’ அல்லது வெறுமை என்று குறிப்பிடுகிறார். இந்த வெறுமையுணர்வு மனிதனின் இன்றியமையாத நிலை. அவன் தன் எண்ணங்களினாலும் செயல்களினாலும் வெறுமையை நிரப்பிவிட முனைகிறான்.
பொருள்களின் இருப்பு வரையறை செய்யப்பட்டது. அவை தாமாக, தாம் விரும்பியவாறு பண்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பில்லை. ஆனால், மனிதன் அவ்வாறு முழுமையாக உருவானவன் அல்லன். தன் குறிக்கோள்கள் அனைத்தையும் அடைந்தவன் அல்லன். அவன் தன் செயலுரிமையால் அடைய வேண்டியவை கணக்கிலடங்கா. வரையறை செய்யப்பட்ட மனிதப் பண்பு ஏதுமில்லாததனால் அவன் கட்டற்றவன். மரபுகள், பழக்க வழக்கங்கள், அறநெறிகள் எவையும் அவனைக் கட்டுப்படுத்தா.
எந்த மனிதனும் ஏதோ ஒரு குறிப்பிட்ட தொழில் புரிவதற்காகப் பிறவி எடுத்தவன் அல்லன். தொழில் அவனால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவன் இயல்பு தான், அவன் அத்தொழிலைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்பதில்லை. அதை நியாயப்படுத்துவதற்கான எக்காரணமும் இல்லை. அது போன்றனவே அவன் செயல்களும், செயல் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டது; அதனால், அதற்கு முழுப்பொறுப்பும் அவனே. எல்லையற்ற உரிமையும் அதனுடன் கூடிய மாபெரும் பொறுப்புணர்வும் மனிதனைக் கொடுந்துயரம் அடையச் செய்கின்றன. இதிலிருந்து தப்புவதற்காகத்தான் சுதந்திரமில்லாதவன் போன்றும், அச்செயலில் வழியின்றிக் கட்டாயத்தினால் ஈடுபட்டவன் போன்றும் நடிக்கிறான். போலிவாழ்க்கை வாழ்கிறான். இதனால், அச்செயலின் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கிறான். ஆனால், உண்மையான வாழ்க்கை செயலுரிமையால் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும், அதற்கான பொறுப்பை ஏற்பதிலும் தான் இருக்கிறது.
நாம் இவ்வுலகில் மற்ற மனிதர்களுடன் வாழ்கிறோம். சடப்பொருள்களை நாம் எளிதாக வகைப்படுத்தி முத்திரையிட முடியும். ஆனால், நம்மால் மற்ற மனிதர்களை முழுமையாக அறிய முடியவில்லை. அவர்கள் நம் பிடியிலிருந்து நழுவி விடுகிறார்கள். அவர்களை நமக்கு அறிபொருளாக ஆக்கிக் கொள்ள முடியவில்லை. நான் எவ்வாறு மற்றொருவனை என் அறிபொருளாக்க முயற்சி செய்கிறேனோ அவ்வாறே அவனும் என்னை முழுதும் ‘இவன் இவ்வளவுதான்’ என்று அறிந்து கொள்ள முயற்சி செய்கிறான். மற்றவர்களின் பார்வை என்னைப் பாதிக்கிறது. சார்த்துரே அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தருகிறார். சாவித்துவாரத்தின் வழியே அறைக்குள் பேசுவதை ஒருவர் வெளியிலிருந்து கூர்ந்து கவனிக்கிறார். இச்செயலில் தம்மை மறந்த நிலையில் அவர் ஈடுபட்டிருக்கும்பொழுது திடீரென்று காலடிச் சத்தம் கேட்கிறது. இது அவரிடம் பெரிய மாறுதலை ஏற்படுத்துகிறது. இதுவரையில்லாத பயம், குற்றவுணர்வு, வெட்கம் முதலியவை ஏற்படுகின்றன. ‘ஒட்டுக் கேட்பவர்’ என்ற முத்திரை அவர் மேல் இடப்படுகிறது. மற்றவரின் பார்வையில் அவர் ஒரு சடப்பொருளாகி விட்டார். அதனால் மற்றவர் வாழும் இவ்வுலகம் அவருக்கு ஒரு நரகமாகிறது. அடுத்தவரின் உரிமை அவர் உரிமையைப் பாதிக்கிறது.
சார்த்துரேயின் இருத்தல் கொள்கை மனிதத் தன்மைக் கொள்கையும் (Humanism) ஆகும். பொதுவாக மனிதத் தன்மைக் கொள்கையின்படி, மனிதன் தான் மனிதனின் இலட்சியம். ஆனால், சார்த்துரேயின் கொள்கை இதிலிருந்து சற்று மாறுபடுகிறது. சார்த்துரேயின் கருத்துப்படி, வரையறை செய்யப்பட்ட மனிதப் பண்புகள் இல்லை. மனிதன் தன் பண்புகளைத் தானே படைத்துக் கொள்கிறான். அவன் செயல்களுக்கு அவனே பொறுப்பு. மனிதனின் இருப்பை விளக்குவதற்குக் கடவுள் தேவையில்லை. கடவுள் நம்பிக்கையிருந்தால் அவனால் வரையறை செய்யப்பட்ட பண்புகள், என்றும் மாறாத அற விதிகள் முதலியவற்றையும் நம்ப வேண்டியிருக்கும். அதனால், சார்த்துரே கடவுளை மறுக்கிறார். நானே சட்டங்களைப் படைக்கிறேன். ஆனால், அது எனக்கு மட்டுமன்றி, என்னைப் போல் செயலுரிமையுடைய மற்றெல்லா மனிதர்களும் ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த மாபெரும் பொறுப்பு என்னைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. இது தான் என் இருப்பு, இவ்வாறு சார்த்துரே கூறுகிறார். ஜெ.மு.
துணை நூல்கள்
Blackham, H.J., Six Existentialist Thinkers, Roultledge & Kegan Paul, London, 1978.
Walter Kanfonann., Existentialism from Dostoyevstky to Sartre, Mevidian Books, New York, 1956.
Fuller, B.A.G. and Mc Murrin Sterling M., A History of Philosophy (3rd ed.,), Oxford I&BH Publishing Co., Calcutta, 1969.
Passmore, J., A Hundred Years of philosophy, Gerclad Duck worth & Co., Ltd, London, 1957.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 187)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uqxux2ar/
தமிழ்“இருத்தல் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uqxux2ar/APA
Oliyon Research. (2026). இருத்தல் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uqxux2ar/MLA
"இருத்தல் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uqxux2ar/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment